திராவிடர் இயக்கத்தைக் கொச் சைப்படுத்த விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் புறப்பட்டுள்ளனர்.
சிலர் வெளிப்படையாகப் பேசுகின் றனர். ஒரு சில தலைவர்கள் குட்டிக் குரங்குகளை விட்டு ஆழம் பார்க்கின்றனர்.
வன்னியர் கட்சி நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு என்ன செய்கிறார்? அவர் மேடையில் வீற்றிருப்பார். தமது எடுபிடிகளை விட்டு தந்தை பெரியார் அவாகளைப் பற்றித் தாறுமாறாகப் பேசவிட்டு, ரசித்துக் கொண்டு இருப்பார். கடைசியாக அவர் பேசுவார். அவர் பேச்சில் பெரியார் பற்றி ஒரு வார்த்தையும் இருக்காது.
இது ஒரு வகையான பார்ப்பனத்தனம் இன்னும் சொல்லப் போனால் கடைந் தெடுத்த கோழைத்தனமே!
பெரியாரைக் கழித்துவிட்டு, திராவிடர் இயக்கம் என்று ஒன்று இல்லை. திராவிடர் இயக்கத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்திப் பேசினாலும் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் பொருள்.
ஒரு சிலர் இந்த வேலையில் இறங்குகின்றனர். பெரியாரை ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிடர் இயக்கத்தைப் பற்றிப் பொய்யும் புனை சுருட்டும் நிறைந்த மொழிகளில் அர்ச்சிக்கின்றனர்.
நமது மதிப்பிற்குரிய மதுரை பழ.நெடுமாறன் அவர்கள் அமர்ந் திருக்கும் மேடையில் கூட தந்தை பெரியாரைப் பற்றிக் கொச்சைப் படுத்திப் பேசப்படுகிறது. ஆனால் அவர் அதனைக் கண்டு கொள்வதில்லை. மருத்துவர் திரு. ச.இராமதாசு கையாளும் அதே முறையை அவரும் கையாள்வது ஆச்சரியமானதுதான்.
மருத்துவர் இராமதாசு தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசாத பேச்சா? சூட்டாத புகழாரமா?
பெரியாரைப் பேசித்தான் தான் ஒரு சமூக நீதிப் போராளி என்று மார் தட்டிக்கொள்ள முடிந்தது.
தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்லித்தான் நான் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளன் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டியிருந்தது.
தந்தை பெரியார் அவர்களை முன்னி றுத்தித்தான் மருத்துவர் ச.இராமதாசு அரசியல்வாதிகளைச் சாடவும் முடிந்தது.
தேர்தல் அரசியல் களத்தில் அவர் கட்சி காலடி எடுத்து வைத்த நேரத்திலும் கூட பெரியார் கொள்கையை நெஞ்சில் தாங்கிய ஒரு வீரர் இதோ புறப்பட்டுவிட்டார்! என மக்கள் நம்பும் அளவுக்குப் பெரியாரைப் பற்றி மூச்சுக்கு முந்நூறு தடவை பேசியவரும் அவரே!
இன்னும் ஒரு கட்டத்தில் தம் கட்சிக்காரர்களைக் கறுப்புச் சட்டை கூடப் போட வைத்தார்!
மக்களிடம் அடையாளம் காட் டப்பட, விளம்பர வெளிச்சத்தில் குளிக்க, தொடக்கத்தில் பெரியார் தேவைப்படுவார். அடுத்த கட்டத்தில் விளம்பரமும், செல் வாக்கும், செல்வமும் சேர்ந்து விட்டால் எதிரியின் கால் எங் கிருக்கிறது என்று தேடிப்போய் விடுவான் தமிழன் என்று தந்தை பெரியார் சொன்னது அனுபவ மொழியாயிற்றே! அது பொய்த்துப் போய்விடலாமா?
அதனைத்தான் இவர்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்களோ!
ஒவ்வொரு தேர்தலிலும் திரா விடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதான் அந்தச் சில்லறை இடங்களைக் கூடப் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?
விழுப்புரத்திலே மாநாடு கூட்டி சிறப்பு நாற்காலி ஒன்றைத் தயார் செய்து அதில் மானமிகு கலைஞர் அவர்களை அமர வைத்து, அடுத்த முதல் அமைச்சர் நீங்கள்தான் என்று சொன்னபொழுது கலைஞர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் போயிற்றா? பெரியாரும், கலைஞரும் தெலுங்கர் என்று ஏழுகடல் மூழ்கி, அய்யிரண்டு திசை முகத்தும் தடம் பதித்து புதிய கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள் இந்த நவீன வாஸ்கோடகாமாக்கள்.
ஆரியர் _- திராவிடர் என்பதே புதிதாக பெரியார் கண்டுபிடித்ததா? கைபர்,போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்ற பால பாடம் புரியாதவர்கள் எல்லாம் மைக் பிடிக்கலாமா?
சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் திராவிடர் இயக் கத்தைச் சேர்ந்தவர்களா?
குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகத்தை உருவாக்கினாரே பேராசிரியர் வி.அய் சுப்பிரமணியம், அவர் என்ன திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரா?
குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகத்தை உருவாக்கினாரே பேராசிரியர் வி.அய் சுப்பிரமணியம், அவர் என்ன திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரா?
திரவிடியன் என்சைக்ளோ பிடியாவை பி.ஜே.பி.யைச் சேர்ந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி யிடம் பேராசிரியர் வி.அய்.சுப்பிர மணியம் அவர்கள் கொடுத்த போது திராவிட என்ற சொல்லை நீக்கக் கூடாதா என்று முரளி பார்ப்பனர் கேட்ட கேள்விக்குள் புதைந்திருக்கும் உணர்வுக்குப் பொருள் புரியுமா? அந்தப் பூணூல் கூட்டத்தினரின் திராவிடர் எதிர்ப்பு உணர்வை யாசகமாக எந்தத் தேதியிலிருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் இந்தத் தமிழ்த் தேசிய வாதிகள்?
அப்படிக்கேட்ட அந்த முரளி மனோகர் ஜோஷியின் முகத்தில் பளார் என்று அறை கொடுத்தது போல தேசிய கீதத்தில் இடம் பெற்றிருக்கும் திராவிட என்ற சொல்லை எடுத்துவிட்டால் நானும் திராவிடன் என்சைக்ளோ பிடியா என்பதில் உள்ள திராவிடன் என்ற சொல்லை எடுத்து விடுகிறேன் என்று சொன்னாரே! (ஆதாரம்: DLANews 2003 பிப்ரவரி) அப்படிச் சொன் னவர் முதுபெரும் தமிழ் அறிஞர் அல்லவா!
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராக இருந்தவர் அல்லவா அவர்?
பார்ப்பனர்கள் தங்கள் நச்சுப் பையில் தேக்கி வைத்திருந்த திராவிட எதிர்ப்பு வெறியை மடிப்பிச்சை பெற்று ஒப்புவிக்கும் இந்த அடிமைப் புத்தியை ஒழிக்கத்தானே திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் பாடுபட்டனர்!
தமிழனைப் பயந்தாங்கொள்ளியாக ஆக்கியது பெரியார்தானாம் - ஒரு சினிமா இயக்குநர் வீரமாகப் பேசி இருக்கிறார். பெரியார் திடலுக்கு வந்து பெரியார் விருது பெற்றபோது - பரிதாபம் அவர் புத்தி எங்கே மேயப் போனது என்று தெரியவில்லை.
இப்படிப் பேசிய அந்த இயக்குநரை, தமிழ் உணர்வு படைத்தவர் என்று பாராட்டுகிறார் மருத்துவர் இராமதாசு என்றால், இவரை அடையாளங் காண்பது எளிதாகிவிட்டது.
நீங்கள் கொடுக்கும் பெயரில் சூத்திரர் அல்லாத ஒரு தூசி கூடப் புகுந்து கொள்ள வசதி இருக்கக்கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் ஏதாவது ஒரு தடை இருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பனர் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை. (நூல்: மொழி ஆராய்ச்சி) என்றாரே தந்தை பெரியார். இந்த வரலாற்று ரீதியான உண்மையை யதார்த்தக் கண்ணோட் டத்தோடு அணுகினால் இதன் அருமை பெருமை விளைவு - விளங்காமல் போகாது.
நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனீய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது.
சமுதாயச் சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி, உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான் A,B,C,D யாகக் கொண்டேன்- கொள்கிறோம். ஆன தினாலேயேதான் நான் வகுப்புவாதி என்று சொல்லப் பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்புவாத உருவாகவே இருந்து வருகிறேன் என்கிறார் தந்தை பெரியார்.
(விடுதலை 5-3-1969)
(1) இந்தத் திராவிடர் இயக்கப் பார்ப் பன எதிர்ப்பு உணர்வில் விளைந்தது தான் இட ஒதுக்கீடு. அதற்கான முதல் ஆணையைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்க நீதிக்கட்சி ஆட்சியே! (1928).
(2) அந்தச் சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புச் சொன்ன தருணத்தில் கொந் தளிக்கும் கடலாய்ப் பொங்கியெழுந்து போர் முரசினை தந்தை பெரியார் தலைமையேற்றுக் கொட்டியதால் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது -_ இதன் காரணமாகத்தானே?
கல்வியிலும் இட ஒதுக்கீடு கிடைக் கப்பெற்றது. கல்வியில் இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதால்தான் இன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 89 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லாதவர்.
(சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சி 95 ஆம் ஆண்டு விழாவில் (20.-10.-2010) சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் க.திருவாசகம் கூறிய தகவல்.)
(3) இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் கல்வி, வேலை வாய்ப்பினை அனுபவிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் அல்லவா?
(4) மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற தடையை நீதிக் கட்சி ஆட்சியில் பனகல் அரசர் ஒழிக்கா திருந்தால், இன்றைக்குக் குப்பன் மகனும், தொப்புளான் மகனும் டாக்டர் ஆகி இருக்க முடியுமா? (ஏன்? ராம தாசும் அவர்தம் குடும்பத்தாரும்தான் மருத்துவர்கள் ஆகியிருப்பார்களா?)
இவ்வாண்டு மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 742 இல் 678 பேர் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் என்றால் சாதாரணமா? இந்தச் சாதனைக்கு அஸ்திவாரம் போட்ட வர்கள் யார்?
அதே நேரத்தில் ஆச்சாரியார் (ராஜாஜி) ஆட்சிக் காலத்தில் 1952-_53 இல் சென்னை மாநிலத்தில் மருத்துவப் படிப்பின் நிலவரம் என்ன? பார்ப்பனர் 160, ஜாதி இந்துக்கள் -_ 56, மற்றவர்கள் _ 158, 374 இடங்களில் பார்ப்பனருக்கு 160 இடங்கள் இன்றைக்கு ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம் திராவிடர் இயக்கம் அல்லவா? தந்தை பெரியார் அல்லவா?
200 க்கு 200 கட் ஆஃப் மதிப் பெண்கள் பெற்றவர்கள் 16 என்றால் இரண்டே இரண்டு இடங்கள் மட்டும் உயர்ஜாதியினருக்கு, மற்ற இடங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளதே - இந்த நிலை இந் தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்தில் உண்டு? இதற்காகப் பாடுபட்டவர்கள் யார் யார்?
(5) பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் என்று பிரித்து அதற்காகத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்காக பாடுபட்டதாக மார் தட்டுகிறாரே மருத்துவர் இராமதாசு அதற்கான ஆணையைப் _ பிறப்பித்தது எந்த ஆட்சி? மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிடர் ஆட்சி யல்லவா?
இந்த ஒதுக்கீட்டின் காரணமாக கடந்த ஆண்டைவிட வன்னியர் களுக்கு தொழிற் கல்லூரிகளில் அதிக இடங்கள் கிடைக்கவில்லையா? அதனை வரவேற்று அதற்காகக் கருணாநிதி பெருமைப்பட வேண்டும் என்று மருத்துவர் ச. இராமதாசு கூற வில்லையா (தினப்புரட்சி 17.7.1989).
1967_1974 இடைப்பட்ட கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் குரூப் ஒன்று பதவிகள் 122இல் 112 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கிடைத்ததே _ அந்தக் கலைஞரையா நாம் வசைபாடுவது -_ இது திராவிட இயக்க சாதனை இல்லையா? (6) இன்றைக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு கிடைத்தது என்றால் அதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா?
(7) தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது (50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு) அதனைப் பாதுகாக்க சட்ட வடிவம் தயாரித்துக் கொடுத்து, நிலை நாட்டியது திராவிடர் கழகத் தலைவர் அல்லவா? ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இன்று பாதுகாப்புடன் நிலை பெற்றுள்ளதே.
இந்தியாவிலேயே நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டது திராவிடர் இயக்க (கலைஞர்) ஆட்சியில்தானே!
(8) இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சியல்லவா?
(9) தேவதாசி முறையை ஒழித்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றியது எந்த ஆட்சி?
(10) பார்ப்பனர்களின் சுரண்டல் கேந்திரமாக இருந்த கோயில்களை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் அல்லவா?
(11) பொதுச் சாலைகளை தாழ்த்தப் பட்டவர்கள் பயன்படுத்தலாம், கிணறு களிலும், குளங்களிலும் தாழ்த்தப்பட் டவர்கள் தண்ணீர் எடுக்கலாம் என்று ஆணை பிறப்பித்தது யார்?
(12) தாழ்த்தப்பட்டவர்களை பேருந்துகளில் அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தாழ்த் தப்பட்டவர்களை சேர்க்காத பள்ளி களுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது எந்த ஆட்சி?
(13) இந்தியை எதிர்த்து விரட்டி யடித்தது யார்? தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்திக்கு இடம் இல்லை என்று சட்டம் செய்தவர் திராவிடர் இயக்கத் தீரராகிய அறிஞர் அண்ணா அல்லவா?
நாராயண சாமி நெடுஞ்செழியன் ஆனதும், ராமையன் அன்பழகனாக மாறியதும், சோமசுந்தரம் மதியழகன் என்று மாற்றிக் கொண்டதும் எந்த இயக்கம் ஊட்டிய உணர்வின் அடிப் படையில்!
நாராயண சாமி நெடுஞ்செழியன் ஆனதும், ராமையன் அன்பழகனாக மாறியதும், சோமசுந்தரம் மதியழகன் என்று மாற்றிக் கொண்டதும் எந்த இயக்கம் ஊட்டிய உணர்வின் அடிப் படையில்!
(14) நமஸ்காரம் வணக்கம் ஆனது எப்போது? அக்ராசனர் தலைவராக மாற்றப்பட்டது எப்படி? பிரசங்கம் சொற்பொழிவானது எங்ஙனம்? வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்தது எந்தச் சூழ்நிலையில்?
1938_இல் தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஊட்டிய உணர்ச்சியின் விளைச்சல் அல்லவா இது?
(15) சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது தி.மு.க. ஆட்சியல்லவா?
(16) தமிழன் வீட்டு நிகழ்ச்சி தமிழன் தலைமையில் நடக்க முடியாது; தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் அவன் தாய் மொழிக்கு இடமில்லை என்றிருந்த நிலையை ஒழித்து, தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் தமிழன் தலைமை தாங்கவும், அவன் தாய்மொழி இடம் பெறவுமான புரட்சியை நிகழ்த்தியவர் யார்? சுயமரியாதைத் திருமணம் வந்தது எப்படி?
கிரகப்பிரவேசம் புதுமனைபுகு விழாவாக மாறவில்லையா? உத்திர கிரியை - நீத்தார் நினைவு நாளாகப் புது உருவெடுக்கவில்லையா?
கிரகப்பிரவேசம் புதுமனைபுகு விழாவாக மாறவில்லையா? உத்திர கிரியை - நீத்தார் நினைவு நாளாகப் புது உருவெடுக்கவில்லையா?
(17) தமிழ்நாட்டுக் கோயில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லையே ஏன் என்று கேட்டு, தமிழ் வழிபாட்டு உரிமை மாநாடு நடத்தியது யார்? (சென்னையில் திராவிடர் கழகத்தால் 25.-12.-1980 அன்று நடத்தப்பட்டது.)
தமிழிலும் வழிபாடு என்று கோயில் களில் விளம்பரப் பலகை தொங்கியதை அகற்றியது தி.மு.க.ஆட்சியல்லவா?
தமிழிலும் வழிபாடு என்று கோயில் களில் விளம்பரப் பலகை தொங்கியதை அகற்றியது தி.மு.க.ஆட்சியல்லவா?
(18) தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதே - அதனை மாற்றி தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டம் கொண்டுவரப்பாடுபட்டது யார்? தந்தைபெரியாரும் திராவிடர் கழகமும் தானே!
அதனை ஏற்று சட்டம் இயற்றியவர் திராவிடர் இயக்க ஆட்சியாளரான கலைஞர் அவர்கள்தானே?
(19) ஈழத் தமிழர் பிரச்சினையில் யாரும் கனவு காணாத காலத்திலேயே 1939 ஆம் ஆண்டிலேயே அக்கறை காட்டியது நீதிக் கட்சியல்லவா?
ஈரோடு பெரியார் மாளிகையில் 10.-8.-1939 அன்று நடைபெற்ற தென் னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிரு வாகக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானம் நிறைவேற்றப்பட்டதே!
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தி யதையும் அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்ப தாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஊ,பு.அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் இலங்கைக்குச் சென்று அவர்களின் நிலை மையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதே!
(விடுதலை 11.-8.-1939 - பக்கம் 3)
1983 ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழர்கள் மிகக் கொடூரமாய்த் தாக்கப்பட்ட நிலையில் கட்டிய துணிகளோடு தமிழ்நாடு வந்த மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கை யாருடையது?
உடனடியாக 14.-8.-1983 அன்று மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது திராவிடர் கழகம் அல்லவா? சென்னை அண்ணாநகரில் புல்லாரெட்டி அவென்யூவில் அனைத் துக் கட்சி முதல் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியது திராவிடர் கழகமாயிற்றே. அலை அலையான நடவடிக்கைகள் - _ சொல்லிக்கொண்டே போக முடியுமே!
உச்சக் கட்டமாக மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே இரண்டு நாட்கள் நடத்தி குமரி நாடன் என்ற ஈழத் தமிழர் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றிடவில்லையா? ஒட்டு மொத்த உலகத் தமிழின மக்களின் உணர்ச்சி எரிமலையின் உக்கிரம் எத்தனை டிகிரி என்று அன்று காட்டப்படவில்லையா? (மதுரை 17,18.-12.-1983).
இன்னும் எவ்வளவோ சொல்ல லாம். டெசோ எவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. காலத்தின் அவசியம் கருதி மீண்டும் டெசோ அமைப்பு புதுப்பிக்கப் படுகிறது என்றால், பிரச்சினையின் மீது அக் கறையும், கவலையும் கொண்டவர்கள் வரவேற்பார்கள். கை முதல் பறி போகிறது என்பதால் கதறுவார்கள். அதற்கு நாம் என்ன செய்வது!
இதே ஈழப் பிரச்சினையில் இதே மருத்துவர் இராமதாசு எப்படி எல்லாம் கருத்து தெரிவித்தார்? அதை எல்லாம் அவிழ்த்துக் கொட்ட வேண்டுமா?
(20) கச்சத்தீவு மீட்பு மாநாட்டை இராமேசுவரத்தில் (25-.7-.1997) நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா? (ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களும் கலந்து கொண்டனரே! பழ.நெடுமாறன் அறி வாரே!) அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதே!
(21) வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டுக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - இராமேசுவரம் முதல் திருத்தணி வரை என்று தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டதை திரு.பழ.நெடுமாறன் அவர்கள் அறியமாட்டாரா?
(22) முக்கியமாக மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெரும் பணியை ஒப்பரிய மானுடத் தொண்டினை ஓர் இயக்கமாக நடத்துவது உலகத்திலேயே திராவிடர் கழகம் மட்டுமே அல்லவா!
(23) ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டம் வரை எரித்து ஆயிரக்கணக்கான கருஞ் சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வெஞ்சிறை ஏகினார்களே, -பலர் இன்னுயிரை ஈந்தனரே! இதன் பக்கத்தில் எந்த ஓர் அமைப்பாவது நிற்கமுடியுமா?
திராவிடர் இயக்கம் என்பதால் தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தோமா? தெட்சிணப் பிரதேசம் என்று நான்கு மாநிலங்கள் அடங்கிய ஆட்சி அமைப்பை உருவாக்க நினைத்த போது அதனை எதிர்த்து முறியடித் தவர் தந்தை பெரியார் ஆயிற்றே! சென்னையை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்தோமா?
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவிற்கும் காவிரி நீர்ப்பிரச் சினையில் கருநாடகாவுக்கும், திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ விட்டுக் கொடுத்து விட்டது என்று கூறப் போகிறார்களா?
திராவிடர் என்பது இனப்பெயர்; - _ தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பவையெல்லாம் தமிழின் திரிபுகள் - சமஸ்கிருத ஊடுருவலால் தனித்தனி வடிவையும் ஒலியையும் பெற்றன என்பதை பரிதிமாற் கலைஞர் போன்ற பார்ப்பன ஆய்வாளர்களே ஏற்றுக் கொள்ளவில்லையா?
தனித்தனியாகப் பிரிந்திருந்தாலும் இனப்பெயர், குடும்பப் பெயர், மாறப் போவதில்லை. இதில் காணப்பட வேண்டிய உண்மை இதுதானே தவிர, இதில் திராவிடர் இயக்கத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? இது என்ன சொல் விளையாட்டு?
திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று சுருக்கமாக சொல்லப்பட்டுள்ள இந்தப் பட்டியலின் அருகே எந்தத் தமிழ் தேசிய வாதியாவது, அமைப் பாவது நெருங்கி வந்து தங்களின் பங்களிப்பு என்று மார் தட்டிக் கொள்ள முடியுமா?
செயல்பாட்டில் ஒன்றுமே இல் லாமல் காற்றோடு சிலம்பம் விளை யாடும் வெத்து வேட்டுப் பேச்சுக்களால் என்ன பயன்? வெறும் விமர்சனம் மட்டுமேதான் பிழைப்பா?
எந்த வேலையும் செய்யாமல், ஊரின் மரத்தடியில் காலையில் உட்கார ஆரம்பித்தவர்கள் பொழுது போகிற வரை வெட்டிப் பேச்சுப் பேசி, வீண் அக்கப்போர்களை அட்டகாசமாகப் பேசிக் கலையும் சோம்பேறிகளுக்கும் - திராவிடர் இயக்கம் பற்றி விமர்சனம் என்ற வெட்டிப் பேச்சுக் கச்சேரி நடத்தும் செயலற்ற பேர்வழிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது -_ கிடையவே கிடையாது.
-கவிஞர் கலி. பூங்குன்றன்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- அண்ணா
- பார்ப்பனரின் பூணூலை அறுத்ததால் விழிப்புணர்வு பெற்ற கிராமம்
- முத்து விழா காணும் பெரியார் பெருந்தொண்டர் தா.திருப்பதி
- தாத்தாவும் பேரனும்...!
- தமிழ்ச் செம்மொழி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பாஸ்போர்ட் அலுவலகங்களில் புதிய வசதிகள் ரூ.100 கட்டினால் விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுக்கிறார்கள்
- பள்ளி சீருடை 40 சதவிகித மாணவர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது
- ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் மீட்பு
- வங்கி கடன் ரத்து விபத்தில் கை விரல் துண்டானவருக்கு கருணை
- மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பேருந்து அட்டை
No comments:
Post a Comment