குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது (28.5.2011).
கடந்த 34 ஆண்டு காலமாக இதே குற்றாலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்தி வருகிறோம். பெரும்பாலும் கேரளா பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான பங்களாவில் நடக்கும்.
இவ்வாண்டுதான் வள்ளல் வீகெயேன் டாக்டர் கண்ணப்பன் அவர்களின் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உணவு, உறையுள் வரை அனைத்துப் பொறுப்புகளையும் அவரே முன்வந்து, மனமுவந்து ஏற்றுக் கொண்டு எங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றி!
ஒவ்வொராண்டும் சராசரியாக நூறு, இருபால் மாணவர்களும் இந்த முகாமல் பங்கேற்றுப் பயிற்சி பெறுகிறார்கள்.
இதில் நான்கில் ஒரு பகுதி பெண்கள், மீதி ஆண்கள்.
18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பயிற்சினைப் பெறுகிறார்கள். நான்கு நாட்கள் இந்த முகாம் நடைபெறுகிறது.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பதில் சொன்னார்.
நடந்து முடிந்த தேர்தல்பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கழகத் தலைவர் கூறியதாவது:
இந்தத் தேர்தல் முடிவு வெற்றி பெற்றவர்களையும், தோல்வி அடைந்தவர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி யுள்ளது என்பதுதான் உண்மை.
நல்ல துவக்கம்
இந்த ஆட்சிக்கு ஆக்க ரீதியான முறையில் நாங்கள் ஒத்துழைப்புக் கொடுப்போம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கூறியுள்ளார். சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் அவ்வாறே கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. இதனை ஆளும் கட்சி தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வளர்ச்சியா? தளர்ச்சியா?
சென்ற ஆட்சி செயல்படுத்திய திட்டங்களை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது வளர்ச்சி ஆகாது; அது தளர்ச்சியைத்தான் காட்டும்.
குறிப்பாக சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்படும், ஏற்கப்படும் சமத்துவத் திட்டமாகும். இதனை அரசியல் கண் கொண்டு பார்க்கக் கூடாது.
இடதுசாரிகள் உட்பட வற்புறுத்திய திட்டமாகும். பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் அவர்களின் தலைமையிலான கல்வியாளர் குழுவால் தயாரிக்கப்பட்ட திட்டமாகும். பொது மக்களின் பிரதிநிதிகள் கூடக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை ஒரு அரசு நிறுத்த முடியுமா என்பதுகூடக் கேள்விக் குறியாகும்.
சமச்சீர் கல்வி அடிப்படையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்கான குழு அமைப்பு உள்ளிட்ட திட்ட செலவுகளையெல்லாம் சேர்த் தால் 500 கோடி ரூபாய் இதில் செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுப் பெரிய மக்கள் பணத்தை வீணாக்குவது சரியானதாக இருக்கவே முடியாது.
இந்தப் பாடத் திட்டத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பாரதிதாசன், அயோத்திதாசர், எம்.ஜி.ஆர். பற்றி எல்லாம்கூட பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
செம்மொழிபற்றி கலைஞர் அவர்கள் எழுதிய பாடலும் இடம் பெற்றுள்ளது. எனது பாடல் இடம் பெற்றது என்பதற்காக கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டாம்; வேண்டுமென்றால் அந்தப் பாடலை நீக்கிவிட்டு கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துங்கள் என்றுகூட கலைஞர் அவர்கள் கூறியுள்ளார். எதிலும் அரசியல் பார்வை என்பது தேவையற்றது.
தொடக்கத்தில் கல்வி அமைச்சர்கூட சில பாடங் களை அகற்றிவிட்டு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று தான் கூறினார். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
அவசரப்பட்டு முடிவெடுக்காமல் அறிவிப்பை முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசியலுக்கு அப்பாற்பட்ட எங்களின் வேண்டு கோளாகும். அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள்கூட வேண்டுகோள் விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
சட்டமன்ற கட்டடம் மாற்றம்
அதுபோலவே ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று கூறுவதும் தவறானதாகும். தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக அவர்கள் காலத்தில் பயன்படுத்திய பாலங்களை, சாலைகளைப் பயன்படுத்த மாட்டார்களா?
பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில்தான் தங்க நாற்கரச் சாலைகள் போடப்பட்டன என்பதற்காக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அவற்றைப் பயன் படுத்தவில்லையா?
ஜனநாயக அமைப்பில் ஆட்சிகள் வரும் - போகும். ஆனால் திட்டங்கள் என்பவை தொடர்ச்சியாக நடை பெற்றுத் தீர வேண்டியவை அல்லவா?
கட்சியும் ஆட்சியும்
தேர்தலுக்கு முன்பு கட்சி, தேர்தலுக்குப்பிறகு ஆட்சி, ஓட்டுப் போட்டவர்களுக்கும், போடாதவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி என்பது இருக்கிறது. ஓட்டுக் கண் ணோட்டத்தில், நாட்டுக் கண்ணோட்டத்தை மறுக்கக் கூடாது.
தி.மு.க.வை மக்கள் ஒதுக்கிடவில்லை
தி.மு.க.வும் கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது. ஆளும் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சில லட்சங்கள்தான்.
மற்ற நாடுகளில் உள்ளதுபோல விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடக் கூடும் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
No comments:
Post a Comment