Tuesday, September 13, 2011

கைத் தொலைப்பேசி - கொலை பேசியாகலாமா?


நெஞ்சை உலுக்கும் நேற்றைய செய்தி ஒன்று, இன்று கைத் தொலைப்பேசி இல்லாத மனிதர்களை - இருபால் நண்பர்களை - காண்பது அரிது! அரிது!! இது மிகப் பெரிய வளர்ச்சி - வசதியும் கூடத்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் மறுபக்கம் ஒன்று உண்டே. அதையும் நாம் கவனிக்க வேண்டாமா?

எழும்பூர் ரயில்வே மார்க்கத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 155 பேர் இந்த கைத்தொலைப்பேசி செல்போன் பேச்சுகளால் - தண்டவாளத்தைக் கடக்கும்போது தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது மிகவும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும், துயரத்திற்கும் உரிய செய்தி அல்லவா?

செல்போன் அழைப்பு மரண அழைப்பாக எப்படி மாறியது? இதற்காக இந்தப் பாழும் செல்போன் என்று இறந்தவர்களின் குடும்பத்தார் ஓலமிட்டு அழும் கூக்குரல் நம்மை நெக்குருகச் செய்கிறதே!

இந்த 155 பேர்களில் 20 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் 98 பேர்.

வாலிபம் என்ற வசந்தத்தையே காண முடியாமல் மின்னலாய் அவர்களின் உயிர் திடீரென்று பறிக்கப்பட்டு விட்டதே! தன்னைமறந்து இரயில் வருவதுகூடத் தெரியாத அளவுக்கு செல்போன் மெய்ம் மறந்து பேசிக் கொண்டு தண்ட வாளத்தைக் கடக்கும் போது இவர்களது உயிர் பறிக்கப்படுகிறது!

என்னே கொடுமை!

இதில் மகளிர் 24 பேர்.

இந்தக் கொடுமையிலும் மற்றொரு கொடுமை - இவர்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்படாதவர்கள் 66 ஆண்கள், பெண்கள் 14 பேர்கள்.

அத்தனைப் பேர்களின் உடல்களும் மருத்துவமனைகளில் மார்ச்சரி (Mortuary) என்ற சவக்கிடங்கில் வைக்கப்பட்டு அனாதைகளாக உள்ளனவாம்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 32 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

எழும்பூர் - தாம்பரம் - செங்கற்பட்டு மார்க்கத்தில் ஒரு ஆண்டில் ரயிலில் அடிபட்டு இறந்தவர்கள்  344 பேர்கள்!

இதுபற்றி செய்தித்தாள்களில் வந்துள்ள விளக்கம் மனநல மருத்துவர் ஒருவர் கூறுவது என்னவென்பதை நாம் அனைவரும் - கைத் தொலைப்பேசி பயனாளிகள் அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

செல்போன் பேச்சுகள் நம்முடைய நரம்புகளைத் தூண்டி விட்டு, அதில் ஆழ்ந்து போகச் செய்து விடுகிறது. இதனால் நம்முடைய சிந்தனைகள் மறக்கடிக்கப்பட்டு, பேச்சிலேயே மூழ்கி விடுகிறோம். அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே பேசுபவருக்குத் தெரியாது; குறிப்பாக, ரயிலிலிருந்து இறங்கும் பயணிகள் செல்போன்களை காதுகளில் வைத்தபடி பேசிடுகையில் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ப தையே மறந்து விடுகின்றனர். ரயில்வே தண்டவாளங்களில் போகும்போது ரயிலில் சிக்கி உயிரிழப்பவர்களும் இதே வகையினர்தான்!

எனவே இனியாவது பேருந்துப் பயணத்திலும் கார் ஓட்டும் போதும், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போதும், செல்போன் பேச்சுகளைத் தவிர்த்து உயிரைக் கப்பாற்றிக் கொள்ள முயலுவோம் நாம்.

பெற்றோர்கள் சிறு பையன்களுக் கும், பெண்களுக்கும்கூட செல்போன் களை வாங்கிக் கொடுப்பதை எவ்வளவு தள்ளிப்போட முடியுமோ அவ்வளவு தள்ளிப் போட முயலுங்கள்.

அதிலேயே நேரத்தைச் செல வழித்து கெட்டுப் போகிறவர்கள் - SMS என்ற குறுந்செய்தி, இன்னும், சில அருவருக்கத்தக்க உரையாடல், மூட நம்பிக்கைகளைப் பரப்பி காசு சேர்க்கும் கயவர்களால் ஏற்படும் பாதிப்பு - இப்படி பலப்பல.


‘Missed Call’ Technic என்ற கொடுமைபற்றி எவ்வளவோ எழுதலாம்!

இன்று ஒரு செய்தி. பள்ளி மாணவி ஒருவரை அவரது தாயார் ஏனம்மா எப்பொ பார்த்தாலும் செல்போனில் பேசிக் கொண்டே இருக்கிறாய், நிறுத்து! என்று கூறி கண்டித்தாராம். அதற்காக தற்கொலை செய்து கொண்டாராம் அந்த மாணவி.

என்னே கொடுமை! என்னே பரிதாபம்!

வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் களால் இது போன்ற இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

கைத் தொலைப்பேசி கொலைபேசி யாக மாற்றப்படலாமா? இருபால் இளைஞர்களே, சிந்தியுங்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...