விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் - பாலகன் பாலச்சந்திரனை சிங்கள இன வெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு காட்டு விலங்காண்டித்தனமாக - குரூரமாக நெஞ்சில் ஒரு துளியும் இரக்கமுமின்றி சுட்டுக் கொன்ற விதம் உலக மக்களைப் பதைபதைக்கச் செய்துவிட்டது.
நேற்று இந்து ஏட்டில் முதல் பக்கத்தில் வெளிவந்த அந்தச் சிறுவனின் முகம் வெளிறிக் காணப்பட்ட காட்சி! படத்தைப் பார்த்தவர்களின் நெஞ்சில் வடிந்த ரத்தக் கசிவு எளிதில் உறையாது.
வேறு எந்தப் பிரச்சனையை நோக்கிக் கவனம் செலுத்தினாலும் இந்தக் காட்சி அவர்கள் நினைவில் குறுக்கே குறுக்கே வந்து நிற்கிறது.
சீ..... இப்படியும் சில மனிதர்களா? ஆட்சியாளர்களா? என்ற வினாக்கள்தான் எழுந்து நிற்கின்றன.
ஏதோ தின்பண்டம் கொடுத்து, பழுது ஏதும் அறியாத அந்தப் பால் வடியும் பாலகனைக் குரூரமாகக் கொன்றுள்ளார்களே!
அந்தப் பாலகனின் முன்னிலையிலேயே சிலரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர் - அந்த மனித உருவத்தில் நடமாடும் மிருகங்கள்.
இலங்கை சிங்கள அரசு இதனைச் சிறிதும் எதிர்பார்த்திருக்காது. அதுவும் காலம் காலமாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஜெயவர்த்தனேயின் சீடராக இருந்து செயல்பட்டு வந்திருக்கிற இந்து ஏட்டில் படத்துடன் இந்தச் செய்தி வெளி வந்திருப்பதை ராஜபக்சே எதிர்பார்த்திருக்கக் கூட மாட்டார்.
ஆனாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது நடைமுறையில் வழங்கப்படும் பழமொழியாகும்.
பல நாடுகளில் ஆயுத உதவியைப் பெற்று ஈழ விடுதலைப்புலிகளை, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து விட்டோம் என்று ஆணவத்தின் உச்சியில் நிர்வாணக் கூத்தாடிய ராஜபக்சே - தன்னை நோக்கிக் கடுமையான அம்புகள் பாயும் என்று நினைத்திருக்க மாட்டார்; காரணம் அதிகார வெறியும், ஆணவமும், அழித்து முடித்து விட்டோம் என்ற திமிரும் அந்தக் கொடியவனை அவ்வாறு நினைக்கச் செய்திருக்கும்.
தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது போலவே ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்பதற்கு பாலச்சந்திரன் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் ஒன்று போதாதா என்று வினா எழுப்பியுள்ளது மிகவும் சரியானதாகும்.
இதற்கு மேலும் எந்த ஒரு நாடாவது ஜெனிவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுக்குமேயானால், அந்த நாடுகளையும் ராஜபக்சேயின் பட்டியலில்தான் வைக்க வேண்டும் - வரலாறும் அவ்வாறுதான் எள்ளி நகையாடும்.
இலட்சக்கணக்கான யூதர்களை ஆரிய வெறியன் அடால்ப் ஹிட்லர் கொன்று குவித்துக் குதியாட்டம் போடவில்லையா? இறுதியில் நஞ்சு அருந்தித் தற் கொலை செய்து கொண்டான். அந்த நிலைக்கு ராஜ பக்சேயை விட்டு விடாமல், விரைந்து அதிகாரபூர்வமாக உலக நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அதற்கான தண்டனையை அனுப வித்தே தீர வேண்டும்.
ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. மருத்துவமனைகள், மத நிறுவனங்கள், குழந்தைகள் இல்லம் இவற்றின்மீது குண்டு மாரி பொழியவில்லையா?
பத்திரிகைக்காரர்களைத் தீர்த்துக் கட்டவில்லையா? 2006 முதல் 2009 வரை ஒன்பது பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 27 பேர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாகரன் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது, கடத்தப்பட்டது குறித்து எழுப்பிய வினாவுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. உலகில் எங்கு போர் நடந்தாலும், அங்கெல்லாம் சென்று பொது மக்களுக்குத் தொண்டுக்கரம் நீட்டக் கூடிய செஞ்சிலுவைச் சங்கத்தினர்கூட அவர்களின் தொண்டினைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடுக்கிக் கொண்டே போகலாம் போர்க் குற்றவாளி ராஜபக்சே என்பதற்கான காரணங்களை...
உலக நாடுகள் மதிப்புப் பெற - குறிப்பாக இந்தியா - மனித உரிமை காப்பாற்றப்படக் குரல் கொடுக்கும் நாடு தான் என்பதை நிலைநாட்ட - அய்.நா. தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள - நம் முன் எழுந்து நிற்கும் அரிய வாய்ப்பு - அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானமாகும். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் நடந்து கொள்ளட்டும்! பாலகன் பாலச்சந்திரன்மீதான படு கொலை இந்த உணர்வை ஊட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment