Wednesday, December 29, 2010

மனிதன் எனும் விசித்திர பிராணியே, கேள்!

எனது மதிப்பிற்குரிய நண்பரும், மருத்துவருமாகிய டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் நிறைய புதிய நூல்களைப் படிப்பவர்; இணைய தளம் வாயிலாகவும் பற்பல புதிய செய்திகளை, அரிய தகவல்களைத் திரட்டி நண்பர்களுக்குத் தந்து, சுவைபட உரையாடக்கூடியவர்.

தேவையற்ற பரிசோதனை விவரங்களை எழுதித் தந்து, நோயாளிகளுக்கு அதிக செலவு வைக்காமல், ஆழமான கேள்விகளையே, தமது பரிசோதனைகளாக அமைத்துக் கொள்ளும் ஆற்றலாளர் - மருத்துவ நிபுணர் - மனிதநேயப் பண்பாளர்.

அவரிடமிருந்து (மற்ற சில நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்தும்),  இணையத்தின் மூலம் சுவையான தகவல்களை நமக்கு அனுப்பி நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.

திபெத்தின் உரிமைக்காக  வாதாடும் அதன் அதிபர் தலாய் லாமா அவர்கள் சிறந்த அறிவாளி. அவரது அனுபவமும், ஒப்பற்ற உரையாடல்களும் அறிவார்ந்த கருத்துகளின் அணிவகுப்புகள் போல் இருக்கும். மதவாதியாக பார்க்காமல் மனிதராகப் பார்க்கவேண்டும்.
 
அவரது பல நூல்களை நான் விரும்பிப் படிப்பதுண்டு. அவரது பேட்டி ஒன்று இணையத்திலிருந்து டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள் நேற்று (28.12.2010) அனுப்பியிருந்தார்.

பலருக்கும் பயன்படும் என்பதால், வாசக நேயர்களுக்கும் அதனை விருந்தாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தலாய்லாமாவைப் பார்த்து ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்:

மனித குலத்தில் நடக்கும் எந்த நிகழ்வு தங்களை மிகப் பெரிய வியப்பில் ஆழ்த்தியுள்ளது?
 
அதற்கு அமைதியின் உருவமான அவர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்:

மனிதன்!
- அவன் பணத்திற்காகத் தனது உடல் நலத்தைத் தியாகம் செய்பவன்!

- பிறகு அதே மனிதன் தனது உடல் நலத்தைக் காப்பாற்றிக் கொள்ள பணத்தைத் தியாகம் செய்பவன்!
 
- அவன் தனது வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள அளவற்ற ஆர்வம் கொண்டலைந்து, நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்தவனாகி வாழ்கிறான்! இதன் ஒட்டு மொத்த விளைவு என்ன தெரியுமா?

அவன் நிகழ்காலத்தையும் அனுபவிக்கத் தெரியாதவனாவதோடு, வருங்காலத்தையும் கூட அனுபவிக்க முடியாதவனாகவே வாழும் பரிதாபத்திற்குரியவனாகிறான்!

அவன் வாழும்போது ஏதோ இவனுக்கு இறப்பே கிடையாது என்பது போல எண்ணி இறுமாந்து வாழ்கிறான்!

ஆனால் இறக்கும்போதோ, தான் பயனுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான எண்ணமின்றியே சாகிறான்!

மனிதன் என்கிற விசித்திரப் பிராணி பற்றி எவ்வளவு சுருக்கமாக, ஓங்கிப் பொறி தட்டும்படிச் செய்து அறிவுரை வழங்கியுள்ளார் தலாய்லாமா!
 
மனிதர்கள் பிறக்கிறார்கள்; சம்பாதிக்க அலைகிறார்கள். கோடி கோடியாகப் பணம் சேர்க்கின்றனர்.  பதவி, பதவி என்று ஆளாய்ப் பறக்கிறார்கள்! மனநிறைவே அறியாது, எல்லையற்ற ஆசைக்கனவுகளையே கண்டு நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்து - மண்ணோடு மண்ணாக மக்கள் எவருக்கும் பயனின்றிப் புதைந்து போகிறார்கள்; அல்லது எரிந்து போகிறார்கள்!

ஓ மனிதர்களே! மனிதர்களே! இந்தக் கருத்தை அசை போட்டுச் சிந்தித்து அதற்கேற்ப உண்மையாக வாழுங்கள்!

உனக்காக வாழ்வதைவிட உலகத்தார்க்குத் தொண்டு செய்து வாழும் வாழ்வை பயனுள்ளதாக்கு மனிதா!

திபெத் லாமாவின் கேள்விக்கு விடை கண்டு வாழ்ந்தால் நம் வாழ்வு சுவையான வாழ்வாக, பொருளுள்ள வாழ்வாக அமையும் - இல்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...