Wednesday, August 20, 2014

வினா-விடை சித்திரபுத்திரன்


வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடா விட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

விடை: நமது மதமும் ஜாதியும்

வினா: நாம் பாடுபட்டு சம்பாதித் தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100 க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாக இருக்கிறோம்.

ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100 க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?

விடை: மதமும் ஜாதியும்

வினா: உண்மையான கற்பு எது?

விடை: தனக்கு இஷ்டப்பட்ட வனி டம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு

வினா: போலி கற்பு என்றால் எது?

விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.

வினா: மதம் என்றால் என்ன?

விடை: இயற்கையுடன் போராடு வதும் அதைக் கட்டுப்படுத்துவதும் தான் மதம்.
வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓவு (லீவு) கொடுக்கப்படுகின்றது.
விடை: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.
வினா: பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
விடை: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந் திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

வினா: மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல் லைகள் ஒழிந்து போகும்.

வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண் டும்?

விடை:  அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு, ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக்கொள்ளா விட்டால் எல் லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்து விடும்.

வினா: பெரிய மூடன் யார்?

விடை: தனது புத்திக்கும் பிரத்தியேக அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன் னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
வினா: ஒழுக்கம் என்பது என்ன?

விடை: ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா: சமயக் கட்டுப்பாடு, ஜாதி கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை: மனிதனை தன் மனசாட்சிக் கும், உண்மைக்கும் நேராய் நடக்கமுடி யாமல் கட்டுப்படுத்துவது தான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.

வினா: உண்மையான கடவுள் நம் பிக்கை என்றால்  என்ன?

வினா: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து அவரைக் காக்கப் பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.
வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை: இந்தியா சீர்பட்டு இந்தியர் களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டு மானால் நாஸ்திகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா: கிறித்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிறிஸ்துவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள் கைகளும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர் களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க் கைக்கோ, மான உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வ தில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமானதுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை: மத விஷயத்தில் அவர் களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க  முடிந்தது. மத விஷயத்தில் பார்ப் பனர்களுக்குள்ள பெருமை போய் விட்டால் அவர்கள் இழிவான மனிதர் களுக்கும் இழிவான மனிதர்-களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக் குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியர்களாவார்கள்.

வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையா கிருக்கின்றது?.

விடை: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக் கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

- (விடுதலை 2.5.1949)

(சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் - தந்தை பெரியார் எழுதியது)

தந்தை பெரியார் ஒரு சகாப்தம்

Monday, August 4, 2014

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புரட்சிகள்

கோப்புப் படம்

கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத் திறனோடு மிகவும் புரட்சிகரமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். அத்தகைய புரட்சிகரமான மாற்றங்களை போற்றிப் புகழ வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பயன் அடைந்தவர்களின் கடைமை, அதைப் பொதுமக்களும் தெரிந்துப் போற்றிப் புகழ்ந்திடவே இக்கட்டுரை.

ஊர், உலகம் எல்லாம் தேர்வாணையங்கள் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பத் தேவையாய் இருக்கிறது என்பதை முதலில் கணக்கிட்டுவிட்டு, பிறகு அந்தத் தேர்வுக்கு அறிக்கை வெளியிடும் நடைமுறையைக் கடைபிடித்து வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிர்த்த முக்கில் இருந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமும் அதன் பெரிய அண்ணன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும்கூட இத்தகைய பழம்போக்கான நடைமுறையைக் கடைபிடித்துவருகின்றன.

பழமையைத் துளி கூட விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த நடைமுறையைத் தன் காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு முதலில் தேர்வை நடத்துவோம்; பிறகு பொறுமையாக எல்லாப் பள்ளிகளையும் தொடர்பு கொண்டு மிக விரைவாகச் சுமார் ஆறு மாத காலத்தில் காலிப் பணியிடங்கள் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம், பின்னர் அடுத்த ஆறு மாத காலத்தில் பணி வழங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து புரட்சிகரமாகச் செயல்பட்டு ஒட்டு மொத்த உலகத்துக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

மத்திய அரசுப் பணியாளர் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வை (Civil Service Exam) மூன்று கட்டமாக சுமார் ஓராண்டு காலத்துக்கு நடத்தும். ஒரே தேர்வை மூன்று கட்டமாக ஓராண்டுக்கு நடத்துவதில் என்ன பெரிய நிர்வாகத் திறமை இருந்துவிடப் போகிறது என்று மாற்றி யோசித்த ஆசிரியர் தேர்வு வாரியம், தான் தலையிட்டு நடத்தும் எல்லா தேர்வுகளையும் ஓர் ஆண்டுக்கு நடத்துவது என்று முடித்துவிட்டது, அதுவும் ஒரு தேர்வுக்கு ஒரே கட்டம்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை மேய்ந்து பாருங்கள், நடப்புத் தேர்வுகள் என்ற பகுதியின் கீழ் இருக்கும் பகுதியில் உள்ள தேர்வுகளின் பட்டியலைப் பாருங்கள், தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பவர் ஸ்டாரின் லத்திகாவுக்கு அடுத்து நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரே நிகழ்வு இதுதான்.

இந்தத் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிடுவோம், முடிவுகளை வெளியிடுவோம் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டு அப்படியே செய்துவிடுவதில் என்ன ஒரு திறமையும் நேர்மையும் பளிச்சிடப்போகிறது. இத்தகைய நடைமுறைகளை முற்றாக வெறுக்கும் வாரியமானது இதையெல்லாம் கைவிட்டு எந்தத் தேதியில் அறிவிப்பை வெளியிடுவது என்பன போன்றவற்றை முன்பே அறிவிப்பதில்லை. அப்படி அறிவித்தால் அந்தத் தேதியில் அறிவித்தாக வேண்டுமே, இதுபோன்ற கட்டுப்பாடுகளை விரும்பாத வாரியம் தான் ஒரு சுதந்திர அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நேர்மையான, சுதந்திரமான ஒரு அரசு அமைப்பு இயங்குவதுதானே ஆரோக்கியமான சமூகத்துக்கு நலம்பயக்கும்.

மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசுத்துறை அமைப்புகள் அதற்கென ஒரு அலுவலரோ அல்லது அதற்குப் பொறுப்பான ஒருவரோ இருப்பதுதானே வழக்கம். இந்த வழக்கத்தையும் வாரியம் மிகவும் வெறுத்துப் புதுமையைப் புகுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளைப் பார்த்தால் வாரியத்தின் இந்தப் புதுமையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர், மர்ம நபர் தகவல் தெரிவித்தார் என்பது போன்றே செய்திகள் வரும்.

மற்ற எந்த அரசுத் துறைகளும் செய்யாத மிகப் பெரிய சாதனை ஒன்றை கடந்த ஓராண்டு காலமாக வாரியம் செய்துவருகிறது. பிற துறைகள் என்னதான் முயன்றாலும் இந்தச் சாதனையை இன்னும் முறியடிக்க முன்னூறு ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர். பிற அரசுத் துறைகளில் நீங்கள் ஒரு குறையைக் கண்டறிந்தால் அந்தத் துறையைத் தொடர்பு கொண்டு பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர நீதிமன்றத்தை உங்களால் பொசுக்கென அணுகிவிட முடியுமா, நிச்சயமாக முடியாது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீங்கள் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் தொடுக்க முடியும், அதற்குத் தேவையான காரணங்களையும் வாரியமே நமக்காக ஏற்படுத்தித் தருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டுமே சுமார் 700 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறதாம், இது போக முதுநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வேறு மேலும் பல நூற்றுக் கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். இவ்வாறு சாதனை புரிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய நீதிமன்ற வழக்குகளுக்காகவே இரண்டு பணியாளர்களை நியமிக்கப்போவதாக மான்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனது கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் (கருத்தாகப் பார்த்தால் இவர்கள் இன்னும் / இப்போது ஆசிரியர்கள் அல்ல) இன்னும் பல்லாண்டுகளுக்கு மாணவர்கள் நலனுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உழைக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஓய்வை அனுபவிக்கும் பெரும் பொருட்டு தேர்வு வாரியம் ஆண்டுக்கணக்கில் இத்தேர்வுகளை நடத்துவதாக தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சிலரை இதற்கு முன்பு அவர்கள் பணிபுரிந்த தனியார் பள்ளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஓய்வு நடவடிக்கையை செயல்படுத்தும் விதமாக அவர்களைப் பணியிலிருந்து விடுவித்து வாரியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனர். தேர்ச்சிபெற்றவர்களும் ஓய்வை ஓராண்டாகச் சுகமாக அனுபவித்துக் கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள்.



மிக நீண்ட காலமாகச் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் செயல்பட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் பொது மக்களின் கவணத்திற்கு வந்தது தற்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் "ஆசிரியர் தகுதித் தேர்வு-2013" நடத்தியதன் பிறகும் இத்தேர்வில் உடனுக்குடனும் முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை திருத்திக் கொண்டு மீண்டும் வேறு வகையான வழிமுறைகளைக் கையாண்டு தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதிலும் வாரியத்தைப் போலச் சிறந்த ஒரு அமைப்பை மங்கள்யான் செயற்கைக்கோளானது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்தால்தான் உண்டு.

- சிரியன். ஆ

Friday, August 1, 2014

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

  • சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்?
  • ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் மூடப்படும் நிலை ஏன்?
முதல் அமைச்சர் உடனடித் தீர்வு காண வேண்டும்!  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கி.வீரமணி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளும், ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து, இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை முதல் அமைச்சர் காண வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
 
இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த தமிழ்நாட்டுக் கல்வித் துறை இப்போது பல்வேறு அவலங்களுக்கும் குறைபாடுகளுக்கும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளாக உள்ளவை பல - போதிய அடிக்கட்டுமான வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை - அதன் காரணமாக, பல ஏழைப் பெற்றோர் கள்கூட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியதால் ஏற்பட்ட மாணவர்கள் போதாமை.

அரசுப் பள்ளிகளை மூடும் நிலை

அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் இல்லாததால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை என்று சில பகுதிகளில் உள்ள கிராமப் பெற்றோர்கள் கூறுவதாக தொலைக்காட்சியில் செய்திக் கோவைகள் வருகின்றன.

அரசின் கல்வித் துறை இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்; ஏற்கெனவே படிக்கும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வசதிகள் - இலவச சைக்கிள், உயர் வகுப்பு மாணவர் களுக்கு மடிக்கணினி, சம்பளமில்லா படிப்புச் சலுகை எல்லாம் வரவேற்கத்தக்கவை என்றாலும், புதிதாக பல ஊர்களில் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுவதைத் தவிர்த்திட, மாற்றுப் பரிகாரம் செய்ய வேண்டியதும் அவசர அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதனை எழுதுகிறோம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பலவும் மூடப்படும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏன்?

தமிழ்நாட்டில் 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 450 தனியார் பள்ளிகள் (ஒரு காலத்தில் வாரிவழங்கியதன் விளைவு இது) உள்ளன.

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித் திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில்  வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு   தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).

இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றை அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும் அரசுகள். இப்போதும் காலந் தாழ்ந்து விடவில்லை.  முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மை வாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப் படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு  செயல் பட்டால் அது பல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும் என்பது உறுதி.

1. இடை நிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடை பெறாதது.

2. பல்வேறு போட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின் பரிதாப நிலை.

இவை காரணமாக இப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டிய கொடுமையான நிலை!

மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை!

மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால்,  ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும் அதிகம் வாய்ப்பாக அமையும்.

ஆரம்பக் கல்விக்கு அரசுகள் செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச் சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது.

ஆட்சியாளர் நோய் நாடி, நோய் முதல் நாட முன் வரவேண்டும்.

மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்கு E என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான்.

முதல் அமைச்சர் கவனிப்பாரா?

ஆட்சியாளர் மறவாமல் மற்ற இலவசங்களை  விரிவுபடுத்துவதைவிட பள்ளிகள் மூடப்படாமல்  பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா?


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
29.7.2014

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...