திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யமாகக் கொண்டது என்றும், இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியதோடு, அதனைத் தமிழக அரசு செயல்படுத்தினால், மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு, பாராட்டவும் தயங்க மாட்டோம் என்று மனந்திறந்து பேசினார்.
தி.மு.க.வோடு சம்பந்தப்படுத்தி அரசியல் கண்ணோட் டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த போது, அதற்கான போராட்டத்தை அறிவித்த நேரத்தில், உங்களுடைய சீடர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? அதற்கான சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று சொல்லி அதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். அவர்களும், அதனை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி நீதியரசர் எஸ். மகராஜன் தலைமையில் 12 பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பரிந்துரையும் பெறப்பட்டது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கு ஆகமவிதிகள் தடையாக இல்லை என்றும் அந்த அறிக்கை காரண காரியத்துடன் தெளிவுபடுத்தியது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். நியமித்தார் (செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத் (செ.வை) துறை - செய்தி வெளியீடு எண் 339 நாள்: 8.9.1984).
அந்தக் குழுவும் மூன்று மாதத்தில் அதற்கான அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.
அறிவிப்புகள் இருந்தாலும் எந்தக் காரணத்தாலோ அது நடைமுறைக்கு வராமல் தள்ளிக் கொண்டே போனது. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடல் நல பாதிப்பும் ஒரு காரணம். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் 113 ஆம் ஆண்டு விழாவில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பினை உருவாக்கும் கோரிக்கையினை முதல் அமைச்சர் முன் வைத்தார். (17.9.1991).
அ.இ.அ.தி.மு.க.வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஹேமமாலினி மண்டபத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழக அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அதுபற்றிப் பல பிரச்சினைகளும் எழுப்பப் பட்டுள்ளன. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசால் திறக்கப்படவிருக்கும் வேத ஆகம கல்லூரியில் தாழ்த்தப் பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்களாக ஆக்கப் படுவார்கள். இதன் மூலம் பெரியார், அண்ணா கனவுகள் நனவாக்கப்படும் என்று பேசினார். (17.10.1991).
அது ஆகமக் கல்லூரியாக இருக்க வேண்டுமே தவிர வேத ஆகமக் கல்லூரியாக இருக்கக் கூடாது என்று கழகப் பொதுச் செயலாளர் கூறினார். அதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது உரையாற்றிய போது தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில் ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தாரே! (9.4.1992) திருச்சியை அடுத்த கம்பரசம் பேட்டையில் அதற்கான இடமும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டதே!
இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணமே - இந்தப் பிரச்சினை அஇஅதிமுகவுக்கு - அதன் ஆட்சிக்கு - முதல் அமைச்சருக்கு உடன்பாடான ஒன்றே என்பதை நினைவூட்டவும், செயல்படுத்திட தார்மீகக் கடமை இருக்கிறது என்பதை வலியுறுத்தவும்தான்; உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதே நமது மிக முக்கியமான வேண்டுகோள்.
No comments:
Post a Comment