குஜராத் மோடி ஆட்சியில் 2002 இல் நடைபெற்ற மதக்கலவரம் - வரலாறு உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டி எரிந்ததால் ஏற்பட்ட உயிரிழப்புக்குக் காரணம் முஸ்லிம்கள்தான் என்று முத்திரை குத்தி பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட இந்து மக்கள் மத்தியில் வெறியை ஊட்டி மதக் கலவரத்தை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியே தலைமை தாங்கி நடத்தியது என்பது மாபெரும் வெட்கக்கேடு!
கோத்ராவில் எரியுண்டு மாண்டவர்களின் சடலங்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லுவது என்று தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் அமைச்சர் நரேந்திர மோடி சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பார்த்த பிறகுதான் பிரச்சினை திசை திரும்பியது. சடலங்களை ஒட்டு மொத்தமாக ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டதால், திட்டம் தீட்டிக் கொடுத்ததால், மக்கள் மத்தியில் குரூரமான வெறியுணர்வு தூண்டப்படுவதற்கு வசதி செய்து கொடுக்கப் பட்டது.
எரியுண்ட சடலங்களை ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றால் எத்தகைய விபரீத விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகும்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். காவல்துறையும் சேர்ந்து கொண்டு கொலை வெறியாட்டம் போட்டது. வழக்குகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.
உச்சநீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக வழக்குகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. இப்பொழுதுதான் நீதிமன்றம் கொலையாளிகளுக்குத் தண்டனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் தீப்தா தர்வாஜா பகுதியில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்கள் வன்முறைக் கும்பலால் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், நகராட்சித் தலைவர்கள் உட்பட 85 பேர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. இதில் 21 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் கடமை தவறிய காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.
மோடி அரசு ஒழுங்காக வழக்கை நடத்த விரும்பாத நிலையிலேயே தண்டனைகள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன என்றால், எந்த அளவுக்குக் குற்றங்கள் - வன்முறைகள் அங்கு கொம்பு முளைத்துக் கூத்தாடி யிருக்கும் என்பதை எளிதில் உணரலாமே. பெஸ்ட் பேக்கரி வழக்கும் அப்படியே!
உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பும் மிக முக்கியமானது. தகர்க்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு குஜராத்தின் பி.ஜே.பி. அரசு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து குஜராத் மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமோ குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இப்படி தொடர்ந்து நீதிமன்றங்கள் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பி.ஜே.பி. அரசுக்கு எதிராகத் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வலியைப் பொறுக்க முடியாமலும், தாம் அம்பலப்படுத்தப் பட்டு வருகிறோம் என்ற நிலையில் ஆத்திரப்பட்டும், உணர்ச்சி வயப்பட்டுமேதான் நரேந்திர மோடி நான் குற்றம் செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று கத்துகிறார் - கதறுகிறார்.
இவ்வளவு மோசமான ஒருவரை இந்தியாவில் உள்ள உயர்ஜாதி ஊடகங்கள் அடுத்த பிரதமருக்கான வேட்பாளராகத் தூக்கிப் பிடிக்கின்றன. காற்றடித்து வண்ண வண்ண பலூன்களாக உயரப் பறக்க விடுகின்றன என்றால் இந்த நாட்டில் உயர்ஜாதி மனப்பான்மை என்ற ஒரு தீய சக்தி படமெடுத்து ஆடும் ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
குஜராத் கலவரம் நடந்த ஒரு கால கட்டத்தில், அப்பொழுது பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார் என்பதையும் இந்த இடத்தில் மறக்காமல் நினைவு கூர்வது மிகவும் பொருத்த மானதாகும்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லமுடியும்? என்ற அவரது வினாவையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா உயர்ஜாதி ஊடகங்கள்?
இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வரும் தீர்ப்புகள் குஜராத் மோடி அரசின் முகத் திரையை முற்றிலும், கிழிக்கும் என்பதில் அய்யமில்லை.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment