நமது கொள்கைகள் ஒன்றும் கஷ்டமானதோ பொது நன்மைக்கு விரோதமானதோ அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதசமூகம் முன்னேற்றமடைய வேண்டிய அவசியம் என்பதை யாருமே ஒப்புக் கொள்கிறார்கள்.
அப்படியானால் பார்ப்பனரல்லாதார் சமூகம் என்கின்ற பெருவாரியான மக்கள் நிலை இன்று எப்படி இருக்கிறது? சமூகத்துறையில் நாம் எப்படி இருக்கிறோம்? நம் சமூகத்துக்கு இன்று முக்கியமாய்ச் செய்யவேண்டியது அரசியல் சீர்திருத்தமா, சமூக சீர்திருத்தமா என்பவைகளை யோசியுங்கள், அரசியல் சீர்திருத்தமென்பது முன்னேற்றமடைந்த மக்களுக்கே பெரிதும் தகுதியானது. நாமோ கீழ்ஜாதியாய் - தீண்டப்படாத ஜாதியாய் - பிரத்தியக்ஷத்திலே பிற்பட்ட வகுப்பாராய் இருந்து வருகிறோம். நம் இயக்கத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு 35 வருடங்களாகக் காங்கிரஸ் இருந்து வந்தும் நமக்கு ஆக அது ஒன்றும் செய்யவில்லை.
காங்கிரசால் விளைந்த நன்மைகள் என்பவை எல்லாம் ஏற்கெனவே முன்னேற்றமடைந்து மதத்தாலும் சமூக அமைப்பாலும் மேல் நிலையில் இருந்து வந்த பார்ப்பனருக்கே அனுகூலமானவைகளேயாகும். காங்கிரசால் ஏற்பட்ட எல்லா நன்மைகளும் பார்ப்பனர்களையே இன்னும் மேலே உயர்த்திக் கொண்டு வந்ததே தவிர நமக்கு அதனால் யாதொரு நன்மையும் ஏற்படவே இல்லை. சமூகத்துறையில் நமக்கு எவ்வளவு நன்மை ஏற்பட்டாலும் அதுவே நமக்கு நன்மையான காரியமாகும். ஆதலால்தான் நமது பெரியார்கள் சமூக சீர்திருத்த காரியத்துக்கே உழைக்கிறார்கள். காங்கிரசோ சமூக சீர்திருத்த விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாகத் தடை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரசின் சமூக சீர்திருத்தமென்பதெல்லாம் பழைமையைக் காப்பாற்றுவதும் நிலைநாட்டுவதுமாகும். நாம் பழைமை என்பதற்காக எதற்கும் அடிமைப்படக் கூடாது என்கிறோம்.
மற்றும் நம்முடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் கொள்கையைப் பொறுத்தவரையிலும் கூட நாம் அதை மிக முக்கியமாக கருதுகிறோம். அதனாலேயே இந்த இருபது வருட காலத்தில் நாம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறோம்.
கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூக வாழ்வு இவைகளில் நமது பாமர மக்கள் என்றென்றும் முன்னேற்றக் கனவு காண முடியாதவர்களுமாய் இருந்தவர்கள் எத்தனையோ வகுப்பார் இன்று எவ்வளவு முன்னணியில் இருந்தவர்களுடன் போட்டிபோடத்
கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூக வாழ்வு இவைகளில் நமது பாமர மக்கள் என்றென்றும் முன்னேற்றக் கனவு காண முடியாதவர்களுமாய் இருந்தவர்கள் எத்தனையோ வகுப்பார் இன்று எவ்வளவு முன்னணியில் இருந்தவர்களுடன் போட்டிபோடத்
தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள்!
நம் இயக்கமானது எதிரிகளின் தொல்லைக்கு ஆளாகாமல் தாராள முறையில் சென்றிருக்குமானால் இந்த சென்ற 10, 20 வருட காலத்தில் எவ்வளவோ பொது முற்போக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று உறுதியாய்ச் சொல்லுகிறேன். மேற்கண்ட இரண்டு காரியங்களுக்கும் அதாவது சமூக சீர்திருத்த விஷயங்களிலும் வகுப்புரிமை விஷயங்களிலும் ஒவ்வொரு படியிலும் நமது எதிரிகள் முட்டுக்கட்டை போட்டு நாம் பயன்பெற முடியாதபடியே செய்து வந்திருக்கிறார்கள்.
ஆதலால் வரப்போகும் சீர்திருத்தத்திலாவது நாம் மேலால் நமக்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ளப் போதிய வசதி இருக்கும்படியான அளவுக்கு வெற்றி பெறவில்லையானாலும் நாம் இதுவரையில் செய்து வந்திருக்கும் வேலைகளையாவது எதிரிகள் வந்து கெடுக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.
28.6.1936 அன்று ராசிபுரம் தாலுகா ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் சவுந்தரபாண்டியன் நிகழ்த்திய உரையிலிருந்து (குடிஅரசு 28.6.1936, பக்கம் 13-14)
No comments:
Post a Comment