தென் கிழக்காசியப் பல்கலைக் கழகங்களில் தந்தை பெரியாரின் குரல்
பெரியார் உலக மயமாகிறார் - மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!
உலகத் தொழில் நுட்ப கல்வியாளர் மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந் திரன், பேராசிரியர் என்.ஆர். ஷெட்டி (தலைவர், அய்.எஸ்.டி.இ.). வேந்தர் கி. வீரமணி, பேராசிரியர் இரஞ்சித்சிங் மற்றும் பேராசிரியர் மணிவண்ணன்.
சிங்கப்பூர், நவ.28- தென்கிழக்கு ஆசியா வில் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் கொள்கைகள் எந்த அளவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் கனிந்து பூத்துக் குலுங்குகின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார்.
அதுபற்றிய நேரடி விளக்கக் கட்டுரை இதோ:
கடந்த அக்டோபர் 20,21,22 ஆகிய நாட்களில், சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற உலகத் தொழில் கல்வி முக்கியப் பொறுப்பாளர்கள் மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில், கலந்து கொண்ட பன்னாட்டுக் கல்வியாளர்கள், பேராசிரியர்களுடன் பழகும் வாய்ப்பும், தந்தை பெரியார், அவர்தம் கல்விக்கொடை முதலியன பற்றிய விளக்கம் அளிக்கும் வாய்ப்பும் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களுக்கும், எனக்கும் கிடைத்தது.
சுமார் 150 ஆண்டு கால வரலாறு கொண்ட பிரபல பீக்கிங் பல்கலைக் கழகத்தில்தான் உலக மாநாடு பன்னாட்டுப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாநாடு- இந்தியப் பிரதிநிதிகளுடன் ஏராளம் கலந்து கொண்ட மாநாடாக மிக அருமையான பொறியியல் கல்வி வளர்ச்சி, முன்னேற்ற வழி வகைகள்பற்றிய ஆய்வுப் பட்டறை போல் சிந்தனைக் களமாக நடந்தன.
பீக்கிங் பல்கலைக் கழக நூலகம்
மாநாடு நடந்த இடங்களில் ஒன்று பீக்கிங் பல்கலைக் கழக பிரம்மாண்ட நூலகம். அந்நூலகத்தில் பணியாற்றியவர் சீனத்துப் புரட்சியாளர் மாசேதுங் அவர்கள் ஆவார். அங்குள்ள பல நூல்களைப் படித்தே அவர் தனது சிந்தனையோடு சேர்த்து அணை போட்டு, மாபெரும் புரட்சிக்கும், சீன நாடு, செஞ்சீனமாக உருவெடுக்கவும் காரணமாக அமைந்தது என்ற கருத்தை அங்குள்ள கல்வி அறிஞர்கள் எங்களுக்கு உணர்த்தினர்.
அந்த நூலகத்திற்கு தந்தை பெரியார் சிந்தனைகளைக் கொண்ட ஆங்கில நூல்களை நாங்கள் நூலகரிடம் தந்து, நூலகத்திற்குள் பெரியாரை அனுப்பும் ஏற்பாட்டில் வெற்றி கண்ட மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்!
அன்றாடம் விடுதலை படிப்போர்
பிறகு ஷாங்காய் பெருநகரத்திற்குச் சென்றபோது, அங்கே கான்சலாக இருக்கும் நண்பர் பாலச்சந்திரன் பட்டுக்கோட்டை ராஜகோபால், மற்றும் தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் கணினித் துறைப்பணி, பெரும் நிருவாகத் துறையில் பணி, இத்தகையவர்கள் மிகக் குறுகிய காலத்தில் 24ஆம் தேதி இரவு ஒரு உணவு விடுதியில் ஷாங்காய் சங்கமம் என்ற பெயரில் கூடி எங்களுக்கு விருந்தளித்து சிறப்புச் செய்தனர். அய்யா அறிவு ஆசான் தந்தை பெரியார் பற்றியும், நமது கல்வி நிறுவனங்கள் குறிப்பாக பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகம் பற்றியும் மிகவும் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து விடுதலையை அன்றாடம் இணையத்தில் வாசிப் பவர்களாக மாறி விட்டோம் என்பதையும் அறிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும், புதுவையிலி ருந்தும் வந்திருந்த நண்பர்கள் பல்வேறு உயர்நிலைகளில், சொந்தத் தொழில் புரிவோர், பிரபல நிறுவனங்களில் பணியாற்றுவோர், உத்யோகங்களில் இருப்பவர்கள் என்ற பல் வகையில் தமிழர்கள் - திராவிடர்கள் உயர்ந்திருப்பது கண்டு, சென்ற நாங்கள் எல்லோரும் தந்தை பெரியாரின் தொண்டு எத்தகைய பலன்களை விழுமிய அளவில், வெற்றிக் கனிகளாகத் தந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தோம். பலன் அடைந்து வரும் பலருக்கேக்கூட அவர்கள் உயர்வுக்கு மூல காரணம் பெரியாரின் சமூக எழுச்சித் தொண்டே என்பதுகூட தெரியாமல் இருக்கலாம்; ஏன் நம் நாட்டில் வாழும் டாக்டர்கள் வழக்குரைஞர்கள், எஞ்சினீயர்களில், கணினிப் பணியில் கை நிறையச் சம்பளம் வாங்கி நாளைய எதிர்காலம் பற்றிக்கூட எண்ணாமல், டாம்பீக வாழ்வை வாழும் டம்பாச்சாரிகள் உட்பட பலரும் பெரியாரை - பெரியார் இயக்கத்தின் தொண்டைப் பற்றி மறந்தவர் களாக - அல்லது நினைக்காதவர்களாகவே இருக் கிறார்கள் என்னும் போது, வெளிநாடுகளில் பணியாற்றும் இவர்கள் சங்கமித்து சந்திக்கும்போது காட்டிய அன்பும், பாசமும் எங்களில் மறக்க முடியாததாக இருந்தது.
இன்னும் சில நாள்கள் தங்கி எங்களுடன் காலத்தைச் செலவழித்துப் போகலாமே என்றுதான் அந்த உடன்பிறவா சகோதரர்களும், சகோதரிகளும் சீன நாட்டின் பெய்ஜிங் நகரிலும், ஷாங்காய் பெருநகரிலும் அன்பால், பண்பால் எங்களை ஈர்த்தனர் அவர்கள்பால்!
தைவான் நாட்டில்....
அங்கே மட்டுமா? அடுத்த சிறிய தீவு நாடான தைவான் (பழைய ஃபர்மோஸி நாட்டின்) தலைநகருக்கு - தைப்பே (Taibai) லிங்குவா பல்கலைக் கழக ஒப்பந்தம் சம்பந்தமாகச் சென்றபோது, சென்ற அன்றே அங்கே பல பல்கலைக் கழகங்களில் டாக்டர் (Phd ஆராய்ச்சி தொழில் நுட்பத் துறையில்) படிக்கும் தமிழ்நாட்டு உடன் பிறப்புகள் எனக்கும், துணைவேந்தருக்கும் உற்சாக வரவேற்பளித் தனர். குறுகிய கால அறிவிப்பில் 10,12 பேர்கள் - இவர்கள் பல பல்கலைக் கழகங்களில் Fellowship, Scholarship வாங்கி படிக்கிறார்கள். ஒரு சிலர் திருமணமாகி அவர்களது வாழ்விணையர்களும் தங்கி ஆராய்ச்சி மற்றும் பணியில் உள்ளனர்.
கொட்டும் மழை - அதையும் மீறி கொட்டிய பாசமும் பரிவும் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்ட முடியாதவை. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளான உசிலம்பட்டி போன்ற ஊர்களிலிருந்து சென்று Post Doctrate Research செய்பவர்கள் இருக்கிறார்கள் - புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் போன்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள சிற்றூர்களில் எளிய குடும்பத்திலிருந்து ஏற்றமிகு படிப்பு ஆராய்ச்சிக்கு அங்கே வந்துள்ளார்கள் என்று எண்ணும்போது, அவர்களுக்கு அப்படி பாதை போட்டது அடிப்படையில் ஈரோட்டுப் பாதை தான் என்பது மூல காரணமாகும்!
தைவான் நாட்டில் லுங்க்வா பல்கலைக் கழகமும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் 10.11.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி லுங்க்வா பல்கலைக் கழக தலைவர் டாக்டர் டுசு சியாங் கோ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. நல். ராமச்சந்திரன், பேரா. பாவ்சிசென் உடன் உள்ளார்.
குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்படாவிட்டால்...
பார்ப்பனீயத்தின் (ஆச்சாரியாரின்) குலக் கல்வித் திட்டத்தை 1954இல் அய்யா போராடி ஒழித்திருக்கா விட்டால் இந்த விதைகள் இப்படி பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்து சுவை தரும் நிலைக்கு இந்த சொக்கத் தங்கங்கள் ஆளாகி இருக்குமா?
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தென் ஆசிய சமூகவியல் துறையின் இணைப் பேராசிரியர் யாங்முன் சீயோங்க் அவர்களிடம் பெரியாரின் நூல்களை (ஆங்கிலத்தில்) தமிழர் தலைவர் வழங்கினார்.(17.11.2011)
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர், கோம்பை - வேடசந்தூர், நாமக்கல், மதுரை, திருச்சி பேரையூர் (மதுரை), சென்னிமலை (ஈரோடு), - உதாரணத்திற்கு ஒரு சில; இங்கிருந்து சென்ற, Post - Doctrate ஆராய்ச்சி மாணவர்களை தைவான் நாட்டில் உள்ளவர்களைச் சந்தித்ததைத் தான் நாங்கள் பெரு வாய்ப்பாக, பெரியாரின் பெரு வெற்றியாக பார்க்கிறோம். லிங்குவா பல்கலைக் கழகம் தைவான் நாட்டு 160 பல்கலைகளில் இரண்டாம் முக்கியத்துவ வாய்ந்த பல்கலைக் கழகத்தில் - திருமதி ரோஸிலின் அவர்கள் முயற்சியால் இந்த ஒப்பந்தம் உருவான நிலையில் அங்குள்ள நூலகத்திற்கு ஆங்கில (பெரியார்) நூல்களை அளித்தோம்.
இப்போது பெரியார் அங்கே நுழைந்துள்ளார்கள்.
இப்போது பெரியார் அங்கே நுழைந்துள்ளார்கள்.
தொழில் நுட்பத்தில் மிகவும் வெற்றியடைந்த நாடு அது; அந்த பல்கலைக் கழகம் ஒரு பாலிடெக்னிக்காகத் துவங்கி பிறகு பல ஆண்டுகளானபின் தொழில் நுட்பப் பல்கலைக் கழகமாக மலர்ந்தது. டில்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள், பஞ்சாப் பேராசிரியர்கள் அங்கே விடுமுறை கால பணிக்கு (Sabbstical Holidays - Proffessors வந்துள்ளவர்களும் ஒப்பந்தம் (MOU) போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்நாட்டில் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளை இணைக்கும் முறையே (Affiliating Code) கிடையாது. அனுமதிக்கும்போதே பல்கலைக் கழகங்களாகவே துவங்க அந்நாட்டு அரசு அனுமதித்து விடுகிறது.
நூலகத்திற்குப் பெரியார் நூல்கள்
பல்வேறு தொழில் நிறுவனங்கள் அவரவர் தேவைக்கேற்ப படிப்புகளையும், படித்து முடித்தபின் பட்டதாரிகளையும் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். ஐனேரளவசல - ஐளேவவைரவடி டுமேயபந மூலம் அந்த தொழிற்சாலை, - தொழில் நிறுவனங்களுக்கு தனியே அடிக்கட்டுமானச் செலவுகளைச் செய்யாமல், தேவையானவற்றை பல்கலைக் கழகங்கள் பூர்த்தி செய்து இருவரும் பரஸ்பர பயனும் லாபமும் அடைகின்றனர். நிதிச் செலவு இருபுறங்களிலும் குறையும் அளவும் ஏற்படுகிறது.
அங்குள்ள நூலகத்திற்கு நமது அய்யா நூல்களைப் பற்றிய பெரிதும் விளக்கிக் கொடுத்தோம், மகிழ்ச்சி யுடன் பெற்றுக் கொண்டனர். டாக்டர் சன்-யாட்-சன் அறி வினால் பெரி தும் பயன் பெற்று வளர்ந்த, வளரும் நாடு அது!
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில்....
அடுத்து சிங்கப்பூர் நாட்டின் பிரபல பல்கலைக் கழகமான Industry - Institution Linkage தேசிய பல்கலைக் கழகத்தில், தெற்கு ஆசிய சமூக அறிவியல், கலைகள் துறையின் சார்பில் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் முக்கிய பேச்சாளராக கலந்துகொள்ளவிருந்த அழைப்பை ஏற்று 17.11.2011 அன்று சென்றபோது, தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம் - (திராவிடர் கழகத்தின்) துவக்கம் வளர்ச்சி, சமூகத்தின் அதன் தாக்கம் என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் கருத் தரங்க விளக்கமாகப் பேசும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
பெரியாரைப்பற்றிப் பேசா நாள்கள் என் பிறவா நாள்களே என்ற நிலையில் உள்ள எனக்கு அது கரும்பு தின்றது போன்று இருந்தது. 30 நிமிட உரை ஒரு மணிநேர வினா - விடை பகுதி- மிகவும் சிறப்பாக அமைந்தது. பலன் பெற்றோம் என்று ஆய்வு மாணவர்கள் கூறியது மகிழ்ச் சியைத் தந்தது!
சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் மூத்த அதிகாரி புஷ்பலதா அவர்களிடம் பெரியார் களஞ்சியம் - குடிஅரசு தொகுதிகளை தமிழர் தலைவர் வழங்கினர்.
அந்தத் துறைத் தலைவர் திரு. யாங்முன்சோ அவர்களிடம் ஏற்பாடு செய்வதற்குக் காரணமான பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன் அவர்களிடம் அய்யாவின் அரும் சிந்தனைக் கருவூலங்களான பல நூல்களை ஆங்கிலத்தில் உள்ளவைகளை அளித்து மகிழ்ந்தோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.
13ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற பெரியார் வாழ்வியல் நிகழ்ச்சியில், பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ. கலைச்செல்வம் அவர்களின் முன்னிலையில், சிங்கப்பூர் பிரபல தேசிய நூலகத் திற்கென அண்மையில் வெளியிடப்பட்ட குடிஅரசு (பெரியார்) களஞ்சியங்களின் தொகுப்பை அளித்தபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த நூலக முக்கிய அதிகாரி யான திருமதி புஷ்பலதா அவர்கள் பெற்றுக் கொண் டார்கள். எனவே சிங்கப்பூரில் மட்டுமல்ல, தென் கிழக்காசிய நாடுகளான சீனா, தைவான் போன்ற நாடுகளில் பெரியார் குரல் கேட்கத் துவங்கி விட்டது.
உலகமயமாகிறார் பெரியார்
ஜப்பானிய பல்கலைக் கழகமான கியோட்டோ அருகில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள் (ஒருவர் மோரியு மற்றொரு பேராசிரியர் மிட்சுவாயாடேக் ஆகிய இருவரும்) பெரியார் திடலுக்கே வந்து சந்தித்து இயக்கம், பெரியார் பற்றி உரையாடி, நூல்களைப் பெற்றுத் திரும்பினர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்ற ஒரு மாணவி - பி.எச்டி. டாக்டர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டுள் ளதாகத் தெரிவித்து, சென்னை வந்து ஆதாரங்களைத் திரட்டிட உதவி கேட்டுள்ளார்.
ஸ்வீடன் நாட்டுப் பல்கலைக் கழக சட்டம் பயிலும் ஆராய்ச்சி மாணவி, இடஒதுக்கீடு சம்பந்தமாக அந்நாட்டு சட்டங்களுடன் தமிழ்நாட்டில் சமூகநீதியின் வெற்றிக்கனியான 69 சதவிகித சட்டத்தைப்பற்றி ஆய்வு செய்து அதற்கென தனி சிறப்புத் தகுதி பெற என்னிடத்தில் பெரியார் திடலில் பல மணி நேரம் செவ்வி (பேட்டி) எடுத்து பதிவு செய்து கொண்டு, சென்றுள்ளார் - இப்படி அய்ரோப்பாவின் பல பல்கலைக் கழகங்களில் பெரியார் பயணித்துக் கொண்டிருக்கிறார்!
பெரியார் உலக மயமாகிறார் - ஆகிக் கொண்டே இருக்கிறார் - மண்டைச் சுரப்பை உலகு தொழு கிறது என்பது பேருண்மைதான்; பெரியார் தொண்டர்களாகிய எம்மைப் போன்றவர்களுக்குப் பேரு வகையை அளிக்கிறது!
பெரியார் தம் இலட்சியங்கள் - எப்படி நாணேற்றிய வில்லி லிருந்து விடுபட்ட கணை நேரே இலக்கை நோக்கித்தான் செல்லுமோ, அது போல அவை போய்ச் சேர வேண்டிய இடத்திற்கே போய்ச் சேரும் என்பது உறுதி - வெற்றி நிச்சயம்!- அறிஞர் அண்ணா
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment