Tuesday, August 2, 2011

ஊர் சிரிக்கும் பா.ஜ.க.,

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஊழலுக் கும், வன்முறைக்கும் பெயர் எடுத்த கட்சியாகி விட்டது.

வன்முறைக்கு எடுத்துக்காட்டு குஜராத் மாநிலம். ஊழலுக்கு ஓர் எடுத்துக்காட்டு கருநாடகம் என்று ஆகி விட்டது.16,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்று லோக் அயுக்தா விசாரணை அறிக்கை வெளிவந்த நிலையில் உடனடியாக எடியூரப்பா பதவி விலகி இருந்தால், கொஞ்சம் மரியாதையாவது விஞ்சி இருக்கும்.அவரைப் பதவி விலகச் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி அதன் தலைமைப் பட்டப்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கடும் நெருக்கடியின் விளைவாக இப்பொழுது எடியூரப்பா பதவி விலகி இருக்கிறார். இதன்மூலம் பா.ஜ.க.வுக்குப் பெருமை வந்துவிடப் போவதில்லை. மாறாக பா.ஜ.க.வின் மட்டகரமான மனப் போக்கைத் தான் இது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.இதற்கு முன்பும்கூட வீட்டுமனையைத் தம் உறவினர்களுக்கு விநியோகித்ததில் எடியூ ரப்பா ஊழல் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாற்று எழுந்தது. அப்பொழுது பா.ஜ.க. தலைமை அவரைப் பதவி விலகச் செய்ய முழு முயற்சிகள் மேற்கொண்டு பெரும் தோல்வியைச் சுமந்தது.இந்தியாவின் தலைநகரமான டில்லியிலேயே சட்டப் பேரவை உறுப்பினர்களையும், கருநாடக மாநில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை யும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, என்னை நீக்கிப் பாருங்கள் என்று சவால் விட்டார். வெட்ககரமான முறையில் பா.ஜ.க. மக்கள் மத்தியில் பெருத்த அவமானத்தைத் தேடிக் கொண்டது.சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைமை, ஒரு மாநிலத்தின் முதல் வரிடம் மண்டியிட்டது என்பதுதான் உண்மை. இப்பொழுதுகூட - எந்த நிர்பந்தத்துக்கும் எடியூரப்பா படிந்து போய்விடவில்லை. ஒரு அறிக்கை வெளி வந்ததால் நான் பதவி விலக வேண்டுமா என்று எதிர் கேள்வி விடுத்தார். அகில இந்தியத் தலைவர்கள் இரண்டு நாள்கள் பெங்களூருவில் உட்கார்ந்து எவ்வளவோ மன்றாடியும்கூட பிள்ளை பிழைக்கவில்லை.இன்று நாடாளுமன்றம் கூடும் நிலையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது ஊழல் புகார் ஆயுதத்தைக் கையில் தூக்கிக் கொண்டு பா.ஜ.க., புறப்பட ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் நிலையில், ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க. முதல் அமைச்சர் பதவி விலகாவிட்டால், எதிர் விளைவைச் சந்திக்க வேண்டுமே என்ற உதறலால் கெஞ்சிக் கூத்தாடி எடியூரப்பாவை பதவி விலகச் செய்துள்ளனர்.எப்படி இருந்தாலும் இவ்வளவு அசிங்கம் நடந்ததற்குப் பிறகு பா.ஜ.க.வினர் கையில் ஏந்தும் ஊழல் எதிர்ப்புக்கு எந்தவிதமான மரியாதையும் கிடையாது. தார்மீக நெறியில் பலத்த அடி வாங்கி வீங்கிப் போன நிலையில் அக்கட்சி கொடுக்கும் குரல் அருவருப்பான தாகவே கருதப்படும்.முதல் அமைச்சர் எடியூரப்பா மட்டுமல்ல, அமைச்சரவையில் பாதிப் பேர்களுக்குமேல் லஞ்ச ஊழலில் திளைத்தவர்கள்தான் என்ற குட்டு உடைபட்டுப் போய்விட்டது.நியாயப்படி அமைச்சரவையே பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்துச் சரணா கதி அடைந்திருக்க வேண்டும். அதனைச் செய்யாத நிலையில் எடியூரப்பா மட்டும் பதவி விலகியது கூட ஓர் ஏமாற்று வேலையே!கருநாடக மாநில அரசு கோமாநிலையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் வேறொரு வழக்கில் ஏற்கெனவே கூறியதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. ஆட்சி நிருவாகத்தில் பக்தியையும், மதத்தையும், ஊழலையும் ஊர்வலம் வரச் செய்த ஒரு ஆட்சி கருநாடகத்தில் நல்ல அளவு அவமானப்பட்டு விட்டது!தலையணையை மாற்றுவதால் தலைவலி போகப் போவதில்லை. முதல் அமைச்சரை மாற்றுவதாலேயே கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதைக்கு புதிதாக மரியாதை கிடைக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்த நிலை!









No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...