வலிமையுள்ள உயிரினம் போட்டியில் பிழைத்து உயிர் வாழும் என்ற சொற்றொடரை உருவாக்கியவர் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் ஆவார்.
ஒரு தத்துவயியலாளர், மனோதத்துவயியலாளர் மற்றும் பொறியியலாளரான ஸ்பென்சர் அவர் வாழ்ந்த காலத்தில் டார்வினைப் போன்று புகழ் பெற்றிருந்தார்.
டார்வினின் இயற்கைத் தேர்வு (Natural Selection) எனும் கோட்பாட்டினால் கவரப்பட்ட ஸ்பென்சர், தனது உயிரியல் கொள்கைகள் (Principles of Biology) என்ற நூலில் (1864) அவர் இச்சொற்றொடரை உருவாக்கிப் பயன்படுத்தினார். தனது உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்ற நூலின் அய்ந்தாம் பதிப்பில் டார்வின் இந்தச் சொற்றொடரை உருவாக்கியதற்காக ஸ்பென்சரைப் பாராட்டினார். டார்வின் குறிப்பிட்டதாவது:
தேர்வு செய்யும் மனிதரின் ஆற்றலுடன் உள்ள தொடர்பைக் குறிக்க, இயற்கைத் தேர்வு என்ற சொற்றொடரில் இக்கொள்கையை நான் அழைத்தேன். சிறிது மாறுபட்ட சொற்றொடர் எது ஒன்றும் பயன்படுமானால், அது பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஹெர்பர்ட் ஸ்பென்சர் அடிக்கடி பயன்படுத்தும் வலிமையுள்ள உயிரினம் போட்டியில் பிழைத்து உயிர் வாழும் என்பதே மிகச் சரியானதாக இருப்பதோடு, சில நேரங்களில் பயன்படுத்தவும் எளிதாகவும் சவுகரியமாகவும் இருக்கிறது.
அவரது பெற்றோர்களின் ஒன்பது குழந்தைகளில் ஸ்பென்சர் (1820-1903) தான் மூத்தவர். இவரைத் தவிர்த்த மற்ற குழந்தைகள் அனைவரும் இளம் வயதிலயே இறந்து போயினர். சிவில் பொறியாளராகப் பயிற்சி பெற்ற இவர், ஒரு தத்துவயியலாளராகவும், மனோதத்துவயியலாளராகவும், சமூக இயலாளராகவும், பொருளியலாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். தனது வாழ்நாளில் அவர் பத்து லட்சத்துக்கும் மேலாக தனது நூல்களை விற்றார். தத்துவயியல், மனோதத்துவயியல் மற்றும் சமூகத்தை ஆய்வு செய்ய உயிரினத் தோற்றக் கோட்பாட்டினை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான்.
பேப்பர் கிளிப்பை அவர்தான் கண்டுபிடித்தார். ஸ்பென்சரின் பைண்டிங் பின் என்று அது அழைக்கப்பட்டது. லண்டன் ஸ்ராண்ட் பகுதியில் அலுவலகம் வைத்திருந்த ஆக்கர்மேன் என்ற உற்பத்தியாளர், ஊக்கும் கண்ணும் கொண்ட ஓர் இயந்திரமாக இந்த பேப்பர் கிளிப்பை மாற்றம் செய்து தயாரித்தார்.
முதல் ஆண்டில் அது நன்றாக விற்பனை ஆனதால், ஸ்பென்சருக்கு 70 பவுண்டு வருவாய் கிடைத்தது. ஆனால் பின்னர் அதன் தேவை குறைந்துபோனது. ஆக்கர்மேன் தன்னைத் தானே சுட்டுக் கொலை செய்து கொண்டார். அவரது கண்டுபிடிப்பு 1899 இல், ஜெர்மனியில் ஜோஹான் வேலர் என்பவர் தான் தயாரித்த நவீன பேப்பர் கிளிப்புக்கு காப்புரிமை கோரியபோது, முழுமையாகக் காணாமல் போய்விட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மானியர் களின் ஆக்கிரமிப்புக்கு நார்வே நாட்டு மக்கள் காட்டிய எதிர்ப்புணர்ச்சியின் அடையாளமாக பேப்பர் கிளிப்புகள் இருந்தன. நாடு கடத்தப்பட்ட ஏழாவது அரசர் ஹாகூன் அவர்களின் தடை செய்யப்பட்ட அடையாளச் சின்னத்துக்கு மாற்றாக இந்த பேப்பர் கிளிப்பை தங்களின் சட்டையின் மார்புப் பகுதியில் நார்வே மக்கள் அணிந்து கொண்டனர். ஜோஹான் வேலரின் நினைவாக ஒரு மாபெரும் பேப்பர் கிளிப் ஓஸ்லோ நகரின் பிற்காலத்தில் வைக்கப்பட்டது.
இன்று ஆண்டுதோறும் 1100 கோடி பேப்பர் கிளிப்புகள் விற்கப்படுகின்றன. என்றாலும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், வாங்கப்படும் ஒவ்வொரு லட்சம் கிளிப்புகளிலும் பேப்பர்களை ஒன்றாக வைப்பதற்கு வெறும் அய்ந்து கிளிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. மற்றவை எல்லாம் போக்கர் சீட்டு விளையாட்டுக்காகவும், புகைப்பானைச் சுத்தப்படுத்தவும், சேப்டி பின்னாகவும், பல் குத்தவும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. மற்றவை கீழே போடப்பட்டும், தொலைந்தும் போகின்றன. தொலைபேசியில் சங்கடமா, சோர்வளிக்கும் வகையில் பேசிக் கொண்டி ருக்கும்போது அவை வளைக்கப்பட்டு விடுகின்றன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment