Tuesday, November 29, 2011

சில பேருடைய நுழைவால், சூழ்ச்சியால் தமிழினம் பதில் சொல்ல முடியா நிலைக்கு ஆளாகியிருக்கிறது


தி.மு.க. தலைவர் கலைஞர் பேச்சு 
சென்னை,நவ.28- தமிழினம் இன் றைக்கு சில பேருடைய நுழைவால், சில பேருடைய சூழ்ச்சியால் சில பேருடைய தாக்கத்தால் அவற்றை எல்லாம் மறந்து பலருடைய கேள்வி களுக்குப் பதில் செல்ல முடியாத இடத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், அச்சுத (கவுண்டர்) அவர்களின் மகன்  வாசுதேவனுக்கும், சென்னை  ரஞ்சன் (நாயக்கர்) அவர்களின் மகள் செல்வி காஞ்சனமாலாவிற்கும்  நடை பெற் றுள்ள  இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளைச் செய்து  நானும் இதிலே கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்திட வேண்டுமென்று வலியுறுத்தி,  மிகச் சிறப்பாக விழாவை நடத்தியிருக்கின்றன. தம்பி  டாக்டர் ஞானசேகரன் அவர்களை இன்று நேற்றல்ல,  நீண்ட காலமாக நான் அறிவேன்.   அவரோடு  மகிழ்ந்தும், கடிந்தும்  பல நேரங்களில்  பழகுகின்ற வாய்ப்பு  எனக்குக் கிடைத்திருக் கின்றது.   தமிழகச் சட்டப் பேரவையில்  அவர் பணியாற்றிய காலத்திலும், அதற்குப் பிறகு  இயக்கப் பணிகளை  நிறைவேற்ற முற்பட்ட காலத்திலும்,  அந்தப் பணியையும் நிறைவேற்றிய துடன்,  தன்னுடைய  கொள்கையைக் கேடயமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்திய நேரத்திலும்  அவருடைய பண்புகளை, அவருடைய மன உறுதியை, இதற்கெல்லாம்மேலாக  என்பால் அவர் கொண்டிருக்கின்ற அன்பை, நேசத்தை நான் மிக நன்றாக உணருவேன்.   அப்படி உணர்ந்த காரணத்தினால் தான் இன்றுள்ள என்  உடல் நிலை, உள்ள நிலை - இந்த நிலைகளுக்கிடையிலேயும் இந்த மணவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்கிற  மனப் பக்குவத்தைப் பெற்று, உறுதியைப் பெற்று  உங்களை யெல்லாம் காணுகின்ற  அரிய வாய்ப்பை நான் இன்றைக்குப் பெற்றி ருக்கிறேன்.
திராவிடக் கலாச்சாரம்
நம்முடைய இல்லங்களில் நடை பெறுகின்ற எந்த விழாக்கள் ஆனா லும், அவை திராவிடப் பண்பாட் டோடு, திராவிடக் கலாச்சார மேன்மையோடு நடைபெற வேண்டும் என்று விரும்புகின்ற இயக்கம் திராவிட இயக்கம்.   அத்தகைய திராவிட இயக்கத்தில்  தன்னுடைய இளமைக்காலந்தொட்டு,  ஈடுபடுத்திக் கொண்டு வருகின்ற தம்பிதான் ஞானசேகரன் என்று சொன்னால் அது மிகையாகாது.   இங்கே நான்  வழங்கப் பட்டுள்ள திருமண அழைப்பிதழைப் பார்க்கும்போது,  ஓர் இடத்திலே நாயக்கர் என்றும், இன்னொரு இடத்தில் கவுண்டர் என்றும் இப்படி பல்வேறு சொற்களால்  உங்களுடைய  சமுதாயத்தினுடைய  பிரிவுகள் அடை யாளம் காட்டப்பட்டிருக்கின்றன.    நாயக்கர் என்றாலும், கவுண்டர் என்றாலும், எங்களுடைய தஞ்சை மாவட்டம் போன்ற இடங்களிலே வழக்கத்திலே இருக்கின்ற  படை யாச்சியார் என்றாலும்  எல்லாமே  மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த குடும்பங்கள்தான் என்பதை நானும் அறிவேன்,  அனை வரும் அறிவீர்கள்.   அந்த வகையில்  இன்றைக்கு  இந்த விழாவில் மண மகன், மணமகள்  இவர்கள் எல்லாம்  கற்றவர்களாக, இன்னும் சொன்னால்  மேல் படிப்புக்கு உகந்தவர்களாக, உரியவர்களாக ஆகியிருப்பதற்கும்,  ஞானசேகரன் அவர்களே  ஒரு டாக்டராக விளங்கி வரு வதற்கும்   -  ஒரு ஞானசேகரன் அல்ல,  பல ஞான சேகரன்கள் தமிழ்நாட்டில் இன்றைக்கு  இந்தச் சமுதாயத்திலிருந்து  டாக்டர் களாக,  வேறு  பல துறைகளிலே விற்பன்னர்களாக விளங்குவதற்கு எது காரணம் என்று பார்த்தால், அந்தக் காலத்திலே பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று பிரிக்கப்பட்ட  நான்கு பிரிவுகளாக  உள்ளவர்கள் எல்லாம்,  நாமெல்லாம் ஒரே சாதி, தமிழ்ச் சாதி, திராவிட சாதி, நமக் குள்ளே பேதம் இல்லை, நமக்குள்ளே வேறுபாடு இல்லை, உயர்வு தாழ்வு இவைகளைப் பற்றி  நாம் பேசக் கூடாது,  அதை கருதவும் கூடாது என்று அந்த அளவில்  நாம் வாழ வேண்டும், நம்முடைய சமுதாயம் விளங்க வேண்டும் என்ற  அந்தக் குறிக்கோளை எடுத்துரைத்து  -  தந்தை பெரியார் அவர்கள்,  பேரறிஞர் அண்ணா அவர்கள்  திராவிட இயக் கத்தார்,  சுயமரியாதை இயக்கத்தார் எடுத்துச் சொன்ன  அந்த வார்த்தை களுடைய  வடிவங்களாகத்தான்  இங்கே நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள்.
சாதி வேண்டாம் தமிழினம் நாம்
உங்களில் யார், எவர் என்று இங்கிருந்து நான் சொல்லி விட முடியாது.   நானும், தம்பி வீரபாண்டி ஆறுமுகமும், இங்கே அமர்ந்து  -  இங்கே அமர்ந்திருக்கின்ற எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள், எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்  என்று  சொல்ல வேண்டுமென்றால்  சொல்ல இயலாது.   அதனால்தான் அனை வரும் தமிழர்கள், தமிழ்ச் சாதி, திராவிட இனத்தினர்  என்கின்ற  அந்த உணர்வை நாம் பெற்றிருக்கிறோம்.   அத்தகைய  உணர்வை  நாம் பெறு வதற்குக் காரணமாக இருந்தவர்,  தந்தை பெரியார் அவர்களும், அவர் வழி நின்று  அவருடைய  கொள்கை களை  நனி நாகரிகமாக, நயமாக  அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன தந்தை பெரியாருடைய மாணவரும்,  நமக் கெல்லாம் ஆசிரியருமான அறிஞர் அண்ணா அவர்களும்தான் என்பதை  யாரும் மறுப்பதற்கில்லை.   அத்தகைய அண்ணா அவர்களுடைய  ஆட்சியில்  சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற நிலை உருவாயிற்று.    அதற்கு முன் பெல்லாம் சுயமரியாதை திருமணம் செய்தோம் என்றால்  அவர்களை பக்கத்து வீட்டார்கூட திரும்பிப் பார்க்கப் பயப்படுவார்கள்.   ஏ அப்பா, அவன்  சு.ம.  திருமணம் செய்து கொண் டவன், அவன் கடவுள் இல்லை என்று சொல்கிறவன்,  அவன் சாதி இல்லை, மதம் இல்லை, குலம் இல்லை, கோத்திரம் இல்லை என்றெல்லாம் கூறுகிறவன்  என்று  கூறி வெறுத்துக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது.   1967ஆம் ஆண்டு திராவிட முன் னேற்றக் கழகம் தமிழகத்திலே பெரு வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலே ஆட்சி அமைந்து, அண்ணா செய்த முதல் காரியமாக  இன்றைக்கு  நடந்ததே சுயமரியாதை திருமணம். இது போன்ற திருமணங்கள், இனி  சட்டப்படி செல்லுபடியாகும்,  இனி நடக்கின்ற திருமணங்கள் மாத்திரமல்ல, இது வரை நடந்த  சுயமரியாதைத் திரும ணங்களும் சட்டப்படி செல்லுபடி யாகும் என்று  விதித்த காரணத்தால் தான்  இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லோரும் சுயமரியாதைத் திரும ணத்தை ஓரிருவர் தவிர,  இன்னமும் பழைய பஞ்சாங்கங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களைத் தவிர,  இன்னமும்  பழைய  சாத்திரங்களில் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் சுயமரி யாதைத் திருமணங்களை, சீர்திருத்த திருமணங்களை, பகுத்தறிவு திரும ணங்களை தங்களுடைய இல்லங் களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மணமக்களுடைய  வாழ்க்கை யில் எந்தக் குறையும் ஏற்பட்டதில்லை, ஏற்படாது.   ஒருவருடைய வாழ்க்கை என்பது அவர்கள்  தங்களுடைய ஆரோக்கியத்தைக் காத்துக் கொண்டு, தங்களுடைய நலன்களைக் காத்துக் கொண்டு, பிறர் நலம் பேணி அப்படி வாழ்கின்ற அந்த வாழ்க்கையை யார் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்களோ, அவர்களுக்கு  எந்த நேரத்திலும், எந்தத் தீமையும் வராது.    அதனால்தான்  சங்க காலப் புலவர்கள் பாடியிருக்கி றார்கள்.  தீதும் நன்றும் பிறர்தர வாரா  என்று சொல்லியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் இல்லாவிட்டால்...
தீமையும்,  நன்மையும்  நாமாகத் தேடிக் கொள்வதே தவிர,  மற்றவர்க ளிடமிருந்து வரக் கூடியவை அல்ல என்று  அன்றைக்கே பாடி வைத்திருக் கிறார்கள்.  அப்படிப் பட்ட தமிழினம், எதைப் பற்றியும்,  எந்தச் சாத்திரங் களைப் பற்றியும்  கவலைப்படாமல், தங்களுடைய இனம், குலம், கலை, நாகரிகம், பண்பாடு  என்று அந்த அளவிலே  தன்னை நடாத்திக் கொண்டு,  தமிழினம் இன்றைக்கு  சில பேருடைய  நுழைவால், சில பேருடைய சூழ்ச்சி யால், சில பேருடைய தாக்கத்தால் அவற்றையெல்லாம் மறந்து  பலரு டைய  கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத  ஒரிடத்தில் அமர்ந்திருக் கின்ற காட்சியை நாம் காணுகின்றோம்.
இன்றைக்கு  தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஓர் இயக்கம் மாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் நான் கேட்கிறேன்,  நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது, நம்முடைய வீடுகளில்  எவ்வளவு பி.ஏ.க்கள்., எம்.ஏ.க்கள், எவ்வளவு பட்டதாரிகள் இருப்பார்களா?   இருக்க முடியாது.  இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கம் தான்.    இப்போது திராவிட  என்றாலே வெறுப்பவர்கள், ஒதுங்கிச் செல்ப வர்கள்,  நீ  திராவிடனா?  என்று கேட்டு  ஒருவிதமாக  நம்மை ஏறெடுத்துப் பார்ப்பவர்கள்  -  இன்றைக்கு  இந்தச் சமுதாயம் இந்த  அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறதென்றால், வளர்ந்தி ருக்கிறது என்றால், இதற்கெல்லாம் காரணம், நம்முடைய பகுத்தறிவு இயக்கம்  - அந்த இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் ராமசாமி என்பதை மறந்து விடக் கூடாது.   அத்தகைய  பெரியார் என்கின்ற  ஆல மரத்தின் விழுதுகளாக  பல விழுதுகள், தமிழகத்திலே இன் றைக்கு தோன்றி, முளைத்து,  துளிர் விட்டு,  அவைகளும் மரமாகியிருக் கின்ற காட்சியை காணுகிறோம்.   அப்படிப்பட்ட விழுதுகளில் ஒன் றாகத்தான்  தம்பி  ஞானசேகரனும்  விளங்குகின்றார்.   அவருடைய இல்லத்திலே நடைபெற்றிருக்கின்ற  இந்த மண விழா நிகழ்ச்சியில்  செல்வன் வாசுதேவன்,  செல்வி காஞ்சனமாலா  இருவரும்  பெரும் நல்வாழ்வு வாழ்ந்து  அரும் குழந்தைகளைப் பெற்று,  அந்தக் குழந்தைச் செல்வங்கள்  எதிர்காலத்தை நடத்திச் செல்கின்ற அளவிற்கு வீறு பெற்று விளங்க வேண்டும் என்ற என்னுடைய வாழ்த்து களை இந்த இல்லத்தாருக்கு  ஞான சேகரனுடைய  உற்றார் உறவினர் களுக்குக் கூறி வாழ்க மணமக்கள் என்று உரைத்து விடைபெறுகிறேன்.
-இவ்வாறு பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...