தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடம் - மத்திய அரசு சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு எனும் தேனினும் இனிய செய்தியினை (13.4.2012) நாளேட்டின் வாயிலாகப் படித்தேன்.
எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக் குக் கல்வியைக் கொடுக்காதே என்று கூறுவதுதான் மனுதர்மம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எதையும் சமுதாயச் சிந்தனையோடு, தொலை நோக்குப் பார்வையோடு சீர்தூக்கிப் பார்த்து அதனால் ஏற்படும் விளைவு களைப் பற்றி நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருபவர் ஆவார். ஆதலால், பார்ப்பனர்களால் திட்டமிட்டு எழுதப்பட்ட மனுதர்மத்தின் சூட்சமத்தை, நயவஞ் சகத்தை பட்டிதொட்டி எங்கும் உள்ள பாமர மக்களிடம் எடுத்துக்கூறி, இடை விடாது சூறாவளிப் பிரச்சாரம் மேற் கொண்டார்.
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் எழுச்சிமிகு உரையினைக் கேட்டு பாமர மக்கள் சிந்திக்கத் தொடங் கினர். பெரும்பான்மையான மக்கள் மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும், புதிய எழுச்சியும் பிறந்தது. இதன் மூலம், பாமர மக்கள் படிப்படியாக கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் நன்கு உணரத் தொடங்கினர்.
தந்தை பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாகவும் இருந்து செயல்பட்டதின் பயனாய் நாடெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளி கள் திறக்கப்பட்டன. பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று போற்றப்பட்ட காமராசர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில்தான் கிராமங்கள் தோறும் கல்வி நீரோடை மடை திறந்த வெள்ளம்போல பாய்ந்தோடின.
இதன் பயனாய் பாமர மக்கள் தங்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதன் காரணமாக, சூத்திர மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற மேற் கண்ட, இருபெரும் இன மீட்பாளர்களும் வழிகோலினர் என்பது காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பேருண்மையாகும்.
இதன் மூலம், எதைக் கொடுத்தாலும் சூத்திர மக்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்காதே என்று பார்ப்பனர்களால் திட்டமிட்டு எழுதப்பட்ட, மனிதநேயமற்ற மனுதர்மத்தின் கோரமுகத்தை மக்கள் மன்றத்தின் முன்பு மண்டியிடச் செய்த பெருமை உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களையும் மட்டுமே சேரும்.
மேற்கண்ட தலைவர்களின் சீரிய முயற்சியாலும், உயர்ந்த நோக்கத்தாலும் ஏழை - எளிய மாணவர்கள் பலர் படித்துப் பட்டம் பெற்று தற்போது மாவட்ட ஆட்சி யராகவும், தலைசிறந்த நீதிபதிகளாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும், மனித உயிர் காக்கும் மருத்துவராகவும் மற்றும் பல்வேறு உயர் பதவிகளில் அங்கம் வகித்து தத்தமது துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர் என்பதை அறியும் போது; தன்னலம் கருதாமல் இனத்தின் மீட்சிக்காக அயராது உழைத்த நமது இன மீட்பாளர்களை இந்தவானம் உள்ளவரை, வையகம் உள்ளவரை திராவிடர் இன மக்கள் நன்றி உணர்வோடு நாளும் நினைத்து புகழ்வர் என்பது உறுதி.
அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல்; அனைத்து குழந்தைகளும் அடிப்படைக் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசால் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அவை அரசியல் சட்டத்தின் 21 (ஏ) பிரிவின்கீழ் நாடாளுமன் றத்தின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடங்களை கட்டாயம் ஒதுக்கி அவர் களுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்பதே இச்சட்டத்தின் உயரிய நோக்கமாகும்.
ஆனால், ஒரு சில தனியார் பள்ளிக் கூடங்கள் மற்றும் நிர்வாகிகள் இவ்வர லாற்று உண்மைகளை சற்றும் உணராத வர்களாக அல்லது தெரிந்தும் தெரியாத வர்களாக, மய்ய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஏழை - எளிய மாணவர்களைச் சேர்த்தால் பள்ளியின் தரமும், ஒழுக்கமும் சீர்கெட்டு விடும் என்றும் மேலும் இவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று மனுதாக்கல் செய்வதும், வாதிடுவதும் என்பது ஏழ்மையை கொச்சைப்படுத்தும் இழிவான செயல் மட்டுமின்றி, குழந்தை களின் அடிப்படை உரிமையான கல்வி பெறும் உரிமையைத் தடுக்கும் உரிமை மீறல் செயலாகும்.
தற்போது இவ்வழக்கில், மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியும், அவை செல்லும் என்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ப்பு தீர்ப்பினை (12.04.2012) உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடக் கூறியுள்ளனர்.
தந்தை பெரியார் அவர்களின் பெரு முயற்சியால் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையால் தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர் என்பது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த இமாலய வெற்றியாகும்.
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்