திருச்சி கட்டுமான நண்பர்கள் நேபாள விமான விபத்தில் பலியானதற்கு இரங்கல்
நேற்றைய ஞாயிறு ஒரு கறுப்பு நாளாக, ஞாயிறாக அமைந்துவிட்டதே! மிகவும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும், அளவற்ற துயரத்திற்கும் உரியதாகிவிட்டதே!
திருச்சியிலிருந்து சென்று எவரெஸ்ட் சிகரத்தைப் பார்த்துத் திரும்பும் சுற்றுலாவுக்குச் சென்ற கட்டுமான சங்க தொழிலதிபர்களான நமது அன்புக்குரிய நண்பர்கள், பயணம் செய்த விமானம் நொறுங்கியதால், 16 பயணிகளும், 3 விமான ஊழியர்களும் உயிர் இழந்தனர் என்ற செய்தி, கேட்போர் எவரின் நெஞ்சங்களையும் நொறுங்கவே செய்யும்.
இந்த விபத்தில் இந்திய கட்டுமான சங்கத்தின் திருச்சி நிருவாகிகள் 8 பேர் பலியானார்கள். இவர்கள் டில்லியில் நடைபெற்ற அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பொது மகா சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, நேபாள நாட்டின் தலைநகருக்கு சுற்றுலா சென்றபோது அகால விபத்தில் பலியாயினர்.
மணிமாறன் இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவராகவும், தியாகராஜன் கட்டுநர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், ஏ.கே.கிருஷ்ணன், தனசேகரன், கனகசபேசன், மீனாட்சிசுந்தரம், மருதாசலம், காட்டூர் மகாலிங்கம் ஆகியோர் திருச்சி கட்டுநர் சங்கத்தின் நிருவாகிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
விபத்தில் பலியான தியாகராஜன் (ஜோதி பைல் பவுண்டேஷன் அதிபர்) என்பவரது மகன் தி.சந்தோஷ்சிவா பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இரண்டாமாண்டு கட்டடத் துறையில் பயின்று வருகின்றார்.
விபத்தில் பலியான பொறியாளர்களும், கட்டுநர்களும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளிலும் உறுதுணையாய் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நமது கல்வி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பாராட்டாளர்களாக, ஊக்குவிப்பாளர்களாக இருந்த அவர்களது அகால மரணம், அந்தந்தக் குடும்பங்களுக்கு மட்டும் இழப்பு அல்ல; நம்மைப் போன்ற கல்விக் குடும்பத்தினருக்கும்கூட ஈடு செய்ய இயலாத இழப்பேயாகும்.
கண்ணீர் மல்க அந்த குடும்பத்தவர்க்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment