காற்றாலை மரச்செருப்பு போன்றவற்றைப் போலவே ஹாலந்து நாட்டின் புகழ் மிக்க சின்னமாக விளங்கும் டுலிப் மலர் ஆம்ஸ்டர்டாமிலிளிருந்தோ வேறு இடத்திலிருந்தோ வந்திருக்கலாம். ஆனால் அது நெதர்லாந்தில் தோன்றியது அல்ல.
இயல்பாக டுலிப் செடி மலைப் பகுதிகளில் வளரும். தற்போது இஸ்தான்பூல் என்றழைக்கப்படும் கான்ஸ்டான்டி நோபிள் நகரத்திலிருந்து நெதர்லாந்துக்கு முதன் முதலாக துலிப் மலர்கள் 1554 இல்தான் இறக்குமதி செய்யப்பட்டன. காட்டு டுலிப் மலர்கள் தென் அய்ரோப்பா, வட ஆப்ரிக்கா, மற்றும் வடகிழக்கு சீனா வரையிலான ஆசியாவின் பகுதிகளிலும் காணலாம். துருக்கி மற்றும் ஈரான் நாடுகளின் தேசிய மலர் இந்த டுலிப்தான்.
தலைப்பாகை என்ற பொருள் தரும் டல்பான்ட் (Dulband) என்ற பெர்சிய மொழிச் சொல்லின் துருக்கி உச்சரிப்பான (tulbent) டுல்பென்ட் என்ற சொல்லில் இருந்து உருவான பெயர் இந்த மலரின் பெயர். முழுமையாக மலராத நிலையில் இந்த மலர் பார்ப்பதற்கு தலைப்பாகையைப் போல் தோற்றம் அளிப்பதால், (அல்லது தங்களின் தலைப்பாகை மீது துருக்கியர்கள் பாரம்பரியமாக இம்மலரை அணிவதாலோ) இதற்கு அந்தப் பெயர் வந்திருக்கும் என்று சொல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நாட்டின் 12 மாகாணங்களில் 2 மாகாணங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடும் ஹாலந்து என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டிய, ஆனால் நெதர்லாந்து என்று அழைக்கப்படும் நாட்டில் அதிக அளவில் புகழ் பெற்றது இந்த டுலிப் மலர். ஆனாலும் 17 ஆம் நூற்றாண்டில் டுலிப் மலரைப் பற்றிப் புனையப்பட்ட கதைகள் இப்போது வெறும் கட்டுக் கதைகளாகப் பார்க்கப்படுகின்றன. டுலிப் மலரின் விலை வீழ்ச்சியடைந்ததால் வாழ்க்கையைப் பறி கொடுத்த மக்களைப் பற்றிய மிகவும் திகைப்பூட்டும் கதைகள் 1852 இல் சார்லஸ் மெகன்சி என்பவரால் எழுதி பதிப்பிக்கப்பட்ட அசாதாரணமான புகழ் பெற்ற மாயத்தோற்றங் களும், கூட்டத்தினரின் பைத்தியக்காரத்தனமும் (Extraordinary Popular Delusions & the Madness of Crowds) என்ற நூலில் இருந்து வந்தவையே என்று டச்சு வங்கியின் உலக அளவிலான உத்திப் பிரிவின் தலைவரான பேரா. பீடர் கார்பர் என்பவர் கூறுகிறார். டுலிப் விலை பற்றி சூதாட்டம் ஆடுவதில் மக்களை ஆர்வமிழக்கச் செய்ய டச்சு அரசு இத்தகைய கதைகளைப் பரப்பி மேற்கொண்ட ஓர் ஒழுக்க நெறி பிரச்சாரத்தின் விளைவுதான் இது.
டுலிப் மலர்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது என்பது உண்மைதான். (மதிப்பு மிகுந்த இச்செடியின் ஒரு மொட்டின் விலை ஒரு வீட்டின் விலையளவுக்கு இருந்தது.) ஆனால் மற்ற நாடுகளில் வேறு செடிகளுக்கு இதனை விடக் கூடுதலாகவும் விலை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக சூரிய வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் வளரும் வண்ணமலர்ச் செடியான ஆர்ச்சிட் (orchid) செடிக்கு 19 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கூறலாம். டச்சு நாட்டினரின் இந்த சூதாட்ட மயக்கம் சோர்வளிக்கும் அந்நாட்டு குளிர்காலத்தின் ஒரு மாதகாலம் வரை மட்டுமே 1637 இல் நீடித்தது என்றும், அதனால் உண்மையில் எந்த பொருளாதார பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கார்பர் கூறுகிறார். இன்று, ஹாலந்து நாடு ஆண்டு ஒன்றுக்கு 300 கோடி டுலிப் மொட்டுகளை உற்பத்தி செய்கிறது. அவற்றில் 200 கோடி மொட்டுகள் ஏற்றுமதி ஆகின்றன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment