Wednesday, April 11, 2012

தமிழர்களே, எழுக!


ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் அரசு மாவட்டத் தலை நகரங்களில் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள்  மூன்று முக்கிய பிரச்சினைகள் பற்றியது.
1. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து நேற்று குறிப்பிட்டு இருந்தோம்.
2. இரண்டாவது நோக்கம் ஈழத் தமிழர்களுக் கான வாழ்வுரிமைபற்றிய உத்தரவாதம்; தனி ஈழம்தான் தேர்ந்த முடிவு என்பது ஒரு பக்கம். அது ஒரு நீண்டகால நோக்காகவும் இருக்கலாம். அதுவரை தமிழர்கள் அங்கு தன்மானத்தோடும், வாழ்வாதார உரிமையோடும் வாழவேண்டுமே - அதற்கான உத்தரவாதம் கண்டிப்பாகத் தேவை.
இலங்கை அரசைப் பொருத்தவரை அசல் சிங்கள இனவாத அரசாக இருந்து வருகிறது என்பதற்குப் பெரிய பெரிய ஆதாரங்கள் தேவைப் படாது. அன்றாடம் அவ்வரசு நடந்துகொண்டுவரும் போக்குகளே போதுமானவை.
ஜெனீவா தீர்மானத்திற்குப் பிறகுகூட அதன் போக்கில் மாற்றமில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.
இந்த நிலையில், ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு உலக நாடுகளின் கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. அப்படிக் கருதினால் அத்தீர்மானம் எந்திர ரீதியாக, சடங்காச்சாரமாக நிறைவேற்றப்பட்டது என்று பொருள்பட்டுவிடும்.
180 நாள்களுக்குள்ளாகவே முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களில், சொந்த வீடுகளில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்ற இலங்கை அதிபரின் வாக்குறுதிபற்றி இந்திய அரசு குறைந்தபட்சம் கேள்வி எழுப்பியதுண்டா?
இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற அதி காரிகள், ஆலோசகர்களாவது சம்பந்தப்பட்ட ஆட்சி யாளர்களிடம் கமுக்கமாகவாவது கேட்டதுண்டா?
பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்வியில் மிக ஆர்வம் கொண்டவர்கள். சிங்களவர்களைவிட கல்வியில் தேர்ந்தவர்கள். அந்தத் தமிழினப் பிள்ளைகளின் கல்வி நிலை எந்தத் தன்மையில் இப்பொழுது இருக்கிறது?
இந்தியா இலங்கைக்கு அளித்த 500 கோடி ரூபாய்க்கான நடவடிக்கைகள்பற்றியாவது தெரிந்து கொள்ள இந்தியா வாய் திறந்ததுண்டா?
அதேபோல தமிழின மீனவர்கள் பற்றிய பிரச்சினை. ஜெனீவா தீர்மானத்திற்குப் பிறகு இந்தியாமீது இலங்கை அரசு கொண்டிருக்கும் சினத்தினை தமிழக மீனவர்கள்மீது காட்டுவதாகத் தெரிகிறதே;  வலிய போய் இந்தியா இலங்கைக்குச் சமாதானப்படுத்தும் வகையில் கடிதம் எழுதியதை - இந்தியாவின் பெருந்தன்மையாக இலங்கை எடுத்துக்கொள்ளவில்லையே;  இதற்குப் பிறகும் இந்தியா இதுகுறித்துச் சிந்திக்கவில்லையென்றால், இந்தியாவின் சுயமரியாதைக்குப் பேரிழுக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஈழத் தமிழர்கள் எங்களுக்கு எதிரியல்ல - விடுதலைப்புலிகள்தான் - பயங்கரவாதிகள் - அவர்கள்தான் எங்களுக்கு உண்மையான எதிரிகள் என்று சாமர்த்தியமாகச் சொன்னார்களே - விடுதலைப்புலிகளைத்தான் பூண்டோடு ஒழித்துவிட்டதாகக் கூறுகிறார்களே - அப்படி இருக்கும்போது தங்களுக்கு எதிரிகளாக இல்லாத அந்த ஈழத் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு உரியவை செய்யப்படவேண்டாமா? இலங்கை அரசின்மீது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசின் போக்குகள் அமையவேண்டாமா?
ஜெனீவா தீர்மானத்தோடு எல்லாம் முடிந்து விட்டது போன்ற மயான அமைதி தமிழ்நாட்டில் நிலவுகிறது. உண்மையில் இப்பொழுதுதான் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இந்தியாவையும், உலக நாடுகளையும் நகர்த்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் - அந்தக் கடமைதான் ஏப்ரல் 11 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டம்!
தமிழர்களே, எழுக!
உணர்வுகளை வெளிப்படுத்துக!!


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...