Wednesday, October 31, 2012

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா? அல்ல - அது வெறிச் சின்னமே!


ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா?
அல்ல - அது வெறிச் சின்னமே! தமிழர் தலைவர் முழக்கம்!
ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கலைஞர் மீதான விமர்சனமாகக் குறுக்க வேண்டாம்!
பேரா. சுப வீரபாண்டியன் வேண்டுகோள்!


- நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னை, அக்.30 - ஈழத் தமிழர்கள் பகுதியில் போர் நினைவுச் சின்னம் என்பது, சிங்கள அரசின் வெறிச் சின்னமே தவிர, வெற்றிச் சின்னமல்ல என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
ஈழத் தமிழர்களுக்காகப் பேசுவது என்ற பெயரில் கலைஞர் மற்றும் திமுக மீதான விமர்சன மாகக் குறுக்க வேண்டாம் என்றார். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்த போர் நினைவுச் சின்னமா? எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை - பெரியார் திடலில் நேற்று (29.10.2012) மாலை 7 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
ஈழத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எதற்காக இந்த நினைவுச் சின்னம்? யாரை எதிர்த்துப் போரில் வெற்றி பெற் றனர்?
சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்ததற்காக நினைவுச் சின்னமா? விடுதலைப்புலிகளை எதிர்த்து எப்பொழு தாவது இலங்கை இராணுவம் வெற்றி பெற்றதுண்டா?
சீனா, பாகிஸ்தான், இந்தியா உள் ளிட்ட நாடுகளின் இராணுவ உதவிகளை யும், ஆயுதங்களையும் பெற்று தானே அப் பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்காக ஒரு நினைவுச் சின்னமா என்று கேட்டார் வரவேற்புரையில்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
இலங்கையில் இரு நாடுகளுக்கிடை யேவா போர் நடந்தது? இல்லையே; அப்படி இருக்கும்பொழுது எங்கிருந்து வந்தது போர் நினைவுச் சின்னம்? ஈழத் தமிழர்கள் இலங்கையின் குடிமக்கள் இல்லையா?
வெளிநாட்டோடு ஒரு நாடு சண்டை யிட்டால்தான் அது போர்! மாறாக இலங்கைத் தீவில் நடைபெற்றது சுதந்திரப் போராட்டம்! (பலத்த கரஒலி!)
இந்து ஏட்டில் இன்று வெளிவந்துள்ள கட்டுரையில் அவர்களையும் தாண்டி சில உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதி யுள்ளனர்.
வங்கிகளில் கடன் வாங்குவ தற்கு சொத்து ஆதாரங்கள் கேட்கப்படு கின்றன; அவர்களின் ஆதாரங்கள் எல்லாம்தான் அழிக்கப்பட்டு விட்டனவே - இந்த நிலையில் பரிதாபத்திற்குரிய எங்கள் தமிழர்கள் எந்த ஆதாரங்களைக் கொண்டு வந்து கொடுக்க முடியும்? உலகத்தை  ஏமாற்றுவதற்குத்தானே இந்தப் பிரச்சாரங்கள்?
இராணுவத்துக்குச் சம்பந்தமில்லாமல், காவல்துறைக்குச் சம்பந்தமில்லாமல் உடல் முழுவதும் கிரீசைத் தடவிக் கொண்டு தமிழர்களின் வீடுகளில் புகுந்து தாக்குகிறார்கள் - பெண்களிடம் வார்த் தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நடந்து கொள்கிறார்கள் - உடல் முழு வதும் கீரிஸ் தடவிக் கொண்டு வருவதால் அவர்களைப் பிடிக்கவும் முடிவதில்லை - வழுக்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் கல்வியில் ஆர்வம் உடையவர்கள். ஆனால் ஒரே ஒரு பல்கலைக் கழகம் - அதிலும் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கைக்கு அனுமதி கல்வியிலும் மண்ணை அள்ளிப் போடு கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் அங்கே வாழும் மன நிலையில் இல்லை. அனைத்தையும் பறிகொடுத்த மன நிலையில் பரிதாபத்தின் எல்லைக்கே விரட்டப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் அழிக்கப்பட்டதாக நினைக் கலாம்; அவர்கள் அழிக்கப்படவில்லை - உண்மையைச் சொல்லப் போனால் விதைக்கப்பட்டுள் ளனர். (கரஒலி)
வரலாற்றில் இடி அமீன், கடாபி போன்றவர்களை நாம் பார்க்கவில்லையா? அவர்களின் இறுதிக் காலம் என்ன நிலைக்கு ஆளானது? பதவி அதிகாரத்தில் இருக்கும் வரை ஒன்றும் தெரியாது பதவி பறிபோனால் அவர்கள் கதி என்னாகும் என்பதை வரலாறு நமக்குத் தெரிவித் துள்ளது. இத்தகையவர்களை வரலாறு குப்பைக் கூடையில்தான் தூக்கி எறியும்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ராஜபக்சேயை மறந்து விட்டு நமக்குள் தேவையில்லாமல் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எங்கேயோ வைக்கப்பட வேண்டிய குறி, தடம் மாறிப் போய்க் கொண்டு இருக்கிறது.  இதன் மூலம் ராஜபக்சேக்களுக்கு பலம் சேர்க்காதீர்கள் என்பதுதான் எங்களின் கனிவான வேண்டுகோள்!
எங்களைவிட உங்களால் மேலும் வலிமையாக சிறப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் செயல்பட முடியுமானால் தாராளமாகச் செய்யலாம்; நாங்கள் ஒன்றும் குறுக்கே நிற்கப் போவதில்லை. யாரால் நடந்தது என்பது முக்கியமல்ல- காரியம் வெற்றிகரமாக நடக்கிறதா என்பதுதான் முக்கியம். இடையில் சிண்டு முடிந்திடுவோர் இருக்கின்றனர் என்பதை மறவாதீர்கள் என்பதும் நமது வேண்டுகோளாகும்.
போர் நிறுத்தம் மற்ற இடங்களில் ஏற்படுவது இருக்கட்டும்; முதலில் நம்மிடையே போர் நிறுத்தம் வர வேண்டும் - என்று கேட்டுக் கொண்டார்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியிலே சிங்கள அரசு நிறுவி இருப்பது வெற்றிச் சின்னமல்ல- அவமானச் சின்னம்!
ராஜபக்சேவை விழுந்து விழுந்து ஆதரிக்கும்  இந்து ஏடுகூட இன்று ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு எழுதி யுள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் 18 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அத்தனைப்  பேரும் சிங்களவர்களே என்று இந்து குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் இலங்கை என்பது சீனாவின் தொங்கு சதையாகி விட்டது. போரே இல்லாமல், போரையை மேற்கொள் ளாமல் கொழும்பில் சீனாவின் நினைவுச் சின்னம் நிறுவப்பட இருப்பதை விரைவில் காணலாம்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் வளர்ந்தால், வலிமை பெற்றால் இந்தியாவுக் குப் பாதுகாப்பானது. இதனை பிரதமராக இருந்த இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே புலிகளை அவர் ஆதரித்தார். புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவும் அனுமதி கொடுத்தார்.
சீனாவின் முத்துமாலை திட்டம் என்பது இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்குத்தான், தமிழர்களை இந்தியா காப்பாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பெரியார் திடல் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந் தால் இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழர்கள் பற்றிய உணர்வு எங்களுக்கெல்லாம் உண்டாகி யிருக்குமா? இந்திய இராணுவம் ஒரு பேட்டை ரவுடிபோல் நடந்து கொள்ளலாமா என்று இதே மேடையில் வினா எழுப்பியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்தான்.
ஈழத் தமிழர்களும் சாகக் கூடாது; இந்திய இராணுவ வீரர்களும் மடியக் கூடாது என்று சொன்னவர் திராவிடர் கழகத் தலைவர்.
அன்று கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ உருவாக்கப்பட்டது - போராளிகள் பக்கம் நின்று; இன்று கலைஞர் தலைமையில் டெசோ உருவாகி இருப்பது கொலைகாரன் ராஜபக்சேவைக் கூண்டில் ஏற்ற - எஞ்சி யுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற.
இன்றைய தினம் ஈழத் தமிழர்களுக்காக என்று சொல்லப்படும் மேடைகள் ஈழத் தமிழர்களுக்காக என்ற நிலைமாறி கலைஞரையும், திமுகவையும் தூற்றுவது என்கிற அளவுக்குக் குறுகிவிட்டது என்று குறிப்பிட்டார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...