எம்.பி.பி.எஸ்., சென்னை கல்லூரிகளில் சேர கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? எனும் தலைப்பில் தினமணி நேற்று (27.6.2012) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 140 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 127 எம்.பி.பி.எஸ். இடங்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 128 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.
மேலே குறிப்பிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளிலும் முற்பட்ட வகுப்பினருக்கு (எஃப்ஓசி) மொத்தம் 123 எம்.பி.பி.எஸ். இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மொத்தம் 106 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 123 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால் 200-க்கு 199.50 கட்ஆஃப் மதிப்பெண் இருந்தால் மட்டுமே சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்கும் என்பதுதான் இந்தச் செய்தி. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது முற்பட்ட வகுப்பினருக்கு 123 இடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படியோ, இடஒதுக்கீட்டு முறையிலோ எந்த இடத்திலாவது முற்பட்டவர்களுக்கென்று தனியாக சதவிகித அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவா? உயர்ந்த ஜாதியினருக்கு இடஒதுக்கீடுக்கு வகை செய்ய எங்காவது சட்டமோ, ஆணையோ உள்ளதா? உண்மையும், நடைமுறையும் இவ்வாறு இருக்கையில், உண்மைக்கு மாறாக தினமணி இப்படி செய்தி வெளியிடுவது ஏன்? இடஒதுக்கீடு - பார்ப்பனர் பார்வையில் விரும்பத் தகாததாக இருக்கக் கூடும். அதற்காக தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்ய ஆசைப்படலாமா?
பார்ப்பனர்கள் ஏதோ தெரியாமல், அறியாமை காரணமாக இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று யாரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது. நன்றாகவே தெரியும் அவர்களுக்கு; இருந்தாலும் மக்களைக் குழப்புவதன் மூலம் ஓர் அற்ப மகிழ்ச்சியில் கொஞ்சமாவது மிதக்கலாம் அல்லவா!
இது முதன் முறையில்லை; இதற்கு முன்புகூட தினமணி குழுமத்தின் ஆங்கில நாளேடான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்று சட்டத்தில் இருக்கிறதே தவிர எந்த இடத்திலும் பொருளாதார ரீதியாக என்று குறிப்பிடப்படவில்லை) செய்தி வெளியிட்டது. அப்பொழுதே அதனைக் கண்டித்து விடுதலை எழுதியதும்.
அதே போல OC என்பதை திறந்த போட்டி (Open Competition) என்பதற்குப் பிற சாதியினர் (Other Community) என்று திரிபுவாதம் செய்து வந்ததும் பார்ப்பன ஏடுகளே.
செவிலியர்கள் விளம்பரம் ஒன்று இப்படி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திராவிடர் கழகமே. அப்பொழுது மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே அதனைத் திருத்திக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான - தேர்வு ஆணையத்தின் விளம்பரத்திலும் திறந்த போட்டி என்பதை - பிற சாதியினர் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. விடுதலை சுட்டிக் காட்டியதற்குப் பிறகு திருத்த விளம்பரம் வெளியிடப்பட்டது.
இப்படி கண்களில் விளக்கெண்ணெய்ப் போட்டுக் கொண்டே திராவிடர் கழகமும், விடுதலையும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் போதே - இப்படி திரிபு வேலைகளில் திரிநூலார் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
மத்திய தேர்வாணையம் வரை இத்தகைய சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்பட்ட துண்டு. எந்தக் கட்சிப் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி. இடஒதுக்கீடு எனும் பிரச்சினையில் ஒன்றாகவே சிந்திப்பார்கள். சமூக நீதிக்கு எதிராகவே கொடி பிடிப்பார்கள் (நீதிபதிகள்கூட விதிவிலக்கு இல்லை என்பது கசப்பான உண்மையாகும்)
தினமணியின் ஆசிரியராக துக்ளக் குடும்பத் தில் தயாரிக்கப்பட்டவர் இருக்கும் பொழுது, இது போன்ற விஷமங்கள் நடைபெறுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் பார்ப்பன ஏடுகளைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பார்த்து கடைசியில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சரணா கதி அடைந்தும் அவர்கள் பாடம் பெறவில்லை - வெட்கக் கேடு!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment