Thursday, April 25, 2013

மதுரைக் கூத்து!


மதுரையில் நேற்று காலை 8.41 மணிக்கு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் கோலாகலமாக விவாஹ சுப முகூர்த்தம் - அதாவது திருக் கல்யாணம் நடந்ததாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்குக் கல்யாணம் நடக்கிறது. இலட்சக் கணக்கான பக்தர்கள் அப்படியே வெள்ளமாய்த் திரண்டு வந்து சேவிக்கிறார்களாம்.
அப்படி சேவிக்கிற பக்தர்களில் ஒரே ஒருவராவது சிந்திக்கவேண்டாமா?
போன வருசம் இதே நாளில்தானே இதே இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இப்பொழுது மறுபடியும் கல்யாணம் என்றால், போன வருடம் செய்துகொண்ட கல்யாணம் என்னாச்சு என்று யோசிக்கவேண்டாமா?
பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கல்யாணம் செய்துகொண்டா இருக்கிறோம்? இது என்ன கூத்தாயிருக்குது? போன வருசம் கல்யாணம் கட்டிக்கொண்ட மீனாட்சி வேறு - இந்த மீனாட்சி வேறா? என்றெல்லாம் கொஞ்சம் அசைப்போட வேண்டாமா?
மற்றொன்றையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியது. நன்றாகப் பாருங்கள். பக்தர்கள் நம்பும் அந்த மீனாட்சிக்கு சுந்தரேச ஆண் கடவுளா, மீனாட்சியாகிய பார்வதியின் கழுத்தில் தாலி கட்டுகிறார்? இல்லையே! பார்ப்பான்தானே மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.
எந்த ஒரு பக்தருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பவில்லையே! அகிலாண்டேசுவரியின் கழுத்தில் இந்த அற்பப் பார்ப்பன அர்ச்சகனா தாலி கட்டுவது? என்ற கோபம் கிழித்துக்கொண்டு கிளம்ப வேண்டாமா? வைரத்தாலி கட்டியதால் ரோஷம் வரவில்லையா? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாக அல்லவா போய்விட்டது!
தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார். போன வருஷம் கல்யாணம் பண்ணியதை எவன் அடித்துக்கொண்டு போனான்? என்று கேட்டாரே, அப்பொழுதுகூடப் பக்தர்களுக்குப் புத்திவரவில்லையே, வெட்கக்கேடு!
இன்னொரு படுதமாஷ். நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். எதற்கு? தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் கண்குளிரக் காண்பதற்கு; நேற்று காலையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நாளை தான் அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். ஞானக் கண்ணால் தங்கையின் கல்யாணம் நடந்ததையும் அறிந்திருக்கவேண்டாமா? பாதி வழியில் தெரிந்து கோபித்துக்கொண்டு திரும்பு கிறாராம் அழகர்! இன்னொரு கேள்வியும் நியாயமாக எழவேண்டுமே!
போன வருஷம்தான் தாமதமாக வந்தார்... இருந்துவிட்டுப் போகட்டும்; இந்த ஆண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கையின் திருக்கல் யாணத்தைக் காண விரைந்து வந்திருக்க வேண்டாமா? மனிதன் ஒருவன் தவறு செய்தால் இந்தக் கேள்வியைத்தானே கேட்பார்கள்.
ஆனால், கடவுள் செய்த காரியமாயிற்றே! அதனால்தான் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்ற பழமொழியும் பிறந்ததோ!
சரி, அழகருக்குக் கோபம் வந்ததே - திரும்பி எங்கு சென்றார்? தான் குடியிருக்கும் அழகர் மலைக்கா சென்றார்?
அதுதான் இல்லை, வண்டியூருக்குத் திரும்பினா ராம்; அங்கே யார் இருக்கிறார்? துலுக்கநாச்சியார் என்ற அழகரின் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுகிறாராம்.
என்ன வாந்தி வருகிறதா? நாம் எழுதுவது கடவுள் கதை - ஞாபகம் இருக்கட்டும்!
இந்து முன்னணிகாரர்கள், அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் செல்லுவதுபற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்? நியாயமாக அவர்கள் மறியலில் ஈடுபடவேண்டாமா?
கடவுள் என்றால் உயர்ந்தவர்; அனைத்துயிரையும் படைத்தவர் - அனைவருக்கும் தந்தை போன்றவர் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு ஒழுக்கக் கேட்டையும் செய்கிறார் என்றால், இதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டாமா? இத் தகைய ஒழுக்கக்கேடான கோவில் விழாக்களைத் தடை செய்யவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டாமா?
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன்னது தவறா? இப்பொழுது சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...