Friday, February 15, 2013

சபாஷ் மனுஷ்யபுத்திரன், சார்!


மனுஷ்யபுத்திரன் சார் - உங்களுக்கு ஒரு சபாஷ் போடுகிறோம்.
காதலர் தினத்தையொட்டி நேற்று இரு தனியார் தொலைக்காட்சிகளில் விவாதப் போர் நடைபெற்றது.
அதில் நீங்கள் எடுத்து வைத்த கருத்துகள் முற் றிலும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை மய்யத்திலிருந்து வெடித்துக் கிளம்பியவைதான்.
(தந்தை பெரியார் பெயரை நீங்கள் உச்சரிக்கா விட்டாலும், அதுதான் உண்மை - பெரியார் பெயரை உச்சரித்திருந்தால் விவாதத்தை வேறு தடத்திற்கு இழுத்துச் சென்று இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது).
இரு தொலைக்காட்சிகளிலும் காதலை ஏதோ ஒரு வகையில் எதிர்த்துப் பேசியவர்கள் இந்துத்துவா சிந்தனை உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள். (விவா தத்தில் பங்கு கொண்ட ஒரு சகோதரி கூட அதனை இடித்துச் சொன்னார்)
உங்கள் முருகன் வள்ளியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா? கிருஷ்ணன் எனும் கடவுள் கோபியர்களை லீலை செய்யவில்லையா? என்று அழ கான அறிவாயுதத்தைத் தூக்கி வீசினார். எதிர்தரப்பு அம்மையார் அரசியலுக்குப் போகாதீர்கள் என்றார். ஆம்! அவர்கள் அரசியலே அந்தப் புராண இதிகாசக் கழிசடைத்தனத்தை மூல ஊற்றாகக் கொண்டது தானே!
பூமியாகிய தேவிக்கும், பன்றி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் காதல் ஏற்பட்டது, அவர்களுக்குப் பிறந்த பிள்ளைதான் நரகாசுரன் என்று புராணம் எழுதி வைத்து  ஆண்டுதோறும் அதற்காக தீபாவளி கொண்டாடுகிறவர்கள் - யதார்த்தத்தில் காதல் என்றால் சீறுவதுதான் வேடிக்கை.
இடையில் புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளைப் பாடியது தன் பக்கத்துக்குத்தானே கோல் அடித்துக் கொண்டதாகும் (Same Side Goal).
காதல்என்பது உயிரியற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ? என்று பாடியவர் புரட்சிக்கவிஞர்!
(அந்த இடத்தில் புரட்சிக்கவிஞரின் வரிகள் என்ற வரிப் புலியை ஏவி விட்டு இருக்கலாம்).
கோரிக்கையற்று கிடக்குதண்ணே - அந்த வேரில் பழுத்த பலா என்று விதவைப் பெண்களுக்காக வக் காலத்துப் போட்டு வாதாட வந்த வக்கீல் புரட்சிக்கவிஞர்.
கலாச்சாரம் - பண்பாடுபற்றி டாக்டர் அம்மா நீட்டி முழங்கினார்களே - அது என்ன கலாச்சாரம்?
ருதுவானவுடன் உடனடியாக பெண்ணை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்திடவேண்டும் என்பதுதானே? பெண்ணைப் பார்த்துப் பொட்டைக் கழுதை என்று பெண்ணை விட்டே பேச வைத்த கலாச்சாரம்தானே?
என்ன ஆம்பிளைப் பயலாட்டம் குதிக்கிற? என்று பெண்களை உடலளவில் பலம் குன்றியவர்களாக வார்த்தெடுத்ததுதானே அந்தப் பழம் கலாச்சாரம்!
அவர்கள் கூறும் அந்தக் கலாச்சாரத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் உண்டா?
தறுதலையாக ஒருவன் திரிந்தால் கம்மனாட்டி வளர்த்த பிள்ளையல்லவா? கழிசடையாகத்தானிருக்கும் என்று சொலவடைதானே அவர்கள் கூறும் கலாச்சாரம்!
பெண்களும், சூத்திரர்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று பகவான் கிருஷ்ணனே கூறியதாக கீதையில் (அத்தியாயம் 9, சுலோகம் 32) கூறப்பட்டிருக் கிறதா, இல்லையா?
பெண்களையும், பிராமண ரல்லாதார்களையும் கொல்லுதல் பாதகமாகாது (மனுதர் மம், அத்தியாயம் 11, சுலோகம் 65).
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு, பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்கவேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. (மனுதர்மம், அத்தியாயம் 5, சுலோகம் 148).
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவான வர் கற்பித்தார்.
(மனுதர்மம், அத்தியாயம் 9, சுலோகம் 17)
கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீலோலனாக இருந்தாலும், நற்குணமில்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்கவேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் சுலோகம் 154).
இந்த இந்துத்துவா சிந்தனைகளைக் கண்மூடித்தன மாக நம்புபவர்கள், ஏற்றுக்கொள்பவர்கள் பெண்ணுரிமை யின் வெளிப்பாடான காதல் உணர்வை ஏற்றுக் கொள் வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், பொருளீட்ட ஆரம்பித்துவிட்டனர். சுயமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். அது கூடாது என்பதுதானே எதிர்தரப் பினரின் வாதம்.
அவர்கள் வாதம் வெற்றி பெற வேண்டுமானால், பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது. உத்தியோகங் களுக்கும் அனுப்பக்கூடாது.
(வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம்கெட்ட வர் கள் என்று சொன்னவர்தானே அவர்களின் லோகக் குரு வான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி).
உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் வீடு, பழக்கவழக்கம் என்பது ஓர் அரைநூற்றாண்டுக் காலத்தில் எவ்வளவோ மாற்றம் அடைந்துள்ளன.
தம் வாழ்வை நிர்ணயித்துக் கொள்ளும் மிக முக்கிய மான திருமணத்தில் மட்டும் வயது அடைந்த ஓர் ஆணுக் கும், பெண்ணுக்கும் உரிமையில்லை என்று கூறுவது அத்துமீறியது - சட்டவிரோதமானது - மனித உரிமை மீற லல்லாமல் வேறு என்னவாம்?
பெண்களைப் படிக்க வைத்து பொருளீட்டவும் அனுப்பிய பிறகு 18 வயது நிறைந்த பெண்களின் அறிவு வெளிச்சத்தை உரிமையின் கூர்மையை ஜாதி என்னும் வலையை வீசி தடுத்திடுவது சரியல்ல. அது ஆகக் கூடியதும் அல்ல - அல்லவே அல்ல!
தம்மின் தம் மக்கள் அறி வுடைமை என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
கொங்கு வேளாளர் சமூ கத்திற்குத் தானே ஏகப் பிரதி நிதி என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் ஒருவர் கூட தங்கள் பெண்களுக்குச் சமத்துவம் கொடுப்பதாகக் கூறினார்.
அப்படி சொல்லுகிறவரின் முகத்திரை எங்கே கிழிந்து தொங்குகிறது தெரியுமா?
பெண்களுக்குச் சொத்துரிமை கூடாது என்று தீர்மானமாகச் சொன்னவர்தான் அவர்?
27.1.2013 நாளிட்ட `இந்து ஏட்டில் 9 ஆம் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இளைஞன் இராசசேகரன் வன்னியர். அதே மாவட்டம் அரூரைச் சேர்ந்த ஜீவியா என்ற பெண்ணை (கொங்கு வேளாளர்) காதலித்துத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
பெண்ணைக் கடத்திச் சென்றதாக வழக்கு - நீதிமன்றத்திலேயே நெற்றியடியாக அந்தப் பெண் சொல்லிவிட்டார். `இல்லை, அது தவறு நானாக விரும்பித் திருமணம் செய்து கொண்டேன்!` என்று அடித்துச் சொல்லி விட்டார்.
பெண் கர்ப்பம் ஆனாள், பெண்ணின் பெற்றோர்கள் விடுவதாக இல்லை - வீட்டுக்கு வரச் சொல்லி, நைசாக இராசிபுரத்திற்குக் கொண்டு சென்று, கருச்சிதைவு செய்துகொள்ள வற்புறுத்தினர், மறுத்தாள் அந்தப் பெண்.
தகவல் அறிந்த பெண்ணின் காதலனாகிய இராச சேகரன் புகார் கொடுத்ததன் பேரில், பெண்ணின் பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (செக்சன் 366, 312).
பெண்ணைக் கடத்தியதாக இராசசேகரன்மீது புகார் கொடுத்தனர். இப்பொழுதோ திருமணமான பெண்ணைக் கடத்தினார்கள் (Kidnapping) என்று பெற்றோர்கள்மீதே  வழக்கு - விசித்திரம் பார்த்தீர்களா? இதுதான் இன்றைய சட்டப்படியான நிலைப்பாடு.
வன்னியரைத் தாண்டி திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.
கவுண்டரைத் தாண்டித் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இதுதான் எங்கள் கலாச்சாரம் - அகமுறை என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் நடந்ததோ இந்த இரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கிடையேதான் - எப்படி?
இராசசேகரன் - ஜீவியாக்கள் வாழ்வியல்தான் யதார்த் தமானது. ஜாதி வலை அறுந்து சுக்கல் நூறாகும்.
யாரும் அதைக் காப்பாற்ற முடியாது.
மனுஷ்யபுத்திரன் சார், நன்றாகத்தான் சூடு கொடுத்தீர்கள். ஆனால், அதில் அதிகக் கோபக்கனல் கொந்தளித்தது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியதே! ஆனாலும், சொல்ல வந்தது சில இடங்களில் புரியாமல் போய்விட்டதே!
சித்திரத்தில் பெண் எழுதி ...
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ
காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு கண்ணீர்தான் உன் வழியோ
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ
மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு வாய்த்த விதி இதுதானோ!
- கருஞ்சட்டை

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...