2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கில் தொடக்கம் முதல் ஆ. இராசா எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஆ. இராசா அவர்களே குறுக்கிட்டு ஒரு கருத்தை அழுத்தந் திருத்தமாகக் கூறினார்.
நாட்டின் மிகப் பெரிய ஊழல் வழக்கில், நான் சம்பந்தப்பட்டுள்ளவன் என்பது தெரியும். ரோமிங் வசதி தொடர்பானவற்றில், நான் எந்த விதி முறையையும் மீறவில்லை. டிராய் விதிமுறையின் அடிப்படையில்தான், இந்த வசதி செயல்படுத் தப்பட்டது.
நான் டிராய் விதிமுறையை மீறிவிட்டதாக, சி.பி.அய்., குற்றம் சாட்டியுள்ளது. நான் இந்தத் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே, ரோமிங் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.
ரோமிங் வசதி விஷயத்தில், நான் டிராய் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சாட்டும் சி.பி.அய்., இந்த நிமிடம் வரையில், இது தொடர்பாக டிராய் ஆவணங்களை, சி.பி.அய்., நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இன்னும் சொல்லப் போனால், தற்போது டில்லி திலக் மார்க் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், இந்த விஷயம் தொடர்பாக, எந்தப் புகாரையும் எழுதவில்லை. தவறான எண்ணத்துடன் தான், என்மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்ன தாக, ரோமிங் வசதியில்லை என்பதை, சி.பி.அய்., நிரூபிக்க வேண்டும். நான் அமைச்சராவதற்கு முன்பே, ரோமிங் வசதி இருந்தது.
இதற்கு, டிராயும் அனுமதியளித்துள்ளது என்பதை, நான் நிரூபித்தால் என்மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. இது தொடர்பாக, யார் என் சார்பில் வாதாடுவது?
டிராயை உதாரணம் காட்டி, என்மீது குற்றம் சாட்டும் சி.பி.அய்., வேண்டுமென்றே டிராய் ஆவணங்களை, இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் உள்ளதாக, அதன்மீது நான் குற்றம் சாட்டுகிறேன். விரைவில், டிராய் ஆவணங்களை, சி.பி.அய். இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா கூறி இருக்கிறார். இந்த வழக்கு மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமானால் இராசா அவர்கள் தெரிவித்துள்ள இந்த மிக முக்கியமான கருத்தை ஆதாரப் பூர்வமாக மறுத்த பிறகே தொடரத் தகுதி உடையதாகும்.
கொள்கையை வகுத்துக் கொடுப்பதற்கென்றே ஒரு அமைப்பை (டிராய்) உருவாக்கி வைத்துள்ளதற்குப் பிறகு - அதன்படி செயல்பட வேண்டியதுதான் அமைச்சரின் கடமையாகும். அதன்படி ஏன் செயல்பட்டாய் என்றா கேட்பது?
இராசாவுக்கு முன்பும் அவ்வாறுதானே செயல் படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் ஏற்படாத சிக்கல், இராசா விடயத்தில் மட்டும் தலை தூக்குவானேன்?
டிராய் அமைப்பு அப்படி ஒரு கொள்கையை வகுத்தது என்றால், அதன்படி செயல்பட்டு தீர வேண்டியது ஓர் அமைச்சரின் கடமையாகும்.
ஏலத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று டிராய் வழிகாட்டியிருந்து, அதற்கு மாறாக முதலில் வருவோர்க்கு முதல் உரிமை என்று அமைச்சர் மாற்றி செயல்பட்டு இருந்தால் அமைச்சர் இராசாமீது குற்றம் சுமத்த முழு தகுதி உண்டு.
இந்தச் சாதாரண உரிமைகூட மெத்தப் படித்த மேதாவிகள் கூட்டத்திற்குத் தெரியாமல் போயிற்றா? அல்லது தெரியாதது போல பாவனை செய்கிறார்களா என்று தெரியவில்லை.
கணக்குப் பாடத்தில் முதல் அடியில் (Step) தவறு செய்துவிட்டு, அதற்குப் பிறகு எல்லா அடிகளிலும் சரியாகக் கணக்குப் போட்டால் இலாபம் என்பதற்குப் பதில் நட்டம் என்றுதான் கணக்குக் காட்டும். 2ஜி அலைக்கற்றை வரிசை வழக்கு இந்தத் தன்மையில் தான் போய்க் கொண்டிருக்கிறது.
ஏலத்தில் விட்டிருந்தால் இவ்வளவு இலாபம் வந்திருக்கும் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. இலாபத்தில் நஷ்டம் என்கிற முறையில் பேசப்படும் பேச்சே தவிர, இந்த முறையால் மக்கள் அடைந் திருக்கும் பலன் என்பதுபற்றி ஏன் சிந்திக்கப் படவில்லை என்பது புதிராக இருக்கிறது.
டிராய் ஆவணங்களை நீதிமன்றத்தில் சி.பி.அய். தாக்கல் செய்யாதது ஏன்? வேண்டுமென்றே சி.பி.அய். இப்படி நடந்துள்ளது என்று சி.பி.அய்.மீது நான் குற்றஞ் சாட்டுகிறேன் என்று நீதிமன்றத்தில் ஆ. இராசா கூறி இருக்கிறாரே, இதற்கு என்ன பதில்?
ஆ. இராசாமீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்று நொறுங்கிப் போயுள்ள இடமாக இதனைக் கருத வேண்டும்.
பந்தை மிக அழகாக சி.பி.அய். பக்கம் தள்ளி விட்டார் ஆ. இராசா.
சிறப்பு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது? நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment