சிங்கப்பூர், நவ. 29- சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 12, 13 ஆகிய இரு தினங்களில் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் இயங்கும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்ற கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுக்கு வரும் டிசம்பர் 2 அன்று அகவை 79. இதனை கொண்டாடும் வகையில் சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக திராவிடர் கழக தோழர்கள் ஏற்பாட்டின்படி ஒரு (The Banana Leaf Apolo) உணவு விடுதியில் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியும், விடுதலை நாளேட்டின் ஆசிரியராக தொடர்ந்து 50 ஆண்டு காலம் இருந்து சேவை செய்ததைப் பாராட்டியும் விழா நடைபெற்றது. 27.11.2011 ஞாயிறு இரவு 7 மணியளவில் விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பெரப்பேரி மு.சங்கர் வரவேற்புரையாற்றினார். அத்தி வெட்டி க.ஜோதி தலைமையேற்று நடத்தினார். ஒரத்தநாடு சு.மணிராசு, க.அறிவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து செந்துறை கா.மதியழகன் விளக்கிப் பேசினார்.
நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்கள் 12.11.2011 அன்று நடைபெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியில் அமெரிக்கா பெரியார் பன்னாட்ட மைப்பின் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றதை தமிழக திராவிடர் கழகத் தோழர்கள் சார்பில் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் கேக் வெட்டினார்
தமிழர் தலைவர் வணக்கத்திற்குரிய கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து 50 ஆண்டு காலம் விடுதலை ஆசிரியராக இருந்து உலக சாதனை நிகழ்த்தியதை நெகிழ்ந்து தோழர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. எதிர்பாராத வகையில் தலைவரின் 79ஆவது பிறந்த நாள் கேக்கை, தோழர்கள் தலைவர் முன்பு கொண்டு வந்து வைத்து வெட்டச் சொல்லி விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று தலைவர் கேக் வெட்டினார். வெட்டிய கேக்கை வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் தன் கைப்பட தலைவர் கி.வீரமணி அவர்கள் ஊட்டி விட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்!
தோழர்களின் அழைப்பை ஏற்று வருகைதந்த அம்மா திருமதி மோகனா வீரமணி அவர்களையும், தலைவரையும் இணைத்து பொன்னாடை போர்த்தப் பட்டது, தோழர்களுக்கு நெகிழ்ச்சி யாக இருந்தது மற்றும் அத்திவெட்டி ஆர்.கலாநிதி தலைவருக்கு சிறப்பு செய்தார்.
மற்றும் மலையரசி, செல்வி குந்தவி, பெரியார் சமூக சேவை மன்ற பொரு ளாளர் மாறன், திருமதி கவிதா மாறன், பெரியார் பிஞ்சு மா.இனிய நிலா, ஆர்.சரவணன், சுசித்திரா சரவணன், கழக தோழர்கள் வேலூர் வ.சுரேஷ், ஒரத்தநாடு மா.தென்னவன், கோ.வீரை யன், மு.குமார், க.சுப்ரமணியன், இடைய குறிச்சி ஜெ.செல்வமணி, நீ.மணி கண்டன், ப.கோபாலகிருஷ்ணன், சு.அருண்குமார், பி.செந்தில் குமார், பி.கலைவாணன், து.சுரேஷ் முதலானோர் பங்கேற்றனர்.
உலகத்தில் எவருக்கும் கிடைக்கா வாய்ப்பு
செந்துறை மதியழகன் பேசும் போது, சிங்கப்பூரில் 2004இல் பெரியார் சமூக சேவை மன்றம் தொடங்கப்பட்டது. தமிழர் தலைவர் அய்யா அவர்கள் தொடங்கி வைத் தார்கள். இன்றைக்கு மன்றம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. நம்மு டைய தலைவரை அழைத்து இரண்டு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற் றுள்ளது. அதுபோல் நமது குடும்பத் தலைவர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டு காலம் இருந்து சமூக தொண்டை ஆற்றியிருக்கிறார் கள். உலகத்தில் வேறு எவரும் இப்படி இருந்ததாக தெரியவில்லை அதுவும் எதிர்ப்புகளை மட்டுமே சந்தித்த விடு தலைக்கு, அய்யா அவர்கள் ஆசிரிய ராக இருந்து பணி தொடர்வது சாத னையிலும் சாதனை. அப்படிப்பட்ட தலைவரின் சாதனையாளரின் பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று அவருக்கு 79ஆம் ஆண்டு பிறந்த நாள். லட்சிய வாதிக்கு இன்பமே கிடைப்பதில்லை.
எங்களுக்கு மகிழ்ச்சியான நாள்
இன்பமாக இருப்பவர்களுக்கு லட்சியமே வருவதில்லை என்றார்கள். ஆனால் எங்களைப் போன்ற கறுப்பு சட்டைகாரர்களுக்கு தந்தை பெரியா ரின் பிறந்த நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் தான் இன்பமான நாள் என்று குறிப் பிட்டார்.
கலைச்செல்வம் தமதுரையில், 79 ஆண்டுகால வாழ்வில் 9 வயதில் பொதுத் தொண்டுக்கு வந்து எழுபது ஆண்டுகள் அய்யாவின் பயணம் தொடர்வது கண்டு வியக்கிறேன். இவ்வளவு எளிமையும், சுறுசுறுப்பும் உள்ள தலைவர் அவர்களை எண்ணி வியக்கிறேன். பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் என்பது அய்யா எமக்களித்த வாய்ப்பு என்றென்றும் அய்யாவின் பகுத்தறிவுப் பணிக்கு துணை நிற்போம் என்றும் நெகிழ்ந்து பேசினார்.
தமிழர் தலைவர் ஏற்புரை
நிறைவாக கழகத் தலைவர் கருத் துரை வழங்கி பேசினார்.
அன்போடும், கொள்கைப் பாசத் தோடும் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச் சியை உங்களுடைய வேலைகளுக் கிடையே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். நாங்களெல்லாம் எதிர்பார்க்காத வகையிலே பிறந்த நாள் கேக் வைத்து ஜோதி, சங்கர், மதியழகன் போன்றவர் களெல்லாம் இணைந்து ஏற்பாடு செய்து அன்புடன் நடத்துகிறீர்கள். நான் இவற்றையெல்லாம் தவிர்த்து விடுவது வழக்கம். இன்றைக்கு உங்களின் அன்பு வலையில் மாட்டிக் கொண் டேன் என்றாலும் உங்களின் அன்புக்கு தலைவணங்கி மகிழ்கின்ற இந்த நேரத்திலே ஒன்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சங்கர் அவர் களும், மதியழகன் அவர்களும், மிக நீண்ட நேரம் அய்யா அவர்களைப் பற்றி பல்வேறு செய்திகளை சொன்னார்கள்.
உண்மையைத்தான் பேசுவார்கள்
எப்போதும் பெரியார் அவர்களின் தொண்டர்கள் உண்மையைத்தான் பேசுவார்கள் என்ற முறையிலே நமக்கு அமைந்த கொள்கைளை உண்மை யின் அடிப்படையிலே அமைந்த கொள்கை, எப்போதும் யாரும் பெரியாரோடு என்னை ஒப்பிட்டு பேசுவதை விரும்பாதவன். பெரியார் ஒரே ஒரு பெரியார்தான் இருக்க முடியும். பெரியார் அவர்களோடு மற்றவர்களை ஒப்பிடுகிறோம் என் னும்போது அவர்கள் உங்களிலே சரித்திர புருஷர்கள் என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி ஒப்பிட்டுச் சொல்வது. அதைக்கூட தனித்தனியே ஆய்வு செய்து பார்ப்போமேயானால் பெரியார் பெரியாரில் பெரியாராகத்தான் அய்யா இருப்பார். பெரியாருடைய நிரந்தர மாணவன் நான். பெரியாருடைய தொண்டன். தொண்டருக்கும் தொண்டன் நான். ஆகவே எனக்கு உற்றார் உறவினர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் ரத்த உறவைவிட கொள் கைப் பாசம்தான் நம்முடைய உறவுகள்!
சந்தாக்களை கொடுத்திருக்கலாம்
உங்களையெல்லாம் சந்தித்து கேக் ஊட்டியதிலே மகிழ்ச்சி. இன்றைக்கு ஒரு நாள்தான் உங்களுக்கு ஓய்வு. தினசரி வேலை, வேலை என உழைக் கின்ற நீங்கள் எனக்காக இதையெல்லாம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியென்றா லும் இந்த சால்வைகளை தவிர்த்திருக் கலாம். அதற்கு பதிலாக விடுதலை சந்தாக்களை கொடுத்திருக்கலாம். அதுவே எனக்கு மகிழ்ச்சி, காரணம் பலபேருக்கு கொள்கை போய்ச் சேரணும். தோழர்கள் நீங்கள் தினம் விடுதலை படிக்க வேண்டும். எத்தனை பேருக்கு இணையத்தில் விடுதலையை படிக்கின்ற வாய்ப்பு இருக்கிறது என்று தெரியாது. ஆனாலும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு படிக்க வேண் டும். கணினி பயிற்சி பெற வேண்டும் - ஓய்வு நேரத்தில்.
பெரியாரை நான் சுவாசிக்கிறேன்
ஒரு சிறப்பான செய்தி என்னவென் றால் உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரு சிறப்பான அடிப்படை அமைந் திருக்கிறது. அய்யாவின் கொள்கைக்கு. இங்கு தோழர்கள் உலக சாதனை என்றெல்லாம் சொன்னார்கள். நான் அது மாதிரியெல்லாம் நினைக்க வில்லை. காரணம், இயல்பாக நாம் காற்றை சுவாசிக்கிறோம், அது போல நான் நினைக்கிறேன் பெரியாரை நான் சுவாசிக்கிறேன். அதனால்தான் எனக்கு இதெல்லாம் சாதனையாக தெரியவில்லை, கடமையாகவே காணப் படுகிறது. ஏன் என்றால் என்னுடைய வாழ்நாளில் இந்த பணியை தவிர வேறு எந்தப் பணியும் இல்லை. அய்யா அவர்கள் சொல்வார்கள். இவற்றை சுய நலம் என்று சொல் வார், எப்படி சுய நலம், அப்படின்னா ஒருவருக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதை செய்வதுதான் சிறந்தது. அது தான் ஒருவரது சுயநலம் என்பார் கள்! எனவே, எனக்கு இது சுயநலம். இதற்காக என்னை பாராட்டி கூடு தலாக என்னிடம் எதை எதிர்பார்க் கிறீர்களோ, அதை இப்போது சிறப் போடு இந்த மூச்சு அடங்குகின்ற வரையிலே செய்வேன்.
இங்கே சிங்கப்பூரிலே முன்பு ஒரு உணவு விடுதியிலே விருந்தோம்பல் நிகழ்ச்சி வைத்து கூடுவார்கள் பேசு வோம். நீண்ட நாள் ஒரு அமைப்பு ரீதியாக இதற்கென இருந்தோம். பெரிய வாய்ப்பு நமக்கு அய்யா சீனிவாசன் அவர்களுக்கு மகனாகவும் மருமகனாகவும் இருக்கக் கூடிய வீ.கலைச்செல்வம் அவர்கள் 2004-லே பெரியார் சமூக சேவை அமைப்பிற்கு தலைவர் என்ற உடனே அதனை ஏற்று சிறப்பாக செயல்படுகிறார்கள்.
அதுபோல பெரியார் பெருந் தொண்டர்கள் நாகரத்தினம் ரொம்ப தீவிரமாக இருந்தவர். அவர்களுடைய மகன் மாறன் அவர்கள். அதுபோல மூர்த்தி அவர்களுடைய மகன் மதி யழகன் போன்றோர் நடுத்தர வயது டையவர்கள் இளைஞர் கொள்கை வாரிசுகளாக, மனிதநேயம் மிக்கவர் களாக செயல்படுகிறவர்கள். அதனால் நல்ல ஒரு பலமான அஸ்திவாரம் சிங்கப்பூரிலே ஏற்பட்டுள்ளது.
தேசிய பல்கலை.யில் பெரியார் குரல்
சென்ற இரண்டு ஆண்டுக்கு முன்னே நடை பெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியை விட, இந்த ஆண்டு பல மடங்கு வளர்ச்சி, இரண்டு நாள்களும் அடர்த்தியான சிறப்பான நிகழ்ச்சி நடத்தினார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி என எல்லா இடத்திலும் நிகழ்ச்சியின் தாக்கம் பெரிதாகி இருந்தது. இந்த தாக்கம் எது வரைக்கும் போனது என்றால் பெரியார் குரல் தேசிய பல்கலைக்கழ கத்தில் (National University of Singapore) கருத்தரங்கில் கேட்கிற வாய்ப்பு வந்திருக்கிறது அதுதான் மிக முக்கியம்.
ஆங்கில உரை நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் நல்ல அளவிற்கு ஆராய்ச்சியாளர்களாக இருக்கக் கூடியவர்கள். பெரியார் அவர்களைப் பற்றி எண்ணி பல கேள்விகள் கேட்டார்கள். அய்யா பெரியார் வாழ்ந்த காலத்தைவிட உயிரோடு இருந்த காலத்தை விட கொள்கையால் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். தய்வான் பல்கலைக்கழகத்திலே ஒப்பந்தத்திற்காக சென்றபோது அங்கு நூலகத்திற்கு புத்தகங்களை கொடுத்து வந்தோம். இந்த ஒரு மாதத்திலே தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல உயரிய பல்கலைக்கழக நூலகங்களிலேயே பெரியார் உள்ளே நுழைந்துள்ளார். ஆகவே கொள்கைகள் நாளும் வளர்கின்றன.
பெரியார் தத்துவம் அழியாது
பெரியாருடைய தத்துவம் என்பதை யாராலும் அழிக்க முடியாது. அய்யா காலத்திலும் இயக்கத் திற்கு எதிர் நீச்சல்தான். நம்முடைய காலத்திலும் எதிர்நீச்சல்தான். இந்த கொள்கையால் எவ்வளவு பெரிய மனிதரும் பயன்படமுடியும். அய்யாவினு டைய கொள்கையால் யாரும் தாழ்ந்து போவதற்கு இடமில்லை.
உங்களுக்கு அன்பான வேண்டுகோள் உழைத்து சம்பாதிப்பதற்காக இந்த நாட்டுக்கு வந்திருக் கிறீர்கள். எவ்வளவோ கடுமையாக உழைக்கக்கூடிய இளைஞர்கள் நீங்கள் எல்லாம். நல்ல உடல் நலத்தோடு இருக்கணும். அதே நேரத்திலே கெட்ட பழக்கங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ போய் விடாதீர்கள். நம்முடைய தோழர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். கூட்டங்களிலே கருப்பு சட்டை களைப் பார்த்து, விருந்தினராக வந்த சுப.வீரபாண்டியன் அவர்களே மகிழ்ச்சி அடைந்தார்.
உங்களை நான் அன்போடு கேட்கிறேன் எனக்கு பாராட்டு என்பதெல்லாம் மகிழ்ச்சி.
நீங்கள் உங்களுடைய குடும்பத்தை, தாய், தந்தையரை மதித்து வரவுக்கு உட்பட்டு செலவு செய்து ரொம்ப சிக்கனமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஆடம்பரம் இல்லாமல் உரியவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து ஊர் திரும்பி அங்கே கவுரவமாக வாழ்வ தற்கும், தன்மானத்தோடு வாழ்வதற்கும் பொரு ளீட்டி அதனை பாதுகாக்க வேண்டும்.
வாழ்க்கையை கடன் இல்லாத வாழ்க்கையாக வாழ வேண்டும். நீங்கள் சிறப்பாக இருந்தாலே அதைவிட எங்களுக்கு மகிழ்ச்சி வேறு இல்லை. எனவே, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வாழவேண்டும் என எடுத்துக்கூறி இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய உங்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நிறைவில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விருந்தோம்பல் நடைபெற்றது. முடிவில் செந்துறை நா.மணிவண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment