அதிர்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் சொன்னால்மட்டும் போதாது
தமிழ்நாட்டிலும் பெண்கள்மீது ஏவுப்படும் வன்முறைக்கு முடிவு தேவை!
2012 ஆம் ஆண்டோடு இந்த அவலம் முடியவேண்டும்;
2013 இல் புதிய விடியல் பிறக்கட்டும்! பிறக்கட்டும்!!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
சென்னை, டிச. 29- பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் 2012 ஆம் ஆண்டோடு முற்றுப்பெற வேண்டும்; 2013 இல் புதிய விடியல் பிறக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
சென்னை, டிச. 29- பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் 2012 ஆம் ஆண்டோடு முற்றுப்பெற வேண்டும்; 2013 இல் புதிய விடியல் பிறக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
பெண்கள்மீது ஏவப்படும் பாலியல் கொடுமை களைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (29.12.2012) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றினார். அவரது உரை வருமாறு:
தேசிய அவமானம்
என்னுடைய கண்டன உரைக்கு முன்னாலே இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளையே உலுக்கி, மிகுந்த வேதனைக்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி இருக் கக்கூடிய நிகழ்வான, டில்லியிலே பாதிக்கப்பட்ட அந்த மருத்துவக் கல்லூரி மாணவி, சிங்கப்பூருக்கு எடுத்து செல்லப்பட்டு, அவர்கள் விடியற்காலை மரணமுற்றார் என்ற செய்தி, எவ்வளவு பெரிய முயற்சிகளை மருத்துவத் துறையிலே செய்தும்கூட, அந்த மிருகங்களுடைய அட்டகாசம் மருத்துவத் தையும் தாண்டி சென்றிருக்கிறது; மருத்துவத்தால் கூட, உலக மருத்துவ வல்லுநர்களாலும் காப்பாற்ற முடியாத அளவிற்கு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கிறது என்பதை அறிய மிகுந்த வேதனை அடைவதோடு, இந்த அவமானம் ஒரு தேசிய அவமானம், நாட்டிற்கே அவமானம், பெண் குலத்தை இவ்வளவு இழிவாக நடத்தக்கூடிய ஆண் மக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்களா? என்று வெளிநாட்டவர் காறித் துப்பக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய அளவிற்கு ஒரு தேசிய அவமானம் ஆகும்.
மறைவுற்ற மருத்துவக் கல்லூரி மாணவிக்கு இரங்கல்
இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் பெண்கள்மீது ஏவப்படும் பாலியல் கொடுமைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிகழ்வில், இன்று அதிகாலை சிங்கப்பூர் மருத்துவமனையில் மறைந் ததையொட்டி, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வேண்டு கோளுக்கேற்ப தொடக்கத்தில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
ஒரு நிமிடம் அமைதி...
அந்தத் தோழியருக்கு, இவ்வளவு பெரிய கொடு மைக்கு ஆளான அவருக்கு, கண்டன உரையைத் தொடங்குவதற்கு முன்னாலே, நம் அனைவருடைய ஆழ்ந்த இரங்கலை, ஒரு நிமிடம் அமைதி காத்து, பிறகு உரையைத் தொடரலாம்.
இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும், சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசு - மாநில அரசு என்ற வேறுபாடில்லை. ஆணா திக்க சமுதாயம் - பெண்ணுரிமை பெறக்கூடிய ஒரு புதிய எழுச்சியுள்ள யுகம் இரண்டுக்குமிடையிலே ஒரு மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற தொடக்கம்தான் இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
டில்லியிலே அவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்திலே, அதைவிடக் கொடு மையாக, தமிழ்நாட்டிலே, நம்முடைய வழக்குரை ஞர் அருள்மொழி அவர்கள் சுட்டிக்காட்டியபடி, தூத்துக்குடியிலே மிகப்பெரிய கொடுமை! அதுவும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, பள்ளிக்கூடத்திற்குச் சென்று திரும்பிய அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க அந்த வன்கொடுமை நெஞ்சர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ அப்படி நடந்து கொள்வதற்கு என்று நமக்கே புரியவில்லை.
அதேபோல், சிதம்பரம் பகுதியிலே, விழுப்புரத் திலே, அதுபோலவே, இன்று காலையில் கூட வேலூர் திருப்பத்தூருக்குப் பக்கத்திலே நடைபெற்ற ஒரு நிகழ்வு என்று தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிற முதலமைச்சர் அவர்கள், இதைத்தான் ஒழுங்கு என்று கருதுகிறரா? இதைத்தான் சட்டம் என்று கருதுகிறாரா? அவரே பெண்ணினத்தினுடைய பிரதிநிதியாக இருந்து, தாய்மார்கள் எல்லாம் அவருக்கு வாக்களித்து, அவரை முதலமைச்சராக அமர வைத்திருக்கின்ற ஒரு நிலையிலே,
அவர்கள் மற்ற இடங்களைப் பார்த்து அதிர்ச்சி யடைகிறேன் என்று சொல்வதைவிட, இங்கே நடைபெறுவதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது; அவர்கள் கையிலே சட்டம் இருக்கிறது; காவல்துறை இருக்கிறது; காவல்துறை யிலே மிகப்பெரிய அளவிலே பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில வாரங்களுக்கு முன்னாலே, காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சில நிகழ்வுகள்; பெண்கள் வளர்ந்தால், முன்னேறினால், அதை சகிக்க முடியாத ஆணாதிக்கம் இன்றைக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்!
பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம், பிறவியினால் பேதம் இருக்கக் கூடாது என்பதாகும். அந்தப் பிறவியினால் பேதம் இருக்கக் கூடாது என்பது - ஒன்று சாதி, இன்னொரு ஆண் - பெண் என்ற பேதம்.
அந்த வகையிலே இப் பொழுது சட்டங்கள் மாறி வந்தாலும்கூட, மீண்டும் மீண்டும் இப்படியெல் லாம் ஒழுக்கக்கேடுகள், கலாச்சாரச் சீரழிவுகள் நடைபெறுகின்றன. உட னடியாக நடவடிக்கை எடுத்துவிடுவோம் என்ற உறுதிமொழி சொன்னால் மட்டும் போதாது.
நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும்; இப்படி ஒரு கலாச்சாரத்தைப் பரப் புகின்ற ஊடகங்களாக இருந்தாலும், தொலைக் காட்சியாக இருந்தாலும், அது பெரிய திரை, சின்னத் திரையாக இருந்தாலும் சரி அல்லது ஆட்சித் திரை யாக இருந்தாலும் சரி, எந்தத் திரையாக இருந்தாலும் மகளிருக்கு பாது காப்புத் தேவை. தவறு யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நல்ல போக்கு, நடுநிலைப் போக்கு, கடுமையான போக்கு நடைபெற்றாகவேண்டும்.
நம்முடைய நாட்டில் நடைபெற்ற இந்த அவலத் தைக் கண்டு சிங்கப்பூர் மக்கள் சிரிக்கிறார்கள்.
இப்படி ஒரு அவலம் இந்தியாவில் நடை பெறலாமா என்று பேட்டி கொடுக்கிறார்கள். இது தேசிய அவமானமாகும்.
எனவே, ஆட்சியாளர்களுக்குச் சொல்கிறோம், மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்குச் சொல் கிறோம், இதை வெறும் 144 உத்தரவு போட்டு அடக்கிவிட முடியாது. அல்லது சட்டங்களால் தடை செய்து அடக்கிவிட முடியாது. அல்லது ஊடகங்களை மிரட்டி நீங்கள் உண்மையைச் சொன்னால், உங்கள்மீது வழக்குபோடுவோம் என்று அடக்கிவிட முடியாது. மிகப்பெரிய புரட்சியாக வெடிக்கும்!
அப்படி அடக்க, அடக்க இது கொதிகலன்போல உள்வாங்கி இருக்கும். ஒரு நாள் மிகப்பெரிய புரட்சியாக வெடித்தால், அன்றைக்கு யாராலும் அதை சமாளிக்க முடியாத ஒரு காலகட்டம் வரும்.
எனவேதான், அந்த நிலைக்கு மக்களை விரட்டாமல், ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்குப் போகாமல், மத்திய - மாநில அரசுகள், குறிப்பாக ஆளுகின்றவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு சமாதானத்தைத் தேடி அலையக்கூடாது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியவேண்டும், அதுதான் மிக முக்கியம். ஏதோ, குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று சில சோளக் கொல்லை பொம்மைகளைக் கொண்டுவந்து நிறுத்தக்கூடாது.
முடிவல்ல, தொடக்கம் இது!
அந்த வகையிலே, இன்று நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டம் இருக்கிறதே, இது முடிவல்ல; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே இது ஒரு தொடக்கம். எல்லோருக்கும் இந்த உணர்வு இருக்கிறது; இதற்குக் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. இன்னுங்கேட்டால், மேல்ஜாதிப் பெண்களாக இருந்தாலும் சரி, கீழ்ஜாதிப் பெண்களாக இருந் தாலும் சரி பெண்கள் பெண்கள்தான். அவர்க ளுடைய உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். அவர்கள் மனிதர்கள். அதுதான் மிக முக்கியம். இந்த மனிதநேயப் பார்வைதான் நமக்கு மிக முக்கியம். அந்த அடிப்படையிலே, எந்த ஜாதி என்பது முக்கியமல்ல; எந்தக் குலம் என்பது முக்கியமல்ல; எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல; எந்த மாநிலம் என்பதும் முக்கியமல்ல; மனிதர்களாக என்பதுதான் முக்கியம். அதுதான் தந்தை பெரியாருடைய தத்துவம். ஆகவே, அந்தத் தத்துவத்தை மய்யப் படுத்தி, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை முதற்கண் தொடங்குகிறோம்.
2013 இல் புதிய விடிவு பிறக்கட்டும்
2012 ஆம் ஆண்டோடு இது முடியட்டும்; 2013 ஆம் ஆண்டு புதிதாக தொடங்குகிறது என்று நினைக்காதீர்கள்; எங்கள் சிந்தனையிலே புதிய விடியல் பிறக்கிறது; பெண்களுக்குப் புதிய விடியல் பிறக்கவேண்டும்; பெண்ணுரிமைக்குப் பாதுகாப்பு இருக்கவேண்டும் என்ற உணர்வினைக் காட்டுங்கள் ஆட்சியாளர்களே!
அமைதியாகச் சொல்வதால், அவர்கள் ஏதோ சாந்தமாக விட்டார்கள்; சரி செய்துவிட்டோம் என்று தயவு செய்து தப்புக் கணக்குப் போடா தீர்கள். எரிமலைகள் வெடிப்பதற்கு முன்னால்கூட அமைதி யாகத்தான் இருக்கும்; கடல்கூட சீறுவதற்கு முன்னால்கூட அமை தியாகத்தான் இருக்கும். அதை நன்றாக உணர்ந்து நடந்து கொள்ளுங்கள், நடந்து கொள்ளுங்கள் என்று ஆட்சியாளர்களுக்குச் சொல்லுகிறோம்.
ஆண்களே, இது பெண்கள் பிரச்சினையல்ல;
மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் எங்கும் நடை பெறக்கூடாது; யாருக்கும் நடைபெறக்கூடாது. ஆண்களே, இது பெண்கள் பிரச்சினை என்று நினைக்காதீர்கள்; பெண்களைவிட அவமானப்பட வேண்டியவர்கள் ஆண்கள்தான் இதில், என்பது தான் மிக முக்கியமானது.
எனவே, இந்தத் தேசிய அவமானத்தை துடைக்க, அனைவரும் கைகோர்த்து நில்லுங்கள்; ஒத்த குரல் எழுப்புங்கள்; இதில் சுருதிபேதம் வேண்டாம்; கருத்து மாறுபாடுகள் வேண்டாம்; கொள்கை வேறுபாடுகள் குறுக்கிட வேண்டாம்.
முன்னேறிய நாடு என்றால்...
ஒரே நோக்கம் மனிதநேயம், சுயமரியாதை, மறுவாழ்வு, பொதுவாழ்வு, பெண்ணுரிமை எங்கே நிலைக்கிறதோ, அந்த நாடுதான் முன்னேறிய நாடு என்று அதற்குப் பொருள்.
ஏனென்றால், அவர்தான் தாய், அவர்தான் மகள், அவர்தான் நம் தங்கை, அவர்தான் நம் தமக்கை என்பதை மறந்துவிடாதீர்கள், மறந்துவிடாதீர்கள் என்று கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!
ஏனென்றால், அவர்தான் தாய், அவர்தான் மகள், அவர்தான் நம் தங்கை, அவர்தான் நம் தமக்கை என்பதை மறந்துவிடாதீர்கள், மறந்துவிடாதீர்கள் என்று கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி வணக்கம்!
நன்றி வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment