Monday, September 26, 2011

சென்னை மாநாடு



சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை (25.9.2011) கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரக்கோரும் சிறப்பு மாநாடு - கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது.


மாநாட்டில் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் திமுக - மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர்கள் அ. இராமசாமி, மு. நாகநாதன் ஆகியோர் கருத்துகளை எடுத்து வைத்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெரு மக்கள் திரண்டிருந்தனர்.இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையான  அவசியமான மாநாடாகவே இது கருதப்படுகிறது. நெருக்கடி நிலை காலத்தில் அதுவரை மாநிலப் பட்டியலில் இருந்து வந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.மாநில அரசு - மத்திய அரசு - இரண்டுக்கும் பொது வானது என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், மாநில அரசு முடிவுக்கு மேலாக மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றினால், மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும் என்பதுதான் பொதுப் பட்டியலின் நிலையாகும்.பல நேரங்களில் இந்த முரண்பாடுகள் ஏற்படவே செய்கின்றன. குறப்பாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பது முற்றிலும் சட்ட ரீதியாகவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மத்திய அரசோ அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றைத் திணிக்க முயலுகிறது.மாநில அளவில் மக்களின் நிலை - சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன.அதனைப் புறந்தள்ளி, டில்லியில் உட்கார்ந்து கொண்டு அனைத்திந்திய அளவில் ஒரே சீரான முடிவு என்பதெல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும்? இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லா வற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?மாநில அரசுகள் தங்கள் தங்கள் மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை, தங்களின் நிதிப் பொறுப்பில் உருவாக்கி, மருத்துவக் கல்லூரியை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பினால், அதில் மத்திய அரசு மருத்துவக் கவுன்சில் என்பவை தலையிட்டு, எம்.பி.பி.எஸ். சேர்க்கையின் மொத்த இடங்களில் 15 விழுக்காட்டு மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும்; முதுநிலை மருத்துவப் படிப்பு என்றால் 50 விழுக்காட்டு இடங்களை மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த வகையில் நியாயமானது?மருத்துவக் கல்லூரியில் சில மாநிலங்களில் போதுமான அளவில் இல்லையென்றால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கு வதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே மாநில அரசுகள் தங்கள்  நிதியில் இருந்து கட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களைப் பறிப்பது நேர்மையானதுதானா? குரங்கு அப்பம் பிரித்த கதையாக அல்லவா இருக்கிறது?பொறியியல் கல்லூரியிலோ மருத்துவக் கல்லூரி யிலோ விண்ணப்பம் போடுவதற்கு மாநில அரசுகள் குறிப்பிட்ட மதிப்பெண்களை வரையறுத்தால், மருத்துவக் கவுன்சிலோ அதிக மதிப்பெண்களை விண்ணப்பிப்ப தற்கான தகுதி மதிப்பெண்ணாக வரையறை செய்கிறது  - தேவையில்லாத மோதல் போக்கினை உருவாக்குகிறது. சமூகநீதியையும் சீரழிக்கிறது.மாநில அரசுகளிடமிருந்து இடங்களைப் பறித்துக் கொள்வதோடு அல்லாமல், மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின்மீதும் குதிரை சவாரி செய்வது ஆதிக்க உணர்வு அல்லவா!கருத்தரங்கில் பேசியவர்கள் ஒரு கருத்தினை முன் வைத்தனர். கல்வி பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதனால் ஏற்பட்ட வளர்ச்சி என்ன? அதற்கான விவரங்களை இதுவரை மத்திய அரசு வெளியிட்ட துண்டா?உலகத்திலேயே பெரிய அரசமைப்புச் சாசனம் - சோவியத் ருசியாவுக்கு உரியது. ஆனால் அது உடைந்து சிதறி விட்டதே! இரண்டாவது இடத்தில் இந்தியா இருக் கிறது - மத்திய அரசின் ஆதிக்கப் போக்கினால் இந்தியா சிதறக் கூடிய ஆபத்துதான் ஏற்படும் என்ற எச்சரிக்கையை மத்திய அரசு சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.அமெரிக்கா - என்பதை மாநிலங்களின் கூட்டமைப்பு என்று (United States of America) தான் அழைக்கப் படுகிறது. இந்தியாவும் அவ்வாறே (United States of India) அழைப்பதுதான் மிகச் சரியானது என்று மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுத்து வைத்த கருத்து - மிக மிக முக்கியமானது - தேவையானதும்கூட!இதைப்பற்றிய உரத்த சிந்தனைகள் விவாத அலை களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்துவது ஆரோக்கியமானதாக இருக்க முடியும்.சுருக்கமாகச் சொல்லப் போனால் நேற்றைய கருத் தரங்கம் பல வகைகளிலும் சிறப்பானது  - தொலை நோக்கானது; இந்த மாநாடு எதிர்காலத்தில் பல தளங்களிலும் பேசப்படக் கூடியதாகவும் இருக்கும். ஆழ்ந்த கருத்துக் கருவை உள்ளடக்கிய மாநாட்டின் தீர்மானம் எடுத்துக்காட்டி பேசப்படும் - ஆய்வு செய்யப்படும் என்ப திலும் அய்யமில்லை. உரத்த சிந்தனைகள் வெடித்துக் கிளம்பட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...