Wednesday, January 9, 2013

பெரியார்திரை குறும்படப்போட்டி


போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20, 2013

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நான்காம் ஆண்டாக நடத்தும்  பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள்: 

1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப்  பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.

2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitle)  இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.

3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos)   மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. 

6. போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

7. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.

8. குறும்படங்கள் 2010-2012 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.

9. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

10. போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக 2013 ஜனவரி இறுதியில் வெளியிடப்படும். 

11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

13. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.viduthalai.in, www.periyarthirai.blogspot.com  ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

14. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.

15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20, 2013


முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000


மேலும் தொடர்புகளுக்கு:

செல்பேசி: 9444210999, 9940489230


periyarthirai@gmail.com




அனுப்ப வேண்டிய முகவரி:

அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, 
வேப்பேரி, சென்னை-7




படைப்புலகம் என்பது இன்று காட்சி வடிவிலானதாக மாறியிருக்கிற சூழலில், இளைஞர்களிடமும், முற்போக்குச் சிந்தனையாளர்களிடமும் அதற்கான ஆர்வமும், முனைப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வெகு சாதாரணமான நகரங்களிலும், கிராமங்களிலும் கூட குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் குறித்த விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அவற்றில் முற்போக்குப் சிந்தனைகளையுடைய குறும்படங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

ஜாதி - மத ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு உள்ளிட்ட தலைப்புகளில் எடுக்கப்படும் குறும்படங்களின் படைப்பாளிகள் பிற்காலத்தில் நல்ல பல படைப்புகளை கொள்கை உணர்வோடு தரவல்லவர்களாக இருக்கிறார்கள். 

தங்களின் சொந்த முயற்சியில் படைப்பை வெளிக்கொண்டு வரும் அவர்களுக்கு, திரையிடல் வாய்ப்புகளை வழங்கி ஊக்கம் அளிக்கவும், அவர்களை ஆற்றுப்படுத்தி,  திரைத் துறையில் ஏற்கெனவே இயங்கி வரும் படைப்பாளிகளோடு இணைப்பை ஏற்படுத்தித் தந்து புதிய இளைய தலைமுறை படைப்பு வட்டத்தை உருவாக்கிடவும் சரியானதொரு களம் தேவைப்பட்டு வந்தது. அந்தத் தேவையை நிறைவு செய்யும் விதமாகத்தான் கடந்த 8.11.2008 அன்று பெரியார் திடலில் மணியம்மையார் அரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சீரிய சிந்தனையில் தோன்றி, அதை செயல்படுத்த, அவரே தலைமையேற்று, பாவலர் அறிவுமதி முன்னிலையில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டது.

 கடந்த நான்காண்டுகளில் சென்னை பெரியார் திடலில் மட்டும் 55திரையிடல்கள் நிகழ்த்தப்பட்டன.

 இவற்றில் 67 குறும்படங்களும், 19 ஆவணப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன. இது தவிர, வட சென்னை, குற்றாலம், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாம்களிலும்,  திருச்சி, மதுரை, பொன்னமராவதி, காரைக்குடி போன்ற நகரங்களிலும் திரையிடல்கள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. மேலும் ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம், குறும்பட வெளியீடு, பெரியாரியல் பரப்பும் புதிய குறும்படங்கள் தயாரிப்பு என இதன் பரப்பும் விரிந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் திரையிடல்களுக்கு படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களுக்குரிய அங்கீகாரம் பெற்றுத் தருதல் என இதன் செயல்பாடு தொடர்கிறது.

தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையைத் தொடங்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அளவில் குறும்பட ஆவணப்படப் போட்டிகள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தகைய முயற்சியின் பயனாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற பெரியார் திரை குறும்படப் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனைவரின் வரவேற்பையும் பெற்ற யோசி சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசான ரூ.10000 மற்றும் பெரியார் திரை குறும்பட விருது 2011யும் பெற்றது. இனி ஒருவிதி செய்வோம், பேரன், துவந்த யுத்தம் ஆகியவை முறையே இரண்டாம் (ரூ.5000), மூன்றாம் (ரூ.3000) மற்றும் சிறப்புப் பரிசுகள் (ரூ.1000) பெற்றன. அதன் தொடர்ச்சியே இவ்வாண்டும் அறிவிக்கப்பட்டுள்ள 2012-ஆம் ஆண்டுக்கான பெரியார் திரை குறும்படப் போட்டி  ஆகும்.

மாதந்தோறும் நடைபெறவுள்ள திரையிடல்களுக்கும் தங்கள் படைப்புகளை அனுப்பி, உலகின் பார்வைக்கு வைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நம் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரையிடலும் அதனைத் தொடர்ந்து படைப்பாளியுடன் கலந்துரையாடலும் நிகழும். திரையிடல் என்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊடகங்களுக்கும் இளைஞர்களைத் தயாரிக்கும் பரந்த நோக்கோடும் இம்முயற்சி நடைபெற்று வருகிறது.




No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...