பாரதிய ஜனதா கட்சி, பிரதமருக்கான வேட்பாளரை எங்கே தேடுகிறது என்ற தகவலை அறிந்தால் நாம் இந்த 2013இல் தான் வாழ்கிறோமா என்ற வினா கண்டிப்பாக எழத்தான் செய்யும்.
அலகாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டு இருக்கிறது அல்லவா? அங்கு வரும் சாமி யார்களின் கருத்துக்களைக் கேட்டு, பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்று தேர்வு செய்யப்படும் என்று பிஜேபியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் தெரி வித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் புண்ணியமுழுக்குப் போடும் கும்பமேளா என்பதுதான் இந்த இந்துத்துவாவாதிகளின் அறிவில் பூத்த முக்கியமான நிகழ்வாகும்.
முக்கியமான முடிவுகளை எல்லாம் இங்குதான் எடுப்பார்கள். 1992 டிசம்பர் 6 அன்று அயோத் தியில் பாபர் மசூதியை இடித்தார்கள் அல்லவா! அந்த முடிவைக்கூட இந்தக் கும்பமேளாவின் போதுதான் சாமியார்களின் கருத்தைக் கேட்டுத் தான் எடுத்தார்கள்.
விசுவ ஹிந்து பரிஷத் என்னும் இந்து சாமியார்களின் அமைப்புக் கூட்டம் வரும் 7ஆம்தேதி உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் நடைபெற உள்ளது. அப்பொழுது இந்த முக்கிய முடிவு எடுக்கப்படுமாம்.
பாபர் மசூதியை இடிப்பதற்குப் பச்சைக் கொடி காட்டியவர்கள் - பல்லாயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவித்த ஆட்சிக்குச் சொந்தக்காரரான நரவேட்டை நரேந்திர மோடியைத்தானே தேர்வு செய்வார்கள்.
குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை இந்திய அளவில் நிறைவேற்றிட பொருத்தமான ஆசாமி கிடைக்க வேண்டாமா? அந்தக் கண்ணோட்டத்தில் மோடியைத் தவிர வேறுயார் தான் கிடைக்க முடியும்?
பல இனங்கள், பல மொழிகள், பல கலாச் சாரங்கள், பல வகை தட்ப வெப்ப நிலைகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஏற்ற ஆட்சி என்பது மதச் சார்பற்ற தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அது உறுதி செய்யவும் பட்டுள்ளது.
இந்த அரசமைப்புச் சட்டத்தின் மீதுதான் சத்தியம் செய்து பதவியும் ஏற்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இதற்கு எதிரான சிந்தனையும் தத்துவமும் கொண்ட மூர்க்கத்தனம் கொண்ட மதவெறிக் கும்பல் ஆட்சி பீடத்தில் ஏற அனுமதிப்பதைவிட தற்கொலை ஒப்பந்தம் ஒன்று இருக்க முடியுமா?
இதற்கு முன்வந்ததே கடைந்தெடுத்த தலைக் குனிவு! இன்னொரு முறை இந்தியா உலக நாடுகளின் முன் தலைகுனிய வேண்டுமா?
குஜராத் வன்முறையைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பேயி என்ன சொன்னார் - நினைவு இருக்கிறதா?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரா - இல்லையா?
இப்பொழுது அந்த மோடியையே பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது இந்தியாவின் முகத்தையே தொங்கச் செய்வதாகும்; ஒவ்வொரு குடிமகனையும் அவமானப்படுத்துவதும் ஆகும்.
பி.ஜே.பி., தன்னை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ்.காரர்களுக்கும் நாடாளுமன்றத்திற்குள் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அளிக்கப்படத்தான் செய்கின்றன.
இராமனை இழிவுபடுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும்; நாக்கை அறுக்க வேண்டும் என்று வெறித்தன நஞ்சைக் கக்கிய ராம்விலாஸ் வேதாந்தி வி.எச்.பி. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்றால் சங்பரிவார் அமைப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமே.
பி.ஜே.பி. சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் குழுவில் கண்டிப்பாக ஆர்.எஸ். எசைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதை விதியாகவே வைத்துக் கொண்டுள்ளனர்.
கும்பமேளாவில் பிரதமரைத் தேடும் அளவுக்கு நெறி கெட்டுப் போன அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டாமா? வாக்காளர்கள் சிந்திப்பார்களாக!
No comments:
Post a Comment