இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அதைக் கேட்டதும் அதிபர் ராஜபக்சே ஆத்திரத்துடன் ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இரு மொழிகளில் பாடும் நாடு ஏதேனும் உண்டா? இலங்கைத் தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது. சிங்கள மொழியில் மட்டுமே பாட முடியும். தேசிய கீதத்தில் தமிழையும் சேர்த்தால் சிங்களப் புத்தமதத் தலைவர்களுடன் பிரச்சினை ஏற்படும். இல்லாத பிரச்சினையை உருவாக்க நான் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
பாசிஸ்டு ராஜபக்சேயிடம் இதனைத் தவிர வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?
சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியென்று 1956ஆம் ஆண்டிலேயே சட்டம் செய்யப்பட்டது. நீதிமன்ற மொழியாக 1960ஆம் ஆண்டில் சிங்கள மொழி ஆக்கப்பட்டது.
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட வேண்டும் - இதுவரை செய்ததுண்டா?
இராணுவத்தை எடுத்துக் கொண்டால் நூறு சதவிகிதமும் சிங்களவர்கள்தாம். காவல்துறையில் வெறும் 2 சதவிகிதமே தமிழர்கள், அரசுப் பணிகளில் வெறும் 8.3 விழுக்காடே தமிழர்கள்.
தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டுமென்றால் சிங்களவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (1970) என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டு சிங்களமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்துதான் தந்தை செல்வா (1956 ஜூன் 5) தலைமையில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.
1956ஆம் ஆண்டு சிங்களமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்துதான் தந்தை செல்வா (1956 ஜூன் 5) தலைமையில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.
அந்த அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களக் காடையர்கள் அடித்துத் துவைத்து ஆற்றில் தூக்கிப் போட்டார்கள்.
குருதி சொட்டச் சொட்ட நாடாளுமன்றம் சென்றபோது பிரதமர் பண்டார நாயகா அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாரே!
சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள்; இனிமேல் இங்கு சிங்களம்தான் ஆட்சி மொழி! என்று ஆணவமாகப் பேசினாரே!
அந்தப் பண்டார நாயகா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சந்திரிகா பண்டார நாயகா புது சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதிபர் தேர்வு என்பது - இனி நேரடித் தேர்தல் என்று ஆக்கினார்.
இனத்தால் சிங்களவராகவும், மதத்தால் பவுத்தராகவும் இருப்பவர்தான் இலங்கையிலே அதிபராகவர முடியும் என்று புதிய சட்டத்தால் திணிக்கப்பட்டது.
இதற்குப் பிறகுதான் தனியீழம் என்ற புதிய முடிவை எடுத்து முழக்கமிட்டார் தந்தை செல்வா. வட்டுக்கோட்டை மாநாட்டில்தான் அந்த முடிவும் எடுக்கப்பட்டது.
தமிழ்ப் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்கே நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் கூட்டரசு மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவது சாத்தியப்படாது என்பதை கடந்த கால அனுபவங்கள் மூலம் இப்பொழுது அறிந்து கொண்டோம். இதன் அடிப்படையில் நாங்கள் தனியே பிரிந்து வாழ வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தோம். இதனை நாம் செய்யாவிட்டால் தமிழினம் தனது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக் கொள்ள முடியாது. எங்கள் முன்னோர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கென்று தனியாட்சி வைத்திருந்தனர். இலங்கை வரலாற்றில் எங்களுக்கென்று ஓர் இடம் இருக்கின்றது. நாங்கள் நாட்டைப் பிரிக்கும் படிக் கூறவில்லை. இழந்த எங்கள் உரிமையான அரசை அகிம்சை வழியில் மீள அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலையாகும் - என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் ஈழத் தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார்.
அது எவ்வளவு நியாயமானது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் தேசிய இன உரிமை உணர்வை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளவே செய்வர்! தனியீழமே தமிழர் தாகம்!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment