மோடி அணியும் மூடி! - கவிஞர் கலி.பூங்குன்றன்
2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி - 56 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வன்முறை உலகில் அதற்கு முன் நடத்தப்பட்ட அதி பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெறத் தக்கதே.
கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது - தொடக்கத்தில் விபத்து என்றே கருதப்பட்டது. ஊடகங்களும் அவ்வாறே செய்தியை வெளியிட்டன.
விபத்து நடந்த இடத்தையும், பலியானவர்களையும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி நேரில் சென்று பார்த்த பிறகே பிரச்சினை திசை திருப்பப்பட்டது.
பலியானவர்களை அவரவர் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வது என்ற முடிவும் மாற்றப்பட்டு அனைத்துச் சடலங்களையும் ஊர்வலமாகக் கொண்டு செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அன்று காவல்துறை அதிகாரிகளைக்கூட்டி கலவரத்துக்கான கத்தி தீட்டப்பட்டது.
நாளை நடக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது. - தலையிடக் கூடாது என ஆணையிடுகிறார் முதல் அமைச்சர்.
இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உளவுத்துறை அதிகாரி ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
மோடியின் இந்துத்துவா வெறியாளர்களால் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. சி-ஹ்சான் ஜாப்ரி மனைவி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் பிரமாணப்பத்திரமாகவே (AFFIDAVIT) இதனைத் தாக்கல் செய்தார் என்பது முக்கியமாகும்.
எந்த அளவுக்கு முதல் அமைச்சர் மோடி சென்றுள்ளார்? தெகல்கா புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டி கண்டு டேப்களை வெளியிட்டுள்ளதே!
பல்கலைக்கழக தலைமைத் தணிக்கையாளர் திமந்பட் இதோ பேசுகிறார்.
கோத்ரா சம்பவத்துக்குப் பிறகுதான் இந்த எதிர்வினைகள். பிறகு த-குந்த சூழல் சங்பரிவாரால் உருவாக்கப்பட்டது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பஜ்ரங்தள், துர்காவாசினி ஆகிய அமைப்புகளின் தலைவர்களால்; அதற்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் முழு ஆதரவு கிடைத்தது. இந்துக்கள் இவ்வாறாகக் கொளுத்தப்படுவதை விரும்புவதாக யாராவது தைரியம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்லட்டும். அப்படி இந்துக்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் இருந்ததால்தான் முழு ரயிலையும் எரிக்க முயன்றார்கள். இதற்குப் பின்னும் நாம் எதுவும் செய்யவில்லை யென்றால், இதற்குப் பதிலடி கொடுக்கவில்லை யென்றால் மேலும் ஒரு ரயில் எரிக்கப்படும். இந்த யோசனைதான் முதல்வர் மோடியிடமிருந்து வந்தது. நான் அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டேன் என்று பல்கலைக்கழகத்தின் தலைமைத் தணிக்கையாளர் சொல்கிறார் என்றால் - மோடி எப்படிப்பட்ட மூர்க்கர்- முரடர் - மோசமான மதவெறியர்.
மோடி கூட்டிய கூட்டத்தில் நடந்ததை நன்கு அறிந்தவர் அமைச்சரவை சகாவான ஹரேன் பாண்டியா; மக்கள் விசாரணை ஆணையத்திடமும் நடந்தவை பற்றி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இவரை விட்டுவைத்தால் ஆபத்து என்று நினைக்கிறார்கள்; விளைவு, அந்த அமைச்சர் படுகொலை செய்யப்படுகிறார் - நடைப் பயணத்தில் இருந்தபோது.
தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தார். ஆணையம் குறட்டைவிட்டதா, கோட்டைவிட்டதா என்பது யாருக்கோ வெளிச்சம்.
முதல் அமைச்சர் மோடி பற்றி அவரது கட்சியைச் சேர்ந்தவர்களிடமே (பி.ஜே.பி.) பேட்டி வாங்கி வெளியிட்டது தெகல்கா.
விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த தலைவர் - அவர் பெயர் ராஜேந்திர வியாஸ் - என்ன சொல்கிறார்? நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறாரே.
நீங்கள் ஜெய்ராம் என்று சொன்னால் காவல்துறையினர் புரிந்து கொள்வார்கள் என்று சங்பரிவார்க்குச் கூறப்பட்டதாக தவால் ஜெயந்த் பட்டேல் (வி.எச்.பி.) கூறியுள்ளார்.
காவல்துறையினரே எப்படியும் 70 _ 80 பேர்களைக் கொன்றிருப்பார்கள் என்கிறார் சுரேஷ் ரிச்சர்ட்.
இன்று பஜ்ரங்தளைச் சேர்ந்த (குரங்குப் பட்டாளம் என்று பொருள்) ஹரேஷ் பட் என்ன கூறுகிறார்? மூன்று நாள்களில் அனைத்தையும் முடித்து விடுங்கள். அதற்குமேல் கால அவகாசம் கேட்காதீர்கள் என்று முதல் அமைச்சர் மோடி உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.
இன்னொரு பஜ்ரங்தள் சொல்லியிருப்பது - அவர் பெயர் பாபுபஜ்ரங்கி _ பேசுகிறார்: கோத்ரா கலவரங்கள் நடந்தபோது எல்லாவற்றையும் கச்சிதமாக முதல் அமைச்சர் மோடி செய்து முடித்தார். முதல்வர் மோடியின் ஆசிர்வாதத்தால்தான் இவ்வளவையும் செய்து முடிக்க முடிந்தது என்கிறார்.
குஜராத் கலவரம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?
மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குஜராத் கலவர வீடியோ காட்சி என்னிடம் காட்டப்பட்டது. அந்தக் காட்சிதான் என்னைப் பயங்கரவாதியாக ஆக்கியது என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றால் குஜராத் குரூரம்தான் எத்தகையது! சிந்திக்க வேண்டிய ஒன்றே.
குஜராத் கலவரத்தில் மிகவும் கொடுமையானது பேக்கரி அடுப்பில் 14 பேர்களை விறகுக் கட்டைகளைப் போல் கட்டி துடிக்கத் துடிக்கக் கொளுத்திக் குதூகலித்ததாகும்.
வதோதரா என்ற நகரம் பெஸ்ட் பேக்கரி என்னும் நிலையம். சங்பரிவார் கும்பல் கொலைவெறி ஆட்டம் போட்டு உள்ளே புகுந்து _ பேக்கரியின் உரிமையாளர் ஹபிபுல்லா ஷேக் உட்பட 14 பேர் பேக்கரி அடுப்பில் தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் எப்படியோ தப்பிப் பிழைத்தார். காவல் நிலையம் சென்று 21 பேர் மீது புகார் கொடுத்தார்.
பிரச்சினை பெரிதான நிலையில் பெயரளவிற்கு வழக்கைப் பதிவு செய்தனர்; நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிட உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
முதலில் 21 பேர்களையும் விடுதலை செய்த நீதிபதி எச்.யூ.மகீதா என்பவருக்குச் சன்மானம் கொடுக்க வேண்டாமா? குஜராத் மாநில மின் வாரியத்தில் ஆலோசகர் பதவி அளித்து உபசரிக்கப்பட்டது. மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், கார், பங்களா, தொலைப்பேசி வசதிகள் - உதவியாளர்கள் இத்யாதி... இத்யாதி...
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி ராஜு, (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.) அரிஜித் பசாயத் குஜராத் மாநில மோடியை நீரோ மன்னன் என்று எழுதினார்கள்.
எந்தப் பார்ப்பன ஏடும், இதற்காக மோடி பதவி விலக வேண்டும் என்று நான்கு எழுத்துகள் எழுதவில்லை.
அத்தோடு நீதிபதிகள் விட்டார்கள் இல்லை. வரைந்து தள்ளியிருக்கிறார்கள் பத்தி பத்தியாக.
சட்டத்தின் பார்வையில் இது விடுதலையே அல்ல; தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவையல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல.
மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது அவர் மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப்படுத்தும் படியான அளவிற்குச் சிலர் போய்விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
எந்தவிதப் பாதுகாப்புமற்ற தப்பான இடத்தில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டது - இந்தச் சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.
மனிதநேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான் மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய் விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓர வஞ்சகமும், ஒருதலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பாங்கே இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு!
நீதி வழங்கும் நெறிமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. தான் விரும்பியபடி செய்யும் வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் புலனாய்வோ கடன்காரத்தனமாக ஏனோ தானோ எனச் செய்யப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற முறையிலே செயல்படவில்லை. உண்மையைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் புலனாய்வு செய்யப்படவில்லை என்றது உச்ச நீதிமன்றம்.
_இதற்குமேல் ஒரு தீர்ப்பில் சொல்லப்பட என்ன இருக்கிறது? இதைப்பற்றி எந்தப் பத்திரிகை மூச்சுவிட்டது?
பத்திரிகா தர்மம் பேசும் பார்ப்பனப் பத்திரிகைகளின் பசப்புகளைத் தெரிந்துகொள்ள இந்த இடம் போதுமானதே.
குஜராத் மாநிலத்தில் வழக்கு நடத்தப்படக் கூடாது. மும்பையில் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு நிற்காமல் மோடி அரசு நியமித்த அரசு வழக்குரைஞர்களையும் அகற்றிவிட்டு வேறு இரு வழக்குரைஞர்களை (பி.ஆர்.வகீல், மஞ்சுளா) நியமித்தது.
மொத்தம் 4,252 வழக்குகளில் குஜராத் அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டவை 2,000க்கு மேலாம். மறுபடியும் அனைத்து வழக்குகளின் மீதும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று மோடியின் முரட்டுத் தலையில் குட்டு வைத்தது உச்ச நீதிமன்றம்.
குஜராத் மாநில எல்லைக்குள் சிக்கிய உயர் நீதிமன்றம்வரை எப்படி தன் கைக்குள் போட்டு மடக்கி வைத்திருந்தது மோடியின் குஜராத் அரசு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் பளிச் பளிச்சென்று தெரிகிறதே.
நடோரா பாட்டியா என்னும் இடத்தில் காவிகள் கூலிகள் 58 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். காவல் நிலையம் வழக்கை எப்படிப் பதிவு செய்தது தெரியுமா?
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக்கின்றது என்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன?
முதல் தகவல் அறிக்கையிலேயே தீர்ப்பும் எழுதப்பட்டுவிட்டது என்றுதானே பொருள்.
மோடி அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் மாயாபென் கோட் நானி என்னும் பெயர் கொண்ட அமைச்சர். நரோடா பாட்டியா மாவட்டம் _ நரோடா கிராமத்தில் 106 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்தவர் இந்தப் பெண் அமைச்சர். தலைமறைவானவர் பின் சரணடைந்து சிறைவாசம் கண்டவர்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நரவேட்டையில் 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1,70,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 203 தர்காக்கள், 205 மசூதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. 3 கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களும் தப்பவில்லை. 4,000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு. காவல்துறையினர் 10 ஆயிரம் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.
காவல்துறையினரே தங்கள் வாகனங்களிலிருந்து பெட்ரோலை எடுத்துக் கொடுத்துக் கொளுத்தச் செய்தனர் என்பது எத்தகு கொடுமை!
3,800 கோடி ரூபாய் இழப்பு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 12 லட்சம் பேர் களத்தில் இறங்கி வன்முறை வேட்டை நாய்களாக ஆடித் தீர்த்தனர். ஒரு கணம் மனக்கண்முன் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கட்டும் - மனச்சான்று உள்ளவர்கள்.
61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளைத் துறந்து ஓடிவிட்டனர். 70 ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் அடைக்கலம் தேடிய அவலம்.
ஹிட்லரின் மறுபதிப்பான மோடி அச்சூழலில் - கவுரவ யாத்திரை ஒன்று மேற்கொள்கிறார். (இதில் கவுரவம் என்ன வேண்டிக் கிடக்கிறது!) அப்பொழுது அவர் திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?
நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக்குப் பாடம் படிக்கக் கொடுக்க வேண்டும் - என்று ஒரு முதல் அமைச்சர் பேசுகிறார் என்றால், சீ... இப்படியும் சில மனிதர்களா என்று துக்கப்படத்தான் வேண்டியுள்ளது. பாபர் மசூதியை சங்பரிவார்க் கும்பல் இடித்தபோதுகூட இந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா? பி.ஜே.பி., அலிகள் கட்சியல்ல; ஆண்கள் கட்சி என்று சொன்ன சண்டியர் இவர்.
21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலைகள் நடத்தப்பட்ட குஜராத் கலவர வழக்கில் முதல் அமைச்சர் மோடி வசமாக மாட்டுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உண்டு.
ஆனால் என்ன நடந்தது? வழக்குக்குத் தேவைப்பட்ட ஆதாரங்கள் அத்தனையும் 2007இல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன என்று மோடி அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஆணையத்தில் அரசு சார்பாக ஆஜரான குஜராத் அரசு வழக்குரைஞர் எஸ்.பி.வகீல் தெரிவித்துள்ளார்.
எந்த எல்லைக்கும் சென்று தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் கும்பலின் தலைவனாக மோடி இருப்பது இதன் மூலம் அம்பலமாகவில்லையா?
பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் மோடியின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாற்று மோடி ஓர் அசிங்கமான மனிதர் என்பதற்கான ஆதாரமாகும்.
குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமான குற்றச்சாற்றை மோடி மீது சுமத்தியுள்ளார். காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மூலம் பணம் தருவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தத் தகவலை அந்தக் காவல் துறை அதிகாரி ஸ்ரீகுமார், நானாவதி ஆணையத்திடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார் என்றால் மோடியின் மோசமான குணத்தைத் தெரிந்து கொள்ளலாம். குஜராத்தில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் வழக்குரைஞர் மேமோன் கூறினார்:- குஜராத்தில், பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல;பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் சட்டம் என்றார்.
இன்னொன்றும் முக்கியமானது. பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்று தனிச் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். இதற்கு குஜராத் உள்துறை அமைச்சரிடமிருந்து பதில் இல்லை என்று கூறினார் அந்த மனித உரிமைக்கான வழக்குரைஞர்.
மோடி ஆட்சியில் பொடா சட்டத்தின்படி 287 பேர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர்.
எப்படி இருக்கிறது? படுகொலை செய்யப்பட்ட சமூகத்தவர் மீது சட்டம் பாய்கிறது; படுகொலை செய்தவர்களுக்குச் சட்டம் சரணாகதி. ஆம், இதுதான் மோடி என்னும் மூவாயிரம் மடங்கு ஹிட்லரின் புத்தியும் - சட்டத்தை மிதிக்கும் மிருகத்தனமும்.
மோடியின் சிந்தனை எத்தகையது. கர்மயோகி என்னும் நூலை 2007ஆம் ஆண்டில் மோடி எழுதினார். அதில் என்ன கூறுகிறார்? சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்களின் வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுள்களின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகும் எனவும் கருதலாம். (THE TIMES OF INDIA 5-5-2010)
விபரீத துண்டறிக்கைகள் - சுவரொட்டிகள்! ஒரு பக்கம் மோடியின் தலைமையில் அரச பயங்கரவாதம் என்ற தன்மையில் காவல்துறையின் தக்க பாதுகாப்போடு முஸ்லிம்கள் வன்முறையாளர்களால் - கூலிகளால் படுகொலை நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம் சங்பரிவார்க் கும்பலால் துண்டு வெளியீடுகளும் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டு இந்த வெறித்தனம் கொம்பு சீவி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவுட் லுக் ஏட்டில் வந்துள்ள நடுத்தர இந்துக்கள் என்ற பெயரில் வெளியான துண்டறிக்கை இதோ:- அன்பார்ந்த நண்பர்களே, உங்கள் உயிருக்கு ஆபத்து. நீங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். கிருஷ்ணன், அர்ச்சுனனைப் பார்த்து அறிவுறுத்தினார். இந்துக்களுக்கு எதிரானவர்களை ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயங்காதே என்று. தீவிரவாதிகள் உங்களை எங்கு வேண்டுமானாலும், உங்கள் படுக்கை அறையிலோ, வரவேற்பறையிலோ கொல்லுவார்கள். போலீசோ, இராணுவமோ உங்களைக் காப்பாற்றாது. இந்து - முஸ்லிம் ஒற்றுமை என்று பேசுபவர்கள் கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றுபவர்கள். வந்தே மாதரம், பாரத் மாதாக்கீ ஜே என்று சொல்லாத மக்களை நீங்கள் எப்படி நம்புவது? எங்கள் முன்னோர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டை நம்பாதவர்கள். ஒரு நாள் அவர்கள் மெஜாரிட்டியாகிவிடக் கூடும். பின்லேடன் 5,000 அமெரிக்கர்களைக் கொன்றான். அமெரிக்கர்கள் 10,000 ஆப்கானியர்களைக் கொன்று சரியாகக் கணக்குத் தீர்த்துக் கொண்டனர்! முஸ்லிம்கள் ஏ.கே.47-களையும், ஆர்.டி.எக்ஸ்., ராக்கெட் ஏவுகணையும் வைத்துள்ளனர். கோத்ரா என்பது ஒரு டிரய்லர்தான் இனிமேல்தான் முழுத் திரைப்படம் வெளிவர இருக்கிறது. முஸ்லிம்கள் நிறைய கோத்ராக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இஸ்லாமிய நாடுகள் அல்லாதவைகளை இஸ்லாமிய நாடுகளாக்கும் முயற்சியில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட இராம சேவக்குகள் சமூகத்திற்காக மிகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவிகள் செய்யப்படவேண்டியது அவசியமாகும்! விசுவ இந்துபரிஷத்திற்கு வழங்கும் 50 சதவிகிதம் வரிச் சலுகை (80G of IT Act) யைப் பயன்படுத்தி அதற்குத் தாராளமாக நன்கொடை வழங்குங்கள். இப்படிக்கு, சினுபாய்பட்டேல், நிதிப் பிரமுக், விசுவ இந்து பரிஷத் |
இந்து மதத்தில் கர்மா பலனை - அவாள் அவாள் தலையெழுத்து என்கிற ஒடுக்குமுறையை நியாயப்படுத்திப் பேசும் நீரோ மன்னன்தான் (உச்ச நீதிமன்றம் கொடுத்த பட்டம்) இந்த மோடி.
மோடியின் இந்தக் கருத்துக்காக அந்த நூலைக் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. (11.12.2007)
கலவரம் நடந்த ஓரிரண்டு மாதங்களில் பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட வந்தார். நிவாரண நிதியாக 150 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்தார். ஆனால், அம்மாநில உள்துறை அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?
இதற்குமுன் 7.3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் தொகையும் தேவையில்லை என்றார். மோடி எள் என்றால் மந்திரி எண்ணெய்யாகத் தானே இருப்பார்!
இந்த இந்துத்துவா கும்பலால், மோடிகளால் இந்தியாவின் கதை உலகெல்லாம் ஊளை நாற்றம்.
1992இல் பாபர் மசூதியை இடித்து உலகமே காறி உமிழும் நிலை ஏற்பட்டது என்றால் 2002இல் குஜராத்தில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் மற்றொரு முறை இந்தியாவை மட்டரகமாக நினைக்கும் நிலைக்கு நெட்டித் தள்ளின.
அய்ரோப்பிய ஒன்றியம் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. குஜராத் வன்கொடுமை ஒரு வகையான இன ஒதுக்கல் - 1930களில் ஜெர்மனியில் நடந்தவற்றிற்கு இணையானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் 15 நாடுகள் கையொப்ப மிட்டுள்ளன.
கோத்ரா கொலைகள் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டவை - இந்துக்கள் வாழும் பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகள் அவை. கலவரத்தில் தலையிடக் கூடாதென முதல் அமைச்சர் காவல்துறையின் மேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மத்திய மாநில அரசுகள் மனிதநேய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்குத் தவறிவிட்டன. விசுவ இந்து பரிஷத் மற்றும் பிற தீவிரவாத இந்துக் கூட்டத்தினர் வன்முறைக்குக் காரணம், நட்ட ஈடு கொடுப்பதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொண்டது. முழுமையான வெளிப்படையான ஆய்வை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டு தண்டிக்க வேண்டுமென அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியம் (15 நாடுகள்) கேட்டுக்கொண்டதே!
ஒரு மாநிலத்திற்கு முதல் அமைச்சராக இருக்கும்போதே இந்தக் கேவலம் என்றால், இந்த மோடி பிரதமர் ஆகவேண்டும் என ஒரு சதிக்கும்பல் திட்டம் தீட்டுகிறது என்றால் - இந்த மானக்கேட்டை - குரூர எண்ணத்தை என்னவென்று சொல்லுவது!.
இன்றைக்கு நரேந்திர மோடியை பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று வெட்கமின்றி பி.ஜே.பி. வகையறாக்கள் - பேச ஆரம்பித்துள்ளனரே. இதே பி.ஜே.பி. தலைவர்கள் குஜராத் படுகொலையின்போது என்ன வெல்லாம் சொன்னார்கள்?
குஜராத் சம்பவம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட களங்கமே.
- உத்தரபிரதேசம் காசியாபாத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்கள் கூட்டத்தில் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி (8.3.2004)
கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் வாஜ்பேயி ஒரு சிறைக்கைதி போலத்தான் இருந்தார். குஜராத்தில் நடந்த மதக்கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு போன்றவற்றில் உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் வாஜ்பேயி எடுக்கத் தவறியதே தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம்.
விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்கள் போப்பின் கொடும்பாவியை எரித்தபோது வாஜ்பேயி தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.
குஜராத் கலவரத்தின்போது தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல் போனதையும் வாஜ்பேயி ஒத்துக்கொண்டார்.
அய்.நா.மன்றத்தின் உதவிக் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதையும், மனித உரிமைக்கான குழுவில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உலக நாடுகள் அளவில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி வேதனை அடைந்தார் வாஜ்பேயி.
- இவ்வளவையும் சொல்லியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிதான். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் குலுமணாவில் ஓய்வு எடுக்கச் சென்ற அடல்பிகாரி வாஜ்பேயி தேர்தல் தோல்விக்கான காரணத்தில் குஜராத் மதக் கலவரம் முக்கியக் காரணம் என்று சொல்லவில்லையா?
குஜராத் கொலைகளுக்குப் பிறகு - எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்குச் செல்வேன் என்று வாஜ்பேயி சிணுங்கவில்லையா?
இங்கிலாந்தும், அமெரிக்காவும் மோடி அந்நாடுகளுக்கு வருவதற்கு விசா மறுக்கவில்லையா?
விசுவ இந்து பரிஷத்தின் சுவரொட்டிகள் இந்துக்களே, விழித்துக் கொள்ளுங்கள்! முஸ்லிம் கடைகளுக்குப் போகாதீர்கள்! முஸ்லிம் கடைகளில் எந்தச் சாமான்களையும் வாங்காதீர்கள்! நம்மிடம் சம்பாதித்துக் கொண்டு, அதை நமக்கே எதிராகப் பயன்படுத்துகிறார்கள்! நமது கடைகளுக்கு அவர்கள் வருவதில்லை. பின் ஏன் நாம் அவர்களது கடைகளுக்குச் செல்லவேண்டும்? முஸ்லிம்களைக் கொல்ல தனி ஆயுதங்கள் தேவையில்லை. அவர்களுடன் உள்ள வியாபார உறவுகளைத் துண்டியுங்கள். பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்! -விசுவ இந்து பரிஷத் சார்பில் பரவலாக விநியோகிக்கப்படும் துண்டறிக்கையின் வாசகங்கள் இவை! இவை எல்லாம் சட்டப்படி குற்றமானவை அல்லவா? இந்தத் துண்டு அறிக்கைகளை, சுவரொட்டிகளை வெளியிட்டவர், அச்சிட்டவர்கள் மீது மோடி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? காவிக்கும்பலிடம் சட்டம் சரணாகதி ஆட்சிதான் குஜராத்தில். இந்த யோக்கியர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டுமாம். சிந்திப்பீர்! |
உண்மைகளும் நிகழ்வுகளும் இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டில் சோ ராமசாமி போன்றவர்கள் மோடியை உத்தமப்புத்திரர் என்றும், பிரதமராக அவர் வந்தாலே போச்சு என்று துணியைப் போட்டுத் தாண்டுகிறார்கள் என்றால் இந்தப் பார்ப்பனர்களின் இந்துத்துவா குரூரத்தை நாட்டுமக்கள் உணரவேண்டாமா?
சோ அய்யர் சொல்கிறார்:_ கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்தவை கண்டனத்துக்குரியவைதான் என்றாலும், அந்தச் சம்பவங்களுக்கு பா.ஜ.க. அரசைக் குற்றம் கூறமுடியாது (துக்ளக் 6.5.2009) என்று சொல்கிறார்.
அப்படியானால் யார்தான் பொறுப்பு? இரண்டாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது அங்கு பா.ஜ.க. வைச் சேர்ந்த மோடி முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இல்லவே இல்லையா? ஒரு ரயில் கவிழ்ந்ததால் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற குரல் எழுகிறது. இவ்வளவு பெரிய கொடுமை நடந்தபோது அங்கு ஆட்சியில் இருந்தவர் பொறுப்பு இல்லை என்று சோ சொல்லுகிறார் என்றால் இவரைவிடப் பொறுப்பற்ற பத்திரிகையாளர் யார்?
உச்ச நீதிமன்றம் நீரோ மன்னன் என்று மோடிக்குப் பட்டம் கொடுத்துவிட்டது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் அறிக்கை வெளியிட்டுவிட்டன. வாஜ்பேயியும் அத்வானியும்கூட குஜராத் கொடூரங்களுக்கு வேதனைப்பட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் திசை திருப்பிய மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் மக்கள் எல்லாம் மடையர்கள் என்ற ஆணவத்தில்தானே?
பல கோடி ரூபாய் செலவு செய்து குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் உண்ணாவிரதம் இருந்துவிட்டால் பிரதமர் நாற்காலி தானாகவே நடந்து வந்து அவரை உட்கார வைத்துவிடும் என்ற நப்பாசை இந்த நரேந்திர மோடிகளுக்கு.
வீராதிவீரர், சூராதிசூரன் என்று ஜாக்கி வைத்துத் தூக்கப்படுகின்ற இந்த மோடியின் உண்மையான வீரம் என்ன? - சூரம் என்ன?
சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சி சார்பில் பிரபல ஊடக வியலாளரான கரன்தப்பாருடன் பேட்டியில் அமர்ந்த இந்த மோடி என்னும் மனிதனால் நான்கரை நிமிடங்கள்தான் தாக்குப் பிடித்து உட்கார முடிந்தது. கரன்தப்பாரின் சுனையான கேள்விக் கணைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று சொல்லும் வகையில் ஓடினாரா இல்லையா?
இந்தியா முழுவதையும் குஜராத் ஆக்கவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் நோக்கம்.
பார்ப்பனர்களுக்கு மீண்டும் ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் தேவைப்படுகிறது.
எந்தக் கட்சி பார்ப்பனர் அல்லாதாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!
1 comment:
நல்ல கட்டுரை. தீவிர வாதம் என்பது இரு பக்கமும் வளர்த்தெடுக்கப் படுகிறது.
Post a Comment