Monday, July 9, 2012

அயோத்தியில் ராமன் கோவிலுக்கு ஆதாரம் உண்டா ?


- ம.கிருஃச்ணமூர்த்தி
பாபர் மசூதி 1528இல் கட்டப்பட்டது (339). அப்போது அங்கே ஒரு கல்வெட்டும் பதிக்கப்பட்டது. அதில் பாபர் மசூதி பாபரின் ஆணைப்படி அயோத்தியின் கவர்னரான மீர் பகியால் கட்டப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதே இடத்தில் இராமர் கோயில் இருந்தது என்றோ அக்கோயிலை இடித்துவிட்டு அதன் மேல் மசூதி கட்டப்பட்டது என்றோ எந்த ஒரு குறிப்பும் அக்கல்வெட்டில் இல்லை.
மசூதி கட்டுவதற்கு ஓராண்டிற்கு முன் பாபர் அயோத்திக்குச் சென்று சில நாட்கள் தங்கி வேட்டையாடியதையும் சரயு நதிக்கரையின் கடவுத்துறை பற்றி அறிந்துவர பீர் முகமது ஜலேபானை அனுப்பியதையும் பாபர் தன் நூலில் (பாபர் நாமாவில்) குறிப்பிட்டுள்ளார். கோயில் இடிப்பு பற்றிய செய்தி எதுவும் _ சிறு குறிப்புகூட அதில் இல்லை. (340)
மசூதி கட்டி முடிக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்குள் அதாவது 1575_76ல் துளசிதாசர் தனது இராமாயணத்தை எழுதி முடித்தார். அவர் ஒரு பச்சை வருணாசிரமவாதி _பார்ப்பனன்.
(திரேதாயுகத்தில் நடந்த இராமன் சரிதத்தை வால்மீகியை விடத் துல்லியமாகத் தன் ஞானக் கண்ணால் கண்டு எழுதிய துளசிதாசருக்கு இராமர் கோயில் கட்டியிருந்ததும் அது பாபரால் இடிக்கப்பட்டு அதன்மேல் மசூதி கட்டப்பட்டதும்தான் ஞானப் பார்வையில் புலப்படாமல் போயிருக்குமா?!)
ஆனால் இக்கோயில் பற்றியும் இடிப்பு வேலை பற்றியும் மசூதி கட்டப்பட்டதை அவர் கூறவில்லையே ஏன்? (தன் ஞானப் பார்வையில் பட்டிருந்தால் ஆடையைக் கிழித்துக்கொண்டு அலறிப் புலம்பி வரிந்து வரிந்து எழுதிக் குவித்திருப்பாரே! - (சு.சாமிபோல)
அதுமட்டுமல்ல. அவர் தீர்த்தராஜ் என்று தீர்த்த யாத்திரைக்கான முக்கிய இடங்களின் பட்டியல் தயாரித்தார். அதில் அயோத்தி பற்றி அவர் எதுவும் கூறவில்லையே. இராமர் கோயில் இருந்திருந்தால் அதை அவர் குறிப்பிடாமல் இருந்திருப்பாரா? மாறாகஅவர் குறிப்பிடுவது பிரயாகையைத்தான் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.(341)
அபுல் ஃபசல் எழுதிய ஆயினி அக்பரி என்ற நூல் 1598 முடியப் பல சரித்திரத் தகவல்களைக் கூறுகிறது. அவர் புனித யாத்திரைக்கான இடமாக அயோத்தியைக் குறிப்பிடும் அதே வேளையில் இராமர் கோயில் இருந்ததாகவோ அது இடிக்கப்பட்டதாகவோ கூறவில்லை.
1608இல் அயோத்திக்கு வந்த வில்லியம் ஃபிஞ்ச் என்பவர் இராமர் கோயில்பற்றி எதுவும் தன் நூலில கூறவில்லை.
1695-_96இல் சுஜன் ராய் பந்தாரி என்பவர் எழுதிய குலசதுத் தவாரின் என்ற நூலில் இராமர் கோயில்பற்றி எதுவும் கூறவில்லை. அதே சமயம் மதுராவில் கேசவ ராய் கோயிலை அவுரங்கசீப் இடித்ததைத் தவறாமல் எழுதியுள்ளார்.
1580இல் காசி வாழ் பார்ப்பான் நாராயணபட்டர் என்பவன் திரிஸ்தல சேது என்ற நூலை எழுதி பிரபலப்படுத்தினான். திரிஸ்தல சேது என்றால் 3 தலங்களின் பாலம் எனப் பொருள்படும். 3 தலங்களாவன பிரயாகை, காசி, கயா என்ற தீர்த்த யாத்திரைக்கான முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். இந்நூலிலும் கூட அயோத்தி இல்லை என்பது கவனிக்க வேண்டியது. (எனவே அங்கே இராமர் கோயிலும் இல்லை, இராமனோ இராமாயணமோ அக்காலத்தில் முக்கியமானதாக இல்லை என்பது தெளிவு.) (394)
ஆக, 1528 முதல் 1760 வரை _ 242 ஆண்டுகள் வரை அயோத்தியில் இராமன் கோயில் இருந்ததற்கான அல்லது அது இடிக்கப்பட்டு அதன்மேல் பாபர் மசூதி கட்டப்பட்டதற்கான எவ்வித சமகால வரலாற்று ஆதாரமும் இல்லை என்று தெளிவாக அறிய முடிகிறது.
அதற்குப் பிறகுதான் கதை கட்டத் துவங்கினார்கள் சு.சாமியின் முன்னோர்கள். (பிள்ளையா பால் குடித்ததும் அப்படி அவரைக் குடிக்கச் சொல்லி உத்தரவிட்டதும் தான்தான் என்று கொலைகாரச் சாமியார் கூறியதைத் போல) உண்மைச் செய்தியைவிட புனைவுகளை வேகமாக வளர்ப்பதில் கை தேர்ந்தவர்களாயிற்றே இந்தப் பார்ப்பான்கள்.(342)
(புனைவு கதைகளைப் பரப்பு முன்பு அதனை முட்டாள் மக்கள் நம்பும் வண்ணம் சில சூழ்ச்சியான செயல்களைச் செய்வார்கள். அவற்றில் சில..
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ள இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலின் 262 முதல் 280 வரையான பக்கங்களில் குறிஞ்சி நிலக் குறவர்களின் காக்கும் கடவுளான காளி எப்படி பார்ப்பனர்களின் கடவுளானது என்றும் அதையும் ராமானுஜரின் தில்லுமுல்லு மூலம் ஒரு வைணவக் கடவுள் ஆனது என்றும் விரிவாகக் காணலாம்.
பத்து, இருபது ஆண்டுகளுக்கு மன் பிள்ளையார் சுயம்புவாகத் தோன்றுவார். சென்னையிலேயே சில நிகழ்வுகள் நடந்தன. அதற்கு காவல் துறையினரின் ஒத்துழைப்பும் அதிகம் இருந்தது. தற்சமயம் சின்னத்திரை நெடுந்தொடர் கதைகளிலும் கண்டிருப்பீர்கள்.
மயிலை சீனி வேங்கடசாமி மிகச் சிறந்த ஆய்வு அறிஞர். தமிழ்ப் புலமை நிரம்பியவர். தமிழ், தமிழனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துப் பல உண்மைகளை_ பார்ப்பனப் புரட்டுகளை வெளிக் கொணர்ந்தவர். அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் _ 2ஆம் பகுதியில் பக்கம் 13_16 கூவத்துப் பௌத்தக் சிலைகள் என்ற கட்டுரையின் ஒரு பகுதி இதோ....
சிவபெருமான் முப்புரங்களை அழித்தார் என்பதற்கு பவுத்தர்களுடைய புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளை அழித்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட தத்துவார்த்தம். புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகள் பவுத்த மதத்தின் மூன்று கோட்டைகளாகும். இவை அழிந்தால் பவுத்த மதம் அழிந்துவிடும்.
பண்டைக்காலத்தில் சைவ, வைணவர்கள் பவுத்த மதத்தை அழித்து பவுத்த கோயில்களைக் கைப்பற்றுவதாக இருந்தால் பவுத்த கிராமத்துக்கு அருகில் உக்கிர மூர்த்தியாகிய நரசிங்க மூர்த்தியை அமைப்பார்கள்.
பிறகு பையப்பைய பவுத்தக் கோயிலைச் சைவக் கோயிலாகவோ வைணவக் கோயிலாகவோ மாற்றி விடுவார்கள். இதற்குச் சிவ பெருமான் முப்புரத்தை, நரசிங்க அம்பு எய்து அழித்தார் என்று புராணக் (புனைவுக்) கதை கூறுவார்கள். இது என்னுடைய ஆராய்ச்சியில் கண்ட முடிவு. என்று எழுதுகிறார்.
இதுதான் இராமர் கோயிலில் நடந்தது. முதலில் இரவோடிரவாக மசூதிக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து இராமர் சிலையை வைத்து அதனைத் தொழ உரிமை கொண்டாடினர். பல புனை கதைகளை அவிழ்த்து விட்டனர்.
இறுதியாக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் ஆதரவோடு நிலைப்படுத்தி நரசிம்மராவ் காலத்தில் 1992இல் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர் பார்ப்பனர்கள். இந்திய அரசின் சட்ட ஒழுங்கு மாசுபட்டு இன்றுவரை சீராகவில்லை என்பது நாடறிந்த செயல்.
என்னே பார்ப்பனீயத்தின் கொடூரம்?
(அடைப்புக் குறிக்குள் காணப்படும் எண்கள் பேரா.அருணன் எழுதியுள்ள காலந்தோறும் பிராமணீயம் தொகுதி 1, 2இன் பக்கங்களைக் குறிக்கும்.)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...