ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமை பற்றியதாகும்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் கூட நதி நீர்ப் பிரச்சினைகள் உண்டு என்றாலும், இந்த அளவுக்குக் குழப்பமும், முரண்பாடுகளும், கால விரயமும் கிடையவே கிடையாது.
அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கங்கை நதிநீர்ப் பிரச்சினையில் இந்தியா வுக்கும் வங்கதேசத்துக்குமிடையிலான சிக்கல் சில மணி நேரங்களில் தீர்வு காணப்பட்டதே! அதே போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நதிநீர்ப் பிரச்சினையுண்டு. அவை எல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்படும்பொழுது, இங்கு ஏன் இயலவில்லை என்ற வினாவை? எழுப்பினார். பாரத புண்ணிய பூமி என்றும், இந்திய தேசியம் என்றும் கண்ணில் ஒத்திக் கொண்டு பேசிக் கொண்டு இருக்கும் நாட்டில், உள்நாட்டு நதி நீர்ப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால், இந்திய தேசியம் என்பதன் பொருள்தான் என்ன?
ஒப்பந்தங்கள் என்று எதற்காகப் போடப் படுகின்றன? சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அறிவு நாணயத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்கான நாகரிக ஏற்பாடுதானே அது? அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது அடாவடித்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?
தனி மனிதன் தவறு செய்தாலே குற்றம், தண்டனை என்கிறபோது, ஓர் அரசே தவறு செய்யும் போது, தண்டனை என்ன?
காவிரி நீர்ப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையானாலும் சரி, முறையே கருநாடக, கேரள அரசுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உதாசீனப் படுத்தியுள்ளனவே.
நீதிமன்றத் தீர்ப்புகளைத் தனிமனிதன் மீறினால்தான் தண்டனையா? அரசுகள் மீறினால் கண்டுகொள்ளமாட்டார்களா? இந்தப் போக்கால் நாளடைவில் தனி மனிதனே நீதி மன்றத்தை மதிக்கும் போக்கில் மாற்றம் வந்துவிடுமே!
இதில் மத்திய அரசு நடந்து கொள்ளும் போக்கு பொறுப்பானதாக இல்லை. மத்திய அரசு என்ற சொல் லுக்கு என்னதான் பொருள்? பொது நிலையிலிருந்து பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு இல்லையா? அதனைச் செய்யாத பட்சத்தில் அது எப்படி மத்திய அரசாகும்?
சம்பந்தப்பட்ட மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது? குறிப்பிட்ட கால கட்டத்தில் தேர்தல் வர இருக்கிறதா என்று அக்கம் பக்கம் பார்த்து, தந்திரமாக மத்திய அரசு நடந்து கொண்டால், அந்த நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின் நிலை என்னவாகும்?
இதில் இன்னொரு நகைச்சுவை - வேடிக்கை -தேசிய கட்சிகளின் சிந்தனையும் செயல்பாடுகளும்; காங்கிரசாகட்டும், பி.ஜே.பி.யாகட்டும், இடதுசாரிகளா கட்டும் இவை எல்லாம் அகில இந்திய தேசியக் கட்சிகள்தானே! இவர்களுக்கு அகில இந்திய பொதுப் பார்வையும், கண்ணோட்டமும் தானே இருக்க வேண்டும்? அப்படி இருக்கிறதா?
காவிரி நதிநீர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, இக் கட்சிகளுக்கு அகில இந்திய கண்ணோட்டம் - தேசியக் கண்ணோட்டம் இருப்பதில்லை. மாநிலக் கண்ணோட்டத்துடன்தான் வெறித்தனமாக நடந்து கொள்கின்றன.
காவிரி நீர்ப் பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பிரச்சினை யானாலும் சரி, வேறு வேறாக - எதிர் மறையாக, இந்த அகில இந்தியக் கட்சிகள் முடிவு எடுப்பது ஏன்?
நாடாளுமன்றத்தில் கூட இந்தத் தேசிய கட்சிகள் தங்கள் தங்கள் மாநிலத்திற்காகத்தானே குரல் கொடுக்கின்றன! அந்த நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரிந்துதானே போர்க்குரல் கொடுக் கின்றன. இது மட்டும் பிரிவினை இல்லையா?
பிரிவினை என்பதற்கு இந்தத் தேசியக் கட்சிகள் வைத்திருக்கும் அளவுகோல்தான் என்ன?
திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் அகில இந்திய கட்சியல்ல - அரசியல் கட்சியும் அல்ல. அதே நேரத்தில் நாணயமான முறையில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் போராடுகிறது.
திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் அகில இந்திய கட்சியல்ல - அரசியல் கட்சியும் அல்ல. அதே நேரத்தில் நாணயமான முறையில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் போராடுகிறது.
அதன் வீச்சுதான் வரும் 11-ஆம் தேதி நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டம்?
அணி திரள்வீர்!
அணி திரள்வீர்!
ஆர்ப்பாட்டம் செய்வீர்!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment