Tuesday, April 28, 2015

விஜயகாந்துக்கு கி.வீரமணி பாராட்டு

கருநாடகத்தில் அணை கட்டுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமரை சந்திப்பதற்கான முயற்சியில்
கேப்டன் விஜயகாந்த் ஈடுபட்டு இருப்பது வரவேற்கத்தக்கது
எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இதுதான் அடையாளம்
தொடரட்டும் இத்தகைய சிறப்பான பணிகள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு
கருநாடக மாநிலத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கும் வகையில் அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களையும் நேரில் சந்தித்து ஒருங்கிணைத்து   பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ள தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேற்கொண் டுள்ள முயற்சியைப் பாராட்டி, வரவேற்று இத்தகைய பணிகள் மேலும் தொடர வேண்டும் என்ற வேண்டு கோளையும் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், முயற்சி எடுத்து சில தமிழ்நாட்டு மக்கள் நலன், மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையில், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு சார்பாக நம் உரிமைகளை வற்புறுத் திட, அரசியல் கட்சித் தலைவர்களை அவரவர்களின் அலுவலகம் (வீடு) முதலியவைகளில் நேரில் சென்று சந்தித்து, மேகதாது அணை கட்டுதல் போன்ற பல்வேறு முக்கிய தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமான முயற்சிகளை கருநாடக மாநிலம் கைவிட வேண்டும் - மக்களின் வாழ் வாதாரம் (மீனவ மக்கள்) உட்பட என்பதை வலியுறுத்து வதற்கு பிரதமரை நேரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆக்கப்பூர்வமான செயல்பாடு
இது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல எடுத்துக்காட்டான செயல்பாடு!
பல்வேறு கட்சிகள், கொள்கைகளால் மாறுபடும்  பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்கள் எல்லாம் அவ ருடன் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. உட்பட அதில் கலந்து கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒத்துழைத்ததும் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல முன் மாதிரியான எடுத்துக்காட்டு ஆகும்!
கருநாடகத்தில் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஓர் அணியில் - ஓர் குரலில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது; அனுமதி இல்லா மலேயே மேகதாது அணை கட்டுவோம் என்று ஒன்று சேரும்போது - தமிழ்நாட்டு (அ.தி.மு.க.) ஆளுங் கட்சி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, பொதுப் பிரச்சினைகளை வலியுறுத்திடுவதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை என்று நம்மைப் போன்ற பலரும் பலமுறை தமிழக அரசுக்கு, முன்னாள், இந்நாள் முதல் அமைச்சர் களுக்குச் சுட்டிக் காட்டிய போது, அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சென்றது.
எதற்கும்தானே தான் என்ற பெருமையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்ற பிடிவாத பேராசை காரணமாக, ஆளுங் கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் செய்துள்ளார்.
எதிர்க்கட்சி என்பது என்ன?
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது ஜனநாயகத்தில் அவருடைய கட்சிக்கு மட்டுமல்லாமல், சட்டமன்றத் தில்கூட மற்ற அனைத்துக் கட்சிகளின் உரிமைக் குரலாய் செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயக அரிச்சுவடி (இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற மரபும் வழியும் தத்துவமும் ஆகும்).
பா.ஜ.க.வாக இருந்தாலும்...
இவரால் தூதுக்குழுவில் தயங்காமல் இடம் பெற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.க., புதிய தமிழகம், அய்.ஜே.கே., புதிய நீதிக்கட்சி போன்றவைகளோடு பா.ஜ.க. கூட்டணியில் தற்போது உள்ள சில கட்சிகளும் (பத்து கட்சிகள்) கூட கலந்து கொண்டுள்ளனர்.
பா.ஜ.க.வினர்தான் இந்த ஏற்பாட்டுக்குப் பின்புலமாக உள்ளனர் என்று ஒரு செய்தி வந்துள்ளது.
அப்படியே அது  உண்மையாகவே இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைப் பாதுகாப்பில் அனைவரும் ஒன்று சேர்வதோ, முயற்சிப்பதோ, ஆதரவு தருவதோ வரவேற்கத்தக்கதே தவிர, அதில் அரசியல் கொள்கைப் பார்வை நமக்குள் தேவை இல்லை என்பது திராவிடர் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்!
அந்தக் கடமையை சற்று காலத் தாழ்ந்து செய்துள்ள கேப்டன் திரு. விஜயகாந்த் Better Late than Never
என்று ஒரு ஆங்கிலப் பழமொழியின் காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை, சரியான முயற்சிதான்.
கேப்டனுக்கு ஒரு வேண்டுகோள்
அவருக்கு நமது அன்பான வேண்டுகோள்.
உங்களை சட்டமன்றத்திற்குள்ளேயும் வெளியும் பல வழிகளில் ஆத்திரமூட்டுவார்கள் பலர். அதற்குப் ஆட்பட்டு விட்டால், அது உங்களின் அரிய பணியின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விடும். எனவே, எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் எச்சரிக்கை யாய் செயல்பட்டு இலக்கை அடைய இது போன்ற கூட்டு முயற்சிகள் எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதில் தயங்காமல் ஈடுபடுங்கள். தங்கள் பணி காலத்தால் செய்யப்பட்ட பணி.
ஆளுங்கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் செய்தார் என்ற பெருமை உங்களுக்கு ஏற்படும்; அன்பான வாழ்த்துக்கள்!
கி.வீரமணி       
தலைவர்,  திராவிடர் கழகம்
சென்னை,
28.4.2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப் பிரச்சாரங்கள்தான்

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப் பிரச்சாரங்கள்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் சூளுரை
சென்னை, ஏப்.27_ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா ஏப்ரல் 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் பகுத்தறிவாளர் கழ கத்தின் சார்பில் சமஸ்கிருத ஆதிக்க  எதிர்ப்புக் கருத்தரங்கம், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.
இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநில பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர் வே.மதிமாறன் தொடக்க உரையாற்றினார்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் படத்தை திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு திறந்து வைத்து உரையாற்றினார். சிற்றிதழ்கள் குறித்து  இத ழாளர் சுகுணா திவாகர், கல்வெட்டு குறித்து பத்மாவதி, நாடகம் குறித்து இதழாளர் கவின்மலர் உரையாற்றினார்கள்.
விபுலானந்த அடிகள் படத்தைத் திறந்துவைத்து மு.பி.பாலசுப்பிரமணியம் உரையாற்றினார்.
இரண்டாம் அமர்வில் வாழ்வியலில் குடும்ப சடங்குகள் குறித்து பேராசிரியர் காஞ்சி கதிரவன்,  பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் படத் தைத் திறந்துவைத்து எழுத்தாளர் முகம் மாமணி, வாழ் வியலில் பெண்ணியம்குறித்து முனைவர் பத்மாவதி விவேகானந்தன் உரையாற்றினார்.
அறிவியல் தலைப்பிலான அரங்கில் உணவு குறித்து மருத்துவர் சிவராமன், கடல்சார் அறிவியல் குறித்து ஒரியா பாலு, மருத்துவம் குறித்து முனைவர் இர.வாசுதேவன், சூழலியல் குறித்து சூழலியலாளர் கோ.சுந்தரராஜன் ஆகியோர் பேசினர். பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து எழுத்தாளர் மஞ்சை வசந்தன் உரையாற்றினார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவி யரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பொதுவு டைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் என்கிற தலைப்பில் கவிஞர் புரட்சிக் கனல், இது எனது எனுமோர்க் கொடுமையைத் தவிர்ப்போம் என்கிற தலைப்பில் கவிஞர் தமிழமுதன்,
இதய மெலாம் அன்பு நதியினில் நனைப்போம் என்கிற தலைப் பில் கவிஞர் சொற்கோ ஆகியோர் புரட்சிக் கவிஞரின் கவிதைகளை எடுத்துக்காட்டி கவிதை பாடினார்கள். விழாவின் முடிவில் பொது அரங்கம் நடைபெற்றது.
வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரை ஆற்றினார். வழக்குரைஞர் அருள்மொழி உரையைத் தொடர்ந்து திராவிட தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
தமிழர் தலைவர் நிறைவுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையில் குறிப்பிடும்பொழுது, நம்முடைய இன எதிரிகள் இந்த நாட்டில் மீண்டும் மதவாத ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்லி, அதற்காக மிகப்பெரிய அஸ்திரங் களையெல்லாம் ஏவிவிட்டு, சமஸ்கிருத ஆதிக்கம் என்று சொல்லும்போது மொழி, பண்பாடு,
ஆதிக்கம் என்று பல்வேறு துறைகளிலே ஊடுருவி இருக்கிறது என்று இருக்கிற நேரத்திலே நம்முடைய இன எதிரிகள் சொல்லுகிற நேரத்திலே அவர்கள் சமஸ்கிருத மயமாக்கும் கலாச்சாரம் (Sanskritic Culture) என்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
எந்தப் பெயரைச் சொன்னாலும் சமஸ்கிருத ஆதிக் கம்தான். எந்த ஆதிக்கத்தையும், எந்தக்குடிமகனும் ஏற்றக் கொள்ள முடியாது இந்தக் காலக்கட்டத்திலே. ஒருவருடைய கருத்து என்பது வேறு, ஆதிக்கம் செலுத் துவது என்பது வேறு.  பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளை நாம் நடத்தினோம்.
இந்தப் பணி என்பது எப்போதும் தேவைப்படும் பணி. எப்படி விவசாயத்தை விட முடியாதோ, எப்படி மூச்சை அடக்க முடியாதோ அதுபோலத்தான் இந்தப்பணி என்பது மானம் மீட்கும் பணி, நம்முடைய இயக்கம் மானத்தை மீட்கும் இயக்கம். எனவே, என்ன விலை கொடுக்கவும் அதற்கு நாங்கள் தயார், நாங்கள் தயார் என்கிற அறிவிப்பைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம். அடிக்க அடிக்க பந்து எழும்பும், நீ எதிர்க்க எதிர்க்க எங்கள் இயக்கம் மேலே போகும்.
தேர்தல் வரும்போதுதான் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். இதற்கு நடுவிலே அரசியல் பிரச்சாரத்துக்கு எல்லாம் நாங்கள் ஆளா குவதாக இல்லை. இனிமேல் முழுக்க முழுக்க சமு தாயப் பிரச்சாரம்தான், முழுக்க முழுக்க மூடநம் பிக்கைகள் ஒழிப்புப் பிரச் சாரம்தான், முழுக்க முழுக்க கடவுள் ஒழிப்புப் பிரச்சாரம்தான்,
முழுக்க முழுக்க மத ஒழிப்புப் பிரச்சாரம்தான், முழுக்க முழுக்க இந்த நாட்டில் மான மீட்புப் பிரச்சாரம்தான் அதை நான் பிரகடனமாக இங்கே  அறிவிக்கிறேன் என்று தமிழர் தலைவர் உரையின்போது பார்வையாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே குறிப்பிட்டார். தமிழர் தலைவர் அவர்கள் மேலும் பல கருத்துகளைக் கூறினார். (முழு உரை பின்னர்).
மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் நன்றி கூறினார்.
பங்கேற்றவர்கள்
திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் தஞ்சை செயக்குமார், கலை அறப்பேரவை மு.கலைவாணன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், துணைச்செயலாளர் சேரன், சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், பேரா சிரியர் ப.காளிமுத்து, வட மாவட்டங்களின் அமைப் புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சிந்தாதிரிப் பேட்டை பாலகிருஷ்ணன்,
தூத்துக்குடி பெரியார டியான், பேராசிரியர் ராசதுரை, பேராசிரியர் இசை யமுது, மருத்துவர் தேனருவி, செந்துறை இராசேந் திரன், மயிலை சேதுராமன், பொறியாளர் குமார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்சாரதி, வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், மகளிரணி சுமதி, கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, தங்கமணி,
கணேசன், இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன்,  வேலூர் மண்டலச் செய லாளர் பஞ்சாட்சரம், போளூர் பகுத்தறிவாளர் கழகம் பன்னீர்செல்வம், வழக்குரைஞர்கள் வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், தெ.சென்னியப்பன், வீ.தெ.அருள் மொழி, இளைஞரணி பாலமுருகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், பெரியார் பிஞ்சுகள் கவிமலர், இலக்கியா, செம்மொழி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தந்தி டிவியில் காட்டப்பட்ட தவறான ஆதாரங்களுக்கு திராவிடர் கழகத்தின் பதிலடி.





தந்தி டிவி முதலாளிகள் கவனத்துக்கு... Read more : http://viduthalai.in/page-1/98885.html

பார்ப்பனர் உணர்வில் இராமமூர்த்தி முதல் - பாண்டே - இராம. கோபாலன் வரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்! http://viduthalai.in/component/content/article/72-2010-12-27-13-06-34/98857-2015-03-31-10-59-02.html

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்? ஹிந்து மதத்தின் எட்டு வகைத் திருமணத்தில் தாலி உண்டா? சங்க இலக்கியத்தில்தான் தாலிபற்றி சொல்லப்பட்டுள்ளதா? கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டியபோது எதிர்ப்பாளர்கள் எங்கே போனார்கள்? கருத்து மோதலுக்கு என்றும் தயார்! தயார்!! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கருத்துரிமை போற்றும் அறிக்கை Read more : http://viduthalai.in/headline/98904-2015-04-01-10-27-34.html

திரிபுவாத சக்திகளுக்கு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சாட்டையடி! http://viduthalai.in/headline/98856-2015-03-31-10-55-17.html


Monday, April 27, 2015

கருப்பு என்றால் வெறுப்பா?

சமீபத்தில் வெளியான ஒரு நகைக்கடை விளம்பரம், அதில் பிரபல நடிகையும் விளம்பர மாடலுமான அய்ஸ்வர்யா ராய் மாடலாக நடித்திருந்தார்.  

அந்த விளம்பரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது கருப்பு நிறமுள்ள ஒரு சிறுமி அய்ஸ்வர்யாவிற்கு ஒரு கையில் குடைபிடித்தும் மறுகையில் சாமரம் வீசுவதும் போன்ற அந்த காட்சி கூறுவது என்ன?  

கருப்பு நிறம் என்றாலே அடிமை நிறம், கருப்பு நிறமுடையவர்கள் அனைவருமே அடிமைகள் என்ற ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள் என்பது பொருள். கருப்புச் சட்டையைக் கொளுத்துவோம் என்றும்  கருப்புச் சட்டையை கழற்றுவோம் என்றும் சிலர் கூச்சலிடுகிறார்கள்.

இப்படி பல தளங்களிலும் கருப்பு நிறத்தை ஏளனம் செய்து வருகிறார்கள்.   1700-களில் உலகெங்கும் கருப்பின மக்களும் இந்தியர்களும் அடிமைகளாக வேலைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.  ஜெண்ட் வென்ஸர் என்ற டச்சு மாலுமி தனது அனுபவத்தை எழுதும் போது ஆப் பிரிக்கக் கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்க இந்தி யாவில் இருந்து நான்கு பேர் மட்டும் அடைத்து வைக்கும் கூண்டுகளில் 10 நபர்களைத் திணித்து மாதக் கணக்கில் கப்பல் பயணம் செய்தோம்; அப்போது போர்ச்சுகீஸிய எஜமானிகளுக்காக கப்பலின் மேல் தளம் முழுவதுமே அலங்காரம் செய்து வைத்திருப் போம். கூண்டில் உள்ள பெற்றோர்களின் குழந்தை களை அந்த எஜமானிகளுக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைப்போம் என்று எழுதியுள்ளார்.

1800-களில் இந்த கருப்பினச்சிறுவர் சிறுமிகளை வெள்ளைக்கார எஜமானிகள் தங்களின் அடிமைகளாக வைத்திருப்பது மிகவும் அதிகரித்தது. சில வக்கிரக் குணம் கொண்ட வெள்ளைக்கார எஜமானிகள் குழந் தைகளை சித்திரவதை செய்து அவர்கள் வேதனையில் கதறுவதைக் கண்டு ரசித்த சம்பவங்கள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிந்த பிறகு, அடிமைத்தனத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 

 இங்கிருந்து தான் அடிமைத்தனத்திற்கு எதிரான சுதந்திரம் என்ற ஒரு மய்யக் கருத்து உருவானது.  கடந்த ஆண்டு மரணமடைந்த நெல்சன் மண்டேலா; இந்தக் கருப்பு நிறவெறிப் போராட்டத்தின் காரணமாக தனது இளமைக்காலம் அனைத்தையும் இருண்ட சிறைக்குள் கழித்தார்.    வேதங்களில் ஆரியர்கள், திராவிடர்களைக் கறுப்பர்கள் என்றும், அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் இந்திரனை வேண்டிக் கொள்ளும் சுலோ கங்கள் இருக்கின்றன.

ஒ இந்திரனே! பிப்ரு மிருகாய அசுர அரசர்களை ஆரிய மன்னரான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை அழித்தாய்; முதுமை உயிரை மாய்ப்பது போல அனேகக் கோட்டைகளையும் பாழாக்கினாய்
(ரிக் வேதம் - மண்டலம் 17, ஸ்லோகம் 12)

இதுபோல திராவிடர்களைக் கறுப்பர்கள் என்று கூறும் சுலோகங்கள் ஏராளம், ஏராளம்!

உலகமெங்கும் இப்போது நிறவெறி மறைந்து வருகிறது, அமெரிக்க அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் புதிதாக பதவியில் அமர்ந்த பாஜக அரசு மதரீதியாக மக்களைப் பிரிக்கும் செயலில் இறங்கிவருகிறது.

சமீபகாலமாக நிறவெறித் தனமாக மத்திய அமைச்சர்களே பேசிவந்தனர். கிரிராஜ் என்ற மத்திய அமைச்சர் கருப்பு நிறப்பெண்கள் பற்றி மட்டமான பேச்சு ஒன்றை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அதே போல் கோவா முதலமைச்சர்  கருப்பு நிறப்பெண்களை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தவறான வழியில் செல்பவர்கள் என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நிறம் பற்றியும் மத்திய அமைச்சர் கிரிராஜ் பேசினார் - வேறு வழியின்றி மன்னிப்பும் கோரினார்.

இந்த விவகாரம் அடங்கும் முன்பே நகைக்கடை விளம்பரம் ஒன்று மீண்டும் கருப்பு நிறத்தை வைத்து தனது வியாபார விளம்பரத்தைத் தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் புதிதாக நகைக்கடை திறக்கும்  இதே நிறுவனம் வேலைக்குஆள் தேவை என்று விளம்பரம் செய்யும் போது சிவப்பு நிறமுள்ள அழகான ஆண்கள் விற்பனைப் பகுதி வேலைக்குத் தேவை என்று கொடுத்திருந்தனர்.

அதாவது கருப்பு நிற விற்பனைப் பிரதிநிதி இருந்தால் விற்பனை சரியாக நடக்காதாம்; இது எங்கே என்றால் தமிழகத்தின் தலைநகர் சென்னையில்! இப்படி ஒரு நிறபேதம் உள்ளூர நச்சுமரமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. 


நகைக்கடை விளம்பரம் பிரச்சினையாக வெடித்த தால், அந்த விளம்பரத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். விழிப்பாக இல்லாவிட்டால் குதிரை ஏறி விடுவார்கள் எச்சரிக்கை!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, April 21, 2015

வன்முறையைத் தூண்டுகிறார் மத்திய அமைச்சர்?



மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேட்டி என்ற பெயரில் திருவாய் மலர்ந்துள்ளார்.

1. பெண்கள் தாலி அணிவது கலாச்சாரத்தின் சின்னம் என்கிறார். எந்தக் கலாச்சாரத்தின் சின்னம் என்பதை இந்த வரலாற்று அறிஞர் விளக்குவாரா?

காட்டுக்குச் சென்று புலியைக் கொன்று பல்லைப் பிடுங்கி வந்து, காதலியின் கழுத்தில் கட்டுவது வீரத்தின் சின்னம்!
சரி... அதன்படி அந்த வீரத்தை நிரூபிக்கவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்ல முன்வரட்டுமே பார்க்கலாம்!

தாலி கலாச்சாரத்தின் சின்னம் என்றால், கணவன் இறந்தவுடன் அந்தத் தாலியை அறுத்து முண்டமாக்கி, விதவை என்று பெண்களுக்கு இழிபட்டம் சுமத்து வானேன்?

கணவன் இறந்தவுடனே அந்தப் பெண்ணின் வாழ்வு அத்தோடு முடிந்துவிடவேண்டும் என்பதுதானே அவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவாவின் லட்சணம்!

கணவனை இழந்த பெண் எதிரே வரக்கூடாது; அது அமங்கலம் என்று பெற்றதாயைக்கூட விதவைக் கோலப் படுத்தி அவமதிக்கும் இந்துத்துவாதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமா? கலாச்சாரக் குணமா?
மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவருக்கு இவ்வளவுக் குரூரத்தனமான குணம் இருக்கலாமா?

கணவன் கட்டிய தாலியை, அந்தக் கணவன் இறந்த பிறகு அறுத்து அமங்கலி என்பதுதானா இந்து மதப் பாரம்பரியம்!?
அந்தப் பாரம்பரியம் உடைந்து இன்று சுக்கல் நூறாக சிதறிவிடவில்லையா? விதவைப் பெண்கள் மறுமணம் புரிந்து வாழவில்லையா?

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டிலேயே விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவேண்டும் (தீர்மானம் எண் 10) என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வரலாறு எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

(சுயமரியாதை இயக்கத் தலைவர் ஊ.பு.அ.சவுந்தர பாண்டியனார் தலைமையில்தான் அந்த மாநாடு நடை பெற்றது என்பதை செவி வழியாகக்கூட கேள்விப்பட்டி ருந்தால் இதுமாதிரியெல்லாம் கேலிக்குரிய பேட்டி கொடுக்கமாட்டார்).

விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்ட காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்து மதச் சீடர்களான இவர்கள் வேறு எப்படித்தான் பேசுவார்கள்?

(காஞ்சி மடத்திற்கு சு.சாமி போனால் சமமாக உட்கார முடியும்; பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் போனால் தரையில்தானே உட்காரவேண்டும்?).

கீழ்ஜாதி - ஈழவப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக்கூடாது என்ற இந்துக் கலாச்சாரத்தை ஒழித் தவன் கிறித்துவனான வெள்ளைக்காரன் என்பதை இந்து மதத்தைத் தூக்கிச் சுமக்கும் மத்திய அமைச்சர் அறிவாரா? (தோள் சீலைப் போராட்டத்தை அறிவாரா?)

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற பழமொழிக்குச் சொந்தக்காரர்களா பெண்ணுரிமைக்காக அன்றாடம் குரல் கொடுக்கும் கருப்புச் சட்டையைப்பற்றிப் பேசுவது?

பூப்படைந்த பெண்கள் வெளியில் வர முடியாது என்று இருந்ததே - அதனை இவர்கள் இன்று கூறத் தயாரா?

பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததும், பாடுபட்டதும் தந்தை பெரியார் அவர்களின் இயக்கம் தானே! பெண்களின் திருமண வயதை உயர்த்துவது, பெண்களுக்கு உத்தியோக உரிமை, சொத்துரிமை,

விவாகரத்து உரிமை, மறுமண உரிமை என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம்தான் ஆணுக்குத் திருமணம் ஆனவர் என்பதற் கான அடையாளம் இல்லாதபோது, பெண்ணுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியின் இந்த வளர்ச்சி - தடுக்கப்பட முடியாததுதானே?

மாற்றம் என்பதுதான் மாறாதது என்ற அடிப்படை மனித உரிமையின் வாய்ப்பாடு தெரிந்தவர்கள் இதனை ஒப்புக் கொள்வார்கள்.

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுக்கப் பட்டதே - அதில் தாலி சட்டப்படி கட்டாயம் இல்லை என்பதை அறிவாரா அமைச்சர்? எந்த உலகத்தில் இருக்கிறார் - இந்த இந்துத்துவாவாதி?

கணவனைவிட அதிகம் படித்து சம்பாதிக்கும் பெண் கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கமாட்டார்கள் - அவர் களை விவாகரத்து செய்துவிட்டு வெளியில் வரவேண்டும் என்று புத்தி கூறுகிற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் சீடரான பொன்.ராதாகிருஷ்ணன் வேறு எப்படித்தான் பேசுவார்?

2. கருஞ்சட்டை அணிவது உரிமை என்றால், தாலி அணிவது இவர்கள் உரிமையாம்! அடேயப்பா எப்படிப் பட்ட தர்க்கம்?!

கருஞ்சட்டை அணிவது ஒரு கொள்கையின் வெளிப்பாடு; மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட இந்து மத தத்துவப்படி சூத்திரர்கள்தான் - அந்தச் சூத்திர இழிவை ஒழிப்பதற்கான அடையாளம்தான் கருப்புச் சட்டை.

நான் சூத்திரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் - அதைக் கேட்க நீ யார்? என்று கேட்கிறாரா அமைச்சர் பெருமகன்?

திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிவது கொள்கையின் வெளிப்பாடு - இழிவை ஒழிக்கும் உணர் வின் சின்னம்; தாலி அத்தகையதா? பெண் ஓர் ஆணின் உடைமை, அடிமை என்பதற்கான அடையாளம்.

உரிமை உணர்வை வெளிப்படுத்தும் கருப்புச் சட்டை யும், ஆணின் உடைமை - அடிமைப் பெண் என்பதற்கான அடையாளமான தாலியும் எப்படி சமமானதாக இருக்க முடியும்?
கருத்துக்கள் சொல்ல விரும்பினால் திராவிடர் கழகத்திடம் பால பாடங்கள் படிக்கவேண்டியிருக்கும்.

3. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்கக்கூடாது; பெண்கள் வெகுண்டெழுந் தால் இவர்கள் என்ன செய்வார்கள்? என்று மக்களை வன்முறைக்குத் தூண்டப் பார்க்கிறார் பொன்.ராதா கிருஷ்ணன்.

கருப்புடை அணிந்து வெண்தாடி வேந்தர் பெரியார் தலைமையேற்று நாட்டில் நடத்தி வைத்த திருமணங்கள் ஒன்றா, இரண்டா? இலட்சக்கணக்கானவை என்பதைப் பாவம் அமைச்சர் அறியமாட்டார்; அறிந்திருந்தாலும் அவர் இருக்கும் இடம் அந்த உண்மையைச் சொல்ல விடாது.

பெண்கள் வெகுண்டெழுவார்களாம்! பெரியார் என்ற பட்டம் கொடுத்தவர்கள் யார் தெரியுமா? பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டம் அளித்தனர் என்ற தகவல்கூட தெரியாமல் பெண்களை உசுப்பிடப் பார்ப்பது பரிதாபமே!

நம்பிக்கை  சார்ந்த விஷயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் - பொறுப்பான பதவி வகிப்பவர் வாயிலிருந்து வெளிவரும் பொறுப்பான பேச்சா இது?

திராவிடர் கழகத்துக்காரர்கள் அணியும் கருப்புச் சட்டையை மட்டும்தானா? 
நீதிபதிகளும், வழக்குரைஞர் களும் அணியும் கருப்புடையைக்கூட கழற்றப் போகிறார்களா?

அய்யப்பப் பக்தர்களின் கருப்புடையையும் களை வார்களோ!
கண்ணின் கருவிழியைக்கூடப் பிடுங்கி எறிந்துவிடு வார்களோ!
ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்பது இப்படிப்பட்ட வர்களைப் பார்த்துத்தான் போலும்.

கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் என்றால் என்ன? இதில் வன்முறை வீச்சுத் தொனிக்கவில்லையா?
தாலி அகற்றுதல் என்பது தானாக முன்வந்து அடிமைச் சின்னத்தை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி - அது ஒரு போராட்டமே அல்ல!

ஆனால், கருப்புச் சட்டையை அகற்றுவோம் என்றால், இன்னொருவர் அணிந்திருக்கும் அந்தச் சட்டையை அகற்றும் வன்முறைத்தனம் அல்லவா! இது பச்சையாக வன்முறையைத் தூண்டும் வேலையல்லவா! மத்திய அமைச்சராகப் போனாலும் அவர்களின் எண்ணத்தில் குடிகொண்ட ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் குணம் போய் விடுமா? பதவிக்கு ஏற்ற பண்பாடு இதுதானா?

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடக் கூடாதாம்! நம்பிக்கை என்பதில் இரண்டு வகை; ஒன்று தன்னம்பிக்கை. இது கருப்புச்சட்டைக்காரர்களுக்கே உரித்தானது.

இன்னொன்று மூட நம்பிக்கை. அந்த மூட நம்பிக்கைகளில் தலையிடக்கூடாதா? இந்திய அர சமைப்புச் சட்டத்திலேயே (51ஏஎச்) விஞ்ஞான மனப்பான் மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளதே - மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு, சீர்திருத்த உணர்வு தேவை என்கிறதே - அந்த அர சமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து பதவி ஏற்றவர் இவர்;

மூட நம்பிக்கையில் தலையிட்டால் போராட்டம் வெடிக்கும் என்கிறாரே - வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். அதிகாரத்தில் இருக்கிற காரணத்தால் எதையும் பேசலாம் என்ற நினைப்பா?
எந்தக் காரணத்துக்காக கைது செய்யப்படவேண்டும்? எந்த சட்ட விரோதமான காரியத்தை அவர் செய்து விட்டார்?

தானாக முன்வந்து தாலி அடிமைத்தளை என்று கூறி அகற்றிக் கொள்ளச் செய்தல் சட்டப்படி குற்றமா? மாட்டுக்கறி சாப்பிடுவது என்பதுதான் குற்றமா?

உண்மையைச் சொல்லவேண்டுமானால், சட்டப்படி யான இந்தக் காரியங்களை செய்யக்கூடாது என்று சொல்பவர்கள், தடுக்க நினைப்பவர்கள்தான் - அதற்கான செயல்களில் ஈடுபடுவோர்தான் சட்டப்படி குற்றவாளிகள்!

சட்டப்படியான வகையில் செயல்படுபவர்களைக் கைது செய்யவேண்டுமாம். ஒரு தனியார்த் தொலைக் காட்சியில் தாலிபற்றி சர்ச்சையைக் கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று காவிக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டதே - டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசியதே - அதனைக் கண்டித்துத் திருவாய்த் திறந்தாரா திருவாளர் பொன்.ராதாகிருஷ்ணன்?

அப்படி என்றால், ஒரு மத்திய அமைச்சர் யார் பக்கம் நிற்கிறார்? குற்றவாளிகளுக்குத் துணை போவதுதான் ஒரு மத்திய அமைச்சரின் வேலையா?

தாலியைப்பற்றி தாண்டிக் குதிக்கும் இவர், கழு தைக்கும், கழுதைக்கும் தாலி கட்டி புரோகிதரை அழைத்து கல்யாணம் நடத்தி வைத்தபோது எங்கே போயிருந்தார்?

கழுதைக்குக் கட்டும்போது தாலியின் புனிதத்தன்மை பூத்துக் குலுங்கியதோ!

மக்களின் சமத்துவத்துக்கு, சம உரிமைகளுக்கு, சமூகநீதிக்கு பாலியல் நீதிக்குப் பாடுபடுவது கருப்புச் சட்டை - இவற்றிற்கு நேர் எதிராக பிறப்பில் பேதம் விளை வித்து, உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதை நிலை நிறுத்தும். தீண்டாமைத் தீயை நெய்யூற்றி வளர்ப்பது காவிக் கூட்டம் - காவித்தத்துவம்.

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கேவலப்படுத்தும் கீதையைப் புனித நூலாக மதிக்கும் - அதனைப் பாடத் திட்டங்களில் வைக்கத் துடிக்கும் (அரி யானாவில் வைத்தும் விட்டார்கள்) கூட்டம்தான் காவி.

மக்களிடம் வாருங்கள் பார்க்கலாம்! ஏற்கெனவே ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் தாலியகற்ற 71 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துவிட்டார்களே!

கருப்பா - காவியா? என்கிற கேள்வியை முன்வைப் போம் தமிழ்நாட்டில்! மக்கள் யார் பக்கம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

நடைபெற்ற சிறீரங்கம் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர்கள், கனைத்துப் பார்க்கிறார்கள் - அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

- கருஞ்சட்டை -

 ----------------------------------------------------

இந்துக் காவிகளே,
காமெடித்தனத்தை அறிவித்தோரே...!


காவிக் கட்சியினர் சிலர் கருஞ்சட்டைகளுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதில் நமக்கெழும் சில சந்தேகங்கள்!
இந்தக் கருப்புச் சட்டை அகற்றும் அறிவிப்பு போ.........ர்......... ஆட்டம் யாருக்கு எதிராக?

1. சபரிமலைக்குப் போகும் அய்யப்பப் பக்தர்களுக்கு எதிராகவா?

2. கோர்ட்டுகளுக்குப் போகும் இருபால் வக்கீல்களுக்கு எதிராகவா?

3. நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவா?

4. கருப்புச் சேலை விற்பனையைத் தடுக்க, ஜவுளிக்கடைகள் முன்பாகவா?

5. கருப்பைக் கண்டு மிரளுவோரே, கருப்பு டை அடிப்போருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, கருப்பு புனிதத்திற்கு எதிரானது என்று கூறுவீர்களா?

அது சரி, சிலர் சட்டைகளைக் கழற்றினால், கருப்பு உடம்புடன் இருக்கிறார்களே, அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்?
தோலைக் கழற்றச் சொல்லி போராடுவீர்களா?

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு - பாடலைத் தடை செய் என போராட்டம் நடத்துவீர்களா?
அட அறிவுக் கொழுந்துகளே!

இதன்மூலம்தான் உங்கள் மிஸ்டு கால் கட்சியைப் பலப்படுத்தப் போகிறீர்களா?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, April 16, 2015

'தி (இ)னமணியின் "ஈனப்" புத்தி!


'தினமணி' உட்பட பல ஊடகங்கள் திராவிடர் கழகத்தைக்  கொச்சைப்படுத்தும் வகையில் தாலி அகற்றிக் கொள்ளும் திராவிடர் கழக நிகழ்ச்சியை தாலி அறுக்கும் போராட்டம் என்று எழுதி வந்தன.

இந் நிலையில் திராவிடர் கழகம் நடத்துவது தாலியறுப்புப் போராட்டமல்ல; தாலியகற்றும் நிகழ்ச்சி, தவறாக தாலியறுக்கும் போராட்டம் என்றெல்லாம் வெளியிடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைமை நிலையம் சார்பில் அனைத்து ஊடகங்களுக்கும் அறிக்கை கொடுக்கப்பட்டது (1.4.2015).

அந்த அறிக்கையை தினமணியும் (2.4.2015) வெளியிட்டது. ஆனால் பத்திரிகா தர்மம் பேசும் அதே இனமணி (12.4.2015) முதல் பக்கத்தில் கார்ட்டூன் போடுகிறது.

வீரமணி தலைமையிலே தாலியறுக்கும் நிகழ்ச்சியாம்!

இந்தப் பணியைத் தான் கழகங்கள் சார்பாக பல வருஷங்களா நாம் பண்ணிக்கிட்டிருக்குமே! இது எதுக்குத் தனியா? என்று கழகங்கள் கூறுவதாக எழுதுகிறது தினமணி.

2ஆம் தேதி கழகத்தின் மறுப்பு அறிக்கையை வெளியிடும் தினமணி 12ஆம் தேதி மீண்டும் தாலியறுப்பு என்று போடுகிறது. இதுதான் இனமணியின் யோக்கியதை!

கணவன் செத்து விட்டால் அவன் கட்டிய தாலியை அறுப்பதற்கென்றே தனிச் சடங்கு வைத்து, அந்தப் பெண்ணின் வளையல்களை உடைத்து, பூவையும், பொட்டையும் பறித்து, தாலிக் கயிறை அறுத்து, முண்டச்சி என்றும் அமங்கலி என்றும் மொட்டைப் பாப்பாத்தி என்றும் அசிங்கப்படுத்தும் கும்பலா, அடிமைத்தளையென்று கூறி தாங்களாகவே முன்வந்து தாலியை அகற்றிக் கொள்ளும் பெண்களை, நிகழ்ச்சியைக் கொச்சைப்படுத்துவது?

சங்கிலித் திருடன் தாலியை அறுப்பதை, திராவிடர் கழகம் நடத்திய தாலியகற்றும் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு  இன்று தினமணி கார்ட்டூன் போடுகிறது.

இப்படிப் போடுகிறவர் பெயர் மதியாம்; மொட்டை யனுக்குப் பெயர் சவுரிராசன் என்று வைப்பதில்லையா?

எப்ப புருஷன் சாவான், அவன் பெண்டாட்டியைத் தாலியறுக்கச் செய்து, கருமாதி சடங்கு நடத்தி, சுரண்டிக் கொழுக்கலாம் என்று சுடுகாட்டுக்கு வரும் பிணங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் கழுகுகளா பெண்ணுரிமை நிகழ்ச்சியைக் கேவலப்படுத்துவது?

தாலியறுக்கும் பணியைத் தான் பல வருஷங்களாக கழகங்கள் செய்கின்றனவாம் - போகிற போக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற கீழ்த்தரத்தில் ஈடுபடும் தினமணி என்னும் இனமணிக் கும்பலைக் கேட்கிறோம்.

புருஷன் செத்தால் ஆத்துக்காரியின் தாலியை அறுத்து, வெள்ளைச் சேலை உடுத்தச் செய்து மொட்டைப் பாப்பாத்தி என்று மூலையில் உட்கார வைத்தீர்களே - அதை மாற்றியதுகூட திராவிடர் இயக்கம்தான் - தந்தை பெரியார்தான் என்பதே மறந்து விட்டு பூணூலால் படம் போட்டு திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்கிறது  - கொச்சைப்படுத்துகிறது இனமணி என்பதுதான் உண்மை.

சங்கரராமன் மனைவியின் தாலியை அறுத்த பெரிய வால்கள் யார் என்று உலகுக்கே தெரியுமே!

எதைச் சொல்லி என்ன பயன்? பார்ப்பானுக்குத்தான் நல்ல புத்தியும் நல்லொழுக்கமும் கிடையாதே!

- கறுஞ்சட்டை

Monday, April 13, 2015

ஜெயேந்திரரும் - சு.சாமியும்

பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் அவர்களின் தலைவர்களைப் பாருங்கள் - அதன் பின் முடிவுக்கு வாருங்கள் பார்ப்பனர்களின் யோக்கியதைபற்றி.
பார்ப்பனர்களுக்கெல்லாம் தலைவராக இருக்கிற சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்ளலாம். பார்ப்பனர் மாநாடுகளுக்கெல்லாம் சென்று தலைமை வகிப்ப வர்கள் ஆயிற்றே. கடவுளுக்கு மேல் பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கொலை வழக்குப் புகழ்   ஜெயேந்திர சரஸ்வதி சொல்ல வில்லையா?
1992 டிசம்பர் 6 - அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து சங்பரிவார்க் கும்பல், நிர்வாண சாமியார்கள், பிஜேபி தலைவர்கள் தலைமை தாங்க - சிறுபான்மை மக்களின் 450 ஆண்டு கால வழி பாட்டுத்தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தவர்கள் அல்லவா! உலகமே கைகொட்டி நகைக்கவில்லையா?
இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி. செல்வி உமாபாரதி ஆகியோர் மத்திய அமைச்சர் பதவிகளில் நீடிக்கக் கூடாது; அவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புப் புயலைக் கிளப்பிய நேரத்தில், இந்தக் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார் - நினைவிருக்கிறதா?
அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை என்று கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று (தினமணி 27.11.2000) என்று கூறினாரா இல்லையா?
ஆக வன்முறைவாதிகள் தான் இந்த நாட்டின் சங்கராச்சாரியார்கள் என்பதற்கு இந்த ஒரு சாட்சியம் போதாதா?
முற்றும் துறந்த முனிவர்கள் நாட்டில் வன்முறையை மாய்த்து, நன்முறையை உபதேசிக்க வந்த உத்தமர்கள் என்பதுபோல இந்தக் காவி வேட்டிகள்மீது பிரச்சாரம் செய்து வைத்துள்ளனரே -  அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனரே - அது எந்த அளவுக்குப் பிரச்சாரப் பலத்தால் உண்மைக்கு மாறாகக்  கட்டப்பட்டது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
ஒரு மதக்காரன் இன்னொரு மதக்காரனைச் சீண்டுவதும், இன்னொரு மத வழிபாட்டுத் தலத்தை வன்முறையால் இடித்துத் தள்ளுவதும் தான் மதம் காட்டும் வழியா? இறை நம்பிக்கை இட்டுச் செல்லும் பாதையா?
இன்னொரு மதக் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அந்த மதக்காரன் பார்வையில் இந்த மதக்காரர்கள் நாத்திகர்கள் தானே?
நாத்திகர்கள் எந்தக் கோயிலை இடித்தார்கள் - சிலைகளை  திருடினர்? எந்த மதக்காரனைத் தாக்கினர் என்று விரலை மடக்கிட முடியுமா?
அன்றைக்கு பாபர் மசூதியை வெறும் கட்டடம் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சொன்னார் என்றால், இன்றைக்கு அவரது சீடரும், அரட்டைக் கச்சேரி அடாவடிப் பேர்வழி பிஜேபியின் தேசியக் குழு உறுப்பினருமான சுப்பிர மணிய சுவாமி என்பவர் அஸ்ஸாமுக்குச் சென்றிருந்த போது என்ன சொல்லியிருக்கிறார்?
குவாஹாட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற இந்த சு.சாமி மசூதி  என்பது வழிபாட்டுத்தலமல்ல, அது கட்டடம் மட்டும் தான், அதை எந்த நேரத்திலும் இடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறாரே!
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோக்காய் கண்டனம் தெரிவித்துள்ளார்; தொடர்ந்து இவ்வாறு இவர் பேசினால் அஸ்ஸாமுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அதோடு நின்றுவிடக் கூடாது; இந்த பேச்சின் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மத்தியில் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துள்ளதாலும், இந்தியாவில் பல மாநிலங்களிலும் பிஜேபி காவி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளதாலும், ஆணவப் போதை தலையில் ஏறி அடவாடித்தனமாகப் பேசி வருகின்றனர். வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
1992இல் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 23 ஆண்டுகளுக்குப் பிறகும் தண்டிக்கப் படாததும் இத்தகைய அடாவடித்தனப் பேச்சுக்கும், வன்முறை வெறியாட்டங்களுக்கும் மிக முக்கிய காரணமாகும்.
இதில் என்ன வெட்கக்கேடு தெரியுமா? இவ்வளவுப் பெரிய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பிற்காலத்தில் துணைப் பிரதமர் ஆகிடவில்லையா? மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் அலங்கரிக்க வில்லையா?
மிகப் பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுதான். மக்கள் மத்தியிலே சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாகும்.
அதுவும் சு.சாமி தொடர்ந்து சிறுபான்மையினர்மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார் - வன் முறையைத் தூண்டியும் வருகிறார்! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டும். அஸ்ஸாம் மாநில அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மாட்டுக் கறி விருந்து, தாலி அகற்றம் சட்டப்படி குற்றமற்றவையே காவல்துறையின் அனுமதி மறுப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு

மாட்டுக் கறி விருந்து, தாலி அகற்றம் சட்டப்படி குற்றமற்றவையே காவல்துறையின் அனுமதி மறுப்பை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு 

கழகம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் சட்டம் -
ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டதில்லை

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை
அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நாளை (14.4.2015) சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருந்த பெண்கள் தாங்களாகவே விரும்பி முன்வந்து மேற்கொள்ள விருந்த தாலி அகற்றம், கட்டணம் கட்டி கலந்து கொள்ளவிருந்த மாட்டுக் கறி விருந்து இவற்றைத் தடை செய்து, சென்னை வேப்பேரி காவல் நிலைய உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையை எதிர்த்து - இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாம் நாளை (14-4-2015 அன்று) சென்னை பெரியார் திடலில் காலை நடத்தவிருக்கும் அண்ணல் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், அதனை யொட்டி  பெண்ணுரிமை விழிப்பு - விடுதலை, உண்ணு ரிமைக் கருத்து வலியுறுத்தல் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளையும், சென்னை மாநகரக் காவல்துறை - சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் தொடுத்த வழக்கு அடிப்படை யில்  தரப்பட்ட ஓர் ஆணையை அடிப்படையாகக் கொண்டும், யாரோ இந்து மதவெறி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையும் காரணமாகக் காட்டி, உயர்நீதிமன்ற ஆணைப்படி நம்மிடம் விசாரித்து நம்மிடம் அறிக்கையோ, வாக்குமூலமோ வாங்கி விசாரணை ஏதும் நடத்தாமலேயே, ஏதோ சட்டம் ஒழுங்கு கெட்டு விடக் கூடும் என்று தங்களது யூகம், கற்பனை மூலம் ஒரு தவறான ஆணையை நமக்கு நேற்றுத் தந்தனர்.

இது ஏடுகளிலும், ஊடகங்களிலும் செய்தியாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

பதில் கடிதம் உடனடியாகக் கொடுக்கப்பட்டது

உடனடியாக, நமது கழகத் துணைத் தலைவரும், கழக வழக்கறிஞர்களும் சென்னைக் காவல்துறை அதிகாரியை - (யார் நோட்டீஸ் சர்வ் செய்தாரோ அவரிடமே) நேரில் நேற்று மாலையிலேயே உடனடியாகச் சந்தித்து கொடுக்கப்பட்டது.

வேப்பேரி காவல்துறை உதவி ஆணையரின் ஆணை சட்டப்படி தவறானது; உண்மைக்கும் புறம்பானது; சட்ட விரோதமானது என்பதை சட்ட பூர்வமாக விளக்கி இந்திய அரசியல் சட்ட உரிமை விரோத ஆணையை மறுபரிசீலனை செய்து, திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று (12.4.2015) பதில் கடிதம் கொடுக்கப்பட்டு விட்டது.

சட்டத்துக்கு எதிராக எந்த நிகழ்ச்சியும் இல்லை!

இதுவரை அதன்மீது எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், சட்டமுறைப் படி, அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகளைச் செய்வதைப் பறிக்கவோ, தடுக்கவோ சட்டப்படி உரிமையில்லை என்பதை விளக்கியும் 18.3.2015 அன்று என்னுடைய (வள்ளுவர் கோட்ட) உரையைக் காவல்துறை உதவி ஆணையரின் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது போல,

தாலியை அகற்றிக் கொள்ள தாமே முன்வரும் தாய்மார்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதில் மாட்டுக்கறி உண்ணும் உரிமையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என்பதற்காக அடையாளமாக அமைதியான விருந்து - அதுவும் கட்டணம் தந்து விரும்பிச் சாப்பிடுவோர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகவும் தான் அது நடைபெறும் என்றும் நமது பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தனி மதச் சுதந்திரம் அதுவும் பொது அமைதிக்குச் சிறிதும் பங்கம் இல்லாமல், ஒரு அரங்கத்திற்குள், ஒத்தக் கருத்துள்ளவர்கள் கூடி நடத்திடும் நிகழ்ச்சியை தடுப்பது அப்பட்டமான மனித உரிமை, அடிப்படை உரிமைப் பறிப்பு ஆகும்.

தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்று வரை , திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களானாலும் சரி, வேறு எந்த நிகழ்ச்சிகளானாலும் சரி, பொது அமைதிக்குக் கேடு, பொதுச் சொத்துக்கு நாசம், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஏதாவது ஒரு சிறு சம்பவத்தைக் கூடக் சுட்டிக் காட்ட முடியாது.

ஏதாவது நிகழ்ந்திருந்தால் அது மற்ற விஷமிகளால், எதிர்ப்பாளர்களால் தான் நிகழ்ந்திருக்கலாமே தவிர, நம்மால் ஏற்பட்டது இல்லை என்பது காவல்துறை அதிகாரிகளுக்கே தெரியும்.

அனுமதியின்றி எந்த திடீர் போராட்டத்தையும்கூட இதுவரை செய்திடாத - சட்டம், ஒழுங்கை, மதிக்கின்ற ஓர் இயக்கம் பெரியார் கண்ட திராவிடர் கழகம் என்ற நம் அமைப்பு!

இதன்மீது வீண் பழி சுமத்துவதன்மூலம் மதவெறிக் கும்பலுக்கும், மனித உரிமை பறிப்பாளர்களுக்கும், காலிகளுக்கும், கூலிகளுக்கும் துணை போகலாமா காவல்துறை?

அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ன கூறுகிறது?

மேலும் அரசியல் சட்ட விதி 51A(h) படியான அடிப் படைக் கடமைகளில், அறிவியல் மனப்பான்மையைப் பரப்புதல்  (Scientific Temper)
எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டல் (Spirit of Inquiry) சீர்திருத்தம், மனிதநேயம் (Reform and Humanism) (ஒருவரை மற்றொருவர் அடிமையாகக் கருதுவதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது) அடிப்படையில் அமைந்த பரப்புரைப் பிரச்சாரமே எங்கள் செயலாகும்.
இந்நிலையில் யாருடைய மத உணர்வு களையும் காயப்படுத்துதல் அல்ல.

சுயமரியாதைத் திருமண சட்டத்தில் தாலி கட்டாயமில்லையே!

சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967இல் நிறைவேற் றப்பட்டதில் தாலி என்பதை அணிந்து தான் திருமணம் நடத்த வேண்டுமென்பது கட்டாயமோ, தேவையோ அல்ல என்று சட்டப்படி உறுதி செய்யப் பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் 48 ஆண்டுகள் அமுலில் இருந்து வருகிறது!

தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் பல ஊர்களில், பல மேடைகளில், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

அன்னை நாகம்மையார் தாலியை அகற்றிக் கொண்ட நிகழ்ச்சி

அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் தாலியை அகற்றிக் கொண்ட நிகழ்ச்சி, பெரியார் திரைப்படத்தில் காட்டப்பட்டு, சென்சார் போர்டால் அனுமதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததோடு, 100 நாள் ஓடிய படம் மத்திய அரசின் விருதும் பெற்ற திரைப்படமாக, அது வெற்றிகரமாக எவ்வித மறுப்பும் இன்றி பரவியுள்ளது.

எவரும் மனம் புண்பட்டதென்று அக்காட்சிக்காக புகார் கொடுத்ததில்லையே!

எனவே 80 ஆண்டு காலமாக நடைபெறுவது இது!

சட்டப்படியான நீதித் துறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இப்படி எத்தனையோ வாதங்கள் உண்டு.

இன்று சட்டப்படி சென்னை உயர்நீதிமன்றத்தைக் கழகம் நாடி, நீதித் துறைமூலம் இதற்கு சட்டப் பரிகாரம் தீர்வு காண எல்லா ஏற்பாடுகளும் திராவிடர் கழகத்தால் செய்யப்பட்டுள்ளன.

அங்கு உரிய நீதி கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். ஏனெனில் இதில் அடங்கியுள்ளவை - சட்டப் பிரச்சினை - ஆழ்ந்த மனித உரிமை, தனி மனித கருத்துச் சுதந்திரம், அறிவியல் மனப்பான்மை போன்றவை ஆகும்.

எனவே, அதன் மூலம் தீர்வைக் காண்பதே சாலச் சிறந்தது அதுவே நிரந்தரத் தீர்வாக இப்பிரச்சினைக்கு அமையும் அமைய வேண்டும் என்பதால் முடிவை எதிர் நோக்கிக் காத்திருப்போம்.

எதிரிகள் செய்த விளம்பரங்கள்

இதற்கிடையில், இந்த இரு அறிவிப்புகளையும் நாம் நிகழ்ச்சியை நடத்தும் முன்பே ஏராளமாக விளம்பரம், விவாதங்கள்,  எதிர் அறிக்கைகள் என்பவை மூலம் இப்பிரச்சினை விவாதமாக்கி நமக்கு முதல் கட்ட வெற்றியைத் தேடித் தந்துள்ள நமது இன எதிரிகளுக்கும், அவர்களது ஏவுகணை களுக்கும், நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

’இறுதியில் சிரிப்பவனே புத்திசாலி’ என்பதை நம் இயக்கம் உலகுக்குக் காட்டும் என்பது உறுதி.

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்
சென்னை, 13.4.2015

Sunday, April 12, 2015

மாட்டிறைச்சி சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல - தந்தை பெரியார்

- தந்தை பெரியார்
நான் இந்தப் பக்கத்தில் எப்போது வந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஏற் படுத்திக்கொண்டு எனக்குப் பெருமை அளிப்பதையே காரியமாகக் கொண்டு வருகிறார்கள்.  இந்தத் தடவை இப்படி கோழிப் பண்ணையைத் திறந்து வைக்கும் பணியினை அளித்துள்ளார்கள்.
கோழிப்பண்ணை என்று சொன் னாலே தானிய விவசாயம் போல இது வும் ஒரு உணவுப் பண்ட விவசாயம் ஆகும். மற்ற தானியம் காய்கறிகள், உணவுக்கு எப்படிப் பயன்படுகின்றதோ அதுபோலவே கோழியும் உணவுக்காகப் பயன்படுகின்றது. கோழி முட்டை இடு கின்றது. குஞ்சு பொரிப்பது எல்லாம் மனிதன் உணவுக்காகவே பயன்படு கின்றது.
இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்தி பொருள்கள் ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றது. மனிதன் ஒருவனைத் தவிர, அனேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத் தான் பயன்படுகின்றது ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன அப்படி ஒன்றை ஒன்று தின்று வாழ்வது ஏன் என்று சொல்லத் தெரியாது.
சிலர் கடவுள் செயல் என்பார்கள். இது உண்மையாக இருக்குமானால் கடவுளைப்போல அயோக்கியன் வேறு இல்லை. கடவுளைக் கருணாமூர்த்தி தயாபரன் என்கின்றார்கள். ஆனால், தினம் தினம் லட்சக்கணக்கில் மாடு, பன்றி, ஆடு, கோழி, மீன் முதலியன கொல்லப்பட்டு தின்னப்படுகின்றன.
இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று ஆகிவிடுமே. எனவே, கடவுள் பற்றிய எண்ணம் கருத்து எல்லாம் பொய் யானதாகும். உலகப்பரப்பில் 350க்கு மேற்பட்ட கோடி மக்கள் உள்ளார்கள். இதல் 230 கோடி மக்கள் மாமிசம் சாப் பிடும் மக்கள் ஆவார்கள். இந்தியாவில் தான் 10, 15 கோடிகள் வாயளவில் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் இருக்கின்றார்கள்.
உண்மையாக மாமிசம் தின்னாத வர்கள் 2 கோடி கூட இருக்க மாட் டார்கள். நம் நாட்டில் கோழி சாப்பிடு வான் மீன் சாப்பிடுவான். மாடு சாப்பிட மாட்டேன் என்பான். மாடு சாப்பிடுவான் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் என்பான் இப்படியே ஒவ்வொன்றை விட்டு வேறு ஒன்றை சாப்பிடக் கூடிய வர்களும் உள்ளார்கள்.
நம் நாட்டில் இந்துக்கள் என்னும் கூட்டத்தில் சிலர் மாடு தின்பது இல்லை சில கூட்டத்தார் சாப்பிடுகின்றார்கள். உலகில் எங்கும் மாடு சாப்பிடுகின் றார்கள். நமது நாட்டில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் மாடு சாப்பிடுகின்றார்கள் மற்றும் அநேக ஜாதியார் மாடு சாப்பிடு கின்றார்கள்.
நான் விடுதலை பொங்கல் மலரில் மக்களின் உணவு விஷயமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம்தான் சும்மா அதைவிட்டுவிட்டு பழக்கவழக்கத்தை உத்தேசித்து அதனை ஒதுக்குகின்றார்கள். அதிலும் மாடு தின்பதை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள்.
மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக்கொண்டு தானியங் களை உற்பத்திப் பண்ணுவதுபோல மாட்டுப்பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவை பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளேன்.
மேல்நாடுகளில் மாட்டை உணவுக்குத் தான் பயன்படுத்துகின்றார்கள். உழவுக்கு மாட்டைப் பயன்படுத்துவது கிடையாது. முன்பு குதிரையைத் தான் பயன்படுத்தி னார்கள். இன்று இயந்திரம் மூலம் உழவு செய்கின்றார்கள்!
மேல்நாட்டார் மனஉறுதியுடனும் சுறு சுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணம் ஆகும். நாம் சுத்த சோம்பேறிகளாகவும் மன உறுதி யற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவுமுறைதான் ஆகும்.
சைனாக்காரனையும், மலாய்க்காரனை யும், ஜப்பானியனையும் எடுத்துக் கொண் டால் அவன் சாப்பிடாத மாமிசமே கிடை யாது. மாடு, பன்றி மட்டுமல்ல பாம்பு, பல்லி, ஓணான் முதலியவைகளையும் சாப்பிடு வான். அவன்கள் எல்லாம் சிறந்த உடல் வலிமை உள்ளவர்களாக விளங்குகின் றார்கள்.
நாம் சக்தி குறைந்தவர்களாவும், மன உறுதியற்றவர்களாகவும், சோம்பேறிகளாக வும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவர்களாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாக சத்து அதிகம் இராது.
இதன் காரணமாகத்தான் தொழிலாளர் கள் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை முதலியன சாப்பிட்டு வந்தார்கள். அவர் களும் அரிசி சாப்பிட ஆரம்பித்து சோம் பேறியாகி விட்டார்கள்.
அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடிய வர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்றதல்ல.
அரிசி உணவு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்கம், பஞ்சாப்பில் ஒரு பகுதி இப்படி சில பாகத்தில்தான் சாப்பிடுகின் றார்கள். மற்ற பகுதி மக்கள் எல்லாம் கோதுமையே சாப்பிடுகிறார்கள். கோதுமை அரிசியைவிட சத்து அதிகம் உள்ளது.
அரிசி சோறு சாப்பிட குழம்பு பொறியல் ரசம் மோர் முதலியன வேண்டியுள்ளது. இதற்கு நேரமெனக்கேடு அதிகம் ஆகும். கோதுமை உணவுக்கு பக்குவமுறையும் கம்மி அதற்கு தொட்டுக்கொள்ள ஏதோ கூட்டு ஒன்று தயார் செய்து கொள்ளுவான்.
நாம் நல்ல அளவு இன்று மாமிசம் சாப்பிடுகின்றவர்களாக இல்லை. ஏழை வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்டால் அதுவே அதிசயம். பணக்காரன் இரண்டு தடவை சாப்பிடுவான். சாப்பிடும் அளவும் மிகக் கொஞ்சம்  அரிசி சோறு மிகுதியாக வும், மாமிசம் கொஞ்சமாகவும் தான் இருக்கும். மேல் நாட்டில் உணவில் பெரும் அளவு மாமிசமும் குறைந்த அளவுதான் கோதுமையும் சேர்த்துக் கொள்ளுவான்.
நமது நாட்டில் கோழி மாமிசமானது ஆட்டுக்கறியைவிட அதிக விலையாக உள்ளது. ஆனால், மக்கள் சல்லிசில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மாட்டு மாமி சத்தை உண்ண மறுக்கின்றார்கள்.
தோழர்களே! பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள் ஆவர். இராமா யணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம்.
பிறகு எப்படியோ, அதனை பார்ப்பான் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களை கீழ்மக்கள் என்று கூறி விட்டான்.
30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிலர் மாடு சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச, உணவைத் தாராளமாக சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல.
அப்படியே பாவம் என்றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின் றார்கள்.
மாடு சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல. கோழிப் பண்ணை வருமானம் கொடுக்கக் கூடியது. நல்ல சத்துள்ள உணவு அதன் முட்டை முதற்கொண்டு இன்று கிராக்கியாகி விட்டது. முட்டை விலை முன்பு டசன் 3 அணா விற்றது. இன்று ஒரு முட்டை 20 காசு, 25 காசு விற்கின்றது. ஏழை மக்கள் எப்படி வாங்கி தாராளமாக உண்ணமுடியும்?
அரிசி விலை இறங்கினால் பார்ப்பானுக் குத்தான் நல்லது. இப்படிப்பட்ட பண்டங் களுக்கு விலை இறங்கினால் நமக்கெல் லாம் நல்லது.
ஊருக்கு ஊர் 10 பண்ணைக்கு குறை வில்லாமல் கோழிப்பண்ணை ஏற்பட வேண்டும். 500க்கும் கம்மி இல்லாமல் ஒவ்வொரு பண்ணையிலும் முட்டை உற்பத்தியாகவேண்டும். உயர்ந்த ஜாதிக் கோழிகளை வாங்கிப் பெருக்க வேண்டும். அரசாங்கமும் தாராளமாக இம்மாதிரியான காரியங்களுக்கு உதவி செய்கின்றார்கள்.
இந்த நாட்டில் பார்ப்பான் உணவுக்கு ஆக போராட ஆள் உள்ளது. நமது உணவுக்குப் பாடுபட ஆள் இல்லை. நான் சொன்னால் அவன் அப்படித்தான் சொல்லுவான் என்று எண்ணுகின்றார்கள்.
மக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.
21.1.64 அன்று மதுரை அனுமந்தபட்டி கோழிப்பண்ணை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.
விடுதலை 03.02.1964

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...