Friday, February 17, 2012

தடை எதற்கு? சமூக வலைத்தளங்களுக்கா... சமூகச் சிந்தனைக்களுக்கா....


- சமா.இளவரசன்
செய்தி ஒன்று வெளியாக வேண்டுமானால், அதற்கு மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்; அது தொடர்பான மக்கள் கருத்தை அறிய வேண்டுமானால் அதற்கும் அடுத்த நாள் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் நாளிதழ்களின் நாட்களில்! இரவு செய்திகளில் பார்த்துவிடலாம்; ஃப்ளாஷ் நியூசில் படித்துவிடலாம் என்பது தொலைக்காட்சி காலத்தில்! உடனுக்குடன் என்றது செய்தித் தொலைக்காட்சிகளின் வரவால்! அடுத்த நொடியே என்பது தான் இணைய யுகத்தின் சிறப்பு! செய்திகளைக் கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ளவர்களின் கருத்தையும் அப்போதே தெரிந்துகொள்ள முடிகிறது. அதுவும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி, நிலைமையை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. பெரிய முதலீடோ, ஊடகமோ தேவையில்லை. சாமான்யனான யாரேனும் ஒருவருக்குத் தகவல் கிடைத்தாலும் போதும், அதை அவர் பகிர்ந்து கொண்ட சில நிமிடங்களில் செய்தியின் தீவிரத்தைப் பொறுத்து பற்றிப் பரவும். விவாதங்களில் சிக்கிச் சீரழியும். ஆதி முதல் அந்தம் வரை அலசப்படும். எந்தவொரு கருத்துக்கும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கும் இரு தரப்புகள் இருக்கவே செய்யும் என்பதால் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இது செய்திக்கு மட்டுமல்ல; வதந்திக்கும் பொருந்தும். அது இன்னும் பெருங் காட்டுத்தீயாய்ப் பரவும்.
இதனுடைய வீச்சு காரணமாகத்தான் எழுத்தாளர்கள், நடிகர்கள், பிரபலங்கள் தொடங்கி பிரதமர் அலுவலகத்தினர் வரை மக்களைத் தேடி சமூக வலைத்தளங்களுக்கு வருகின்றனர். உள்ளே என்ன நடக்கிறது என்று உளவறிய சி.பி.அய்.-யும் வருகிறது. இங்குதான் Sample Data எடுப்பது போல நடுத்தர வர்க்க மக்களின் மனநிலை என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள்முன் நடப்பில் இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அரசுகளின் திட்டங்கள், சட்டங்கள், அரசியல் நிலைப்பாடுகள், திரை, விளையாட்டுப் பிரபலங்களின் பலங்கள் --_ பலவீனங்கள், எளிய மக்களின் பிரச்சினைகள் அத்தனையும் விவாதிக்கப்படுகின்றன. தேநீர்க் கடைகளிலும், திண்ணைகளிலும் பேசப்பட்ட அரசியல் குடிபெயர்ந்து இணையக்களத்துக்கு வந்துவிட்டது. மெத்தப் படித்தோர், இளையோர்தான் இணையம் பயன்படுத்துகிறார்கள் என்றில்லை. இன்றைய தேதியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள், அங்காடி நடத்தும் வியாபாரிகள் வரை இணையத்தில் இருக்கிறார்கள். செல்பேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் பகிர்ந்து கொண்டவர்கள், இப்போது பேஸ்புக் அய்.டி கேட்கிறார்கள். பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? அது போதுமே.. நான் பார்த்துடறேன் என்கிறார்கள். தொடக்க கால தொழில்நுட்ப நிறுவனங்கள் மெல்ல மெல்ல எட்டு வைத்து கட்டிய படிகளில், காற்றினும் கடிதாய் விரைந்து மேலேறி உச்சியில் நிற்கின்றன பேஸ்புக்கும், டுவிட்டரும். அடிப்படைக் கணினி என்ற இலக்கை எட்டிய மைக்ரோசாப்டை, இணையதளங்களில் கூகிள் வென்றது. எண்ணற்ற வசதிகளை உள்ளடக்கிய கூகிள் சேவையை வெகு விரைவாக நிமிர்ந்து பார்க்க வைத்தது பேஸ்புக். போட்டிக்கு ஒரு சமூக வலைத்தளத்தை தன் சார்பில் களத்தில் இறக்க, பஸ், ப்ளஸ் என்று கூகிளே மூச்சு வாங்க வேண்டியதாயிற்று. இந்த வேகம்தான் பலரையும் அதிர வைத்திருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் தொழிலுக்காக மோதுகின்றன - அரசுகள் இருப்புக்காக மோதுகின்றன.
எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சிக்கு பேஸ்புக் முக்கியக் காரணம் என்றபோது ஏதோ சாதாரண செய்தியாக அதை அரசுகள் எடுத்துக்கொள்ள வில்லை. கடந்த நூற்றாண்டில் புரட்சிகள் நடைபெறுகின்றன என்றால் முதலில் வானொலி நிலையத்தையும், தொலைக்காட்சி நிலையத்தையும்  தான் கைப்பற்றுவார்கள். அரசுகளும், இராணுவமும் அவற்றைக் காக்கத்தான் பெரும் முயற்சி செய்வார்கள். காரணம் ஒன்றுதான். -மக்களைச் சென்றடையும் ஊடகங்களை வசப்படுத்திக் கொண்டால், மக்களை எளிதில் வசப்படுத்திக் கொள்ளலாம். நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்; நம்ப வைக்கலாம். இதை எகிப்திலும் செய்து பார்த்தார்கள்- பலனளிக்கவில்லை. ஏனெனில். மக்களிடம் இருந்த இணையம் எனும் ஊடகத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது மக்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தி, தெருவுக்கு இழுத்து வந்தது. இந்த அச்சம் உலகின் எல்லா அதிகார வர்க்கங்களுக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
இந்தியாவில் இது போன்ற புரட்சிகள் எல்லாம் நடைபெறவில்லை; அதற்கான சாத்தியம் இல்லை என்றாலும், அரசுகள் மாறும்போதும், அரசுகளை ஊடகங்கள் மீறும்போதும் அவற்றைத் தன் வழிக்குத் திருப்ப லகான்களை கையில் வைத்திருந்தது அரசு. முதலில் எச்சரிக்கை; முரண்டு பிடித்தால் வழக்குகள் - கைது! ஓர் ஊடகத்தை அடக்க வேண்டுமானால் அதன் உரிமையாளரை வழிக்குக் கொண்டுவந்துவிட்டால் போதும் - வேலை முடிந்தது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் எதுவானாலும் ஒரே வழிமுறைதான். முற்றிலும் தங்களுக்கு ஆதரவாக செயல்படாவிட்டாலும் வலிக்காமல் அடிக்க இவர்களும், அடிக்காமல் அழ அவர்களும் ஒரு சமரச உடன்பாட்டுக்காவது வந்துவிடுவார்கள். இவற்றையெல்லாம் முறித்துப் போட்டுவிட்டது இணையம். இந்நிலை அரசுகளுக்கு மட்டுமல்லாமல் பத்திரிகைகளுக்கும் பிடி தளர்ந்தது போல! பத்திரிகைகள் வெளியிடத் தயங்குவதை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான் இந்திய அரசின் அண்மைக்கால செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக கூகிள், பேஸ்புக், ட்விட்டர், யாஹூ போன்ற நிறுவனங்களை அழைத்து மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில்சிபல் மிரட்டியதும், சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை என்பது போல் செய்திகள் வரத்தொடங்கின. அதற்குக் கிளம்பிய எதிர்ப்பு தணிக்கை எல்லாம் கிடையாது என்று அவர்களையே மறுக்க வைத்தது. ஆனால், அது வெறும் வாய் வார்த்தைதான். மறைமுகமாக அப்பணிகள் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.
தலைகீழாக தேசியக் கொடி
மற்றபடி, கபில்சிபல் கலந்து கொண்ட ஒப்பந்தமிடும் நிகழ்ச்சி ஒன்றில் அவரது மேஜையில் தேசியக்கொடி தலைகீழாக இருந்ததைப் படத்துடன் வெளியிட்டு பிரச்சினையானதுதான் மிரட்டலுக்குக் காரணம் என்றெல்லாம் இதனைக் குறுக்கிவிட முடியாது.  சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் சில தகவல்கள், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அரசின் இந்த முயற்சிக்கு, சம்பந்தப்பட்ட தளங்கள், ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய தொலைத்தொடர்பு அன்பாக(!) எச்சரிக்கை விடுத்தது (2011, டிசம்பர் 16). காரணம் என்னவென்பதை இப்போது உணர முடிகிறதா? சுற்றிச் சுற்றி மத உணர்வுகள் புண்படும் என்ற இடத்திற்கு வந்துவிட்டார்களா? ஆம், மதம், அரசு போன்ற கட்டுமானங்கள் ஆட்டம் காணுவதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். வெகுஎளிதில் யாரும் கருத்துச் சொல்லலாம்; பரப்பலாம் என்ற நிலையை எப்படி அதிகாரவர்க்கம் அனுமதிக்கும்?
சமூக வலைத்தளங்களால் பிரச்சினை இல்லையா? அவற்றை எந்தக் கட்டுப்பாடும் இன்றி அவிழ்த்துவிட முடியுமா? என்றால் அதற்கு அவசியம் இல்லை. முறையற்ற, ஆபாசமான, அருவெறுக்கத்தக்க கருத்துகள், படங்கள், தனிப்பட்ட நபர், அமைப்பு, மதங்கள் மீதான தாக்குதல் போன்றவற்றை இணைய பயன்பாட்டாளர்கள் முறையிடும்போது அவற்றை நீக்கும் பணியை மேற்கண்ட நிறுவனங்கள் முன்னமே செய்துவருகின்றன. தனிப்பட்ட உரிமை உடைய, பதிப்புரிமை பெற்ற விசயங்களைப் பயன்படுத்துவதையும், உரிய நிறுவனங்களின் முறையீட்டின் பேரில் நீக்கும் நடைமுறையும் உள்ளது. இவை தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில்தான் இன்னும் அதிக அழுத்தம் அரசு சார்பாகத் தரப்படுகிறது. போலியான தகவல்கள், தவறான விமர்சனங்கள், வீண் பழிகள், ஆதாரமற்ற பிரச்சாரம் ஆகியன இல்லையா? அவற்றுக்கு இணையதளங்கள் எளிதில் பயன்படவில்லையா? அவை கருத்துருவாக்கம் செய்யவில்லையா? என்றால், ஆம், உண்மைதான். அவை அப்படி பயன்படத்தான் செய்கின்றன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக, ஒடுக்கப்பட்டவர்களுக்கு, சமூகநீதிக்கு எதிராக கருத்துகள், கருத்துப் படங்கள், நக்கல், நையாண்டிகள் பரப்பப்பட்டுத்தான் வருகின்றன. எங்கோ அமெரிக்காவில் விற்பனைக்கு இருக்கும் வீட்டைக் காட்டி இது ஆ.ராசாவின் வீடு என்று வீண் பழி சுமத்துவதும், ஆர்.எஸ்.எஸ். அன்னா ஹசாரேக்களை காந்தியவாதியாக சித்தரித்து பிரச்சாரம் செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சனீஸ்வர பகவான் சாட்டிலைட்டை நிறுத்துகிறார், இந்த மின்னஞ்சலை 100 பேருக்கு அனுப்பினால் திருப்பதி ஏழுமலையான் அனுக்கிரகத்தை இண்டர்நெட் வழியாக அருள்கிறார் போன்ற மடத்தனங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இவற்றையெல்லாம் உரிய பிரச்சார பலத்தினால்தான் வெல்ல முடியுமே தவிர, உரிய பதிலடிகளாலும், விளக்கங்களாலும் தான் தெளிவிக்க முடியுமேயன்றி, தடைகளாலும் தணிக்கைகளாலும் முடியாது.
பூனை கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டால் உலகம் இருட்டிவிடாது. வெளிச்சத்தின் கீற்றுகள் அதன் இமைகளுக்கு நடுவில் பாயத்தான் செய்யும். அதற்குச் சரியான ஒளியை, வழியைக் காட்ட வேண்டியதுதான் அறிவாளர்கள் கடமையாகும். தந்தை பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இயங்கும் பார்ப்பனர்கள் சுமத்தாத பழியா, செய்யாத அவதூறா? இன்றும் தொடர்கிறதே... விக்கிபீடியா தளத்தில் பெரியார் பற்றிய பக்கமும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த பக்கமும் பல்லாயிரம் முறை திருத்தப்பட்டு வருகின்றனவே. கட்டற்ற இணையம் என்பதில் இத்தகையை இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். அதை, அதே பாணியில் எதிர்கொண்டுதான் வெல்ல முடியும்.
இன்னும் சொல்லப்போனால் அரசுகளின் முயற்சியும் மேற்கண்டவற்றைத் தடுக்கும் நோக்கத்திலானது இல்லை. புரட்டுகளுக்கு எதிரான பதிலுரைகளைத் தடுக்கவே மத்திய அரசின் நடவடிக்கைகள் உதவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் பேசினால் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும், தமிழக மீனவர்கள் பற்றிப் பேசினால் இறையாண்மைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகவும், மூட நம்பிக்கைகளைத் தோலுரித்தால் மத உணர்வுகளப் புண்படுத்தியதாகவும் பதிவுகள், கருத்துகள் நீக்கப்படவும், அதற்கு எதிராக வழக்குத் தொடுக்கவுமே அரசின் அடக்குமுறையும், தணிக்கையும் பயன்படும். மத உணர்வுகள் புண்படும் என்று வாய்நீளம் காட்டுபவர்கள், அறிவியலுக்கு, பகுத்தறிவுக்குப் புறம்பான மடத்தனங்கள் இணையத்தில் பரப்பப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51 A(H) பிரிவு சொல்லும் அறிவியல் சிந்தனையை வளர்ப்பதற்கு எதிராகத்தானே இத்தடைகள் பயன்படும்.
மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர் என்ற குரலுக்குத்தான் இந்நிலைப்பாடு வலுச் சேர்க்கும் என்பதற்கு, இப்பிரச்சினைக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கே சரியான சான்றாகும். கீதையைக் கொச்சைப்படுத்தி எழுதியதாக சம்பர் என்ற பத்திரிகையாளர் மீதும் பேஸ்புக் நிறுவனத்தின் மீதும், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த தாக்கூர் என்ற பெண் லக்னோவில் தொடர்ந்த வழக்குதான் முன்னோடி (2011 டிசம்பர் 25). இப்போது புரியுமே!  யாருடைய கருத்தையும், படைப்பையும் வெளியிடுவதற்கான இடத்தைத்தான் மேற்கண்ட நிறுவனங்கள் வழங்குகின்றனவேயன்றி, அவை தகவல்களை வெளியிடுவதில்லை. ஆனால், அவை மிரட்டப்படுவதற்கு என்ன காரணம்? உன்னை யார் இலவசமாக இடத்தைத் தரச்சொன்னார்கள். அதனால்தானே அவன் கண்டதை எல்லாம் எழுதுறான் என்பதுதான். பணம், வருமானம், கட்டணம் என்ற கட்டுப்பாடுகள் இருந்தால் லகான் அரசுகளிடம் இருக்கும்; எப்போது வேண்டுமோ அப்போது இழுத்துப் பிடித்துக் கொள்ளலாம்
பதறும் மதவாதிகள்
கீதைக்கு எதிராக எழுதினார் என்ற வழக்கைப் போலவே தமிழ்நாட்டிலும் இன்னொரு பிரச்சினை. இறையில்லா இஸ்லாம் என்ற வலைப்பூவில் இறை நம்பிக்கையற்ற இஸ்லாமியர்கள் எழுதிய கட்டுரை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் பதிவு செய்தார் திராப் ஷா என்ற செந்தோழன் ஷா. இவர் நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர். இறை நம்பிக்கையற்ற, பொதுவுடை மைச் சிந்தனை படைத்தவர். கட்டுரையை எழுதியது இவர் இல்லை என்றாலும், இவரை எதிர்த்து, இவரது கோழிக்கடையில் பிரச்சினை செய்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் சிலர். இதனால் காவல்துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் பகிர்ந்த கட்டுரையை தன் பக்கத்திலிருந்து நீக்கியும் விட்டார் செந்தோழன் ஷா. பின்னர் இவரை வரச்சொல்லி விசாரித்து, நபி மேல் நம்பிக்கை இல்லாததால் மார்க்கத்திலிருந்து இவர் விலகிவிட்டதாகவும், இவருடன் குடும்பத்தாரும் உறவு கொள்ளக் கூடாது என்றும், இவர் கடையில் இறைச்சி வாங்கத் தடையையும் விதித்தும் அப்பகுதி ஜமாத் முடிவு செய்தது. விசாரணை முடிந்து அவர் வெளியில் வரும்போது அவரைத் தாக்க ஒரு கும்பல் தயாராய் நிற்க, காவல்துறை தடுத்து அழைத்துச் சென்றது. அதையும் மீறி அவர் தாக்கப்பட்டிருக்கிறார். தற்போது பாதுகாப்பான மறைவிடத்தில் தான் இருப்பதாகவும், தன் குடும்பமும், தொழிலும் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் செந்தோழன் ஷா கூறுகிறார். மதத்திற்கு எதிரான கருத்தைச் சொன்னதற்காக நாளை இவர் மீதும் வழக்குத் தொடுக்கப்படலாம்; அல்லது உயிருக்கு ஆபத்து நேரலாம். கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதார்கள் இதைத்தானே செய்யமுடியும்.  இணையவெளிகள் செய்யும் இத்தகைய கருத்துப் பரவலைத் தடுக்கத்தான் மதவாதிகளும் அரசுகளும் முயல்கிறார்கள்.
அது இல்லாததுதான் பதற்றத்திற்குக் காரணம். இதே நிலைதான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலும் ஏற்பட்டது. அப்போதே இது குறித்து உண்மை 2006 மார்ச் 1_-15 இதழில் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அங்கே தரப்பட்ட நெருக்கடி வேறு வகையானது. இப்போதும் இதே போன்றதொரு பிரச்சினை அமெரிக்காவில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு புயலைக் கிளப்பிய விக்கிலீக்ஸ், உலகநாடுகள் மீதான அமெரிக்காவின் செயல்பாட்டை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்கா விழித்துக்கொண்டது. SOPA, PIPA என்ற பெயரில் போலிகளைத் தடை செய்கிறோம், தனிமையைப் பாதுகாக்கிறோம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் வந்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கூகிள், டுவிட்டர், விக்கிபீடியா(இணையக் கலைக் களஞ்சியம்) போன்ற நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பின. மக்கள் பெருமளவு அவர்களோடு ஒத்துழைத்ததின் காரணமாக ஜனவரி 18 அன்று முழு நாள் தங்களுடைய செயல்பாட்டை நிறுத்தி, ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடத்தி பக்கங்களை இருட்டாக்கி (Blackout) போராட்டம் நடத்தின விக்கிபிடியா உள்ளிட்ட அமைப்புகள். டுவிட்டர், கூகிள் போன்ற வணிக நிறுவனங்கள் கொஞ்சம் வளைந்து கொடுத்தாலும், முதலீடோ, வணிக நோக்கமோ இல்லாத விக்கிபீடியா இதில் உறுதியாக நின்றது. (விக்கிலீக்ஸ் வேறு; விக்கிபீடியா வேறு) இப்போது அந்த மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.
அரசு, நிறுவனங்களின் ரகசியங்களை மக்கள் மத்தியில் இலவசமாக வெளியிட்ட விக்கிலீக்ஸ் அசாஞ்சேதான் அரசுகளுக்கு வில்லன் ஆனார்; தனிப்பட்ட மனிதர்களின் ரகசியங்களைப் பெரும் நிறுவனங்களுக்கு விற்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் ஆண்டின் சிறந்த மனிதர் ஆனார் என்ற கருத்துப்படமும் இதே சமூக வலைத்தளங்களில்தான் பிரபலம். ஆகவே, சமூக வலைத் தளங்கள் விமர்சனத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டவை அல்ல. அவற்றால் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. நான் யார்? என் ரசனை என்ன? போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவு ஆபத்தற்றவை அல்ல. அதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. எளிதில் யாரைப் பற்றியும் உளவறிந்துவிட முடியும். குழந்தைகளும் இளைஞர்களும் பகிர்ந்து கொள்ளும் தகவல்களாலும், முகம் பார்க்காத முகநூல் காதலாலும் - கொலைகளும், கொள்ளைகளும் நடக்காமல் இல்லை. ஆனால், இப்பிரச்சினைகள் வேறானவை. இவற்றையெல்லாம் கண்காணிக்கத் தான் சைபர் கிரைம் போன்ற துறைகள் இருக்கின்றன.  அதற்கும் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் கட்டுப்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க கருத்துரிமை மீதான தடையே!
பெரும்பெரும் விளம்பரங்கள், பளபளவெனப் பிரகாசித்துக் கொண்டிருக்கையில், மக்கள் அமைப்புகளின் சுவரெழுத்துகளுக்கு மட்டும் நகரின் அழகைக் காரணம் காட்டி தடைவிதிக்கப்பட்டதை இந்தப் பிரச்சினையோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். எளியவர்களின் ஊடகங்களை முடக்குவதன் மூலம் கருத்துக் குரல்வளையை நெரிப்பதுதான் நோக்கம்layer..

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...