இராமாயணம் எழுதப் பட்டதே கி.மு. 400 என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது 17 லட்சத்து 25,000 ஆண்டுகளுக்கு முன் ராமன் பாலம் கட்டினான் என்பது அண்டப்புளுகு அல்லவா!
மனிதன் தோன்றியது எப்பொழுது? பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண் டென்றாலும் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றவில்லை என்பது மட்டும் நிஜம். மனிதப் புல் பூண்டு முளைக்காத காலத்திலேயே ராமன் மனித அவதாரம் எடுத்துப் பாலம் கட்டினானா?
இலங்கைத் தீவு பிளவுபட்டது 9000 ஆண்டுகளுக்கு முன் என்று கூறப்படும் நிலையில், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டும் கேள்வியே எழவில்லையே!
பக்திக் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் அதனை நம்பும் மூடமக்கள் இருக்கக் கூடும். இது பகுத்தறிவு உலகமாயிற்றே. எதற்கும் நிரூபணம் கேட்கும் காலமாயிற்றே!
மதுரையிலே ராமசேது பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரால் கூட்டம் போட்டு விசுவ ஹிந்து பரிசத்தின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியாவும், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலனும் என்ன பேசி னார்கள் (22.7.2007)?
ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை, அதைப் பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று பேசினார்களே!
நம்பிக்கை என்பதை எல்லாம் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர பொதுவுக்குக் கொண்டு வந்தால் ஏற்க முடியுமா?
காஞ்சி சங்கர மடம்கூட காத்தவராயனின் தாத்தாவுக்குச் சொந்தமானதுதான்; தாத்தா என் கனவில் வந்து சொன்னார் என்று காத்தவராயன் சொன்னால், காஞ்சி மடம் ஏற்றுக் கொள்ளுமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் _- மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துக் கடலில் குதித்தான் என்ற கதையை உங்கள் புராணத்துக்குள் பூட்டி வைத்துக் கூத்தடிக்கலாம்; அதுதான் உண்மை -_ பாடத் திட்டத்தில் வைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் வாயால் சிரிக்க முடியுமா?
ஏழு குதிரைகளைப் பூட்டி சூரியன் பூமியைச் சுற்றி வந்தான் என்பீர்கள் சூரியனைப் பழம் என்று கருதி அனுமான் விழுங்கினான் என்று கதை அளப்பீர்கள் _ குந்திதேவி சூரியனைப் புணர்ந்து பிள்ளை பெற்றாள் என்று எழுதி வைப்பீர்கள் இது எப்படி என்று கேட்டால் எங்கள் நம்பிக்கை _ - கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லுவீர்கள் _ பகுத்தறிவுள்ள மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
பகுத்தறிவா? கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் எப்படியோ நம்பித் தொலையட்டும்; அதனைப் பொதுக் கருத்தாகத் தீர்மானிக்க முண்டா தட்ட வேண்டாம் என்பதே நமது நிலைப்பாடு!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரியாரின் நண்பர் இல்லையா?
- ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன?
- கருநாடகம் கற்பிக்கும் பாடம்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சூரியப் பூக்களே வருக!
- ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!
- இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!
- செய்திகளின் பின்னணியில் அமெரிக்காவில் திருவையாறாம்
- ராஜபாளையத்தில் ஒரு ராஜப்பாட்டை!
No comments:
Post a Comment