தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா!
தி.மு.க. தலைவர் கலைஞர் பேச்சு
சென்னை, செப். 2- நம்மை காக்கக்கூடிய உரம், உள்ளம், உறுதி இவைகளை எல்லாம் நமக்கு அளிப்பவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் என்பதை மனதில் கொள்ளுங்கள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி விளக்கவுரையாற்றினார்.
என்னுடைய வீட்டிலுள்ள பிள்ளைகளில் மூத்த பிள்ளையாகவும், என் மீது தனிப்பட்ட பாசம் உள்ளவராகவும் நான் என்றைக்கும் மறக்க முடியாதவராகவும் விளங்குபவர் சண்முகநாதன் என்று அவரது இல்ல மணவிழாவை நடத்தி வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
தலைவர் கலைஞரின் செயலாளர் கே.சண்முக நாதன் இல்ல மணவிழாவினை நேற்று (1.9.2011) அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தலைமையேற்று நடத்தி வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
எங்கள் இல்லத் திருமண விழாவிற்கு முன்னிலை ஏற்றுள்ள இனமானப் பேராசிரியர் அவர்களே, எங்கள் இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு உள்ளே போனவர் போக, வெளியே இருந்து வந்திருக்கின்ற கழகத்தினுடைய உடன் பிறப்புகளே, முன்னோடிகளே, தாய்மார்களே, நண்பர்களே!
தம்பி சண்முகநாதன் இல்லத்தில், அவருடைய இளவல் சிவாஜி - கன்னிகா ஆகியோரின் அன்புமகன் சுதர்சன் மற்றும் அவரது மைத்துனர் கதிரேசன் - மகாலட்சுமி ஆகியோரின் இளவல் நல்லகுமார் - உஷா ஆகியோரின் அன்பு மகள் செல்வி துர்காதேவி ஆகியோருடைய மணவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
வருகை தந்து வாழ்த்தியருளிய பெருமக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன். சண்முகநாதன் என்னுடைய வீட்டிலே உள்ள பிள்ளைகளில் மூத்த பிள்ளை என்று சொன்னால், ஸ்டாலினுக்கு அழகிரிக்கு மேலும் மூத்தவனாக இருந்து இன்றளவும் வழிநடத்தி செல்கிறவர் ஆவார். அந்த அளவிற்கு, அறிவுக்கூர்மையும் இந்தக் குடும்பத்தின்பால் அன்பும், என்பால் தனிப்பட்ட பாசமும் உள்ளவர் தம்பி சண்முகநாதன் என்று சொன்னால் அது மிகையல்ல.
எனக்கு சண்முகநாதன் உறவினர்
அவரை நான் பல ஆண்டு காலத்திற்கு முன்பே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொற்பொழிவா ளராக நாடெல்லாம் சுற்றிவந்த அந்த காலக் கட்டத்திலேயே பார்த்திருக்கிறேன். அப்போ தெல்லாம் அவர் எனக்கு, தூரத்து உறவினர் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய கூட்டங்களில், நான் பேசும்போது விறுவிறுப்பாக ஒருவர் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருப்பார். நான் என் பக்கத்திலே இருந்த, என்னுடைய ஆருயிர் நண்பன் தென்னனை அழைத்து, யாராப்பா இவர்? நான் வருகின்ற கூட்டங்களில் எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு வருகிறாரே? அவர் யார்? என்று கேட்டபோதுதான், தென்னன் இவர்தான் சண்முக நாதன். இவர் போலீஸ் சி.அய்.டியாக, எதிர்க்கட்சிக் கூட்டங்களில் பேசுபவர் பேச்சுகளையெல்லாம் குறிப் பெடுத்து, அனுப்பி வைத்து, அந்த குறிப்பின்படி யெல்லாம், நம்மை கைது செய்வதற்கு உதவுகின்றவர் இவர் என்று சொன்னார்.
இப்படி எதிர்க்கட்சிகளுடைய பேச்சுகளை யெல்லாம் குறிப்பெடுப்பதிலேயே எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறார் என்பதை நான் எப்பொழுது அறிந்து கொண்டேன் என்றால், 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, நானும் அண்ணா அவர்களுடைய கட்டளைப்படி, ஒரு அமைச்சராக பொறுப்பேற்றிருந்த அந்த நேரத்தில், சண்முகநாத னுடைய பழைய கோப்புகளையெல்லாம் பார்க்க வேண்டுமென்ற ஆசையோடு, அவர் எதிர்க்கட்சி யினுடைய கூட்டத்திற்கு வந்து என்னென்ன குறிப்பு எடுத்திருக்கிறார் என்று பார்த்த நேரத்தில், என்னுடைய பேச்சுக்களை எப்படி எடுத்தி ருக்கிறார் என்று ஆராய்ந்த நேரத்தில், ஒரு வரி பிசகாமல், ஒரு எழுத்து குறையாமல் - கூடாமல் அப்படியே, அவர் குறிப்பெடுப்பதைப் பார்த்து விட்டு, நான் அண்ணா அவர்களிடத்தில் எனக்கு சுருக்கெழுத்தாளராக சண்முகநாதன் என்பவரை நீங்கள் நியமிக்க வேண்டும் என்று கேட்டு, அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்ட சண்முநாதன்தான் இன்றளவும், நான் ஆட்சியிலே இருந்தாலும் - இல்லாவிட்டாலும், சுருக்கெழுத் தாளராக பணியாற்றி வருகிறார்.
கைப்பட நான் எழுதுவதில்லை
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, கைப்பட எழுதுவதில்லை. காரணம், எனக்கு நடைபெற்ற முதுகுத் தண்டு அறுவைசிகிச்சையின் காரணமாக, கைகொண்டு எழுத முடியவில்லை. ஆனால், நான் எழுதுகின்ற கலைஞர் கடிதமானா லும் - அறிக்கைகள் ஆனாலும் - கட்டுரைகள் ஆனாலும், அவற்றையெல்லாம் வாய் மொழியாக நான் சண்முகநாதன் இடம் சொல்லி, டிக்டேட் பண்ணுவது என்பார்களே அந்த வகையிலே தான், அவைகள் எல்லாம் வெளியிடப்படுகின்றன. அவைகள் எந்த அளவிற்கு திறமையாக, எந்த அளவிற்கு பாராட்டத்தக்க வகையில், எந்தளவிற்கு பிழையில்லாமல், வெளிவருகின்றன என்பதை அதைப் படிப்பவர்கள் நன்றாக உணர்வார்கள். அப்படிப்பட்ட திறமைசாலி. இன்றளவும் என்னோடு இருந்து என்னுடைய பணிகளை ஆற்றிக் கொண்டிருப்பவர் சண்முகநாதன்.
இங்கே நம்முடைய நண்பர்கள், தலைவர்கள், கலைஞர்கள் எல்லாம் பேசும்போது, எடுத்துக் காட்டியதைப்போல், சண்முகநாதன் இல்லா விட்டால் கருணாநிதி உண்டா என்றால், அதற்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை. நானே பதில் சொல்கின்றேன்- இல்லை! என்றுதான். அப்படிப்பட்ட அருமைத் தம்பிதான், இன்றளவும் என்னோடு இருந்து, எனக்குப் பதிலாக என்னு டைய பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். நான் இன்றைக்கு உங்களையெல்லாம் இந்த மணவிழா மண்டபத்திலே சந்திக்கிறேன் என்றால் விஜயாலய சோழனைப் போல உங்களைச் சந்திக்கின்றேன். விஜயாலய சோழன் போர்க் களத்தில், அவனுடைய கரங்கள் துண்டிக்கப்பட்டு, அவனுடைய கைகளிலே இருந்த கணைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு, தன்னந்தனியனாக போர்க்களத்திற்கு வந்தபோது சோழன், தன்னை யாரும் பின்பற்ற தேவையில்லை, இரண்டு பேர் என்னைத் தூக்கிக் கொண்டு வாருங்கள். இந்தப் போர்க்களத்தில் படைவீரர்கள் நடுவே நான் சென்று போரிடுகிறேன் என்று சோழ சாம்ராஜ்யத் தினுடைய வரலாற்றில், விஜயாலய சோழன் தன்னந்தனியாக வந்து போரிட்டதைப் போல், யாரையும் நம்மிடமிருந்து பிரித்தாலும் - யாரை நம்மிடமிருந்து வெகுதூரத்திற்கு அனுப்பி வைத் தாலும் - நம்மைக் காக்கக்கூடிய உரம், உள்ளம், உறுதி இவைகளையெல்லாம் நமக்கு அளிப் பவர்கள் தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் நீங்களும் என்பதை மனதில் கொண்டு, அந்த நிலைமைகளில் நடமாடிக் கொண்டிருக் கின்றோம். அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஒரு பெரும் துணை தம்பி சண்முகநாதன் என்கிற நேரத்தில், நான் அவரை என்றைக்கும் மறக்க முடியாதவராக கருதுகின்றேன்.
அப்படி கருதுகிற காரணத்தால்தான், நீங்கள் பத்து மணிக்கு வந்தால் போதும் என்று சொல்லியும்கூட, ஒன்பதரை மணிக்கெல்லாம் நான் இங்கு வந்ததற்கு காரணம், சண்முகநாதனுடைய கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்பதற்காக அல்ல, சண்முகநாதன் இல்லத் திருமணத்தில் நாமல்லவா இருந்து எல்லோரையும் வரவேற்க வேண்டும் என்கின்ற அந்த உரிமையின்பால் ஏற்பட்டதுதான் - அதற்காக ஒரு கால் மணிநேரம், அரைமணி நேரம் முன்னதாகப் போனால் தவறில்லை என்று முன்னதாகவே வந்தேன்.
வந்து, இந்த திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தநேரத்தில், மேடையிலே இருக்கின்ற பல தலைவர்களும் - பல்வேறு கட்சிளைச் சேர்ந்தவர்களும் - கலைஞர்களும் வாழ்த்தி, இந்தக் குடும்பத்தினுடைய எதிர்காலம் செழிக்க, சிறப்படைய தங்களுடைய அருளா சிகளை வழங்கியிருக் கின்றார்கள். அவர்களுக் கெல்லாம் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் - இந்தக் குடும்பத் தலைவன் என்ற முறையில். ஒன்றை மறந்துவிடக்கூடாது. இது போன்ற திருமணங்களிலே பேசுவது, அந்த திருமணத்திற்காக மாத்திரமல்ல. இனி நடைபெற வேண்டிய திருமணங்கள், தமிழகத்தில் கலையார் வத்தோடு - இலக்கியச் சிறப்போடு நடந்தால் மாத்திரம் போதாது. பகுத்தறிவுக் கண்ணோட் டத்தோடு, அவைகளெல்லாம் நடைபெற வேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துவதற்கு, இதுபோன்ற திருமணங்களில் நடைபெறுகின்ற இந்த உரைகள் பயன்படும் - பயன்பட வேண்டும் என்பதற் காகத்தான் நாங்கள் பேசுகின்றோம். தமிழ்ப் புத்தாண்டு: 500 புலவர்கள் தமிழை உணராதவர்களா?
500 புலவர்கள் சொன்னதில் உண்மையில்லையா?
இன்றையதினம் நாடு போகிற போக்கைப் பார்த்தால், நம்முடைய கலை, கலாச்சாரம், நாகரிகம் இவைகளுக்கு எல்லாம் எதிர்காலம் உண்டா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்தக்காலத்திலே நம்முடைய பெரிய வர்கள் சொன்னதை மாற்றலாமா, அவர்கள் கொண்டா டிய தமிழ் வருடத்தை இன்றைக்கு மாற்றலாமா, தவறல்லவா? என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்கள் கொண்டாடிய தமிழ் வருடங்கள் என்ன? இன்றைக்கு என்ன மாற்றிவிட்டோம். யாரோ தெருவில் போகிற வர்களா வந்து மாற்றினார்கள், அல்ல. மறைமலை அடிகளார் தலைமையில் 1921ஆம் ஆண்டு 500 புலவர்கள்- செந்தமிழ் கற்றோர் பச்சையப்பன் கல்லூரியில்கூடி, நடந்த மாநாட்டில், நிறைவேற்றிய தீர்மானம் - தமிழர்களுக்கென்று ஒரு ஆண்டுக் கணக்கில்லை.
அந்தக் கணக்கைத் தொடங்குவோம். அந்தக் கணக்குதான் - தை முதல் நாள் தொடங்குகின்ற நம்முடைய ஆண்டுப் பிறப்பு என்று சொல்லி தை முதல் நாள், தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்ற பழமொழிக்குச் சொந்தமான மாதம். அந்த தை மாதத்திலே ஆண்டுக் கணக்கைத் தொடங்குவோம். திருவள்ளுவர் பெயரால் தொடங்குவோம் என்றும் 500 புலவர்கள் ஒன்றுகூடி, யோசித்து முடிவெடுத்தார்களே? அவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதவர்களா? அவர்களெல்லாம் மரபு அறியாத வர்களா? அவர்களெல்லாம் தமிழை உணராதவர்களா? என்ற இந்த கேள்விக்கு, நாம் பதிலளிக்க வேண்டும். அந்த பதிலை செயல் மூலம் காட்டவேண்டும்.
அப்படிக் காட்டுகின்ற அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை. சண்முகநாதனைப் போன்ற உண்மையான - உறுதியான - வலிமையான துணை எங்களுக்கு இருக்குமேயானால், நிச்சயமாக அந்த நிலையை உருவாக்குவோம். தமிழ்க் கலை வளர - தமிழர் நாகரிகம் வளர - தமிழர் கலாச்சாரம் வளர - தமிழர் பண்பாடு வளர, என்றென்றும் நாம் துணை நிற்போம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழர் முறையில், தமிழ்நெறியில் தம்பி சண்முகநாதன் இல்லத் திருமண விழா இன்றைக்கு நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்திலே நம்முடைய நல்வாழ்த்துக்களைப் பெற்ற மணமக்கள் வாழ்வாங்கு வாழ்க என்று சொல்லி என்னுடைய உரையினை நிறைவு செய்கிறேன்.
-இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.
-இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.
தலைவர் கலைஞர் அவர்களின் செயலாளர் கே.சண்முகநாதன் அவர்களின் சகோதரர் கே.சிவாஜி - கன்னிகா ஆகியோரின் புதல்வர் கே.எஸ்.சுதர்சன், கே.நல்ல குமார்- உஷா ஆகியோரின் புதல்வி என்.துர்காதேவி ஆகியோரின் மணவிழா நேற்று (1.9.2011 -வியாழக்கிழமை) காலை சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
மணவிழாவிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று மணவிழாவினை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
மணவிழாவிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று மணவிழாவினை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர், தென்மண்டல கழக அமைப்புச் செயலாளர்-மத்திய இரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அஞ்சா நெஞ்சன் மு.க. அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். மணமக்களை வாழ்த்தி, தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, கழக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிப்பேரரசு வைரமுத்து, கழக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், நடிகர் சத்தியராஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், முரசொலி செல்வம், முன்னாள் காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. எல்.கணேசன், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் ஆகியோர் பேசினர்.
கவிஞர் கனிமொழி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
No comments:
Post a Comment