Friday, May 4, 2012

ஜெயேந்திரரும் நித்தியானந்தாவும்


மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சர்ச்சைகள் இப்பொழுது வெடித்துக் கிளம்பியுள்ளன. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்,  உள்ளிட்ட ஆதீனகர்த்தர்கள் கூடி, மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நிர்ணயிக்கப்பட்டவர் பற்றி தங்கள் அதிருப்தி யையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
சைவ சமய வழிவந்தவர் அல்லர் என்பதோடு, நித்தியானந்தாவின் பாலியல் தொடர்பான அருவருப்பான செய்திகள் வெளிவந்துள்ளன, சிறையிலும் இருந்திருக்கின்றார், என்றெல்லாம் குற்றஞ்சாட்டி, அவரை மதுரை ஆதீனத்தின் வாரிசாக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.
அவ்வாறு செய்யாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்குவோம் என்றும் அறிவித்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த சில சைவ அன்பர்களும் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்கட்டும். மற்ற ஆதீனகர்த்தர்கள் மயிலாடுதுறையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, செய்தியாளர்களைச் சந்தித்த நேரத்தில், விடுதலையின் சார்பாக கேள்வி ஒன்றினை நமது செய்தியாளர் அந்த ஆதீனகர்த்தர்களை நோக்கி எழுப்பியது மிகவும் முக்கியமானதாகும்.
மதுரை ஆதீனத்தில் நியமனம் செய்யப்பட்டவர் பற்றி இவ்வளவு அக்கறையோடு கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள். அவரின் ஒழுக்கம் பற்றியும் குறை கூறியுள்ளீர்கள். அதே போல காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கொலைக் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாரல்லவா? அப்படிப்பட்ட குற்றவாளி சங்கர மடத்தில் சங்கராச்சாரியாராக தொடர்ந்து கொண் டுள்ளாரே, அதைப்பற்றி இது போன்ற ஒரு தீர்மானத்தை ஏன் நிறைவேற்றவில்லை? கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி சங்கராச்சாரியாராகத் தொடரலாம்? அந்தப் பதவியிலிருந்து அவர் விலகி இருந்து, குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் அப்பொழுது வேண்டுமானால் தொடரலாம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு சைவ ஆதீனகர்த்தர்கள் சரியான முறையில் பதில் சொல்லவில்லை.
சங்கராச்சாரியார் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று சமாதானம் சொல்ல முயன்றபோது, நித்தியானந்தா மீதான வழக்கும் கூட நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு சொல்லப்படவில்லை என்று மறு கேள்வி விடுதலை சார்பாகக் கேட்டபோது அது அந்தணர் மடம் அது பற்றிக் கருத்து கூற விரும்பவில்லை என்று பதில் சொன்னது சரியானதுதானா?
முதலில் பார்ப்பனர்களை, அந்தணர்கள் என்று சைவ மடாதிபதிகள் சொல்லலாமா? அந்தணர் என்பதற்கு திருவள்ளுவர் சொன்ன விளக்கம் என்ன என்பது சைவ மடாதிபதி களுக்குத் தெரியாதா?
அந்தணர் என்போர் அறவோர் மற்று   எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொ ழுகலான்
என்ற அளவுகோலின்படி பார்ப்பனர்கள் அந்தணர்களாக முடியுமா?
நித்தியானந்தாவைப்பற்றி மிகச் சரியாகவே குற்றப் பத்திரிகை படிக்கும் சைவ மடாதிபதிகள் கண்டிப்பாக கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்து, இப்பொழுது பிணையில் வெளிவந்துள்ள ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி பற்றியும் கண்டிப்பாக சைவ மடாதிபதிகள் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்பதே நமது அழுத்தமான கருத்து.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...