Wednesday, March 27, 2013

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே, தமிழில் பேசுங்கள்!


- க.திருநாவுக்கரசு

இந்திய அரசியல் சட்டத்தினால் ஏற்பளிப்பு செய்யப்பட்ட தேசிய மொழி தமிழ்! 14 மொழிகள் தேசிய மொழிகளாக இருந்த காலம்போய் இன்று 22 மொழிகள் இந்தியாவின் அரசியல் சட்ட 8 - ஆவது அட்ட வணையில் இடம் பெற்று இருக்கின்றன. மக்களவையிலும், மாநிலங்கவையிலும் நமது தமிழ்நாட்டு உறுப்பினர்கள் மொழி தொடர்பான விவாதங்களில் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். அப் போது நமது உரிமைகளை அங்கே வலியுறுத்தி இருக்கிறார்கள். அவ் விவாதங்களை ஏடுகளில் படித்தபோது மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ்ந்து போயிற்று.
கடந்த மார்ச் 15ஆம் தேதி மக்கள வையில் யூ.பி.எஸ்.சி தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது ம.தி.மு.க. உறுப்பினர் அ.கணேச மூர்த்தி தமிழில் பேசினார். அவர் பேசுகிறபோது, அவையின் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஓய்வு பெற்று ஓராண்டு ஆகியும் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. தமிழ் மொழி பெயர்ப்பாளரை நியமிக்க மக்களவைத் தலைவர், செகரட்டரி ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதே விவாதத்தில் கலந்து கொண்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், அவையில் தமிழில் பேச விரும்பினா லும், மொழி பெயர்ப்பாளர் இல்லாத தால் ஆங்கிலத்தில் பேச வேண்டி யுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அஇஅதிமுக உறுப்பினர் க.தம்பிதுரை பேசுகிறபோது, மொழி பெயர்ப்பு வசதி இல்லாததால் என்னால்  தமிழில் பேச முடியவில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பேசுகிறேன். இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவையில் அனைத்து மொழிகளுக்கான மொழி பெயர்ப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
நமது தமிழ் நாட்டு உறுப்பினர் களுக்கு நாடாளுமன்றத்தில் தமிழில் பேச வேண்டும் என்கிற அவா இருக்கிறது. ஆனால் மத்திய அரசு - மக்களவைத் தலைவரின் கீழ் உள்ள நிர்வாகம் ஓராண் டுக்கு மேலாகியும் மொழி பெயர்ப்பாளரை நியமிக்கவில்லை. மத்திய அரசை மிகச்சிறிய பிரச்சினையிலிருந்து மிகப் பெரிய பிரச்சினை வரை அங்குசத்தால் குத்த வேண்டியுள்ளது. இயல்பாக ஓர் அரசுக்கு உள்ள பொறுப்பின்படி ஒரு போதும் மத்திய அரசு நடந்து கொண் டதில்லை.
ஆனால் அதிகாரத்தைக் குவித்து வைத்துக் கொள்வதிலும், அதிகாரத்தை செலுத்துவதிலும் அதிகாரிகள், முதல் நிலை அமைச்சர்கள் கருத்தாய் இருக் கிறார்களே தவிர உரிமைகள் பகிர்ந் தளிக்கப்படுவதில்லை. பல பிரச்சினை களில் அவர்களது முடிவுகள் நகைப்பூட் டுவனவாக இருக்கும். முதல் நிலை அமைச்சர்கள், கிளை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என்று 70க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர் களுக்குள் நல்ல அறிமுகம் இருக்குமா? பிரதமர் இவர்களை அறிந்து வைத்தி ருப்பாரோ என்பதெல்லாம் அய்யப்பாடாக இருக்கிறது.
மாநிலங்கள் அவையில் திருச்சி சிவா ஆட்சி மொழிகள் சட்ட மசோதா விவாதத்தில் கலந்து கொண்டு மிக அரியதோர் உரையை ஆற்றியிருக்கிறார். பல அரிய கருத்துக்களை அவர் எடுத்து வைத்து இருக்கிறார். தற்போதுள்ள 22 தேசிய மொழிகளையும், ஆட்சிமொழி களாக ஆக்க வேண்டும் என்று உறுதிபட கூறிய அவர் மூன்று குறிப்புகளை அவையில் முன் வைக்கிறார்.
1) அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவனையில் உள்ள அனைத்து மொழி களையும், மத்திய அரசின் அனைத்து அதிகாரப் பூர்வ தேவைகளுக்கும் பயன் படுத்துவதை உறுதி செய்ய 1963-ஆம் ஆண்டின் ஆட்சி மொழிகளின் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
2) திருச்சி சிவா ஓர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை எடுத்துரைத்தார். பிறகு நகரில் நடைபெற்ற மார்ச்சிஸ்ட் கட்சியின் ஆவணம் அது! - அதன் உள்ளடக்கத் தின் கூறாக,இந்தியாவின் ஒற்றுமைக்கும் சமத் துவ உணர்வுக்கும் மக்களது மொழிகள் பற்றி ஒரு சரியான அணுகுமுறை வேண் டும். நாடாளுமன்றத்திலும், மத்திய நிர்வாகத்திலும் இந்திய மொழிகளின் அனைத்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை வேண்டும், அவை உடனுக்குடன் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து சட்டங்கள், அரசானைகள், தீர்மானங்கள் ஆகி யவை அனைத்து இந்திய மொழிகளி லும் கிடைக்க வேண்டும் என்று மாநி லங்களவையில் எடுத்து கூறியிருந்தார்.
3) ராஜமன்னார் குழுவின் பரிந் துரையில் உள்ள கீழ்க்காணும் கருத்தை அவையில் எடுத்து சொன்னார்.
இது பொதுமக்களை மத்திய அரசின் நிர்வாக அமைப்புக்கு உணர்ச் சிப் பூர்வமாக கொண்டு வந்து மத்திய நிர்வாகம், மாநில மட்டத்திலுள்ள நிர்வாகம் போல தங்களுடையது தான் என்று மக்களை உணர வைக்கும், திருச்சி சிவா மாநிலங்களவையில் மிக விரிவாகப் பேசி இருக்கிறார். அவை நம் உள்ளத்தை தொட்டு உணர்ச்சி மேலிடச் செய்கிற உரை, அதில் அய்யமில்லை. நாம் மேலே எடுத்துக் கூறி இருக்கிற மூன்று அம்சங்கள் அவரது உரையில் வெளிப் பட்டு இருக்கிற கருத்துக்கள் மக் களிடையே மத்திய அரசை நெருக்க மாகக் கொண்டு வருபவையாகும். ஆனால் அவர்கள்தான் எப்போதும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்ப வர்களாகக் காட்சியளிப்பார்கள். இவை ஒரு பக்கம் இருந்தாலும் நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் மக்களவையிலும், மாநிலங் களவையிலும் ஆற்றி இருக்கின்ற மேற்சொன்ன உரைகள் - எமக்கு ஒர் எண்ணத்தை தோற்றுவித்தது.
இனி நாடாளுமன்றத்தில் நமது தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தமிழில் பேசினால் என்ன? என்பது தான் அது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...