Wednesday, February 29, 2012
இந்தியா என்ன செய்யப் போகிறது?
ஜெனிவாவில் மார்ச் 3 ஆம் வாரம் நடக்க இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேமீது மனித உரிமை மீறல் - போர்க் குற்ற தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்பட உள்ளது.
இந்தத் தீர்மானத்தை எப்படியும் தோற்கடித்து தன் நெற்றியில் மனிதாபிமான பட்டையைத் தீட்டிக் கொள்ள ராஜபக்சே கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ராஜபக்சேவுக்குரிய தண்டனையைக் கொடுப்பதன் மூலமாகத்தான் 21 ஆம் நூற்றாண்டின் மரியாதையே அடங்கி இருக்கிறது.
தேர்தலில் முரண்பட்ட கட்சிகளையெல்லாம் கூட்டணியில் இணைத்துக்கொண்டு செயல்படுவதுபோல, அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறது என்பதற்காக கம்யூனிஸ்டு நாடுகள் ராஜபக்சேவைத் தூக்கிச் சுமக்க ஆசைப்பட்டால், அதைவிட அருவருப்பான செயல் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு ஆயுதங்களை வாரி வழங்கிக் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்ட சீனா, ருசிய நாடுகள் ஜெனிவாவில் கொண்டுவரப்பட உள்ள கண்டனத் தீர்மானத்தை எதிர்ப்பார்களேயானால், இந்நாடுகளுக்கு அவமானம் மட்டுமல்ல - கம்யூனிசம் என்னும் உயர்ந்த சித்தாந்தம், உலக மக்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கம்யூனிஸ்டு நாடுகளே கம்யூனிசத்தின் கோட்பாடுகளைக் காயடிக்கும் ஒரு வேலையில் இறங்கி விட்டதாகப் பொருள்படும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியது.
ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா துணை போய்விட்டது என்கிற அழுத்தமான குற்றச்சாற்றிலிருந்து வெளிவர முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டு இருக்கும் இந்தியா, ஜெனிவா தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமானால், உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, உலக நாடுகளின் மத்தியிலும் மரியாதையை இழக்க நேரிடும், எச்சரிக்கை!
கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர்; இதனை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt Office) என்ற அமைப்பாகும்.
இவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்கள் சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நா.வின் ஓச்சா அமைப்பின் கணிப்புகள் கூறுகின்றன. எஞ்சிய ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் கதி என்ன?
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரா சூசை அடிகளார், சேவியர் சூலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரங்களை அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவிடமே (LLRC) தெரிவித்தனரே!
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரா சூசை அடிகளார், சேவியர் சூலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரங்களை அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவிடமே (LLRC) தெரிவித்தனரே!
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை மறைப்பதன்மூலம் உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப் பார்க்கிறது இலங்கையின் பாசிச அரசு!
விடுதலைப்புலிகளிடம் சிக்கிய மக்களை ஒருவரைக்கூட கொல்லாமல் (With Zero Civilian Casuality) அனைவரையும் மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் ராஜபக்சே புளுகுவார்?
அய்.நா. அமைத்த மூவர் குழு ராஜபக்சே கூறியது பொய்! பொய்!! பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தள்ளுபடி செய்ததே!
இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகிய இருவரின் குழு தனது ஆய்வறிக்கையை அய்.நா.வின் பான்-கீ-மூனிடம் அளித்தது. அதனை யோக்கியமான சிங்கள அரசு நிராகரிக்கிறதாம் - நண்டை நரியிடம் கொடுத்தால் என்னவாகும்?
அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அதிபர் ராஜபக்சேமீது விசாரணை நடத்தப்படவேண்டும்; போரினால் பாதிக்கப்பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பது முக்கிய தீர்மானம் (26.5.2009).
அந்த மனிதநேய - மனித உரிமைத் தீர்மானத்தைத் தோள்தட்டி முன்னின்று தோற்கடித்ததில் முதல் பரிசு இந்தியாவுக்கே!
பன்னாட்டு நீதிமன்றத்தின்முன் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தைக் கூட நடத்தியதுண்டே! (28.4.2011)
இவ்வளவுக்குப் பிறகும் ஜெனிவா தீர்மானத்தின்மீது யார் பக்கம் நிற்பது என்பதில் மனிதநேயம், மனித உரிமை இவற்றுக்கு எதிராக இந்தியா - இலங்கையின் பக்கம் நிற்குமானால், உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல - உலக மக்கள் மத்தியில் குனிந்துவிட்ட இந்தியாவின் தலை நிமிரவே நிமிராது!
இதுகுறித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவாகவே அறிக்கையின்மூலம் கேட்டுக் கொண்டதையும் (21.2.2012) மீண்டும் நினைவூட்டுகிறோம்.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
மனுதர்மத்திற்கும், மனித தர்மத்திற்குமிடையே மிகப் பெரும் போராட்டம்!
திராவிடர் இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் கொள்கை முரசம்
சென்னை, பிப்.28- மனுதர்மத்திற்கும், மனித தர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற போராட்டம் என்று திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா தொடக்கத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
திராவிடர் இயக்க நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி 27.2.2012 அன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
தியாகச் செம்மல்களுக்கு வீர வணக்கம்!
திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவிற்கு வந்திருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய உரையைத் துவக்குவதற்கு முன்னால் இந்த நூற்றாண்டிலே சுவடுகளைப் பதித்து எத்தனையோ சோதனைகளை எல்லாம் கண்டு மிகப் பெரிய அளவுக்குத் தியாகங்களை செய்து இந்த மேடையைக் கட்டியிருக்கின் றார்களே! அந்தக் கறுப்பு மெழுகுவத்திகளுக்கு, அந்தத் தியாகச் செம்மல்களுக்கு, மொழிப்போர் வீரர்களுக்கு இலட்சியத்திற்காக தனது உயிரை சிறையில் நீத்த அந்த மாவீரர்களுக்கு அனைத்து பேருடைய வீர வணக்கத்தையும் தெரிவித்து இந்த உரையைத் துவக்க நான் விரும்புகிறேன்.
அண்ணா முதலமைச்சர் ஆன நிலை!
1967-லே அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தார் கள். அவர்களேகூட எதிர்பார்க்கவில்லை. அண்ணா அவர்கள் போடுகின்ற கணக்குக்கும் கலைஞர் போடுகின்ற கணக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. அப்பொழுதே அதைத் தெளிவாகச் சொன்னார்.
ஆறே நாளில் ஆட்சி மாறப் போகிறது என்று மயிலாப்பூர் தேர்தல் கூட்டத்திலே கலைஞர் சொன்னார்.
ஆனால் அண்ணா அவர்கள் பெரி யாரிடத்திலே இருந்து கொஞ்சம் நிதான மாகக் கணக்குப் போட்டு பார்ப்பவர். ஆழமான நிலையிலே கொஞ்சம் தயங்கினார்கள். அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆன நிலையிலே அவரிடம் செய்தியாளர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். என்ன அந்த கேள்வி என்றால், 1957லேதான் நீங்கள் தேர்தலிலே நிற்பதற்காக தீர்மானம் போட்டீர்கள். முதல் முறையாக அப்பொழுதுதான் சட்டப் பேரவைக்கும் நீங்கள் போட்டியிட்டீர்கள். பத்தாண்டு காலத்திற்குள்ளாக நீங்கள்ஆட்சியைப் பிடித்திருக்கின்றீர்கள்.
உலக வரலாற்றிலே 10 ஆண்டு காலத்திற்குள் ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி எது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகமாகத்தான் இருக்கும் (பலத்த கைதட்டல்). அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? என்ன காரணம் சொல்லு கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் அண்ணா அவர்களிடத்திலே கேட்டார்.
அடக்கத்தின் திரு உருவம் அண்ணா
அண்ணா அவர்கள் அடக்கத்தின் திரு உருவம். அவர்கள் வெற்றியைப் பற்றிச் சொல்லும்பொழுது அற்புதமாகச் சொன்னார்கள். காரணம் பெரியாரி டத்திலே அற்புதமாகப் பயின்றவர். வெற்றி வரும் பொழுது எப்படி நெற்கதிர் தலை தாழ்ந்து இருக்க வேண்டுமோ அது மாதிரி அடக்கமாக இருக்க வேண்டும். நாங்கள் தோல்வியைக் கண்டு துவளவும் மாட்டோம் என்று அழகாகச் சொல்லி, அதே வழிமுறையைக் கடைப்பிடித்தவர் அண்ணா அவர்கள்.
மற்றவர்கள் இப்படி வெற்றி பெற்றிருந்தால் சாதாரண சாரசரி மனிதராக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? ஆம்! எங்கள் இயக்கத்தின் சாதனை, எங்கள் கட்சியின் பெருமிதம் என்று தலைநிமிர்ந்து சொல்லியிருப்பார்கள். ஆனால் அண்ணா அவர் கள் மிகுந்த அடக்கத்தோடு சொன் னார்கள்.
500 அடி ஆழத்தில் புதைத்து விட்டோம்
இது வெறும் பத்தாண்டு கால சாதனை என்று நினைக்காதீர்கள். ஒரு காலத்திலே சத்தியமூர்த்தி என்று ஒருவர் இருந்தார். எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். ஆண்ட கட்சி நீதிக்கட்சி எங்களுடைய மூதா தையர் கட்சி. அந்தக் கட்சி தோல்வி அடைந்தவுடனே அதை 500அடி ஆழத்தில் புதைத்து விட்டோம். இனிமேல் அந்தக் கட்சி எழவே முடியாது என்று சொன்னார்கள் அல்லவா? அந்த நீதிக்கட்சி எங்கள் பாட்டன் கட்சி. அதனுடைய வெற்றி தான் நாங்கள் பெற்றிருக்கின்ற வெற்றி. இது நீதிக்கட்சியின் தொடர்ச்சி (பலத்த கைதட்டல்).
நீதிக்கட்சி விதைக்கப்பட்டிருக்கிறது எனவே நீதிக்கட்சி புதைக்கப்படவில்லை அது விதைக்கப்பட்டது. ஆகவே அது மீண்டும் எழுந்திருக்கிறது என்ற கருத்தை அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு நீண்ட பாரம்பாரியத்திற்கு உரியதுதான் இந்த இயக்கம். அதன் காரணமாகத்தான் திராவிட இயக்க நூற்றாண்டுத் தொடக்க விழா இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அற்புதமாகச் சொன் னார்கள். இப்பொழுது பலருக்கு எரிச்சல் திராவி டமா? ஆரியமா? அல்லது அவர் வந்தாரா? இவர் வந்தாரா? இந்த ஆராய்ச்சிகள் தேவையே இல்லை. அழகாகச் சொன்னார். சுப.வீ. அவர்கள். கொள்கை ரீதியாக. அனைவர்க்கும் அனைத்தும் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அறிவு ஆசானாக நின்று போதித்த பொழுது சொன்னார். என்னுடைய இயக்கம் மக்கள் இயக்கம்.
மனிதநேய இயக்கம் பகுத்தறிவு இயக்கம். இந்த இயக்கத்தினுடைய தத்துவம் இரண்டே வார்த்தை களில் சொல்லுகிறேன். அனைவர்க்கும் அனைத் தும் எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் அழகாகச் சொன்னார். அதற்குப் பெயர்தான் சமதர்மம். அதற்குப் பெயர்தான் மனித தர்மம். அதற்குப் பெயர்தான் சுயமரியாதை. இன்னாருக்கு இது தான் என்று சொல்லுவதிருக்கிறதே அது மனுதர்மம்.
எனவே மனுதர்மத்திற்கும் மனித தர்மத்திற்கும் போராட்டம். ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் போராட்டம் ஆரியம், திராவிடம் என்பது வேறு முறைகளில் வைத்துப் பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. இன்றைக்கு ஏன் நாம் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றோம்.
என்று சொன்னால் இன்றைய தலைமுறைக்கு, இனி வரக்கூடிய தலைமுறைக்கு நம்முடைய வேர்கள் எப்படிப்பட்ட வேர்கள் என்பதை விழுதுகள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமுதாயம் எழுச்சி அடைய வேண்டுமானால், தங்களுடைய வெற்றிகளை வரப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், தங்களுடைய வர லாற்றை இழந்துவிடக்கூடாது. வரலாற்றை மறந்துவிடக்கூடாது. அதை அவர்கள் நினை வூட்டிக் கொள்ள வேண்டும். எப்படி இருந்த சமுதாயம்! சொன்னார்களே! நன்னன் அவர்கள்.
சிதம்பரத்தில் நடைபெற்ற கொடுமையைப் பற்றிச் சொன்னார்கள். சிதம்பரம் தள்ளி யிருக்கிறது. சென்னைக்கு வாருங்கள்.
சென்னை தலைநகரத்தின் நிலை
தலைநகரம் சென்னை இந்த இயக்கம் தொடங்குவதற்கு முன்னால் - பெரியார் பிறப்ப தற்கு முன்னால் - சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்னால் 1901 ஆம் ஆண்டில் என்ன நிலை?
சென்னை வால்டேக்ஸ் சாலையில் ஒற்றை வாடை நாடகக் கொட்டகை இருந்தது. அந்த நாடகக் கொட்டகையில் சுகுணவிலாஸ் சபா சார்பில் அபிதான சுந்தரி நாடகம். அந்த நாடகத்திற்கு பெரிய நோட்டீஸ். அந்த நோட்டீசை நாங்கள் இன்னமும் வைத்திருக்கின்றோம். பெரியார் நூலக ஆவணக் காப்பகத்தில் நீங்கள் காணலாம். அதைப் பதிவு செய்திருக்கிறோம். சென்னை தலைநகரில் அந்தக் காலத்தில் நடைபெற்ற நாடகம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலே இருந்த நிலை. தள்ளியிருக்கின்ற ஊரிலே அல்ல. சென்னையிலே, தலை நகரிலே இருந்த நிலை.
நாடகம் பார்க்க பஞ்சமனுக்கு இடமில்லை
அந்த நாடகத்திற்கு விளம்பரம் கொடுக்கின் றார்கள். அந்த நோட்டீசிலே போட்டிருக்கின் றார்கள். சேர் கட்டணம் ஒரு ரூபாய். காலரி 50 காசுகள். என்றெல்லாம் போட்டுவிட்டு பாய் 2 அணா. அந்த நோட்டீசிலே நிபந்தனை எழுதி யிருக்கின்றார்கள். பஞ்சமர்களுக்கு இடம் இல்லை என்று.
இந்த நாட்டின் குடிமக்கள், உழைக்கக்கூடிய மக்கள், பாடுபடக்கூடிய மக்கள், மண்ணின் மைந்தர்கள். அவர்கள் இல்லாவிட்டால் இந்த சமூகம் இயங்காது. அவன் சோற்றிலே கைவைக்க முடியாது. அப்பேர்ப்பட்ட ஒரு சமுதாயத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் பாருங்கள். அவன் காசு கொடுத்து நாடகம் பார்க்கத் தகுதி பெற்றிருந்தாலும் கூட அனுமதி இல்லை.
ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது
இதிலே ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. பொருளாதாரத்திலே அவன் உயர்ந்திருந்தால் கூட பொருளாதாரம் வளர்ந்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று ஒரு கணக்குப் போட்டுச் சொல்லுகிறார்கள் அல்லவா? அது இந்த நாட்டைப் பொறுத்தவரையில் - சமூக அநீதி களத்திலே சுட்டிக்காட்டப்படவேண்டிய செய்தி.
அவன் நாடகம் பார்க்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கக் கூடிய சக்தி படைத்தவனாக இருந்தாலும், பஞ்சமன் என்று சொன்னால் இடமில்லை என்று சொன்னார்கள். இன்றைக்கு யாராவது ஒருவன் பஞ்சமனுக்கு இடம் இல்லை என்று சொல்ல முடியுமா? அதை மாற்றியமைத்தது எந்த இயக்கம் என்று சொன்னால் (கைதட்டல்) அதுதான் திராவிட இயக்கம். அதற்குத்தான் நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் கலைஞர் அழைத்திருக்கின்றார்.
இந்த இயக்கம் இரத்தம் சிந்தாத அந்தப் பணியைச் செய்திருக்கிறது. வேறொரு நாடாக இருந்தால் ஆயுதம் தூக்கியிருந்திருப்பார்கள்.
பெரியாரின் அறிவாயுதம்
ஆனால் இங்கே எந்த ஆயுதத்தைத் தூக்கினார்கள்? பெரியாரின் அறிவாயுதத்தைத் தூக்கினார்கள். (பலத்த கைதட்டல்) அந்த அறி வாயுதத்தைத் தூக்கிய இயக்கம் இந்த இயக்கம். அது மழுங்கிவிடக்கூடாது என்பதற்குத் தான் இந்த நூற்றாண்டு விழா. நீதியரசர் அவர்கள் இங்கு பேசும்பொழுது சொன்னார்கள். இந்த வாய்ப்பிலாவது தோழர்கள் நீதிக்கட்சியைப் பற்றிய புத்தகங்களை வாங்க வேண்டும்.
திராவிட இயக்க புத்தகங்களைப் படியுங்கள்
பல பேர் புத்தகங்களை வாங்குவார்கள். அப்புறம் படிக்கலாம் என்று வைத்துவிடுவார்கள். பெரிய புத்தகங்களை வெளியிடுவதற்குப் பதிலாக நாங்கள் சிறிய புத்தகங்களையே வெளியிட்டிருக் கின்றோம். அப்படியாவது படிக்க வேண்டும் என்பதற்காக. படி, படி, நூலைப்படி என்று புரட்சிக் கவிஞர் எழுதினார்.
டி.எம்.நாயர் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நம்முடைய கலைஞர் அவர் களுக்கும் அதே போல நகைச்சுவை உணர்வு அதிகம். பல்கலைக் கழக விழா மண்டபத்தில் ஏராளமான படிக்கட்டுகள் இருக்கின்றன. நெ.து.சுந்தரவடிவேல் துணைவேந்தர். கலைஞர் அவர்களை அழைத்துக் கொண்டு முன்னாலே போகிறார். முதலமைச்சர் கலைஞர் அவர்களை அழைத்துக்கொண்டு போகின்றார்.
கலைஞரின் நகைச்சுவை
பார்த்துங்க, படிங்க பார்த்துங்க படிங்க என்று சொல்லி அழைத்துப் போனார். கலைஞர் அவர்களுக்கு இயல்பான நகைச்சுவை உணர்வு உண்டு. எங்க அப்பா சொல்லியே ரொம்ப நாளைக்கு முன்னாலே நான் கேட்கவில்லை. நீங்கள் சொல்லியா நான் கேட்கப்போகிறேன் என்று சொன்னார் (பலத்த கைதட்டல்). அவருக்கு அப்புறம் தான் புரிந்தது. ஓ.கோ முதல்வர் கலைஞர் எதைச் சொல்லுகிறார் என்று.
அது மாதிரி படிப்பு என்று சொன்னால் எப்படியிருந்த நிலை? இதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணா மேம்பாலம் அழகாக கட்டி விட்டார்கள். மேம்பாலத்தில் ஏறி வேகமாக கீழே இறங்கி விடுகின்றோம். அண்ணா மேம்பாலம் கட்டுவதற்கு முன்னால் அந்த இடத்தில் போக்கு வரத்து வாகனங்கள் எத்தனை சிக்கிக்கொண்டிருந்தன என்பதையும் உணர்ந்து அதையும் உணர்ந்து இரண்டு நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அண்ணா மேம்பாலத்தினுடைய பெருமை தெரியும். இல்லையானால் எப்பொழுதும் போல இருந்து கொண்டிருக்கும் என்று நினைப்பார்கள்.
டாக்டர் டி.எம்.நாயரின் இரு உரைகள்
இதோ டாக்டர் டி.எம்.நாயர் அவர்களுடைய இருபெரும் முழக்கங்கள் என்ற நூலை நான் எழுதி வெளியிட்டிருக்கின்றோம்.அவருடைய இரு உரைகள் அற்புதமான உரைகள். ஒன்று சேத்துப்பட்டு உரை. மற்றொன்று விக்டோரியா பப்ளிக் ஹால் உரை.
இந்த உரையிலே ஒரு செய்தியை சொல்லுகின்றார். இந்த சமுதாயம் எப்படி இருந்தது? இப்படிப்பட்ட இயக்கம் ஏன் துவங்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை சொல்லியிருக்கின்றார்கள். மக்களைப் பார்த்து சொல்லுகின்றார். இங்கிலாந்திலே படித்து விட்டு வந்த டாக்டர் சொல்லுகிறார். டி.எம்.நாயர் அவர்கள் 1919ஆம் ஆண்டு சென்னை சேத்துப் பட்டிலே பேசுகின்றார். அங்கே பேசும் பொழுது சொல்லுகின்றார்.
லோக குருவாவது-
லோக குருவாவது-
லோக்கல் குருவாவது
என் பிறந்த இடமான கேரளத்தில் நானோர் சூத்திரன் தானே! (நகைப்பு) இந்த 1917லிலும் சூத்திர வேசி புத்ரஹ என்று கூசாமல் சொல்லிக்கொண்டி ருக்கின்றன. ஆரிய தர்ம சாஸ்திர வேத புராணங்கள். இத்தகைய இந்து மத, ஜாதி அக்கிரமங்களை எந்தப் பார்ப்பன லோக குருவாவது, லோக்கல் குருவாவது கண்டிக்க முன் வருகிறானா? இந்த மூஞ்சிகளுக்குத் தான் ஹோம் ரூல் வேண்டுமாம்! (வெட்கக்கேடு! பெருத்த ஆரவாரம்) இன்னும் கேளுங்கள்! ஓ சூத்ராய மதிமம் தத்யா என்பது மற்றோர் சுலோகம்! அதன் பொருள்.
சூத்திரர்கள் படிக்கக் கூடாது! பின்னெப்படி நீ படித்தாய். என்கிறீர்களா! இந்தச் சண்டாளப் பூனைக் கண்ணன் செம்பட்ட மயிரன், வெள்ளைக் காரனுடைய யூனியன் ஜாக் கொடியல்லவா இங்கே பறக்கிறது? இப்போது! அதனால்தான் நான் படித்தேன் என்று சொன்னார். சமுதாய மாற்றத்தைப் பற்றி அய்யா நீதியரசர் அவர்கள் நமக்கு முன்னாலே சொன்னார். இந்த இயக்கத்தைப் பற்றித் தீர்ப்பு எழுதியதைப் போலச் சொன்னார்கள்.
அன்றைக்கு என்ன சூழல் சங்கரன் நாயர். அவர்தான் முதலில் வந்து நீதிபீடத்தை அலங்கரித்தவர்.
ஏடா சங்கரா! நீ அய்க்கோர்ட் ஜட்ஜாமேடா?
சங்கரன் நாயர் பற்றிய ஒரு சம்பவத்தை டாக்டர் டி.எம்.நாயர் சொல்லுகிறார்கள். இவ்வளவுக்கு நீங்களெல்லாம் மதிக்கும் என்னை எங்கள் கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான் (எங்கள் ராஜ்யத்துக்குப் போகான் டிக்கட் கொடுக்கானென்று புக்கிங் ஆபீஸ் ஜன்னலில் கைவிட்டுக் கேட்கும் அவ்வளவு பிரகஸ்பதி!)
என்னைப் பார்த்து ஏடா நாயரே என்று சர்வ சாதாரணமாகப் பேசக்கூடிய கர்வம். படைத் திருக்கிறான். அய்க்கோர்ட் ஜட்ஜாக நியமனம் பெற்ற சர்.சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்தக் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிரிப் பார்ப்பான், சங்கரன் நாயரின் வீட்டு வாசலிலேயே நின்றபடி ஏடா! சங்கரா! நீ அய்க் கோர்ட் ஜட்ஜாமேடா? என்று கேட்டானாம்.
ஆமாம் சாமி! எல்லாம் உங்கள் கடாட்சம் என்று கூறியவாறே வெளியே ஓடோடியும் வந்து நம்பூதிரியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, கைகட்டி வாய் பொத்தி நின்றாராம். சர். சங்கரன் நாயர். அதையும் நினைத்துப் பாருங்கள். இன்றைய நிலையையும் நினைத்துப் பாருங்கள். இந்த நூற்றாண்டு கால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் ஒரு ஆதிதிராவிடர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவில்லையென்று சொன்னால் தி.மு.க. ஆட்சி அதுவும் கலைஞர் ஆட்சி செய்யாமல் வேறு எந்த ஆட்சி செய்யும்? என்று தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் எழுதியவுடனே எப்பொழு துமே கலைஞர் உடனே செயல்படுவார். சட்ட அமைச்சர் மாதவனை அழைத்தார்கள்.
உடனே கலைஞர் செயல்பட்டார்
உடனே கலைஞர் செயல்பட்டார்
தாழ்த்தப்பட்ட நீதிபதி யார் இருக்கிறார் பாருங்கள் என்று தேடச் சொன்னார். ஜஸ்டிஸ் வரதராஜன் 12ஆவது இடத்திலே கீழே இருந்தார் (பலத்த கைதட்டல்). தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலே கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட முதல் நீதிபதி அவர்தான். சென்னை உயர்நீதிமன்றத்திலே முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக அவர்தான் வந்தார் (கைதட்டல்).
ஏண்டா வரதராஜா? என்று எந்த பார்ப்பானாவது கேட்க முடியுமா? ஏன் பெரியார் மீது கோபம்? ஏன் திராவிடர் இயக்கத்தின் மீது கோபம்? ஏன் கலைஞர் மீது கோபம்? ஏன் அண்ணா மீது கோபம்? அவர்களுக்கு. 80 வயது பார்ப்பன வக்கீல் நீதிமன்றத்தில் எழுந்து நிற்கிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 60 வயதுக்குள்ளான நீதிபதி வரதராஜன் உயரமான இடத்திலே அமர்ந்தி ருக்கின்றார்.ஓ மை லார்ட் என்று பார்ப்பன வக்கீல் சொல்லுகின்றார். உடனே அவர்களுடைய மனதிற் குள் என்ன தோன்றும்? கலைஞர் ஒழிக. தி.மு.க. ஒழிக, திராவிடர் இயக்கம் ஒழிக.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை ஓ மை லார்ட். ஓ என் கடவுளே! என்று கூப்பிடும்படியாக வைத்துவிட்டீர்களே! என்பதுதான் அவர்களுடைய ஆத்திரம். அந்த ஆத்திரம் எப்பொழுதெல்லாம் தமிழன் ஏமாறுகிறானோ? எப்பொழுதெல்லாம் திராவிடன் ஏமாறுகிறானோ அப்பொழுதெல்லாம் தோல்வி ஏற்படுகிறது. அரசியல் ரீதியாக இதுதான் தோல்வியே தவிர, நம்மிடையே கொள்கை தோல்விகள் கிடையாது (கைதட்டல்).
படித்தவர்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்? வகுப்பு வாரி உரிமை ஒன்று இல்லாவிட்டால் நம்முடைய நிலைமை என்ன? நாங்கள் எல்லாம் வழக்குரைஞர்கள். எதிரிலே அமர்ந்திருக்கிறார்கள். நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். இது அறிவார்ந்த அவையாக இருக்கிறது. கல்வி அறிஞர்கள் இங்கே இருக்கிறார்கள். மொழி அறிஞர்கள் இங்கே இருக்கிறார்கள். நீதி அரசர்கள் என்று இப்படி பல பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
பெரியார் பிறக்காவிட்டால்...!
இதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே நம்மால் நினைத்துப்பார்க்க முடியுமா? இங்கே சொன்னார்களே! முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்ட முடியுமா? பெரியார் பிறக்காவிட்டால், திராவிடர் இயக்கம் தோன்றியிராவிட்டால், என்ன சூழல் எண்ணிப் பார்க்க வேண்டாமா? பெரியார் காலத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. அன்றைக்குப் பார்ப்பன சத்தியமூர்த்திகள் என்ன சொன்னார்கள்?
முத்து லட்சுமி ரெட்டி இந்த சமுதாயத்தின் முதல் டாக்டர் பெண்மணி. ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து விட்டோம் என்று சத்திய மூர்த்தி அய்யர் சொன்னார். அந்த சத்தியமூர்த்தி சட்டமன்றத்திலேயே சொன்னார்.
சத்தியமூர்த்தி அய்யர் கூற்று நான் சட்டத்தை மறுத்து ஜெயிலுக்குப் போனாலும் போவேனே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நான் நரகத்திற்குப் போகத் தயாராக இல்லை. இது பகவத் காரியம்! இது பகவானுக்குத் தொண்டு செய்கின்ற காரியம். இதை ஒழிப்பதற்கு நீதிக்கட்சி செய்யக்கூடாது என்று சட்டமன்றத்திலே சத்திய மூர்த்தி அய்யர் சொன்னார்.
முத்து லெட்சுமி ரெட்டி பெரியாரை வந்து சந்தித்து கேட்டார். நீங்கள் நான் சொல்லுகிற பதிலை சட்டமன்றத்தில் கேளுங்கள் என்று பெரியார் சொன்னார். அடுத்த நாள் முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்றத்தில் சொன்னார். அவர்தான் மசோதா கொண்டு வந்தார். பரவாயில்லை. கனம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். இது பகவத் காரியம் என்று. இதுவரையில் எங்கள் சமுதாயத்துப் பெண்களே இந்த பகவத் காரியத்தை செய்திருக்கி றார்கள்.
இனிமேல் உங்கள் சமுதாயத்துக்காரர்கள்தான் செய்ய முன்வரவேண்டும் (பலத்த கைதட்டல்). எங்களுக்கு மட்டும் வாய்ப்பா! உங்களுக்கும் அந்த வாய்ப்பு இருக்கட்டும் என்று பதில் சொன்னார்கள். இப்படி எத்தனையோ திராவிட இயக்க சாதனைகள் உண்டு. வேதனைகளுக்கு மத்தியில் கூட சரித்திர சாதனைகளுக்குப் பஞ்சமே கிடையாது.
சுருக்கமாக ஒன்றிரண்டு கருத்துகளை சொல்லி முடிக்க விரும்புகிறேன். பேராசிரியர் உரையை, கலைஞர் உரையைக் கேட்க நீண்ட நேரம் நீங்கள் ஆவலோடு இருக்கிறீர்கள். இந்த சமுதாயம் மக்கள் எழுச்சி பெறவேண்டும் என்பதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. நண்பர் மாறன் அவர்களும், நானும் மிசாவிலே இருந்த பொழுது திராவிடர் இயக்கத்தினுடைய வரலாற்றை நீங்கள் எழுதுங்கள். வகுப்புரிமை வரலாற்றை நான் எழுதுகிறேன் என்று.
எழுதப்படாத ஒப்பந்தம்
நாங்கள் சிறையிலேயே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டு எழுதினோம். அவரும் திராவிடர் இயக்க வரலாறு முதல் பாகத்தை எழுதினார். அதனுடைய தொடர்ச்சி வரவில்லை. நான் வகுப்புரிமை வரலாற்றை எழுதினேன். வகுப்புரிமைப் பற்றி ஒரே ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.
கல்வி, உத்தியோகத்தில் இன்றைக்கு கதவு திறக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியிலே பகல் உணர்வு போடப்பட்டது. இதை முதல் முறையாக அளித்த ஆட்சி வள்ளல் சர்பிட்டி தியாகராயர் அவர்களுடைய ஆட்சி. அவர்கள்தான் இதை முதல் முறையாக செய்தவர்கள் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? இதே வகுப்புரிமை என்ற இந்த நூலை நீங்கள் பார்க்க வேண்டும். 1917 இந்த இயக்கம் தொடங்குவதற்கு முன்னால் ஆந்திரா பிரியாத காலகட்டம். கடப்பை என்ற மாவட்டத் திலே ஒரே ஒரு செய்தியைச் சொல்லுகின்றேன். இதிலே பட்டியல் போட்டுக் காட்டுகிறேன்.
கடப்பை மாவட்டத்தில் ஒரே ஒரு பார்ப்பனரான கிருஷ்ணாராவ் என்பவர் கலெக்டருக்கு இணையான அதிகாரம் படைத்த தனது பதவி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய 116 உறவினர் களை அரசு பதவியில் அமர்த்திய சாமர்த்தியத்தை இதோ கடிதம் வாயிலாக மெயில் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. 116 பேர் பட்டியல் மாமியா ருக்கு சொந்தக்காரர்கள். மருமகனுக்கு சொந்தக் காரர்கள் என்று பெயரோடு அவர்கள் என்ன பதவியில் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத் தினார்கள்.
ஒரு காலத்தில் நமக்கு படிக்க வேலைக்குச் செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்டது. இன்றைக்கு அப்படி அல்ல. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திராவிடர் இயக்கமா? வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்த இயக்கம். வெள்ளைக்காரர்களுடைய பூட்சை நக்கியவர்கள் என்றெல்லாம் ஒரு காலத்திலே பேசினார்கள். அதற்கு அருமையான பதிலை பெரியார் சொன்னார்.
ஒரு காலத்தில் நமக்கு படிக்க வேலைக்குச் செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்டது. இன்றைக்கு அப்படி அல்ல. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திராவிடர் இயக்கமா? வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்த இயக்கம். வெள்ளைக்காரர்களுடைய பூட்சை நக்கியவர்கள் என்றெல்லாம் ஒரு காலத்திலே பேசினார்கள். அதற்கு அருமையான பதிலை பெரியார் சொன்னார்.
வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலைவிட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால் சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் அவருக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்துப் பதில் சொன்னார். அவருக்கே உரிய துணிவோடு, ஆகவே சமுதாயத்திலே எதிர்பார்க்க வேண்டிய செய்திகள் ஏராளம். இது நூற்றாண்டு விழாவினுடைய துவக்கம்தான். இது இனத்தினுடைய மீட்டெடுப்பு பணி. இது சாதாரணமானதல்ல.
மறந்தவைகளை நினைவூட்ட வேண்டும்
மறந்தவைகளை நாம் நினைவூட்ட வேண்டும். வரலாற்றின் வேர்கள் சரியாக இருக்க வேண்டும். இந்த இனத்தின் வேர்கள் சரியாக இருந்தால்தான் விழுதுகள் பழுது படாமல் வளரக்கூடிய வாய்ப் பைப் பெற முடியும்.
இறுதியாக ஒன்றைச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன். வந்திருக்கிற தோழர்களுக்கு, மற்றவர்களுக்கு என்று நினைக்க லாம். தேர்தலில் தோற்ற பிற்பாடு திடீரென்று திராவிடர் இயக்க உணர்வு பூத்ததோ! திடீர் என்று திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டதோ என்றெல்லாம் கூட நினைக்கலாம். ஒரு கொள்கையை முன்னுறுத்தி இந்த இயக்கம் இருக்கிறது.
தி.மு.க.வின் கொள்கை திட்டத்தில் பகுத்தறிவு
சொன்னார்களே - நன்னன் அவர்கள் - பகுத் தறிவைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தி னுடைய தனித்தன்மையை இழக்கக்கூடாது என்று அவர்கள் சொன்னார்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களிலேயே மற்ற அரசியல் கட்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள மகத்தான வேறுபாடு என்னவென்றால் பகுத்தறிவு என்பதை சொல்லுகின்ற ஒரே அரசியல் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம்தான் (பலத்த கைதட்டல்). அதனுடைய சட்ட திட்டங்களிலேயே மிகத் தெளிவாக அண்ணா அவர்கள் காலத்தி லிருந்தே உருவாக்கப்பட்டிருக்கின்றது.
நாயர் அவர்களை திராவிடர் லெனின் என்று தந்தை பெரியார் அவர்கள் அழைத்தார்கள். அவருடைய படத்தைத் திறந்து வைத்தபொழுது தந்தை பெரியார் ஒரு செய்தியைச் சொன்னார். அந்த செய்தி இன்றைக்கும் பயன்படும். அதைத் தான் உங்கள் மத்தியிலே வைத்து விடை பெற விரும்புகிறேன். ஜஸ்டிஸ் கட்சி 17 வருட காலம் ஆட்சியில் இருந்தது. அதற்கு எதிரிகளின் தொல்லையை சமாளிக்க வேண்டிய வேலையே தனியாக இருந்தது. இந்தத் தொல்லைகள் இல்லாமல் இருந்திருக்குமேயானால், ஜஸ்டிஸ் கட்சி இன்னும் அநேக வேலைகளை செய்திருக்கும். செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் செய்துவிட்டதாக சொல்ல முடியாது.
பதவிதானே காலடிக்கு வரும்!
பதவியின் மூலம் எதிரிகளை அடக்கலாம், ஒழிக்கலாம் என்பது முடியாத காரியம். அதற்குப் பதிலாக பதவியை விடுவதன் மூலமாக எதிரிக்கு ஆக்கம்தான் அதிகம் ஏற்படும். உதாரணமாக நாம் 17 வருடமாக பதவி வகித்திருந்தது. (நாம் என்று நீதிக்கட்சியை சொல்லுகிறார்) எதிரிகளுக்குப் பலம் சேர்த்துக்கொள்ள மிகவும் சவுகரியமாயிற்று.
எதிரிகள் 27 மாதம் பதவி வகித்தது. நமக்கு சற்றாவது பலம் பெற உதவிற்று. எதிரிகள் பதவி வகித்தால் நமக்கு சில சிதறல்கள் ஏற்படும் என்றாலும் அதைவிட லாபம்தான் சில கட்டுப் பாடும். உணர்ச்சியும் ஏற்பட்டது. நமக்கு பதவி இல்லையே என்ற பயம் வேண்டாம். கட்சி பலமாகும். (பெரியார் பேசுகிறார் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.) திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவிலே நாம் மனதிலே செதுக்கிக்கொள்ள வேண்டிய மகத்தான திராவிட இயக்கம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய மான கருத்து).
கட்சி பலமாகவும், கட்டுப்பாடாகவும், இருந்து செயல்பெற்றால், செல்வாக்குபெற்றால் பதவி காலடியில் வந்து தானே விழும் (பலத்த கைத்தட்டல்). தந்தை பெரியார் அவர்கள் இப்படிச் சொன்னார்கள். தோற்றுவிட்டவுடனே அய்யோ இவர் கட்சியை விட்டு ஓடிவிட்டாரே. அவர் கட்சியை விட்டு ஓடிவிட்டாரே என்று கருதலாம். பெரியார் சொல்லுகிறார்.
குடியிருந்த வீட்டிற்கு கொள்ளி
அய்யோ குடியிருந்த வீட்டிற்கு கொள்ளி வைக்கிறான் என்றால் குடியிருந்த வீட்டிற்கு கொள்ளி வைப்பதைவிட புதிதாக செல்லுகின்ற அந்த வீட்டிற்குப் போய் கொள்ளி வைக்கப்படும். ஒரே வீட்டிலே தொடர்ந்து வைக்க வேண்டாம் (கைதட்டல்). இது பெரியாரின் பாசறை. ஆகவே திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை பரிணாம வளர்ச்சி, எத்தனையோ வேதனைகள், எத்த னையோ சோதனைகள், எத்தனையோ தோல்விகள் இவை எல்லாம் உண்டாகும். அது எப்படிப் பயன்படும் என்பதைப் பற்றிச் சொல்லுகின்றார்.
நாம் தேடிப்போய் அடையவேண்டிய பதவியை விட, நம்மை தேடி வந்து அடையும் பதவியே பயனுள்ளதாகும். தவிரவும் நாம் மாத்திரம் கட்டுப்பாடாய் இருந்தால், (இதுதான் தோழர் களுக்குக்கே இன்றைக்கு செய்தி) பதவி இல்லாம லேயே அத்தகைய காரியங்களை சாதித்துக் கொள் ளலாம் என்று நினைக்கிறார்கள் (கைதட்டல்).
ஆம். அதை நினைத்துதான் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். வெற்றிபெற்றால் அண்ணா வழி. மென்மையான வழி. தோற்றால் பெரியார் வழி என்று. அது ஈரோட்டுப்பாதை. அந்த பாதை புயலைத் தாங்கக் கூடிய பாதை. எனவே தேர்தலில் தோல்வி. லட்சியத்திலே வெற்றி என்ற முழக்கத் தையே நாம் ஒவ்வொருவரும் பெறுவோம். (கைதட்டல்).
கட்டுப்பாடு! கட்டுப்பாடு!! கட்டுப்பாடு!!!
இராணுவத்தையும் தோற்கடிக்கக்கூடிய கட்டுப்பாடுதான் நம்மிடையே இருக்க வேண்டும். பெரியாருக்கு மரியாதை சேர்க்க வேண்டும் என்றால், அண்ணாவுக்கு மரியாதை சேர்க்க வேண்டும் என்றால் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பதிலே பெரியார் சொன்னார்.
கடமைக்கு எப்படி வேண்டுமானால் விளக்கம் சொல்லலாம். கண்ணியத்திற்கு இருவிதமாகக்கூடி பொருள் சொல்லலாம். ஆனால் கட்டுப்பாட்டிற்கு வேறு பொருளே கிடையாது. ஒரே பொருள்தான் உண்டு. எனவே தோழர்களே, திராவிடர் இயக்கம். மீண்டும் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டுமானால் நம்மிடையே வேண்டுவது
கட்டுப்பாடு! கட்டுப்பாடு!! கட்டுப்பாடு!!!
என்று கூறி முடிக்கிறேன். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும்...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...