நாகை திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு
நாகை, ஆக. 18- அறிவாயுதம் ஏந்தும் ஆயிரம் பேர் கொண்ட பகுத்தறிவு பாசறை உருவாக்கப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நாகையில் 13.8.2011 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
குருதிக்கொடை மட்டுமல்ல
குருதிக்கொடை மட்டுமல்ல நண்பர்களே! இன்னும் வேறு கொடை தரத்தயாராக இருக்கின்ற லட்சோப லட்சம் இளைஞர்களை இந்த நாடு பெற்றிருக்கிறது.
இங்கு சொன்னாரே நம்முடைய பொதுச் செயலாளர் அவர்களும், மற்றவர்களும் சுட்டிக் காட்டினார்களே, இந்த இயக்கத்திலே இவ்வளவு இளைஞர்களா? எங்களுக்கே கூட கொஞ்சம் வியப்பு.
இவர்கள் தெரிந்துதானே வந்திருக்கிறார்கள். கருப்புச்சட்டை அணிந்துதானே வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல கொள்கை முழக்கத்தோடு வந்திருக்கிறார்களே எனவே அவர்களுக்கு குழப்பமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுகின்ற நேரத்தில் எங்களோடு வந்தால் மாணவர்களுக்கு என்ன லாபம்?
மாணவர்களுக்கு என்ன லாபம்?
குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்து தேர்தலில் உள்ள ஒரு பதவி கூட கிடைக்காது. ஆனால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களோடு வந்தால் சட்டமன்றத்திற்கா அழைத்துப் போவோம்? நாடாளுமன்றத்திற்கா அழைத்துப்போவோம். அல்லது பதவிகளுக்கா அழைத்துப் போவோம். சிறைச்சாலைக்கு அழைத்துப் போவோம். (கைதட்டல்).
போராட்ட களத்திற்கு அழைத்துச் செல்வோம். லட்சிய களத்திற்கு அழைத்துச் செல்வோம். அதைத்தான் அய்யா அவர்கள் நம்முடைய தோழர்களை சிங்கங்கள் என்று சொல்லுகின்றார்.
சிங்கங்கள் கர்ஜிக்கட்டும்
தந்தை பெரியார் மேலும் சொல்லுகிறார். அந்த சிங்கங்கள் தங்கள் சொந்த குகையிலிருந்து வெளியே வந்து கர்ஜிக்க வேண்டுகிறேன் என்று சொல்லுகின்றார். எவ்வளவு அழகான சொற்கள்.
இதைவிட நமக்கு கட்டளைச் சொற்கள்-பெரியாரின் கட்டளைச் சொற்கள் வேறு கிடையாது. எனவே இந்த மாநாட்டிற்கு வந்து காலையிலே கூடி இவ்வளவு சிறப்பான உரைகளை எல்லாம் கேட்டு, அடுத்து கலைந்து செல்லக்கூடிய எனதருமை சிங்கக் குட்டிகளே பெரியாரின் சிங்கக் குட்டிகளே உங்களைப் பார்த்து பெரியார் என்ன சொல்லுகிறார்? என்ன அழைக்கிறார். உங்கள் சொந்த வாழ்க்கை குகையை விட்டு வெளியே வந்து கர்ஜியுங்கள் என்று சொல்லுகின்றார்.
ஆயிரம் பேர் கொண்ட பகுத்தறிவுப் பாசறை
25 வயதிற்குள்ளாக இருக்கின்ற இளைஞர்கள் ஆயிரம் பேர் கொண்ட ஒரு பகுத்தறிவு பாசறை உருவாக்கப்படும். அந்த பாசறை நல்ல அளவுக்குப் பயிற்சிப் பாசறையாக இருக்கும் (கைதட்டல்). கட்டுப்பாடு மிகுந்த பாசறையாக இருக்கும். வன்முறையில் ஈடுபடாத ஒரு பாசறையாக, அதே நேரத்தில் அறிவுப்புரட்சிக்கு ஆயுதம் ஏந்தியவர் களாக அறிவாயுதம் ஏந்தியவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள். (கைதட்டல்). எனவே அப்படிப்பட்ட ஒரு சத்தம் ஒவ்வொருவருடைய வீட்டிலிருந்தும் கிளம்பும்.
நாளை பெரியாரின் பள்ளிக்கூடங்களாக மாறும்!
பள்ளிகள் வெறும் பாடப்புத்தகங்களை கற்பிக் கின்ற இடம் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இனிமேல்தான் பள்ளிகள்-பெரியாரின் பள்ளிக் கூடங்களாக மாறப்போகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணரப் போகின்றார்கள்.
தந்தை பெரியார் பற்றி அண்ணா சொன்னார். பெரியார்தான் தமிழகத்தின் முதல் பேராசிரியர். பல பேருக்கு அண்ணா அவர்களுடைய பெயர் தெரியுமே தவிர அண்ணா அவர்களுடைய கொள்கை என்ன என்பது தெரியாது.
எங்களுடைய பணி
பெரியாரின் போர்முறைப் பற்றிச் சொன்னேன். பெரியாரைப் பற்றிச் சொல்லும்பொழுது அண்ணா சொன்னார். தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார். அவருடைய வகுப்புகள் மாலை நேர கல்லூரிகள், மாலை நேர வகுப்புகள். மக்கள் மத்தியில் அவருடைய வகுப்புகள் தொடங்கி நடக்கும் என்று சொன்னார்கள்.
அதைத்தொடருவதுதான் பெரியாருடைய மாணாக்கர்களாக இருக்கின்ற எங்களுடைய பணி ஆகவேதான் அதை செய்வதற்குத்தான் முழு ஆயத்தமாக எங்களை ஆக்கிக்கொண்டிருக் கின்றோம். எந்த ரூபத்திலே ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம், மூடநம்பிக்கை ஒழிந்த சமுதாயம், பேதமிலா பெருவாழ்வு, இவைகள் வரவேண்டாமா?
21ஆம் நூற்றாண்டு அறிவியலிலே அற்புதங்கள் செய்யக்கூடிய நூற்றண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்திற்கு காலடி வைத்தானே ஆம்ஸ்ட்ராங் அது பழைய கதை. இப்போது செய்வாய் கிரகத்திலே மீத்தேன் வாயு இருக்கின்ற காரணத்தினாலே அங்கு நீர் இருக்கிறது. அங்கு நீர் இருக்கின்ற காரணத்தினாலே அங்கு உயிரி னங்களும் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று அறிவியல் ரீதியாகக் கண்டறிந்திருக்கின்றார்கள்.
இனி செவ்வாய் கிரகத்திற்குப் படை எடுப்பு
இனிமேல் அடுத்த செய்வாய் கிரகத்திற்குப் படை எடுக்கப் போகிறோம் என்று அறிவியல் வாதிகள் சொல்லுவார்கள். அதற்கு ஆவன செய்து கொண்டிருக்கின்ற செய்திகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
எழுதப்படாத சிலேட்டுகள்
தோழர்களே! எனதருமை இளைஞர்களே! எண்ணிப் பாருங்கள். நீங்கள்தான் எழுதப்படாத சிலேட்டுகள் உங்கள் மனம் தெளிவாக இருக்கிறது. எனவேதான் பெரியார் அவர்கள் உங்களைப் பார்த்துச் சொன்னார்கள்.
தயாராகுங்கள்! தயாராகுங்கள்!! என்று சொன்னார்கள். அப்படித் தயாராகின்ற நேரத்திலே செவ்வாய் கிரகத்திற்கு செல்லக்கூடிய திட்டம் சாத்தியமாக இருக்கிறது.
தமிழன் கட்டிய கோயிலிலே...
தமிழன் கட்டிய கோயிலிலே தமிழன் பணம் கொடுத்துக் கட்டிய கோயிலிலே தமிழர்கள் உள்ளே நுழைய முடியவில்லையே. தமிழன் உள்ளே நுழைய முடியவில்லையே. தமிழன் கட்டிய கோயிலிலே தமிழன் ஏன் நுழையக்கூடாது?
அர்ச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தானா?
அர்ச்சகர்கள் என்று சொன்னால் அதில் பார்ப்பனர்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? பூநூலுக்குத்தானே அந்தத் தகுதி மற்றவர்களுக்கு ஏன் இல்லை? அதற்குத் தான் நாங்கள் முயற்சி எடுத்தோம். கலைஞர் ஆட்சியிலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று ஆக்கினார்.
இது பேதமா? வகுப்பு வாதமா? அல்ல பேதமில்லா பெருவாழ்வு. அதுதான் சமத்துவ சமுதாய வாய்ப்பு. அந்த சமத்துவ சமுதாய வாய்ப்பைக் கலைஞர் சட்டமாகக் கொண்டு வந்தார்.
ஆட்சியாளர்களே தப்புக் கணக்கு போடாதீர்கள்...!
இன்றைக்கு அது உச்சநீதிமன்ற வழக்கிலே இருக்கலாம். ஆனால ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். சில காரியங்களிலே ஆட்சியிலே யார் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் பொழுது ஆட்சி மாறிவிடுகிறது.
அதனால் ஆட்சிக்கு வந்தவர்கள் சென்ற ஆட்சியில் செய்தவைகளை எல்லாம் மாற்றி விடலாம் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பு என்று ஆட்சியாளர்களே தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
குரைப்புகளை கவனிக்க நேரமில்லை
வீரமணி ஆவேசத்தோடு இப்படி சொல்லுகிறார் இவர்கள் எல்லாம் கலைஞருக்கு எடுபிடிகள் என்று சில எடுபிடிகள் எங்களைப் பார்த்து குரைப்ப துண்டு.
ஆனால் நாங்கள் போகின்ற வேகத்திற்கு இந்த குரைப்புகளை கவனிப்பதற்கு எங்களுக்கு நேரமே கிடையாது. (கைதட்டல்) எங்களுக்கு அது குரைப்பாகவும் தெரியாது. வேறு எவ்வளவு பெரிய உரைப்பாகவும் தெரியாது.
அண்ணா சொன்னார். நாங்கள் சொல்லவில்லை. அண்ணாவைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது இந்த உரைகளி லாவது அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அண்ணா செய்த காரியங்கள்
தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்து, சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட வடிவம் பெறும் என்று ஆக்கினார். இந்தி மொழிக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று ஆக்கினார்.
தமிழ்நாட்டில் இரு மொழிகளுக்குத்தான் இடமுண்டு. ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இந்த முப்பெரும் சாதனைகளை அண்ணா அவர்கள் ஓராண்டு ஆட்சியிலே இருந்த பொழுது செய்தார்.
அண்ணாவின் உரையை மக்களோடு மக்களாகக் கேட்டேன்
அமெரிக்காவிலே சிகிச்சை பெற்று உடல் நலக்குறைவோடு வந்த அண்ணா அவர்கள் பேசுகிறார். தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற விழாவிலே அண்ணா அவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார். மக்களோடு மக்களாக நின்று நான் அண்ணா அவர்களுடைய உரையைக் கேட் கின்றேன்.
இன்னமும் அண்ணாவின் குரல் என்னுடைய காதுகளிலே ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. மறக்க முடியாத நினைவுகள். அண்ணா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்திருக்கிறது. உயர் ஜாதிக்கார ஆதிக்க பீடங்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
ஏனென்றால் உண்மைத் தமிழர்களால் திராவிடர்களால் நடத்தப்படக்கூடிய ஆட்சி தி.மு.க ஆட்சி எவ்வளவு காலம் இருக்கப் போகிறது என்று நினைத்தார்கள்.
-(தொடரும்)
No comments:
Post a Comment