- சிறப்புப் பார்வை
ஒரு தலைவருக்கு இருக்க வேண்-டிய முக்கியப் பண்பு, தான் எடுத்த முடிவின் காரணமாக ஏற்படும் விளை-வுகளுக்கு துணிந்து பொறுப்பேற்பதே என்று கூறுவார்கள். அந்த நேர்மையும், துணிவும் நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னான அரசியலில் நமது தலைவர்கள் பெரும்பான்மையினரிடம் காண முடியாத ஒன்றாகிவிட்டது.
வெள்ளைய காலனி ஆட்சியை எதிர்த்து சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் நடந்த இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கிடையிலான கொள்கை மாறுபாடுகள் எத்தகையதாயினும் அவர்கள் அனைவரிடமும் நேர்மை இருந்தது. அவர்களின் முடிவுகளும் பார்வைகளும் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைந்துவிட்ட பின்னரும் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்பட்டதாகவே இருந்தது_ இருக்கிறது. ஆனால் அவர்களின் கொள்கையிலும் பார்வையிலும், போராட்டத்திலும் இல்லாதது சுய நலமும், அயோக்கியத்-தனமும்தான். இந்த குண வலிமை இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு அதன் தலைவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, சில பத்தாண்டுகளில் தலைமையின் தனித்-தன்மையே சுய நலமும், தன்னைத் தாண்டி மற்ற அனைவரையும் ஏமாற்றும் அயோக்கியத்தனமுமே என்றாகிவிட்டது. அதன் வெளிப்-பாடுகளே எமர்ஜென்சியில் இருந்து பாபர் மசூதி இடிப்பு, காந்தஹாருக்கு விமானக் கடத்தல், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், தமிழருக்கு எதிராக இலங்கை அரசிற்கு உதவுதல் என்று தொடர்ந்து கொண்டு-தானிருக்கிறது.
இந்திய அரசியலை கவ்வியுள்ள அந்த குறைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட-தல்ல பாரதிய ஜனதா கட்சி. அதுவே இன்றைக்கு அந்தக் கட்சிக்குள் ஏற்-பட்டுள்ள உள் யுத்தத்திற்குக் காரண-மாகவுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சித் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கான தங்களின் வேட்பாளர் இவரே என்று அறிவிக்கப்பட்ட லால் கிஷன் அத்வானி, அக்கட்சித் தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி கண்ட 3 மாதத்திலேயே அரசியல் வாழ்வின் அஸ்தமன காலத்திற்கு தள்ளப்பட்-டுள்ளது சற்றும் எதிர்பாராததுதான்.
புதுடில்லியில் முகாமிட்டுள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலை-வர் மோகன் பகவத், பாரதிய ஜனதாக் கட்சிக்குள் உருவான அத்வானி எதிர்ப்பு எனும் புயலை அடக்க ஒரு சமரசத் திட்டத்தை வகுத்துவிட்டார் என்றும், அதன்படி அத்வானி வகித்துவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுஷ்மா சுவராஜிடம் அளிக்கப்படவுள்ளது என்றும் வரும் செய்திகள், 60 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட அத்வானியின் அரசியல் வாழ்-வின் முடிவையே பறைசாற்று-கின்றன.
அத்வானியின் அரசியல் வாழ்வின் இந்த திடீர் முடிவை நிர்ணயித்தது, தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு உண்மையை அவர் மறைத்தது மட்டு-மின்றி, அதன் விளைவில் பங்கேற்கும் துணிவின்றி, தனது சகா ஒருவர் மீது அதனை சுமத்தியதால் வந்த வினை என்பது செய்திகளை தொடர்ந்து படித்துவருபவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.
1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டெல்லி நோக்கிப் பறந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் அய்.சி.814 விமானத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தினர். 176 பயணிகளுடன் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை பாகிஸ்தானிற்கு கடத்துமாறு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த தீவிரவாதிகள் கட்டளையிட்டனர், பாகிஸ்தான் அந்த விமானத்தை லாகூர் விமான நிலை-யத்தில் தரையிறங்க அனுமதிக்காததால், அது பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை முடக்கி நிறுத்திவிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அறிந்த கடத்தல்காரர்கள் விமானத்தை உடனே கிளப்புமாறு உத்தரவிட, அந்த விமானி படாத பாடு-பட்டு லாகூரில் விமானத்தை இறக்கினார். அங்கு எரிவாயு நிரப்பிக் கொண்டு அது துபாய்க்கு பறந்து, அங்கு 27 பயணிகளை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு, ஆஃப்கானிஸ்-தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 149 பயணிகளையும், விமானி-கள், விமான பணியாளர்களை மீட்க-வும் கடத்தல்காரர்களுடன் இந்தியாவின் ஆஃப்கானிஸ்தான் தூதரக அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். பயணி-களையும், விமான ஊழியர்களையும் விடுவிக்க வேண்டுமெனில் தங்களுக்கு 200 மில்லியன் டாலர் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 35 இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்தனர்.
அத்வானி பொய்யர்
ஒரு வார காலம் பேரம் நடந்தது. இறுதியில் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியா ஒப்புக் கொண்டது. அவர்கள்: 1. மௌலானா மசூத் அசார் (பின்னாளில் ஜெய்ஸ் இ மொஹம்மது இயக்கத்தை தோற்றுவித்தவர், இந்த இயக்கம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் தொடர்பு-டையது), 2. அஹம்மது உமர் சயீது சேக் (பின்னாளில் அமெரிக்க பத்திரி-கையாளர் டானியல் பியர்லை கடத்தி படுகொலை செய்த பயங்கரவாதி), 3. முஸ்டாக் அஹம்மது ஜர்கார் (பாகிஸ்-தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்-மீரில் இன்றுவரை தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்-படுபவர்). இவர்களுடன் காந்தஹார் புறப்பட்டுச் சென்ற அன்றைய அய-லுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தீவிரவாதிகளை ஒப்படைத்துவிட்டு, விமானத்துடன் பயணிகளையும் மீட்டுத் திரும்பினார். கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைத்த தலிபான்-களுக்கும் தனியாக பணம் கொடுத்த-தாகவும் கூறப்பட்டது. ஆனால் உறுதி-படுத்தப்படவில்லை.
இப்படி தீவிரவாதிகளை விடுவித்து, கடத்தல்காரர்களிடமிருந்து பயணிகள் மீட்கப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்வானி பேசினார். அப்போது உள்துறை அமைச்சராகவும், பிரதமர் வாஜ்பேயிக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த அமைச்சர் என்ற வகையிலும் அத்வானிக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்பதால், அவர் பொய்யுரைக்கிறார் என்று குற்றம் சாற்றப்பட்டது.
தீவிரவாதிகளை விடுவித்துதான் பயணிகள் மீட்கப்பட்டனர் என்பது அத்வானிக்குத் தெரியும் என்று ஜஸ்வந்த் சிங் கூறினார். இது தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்-குள்ளேயே சர்ச்சையானது. இன்று மொஹம்மது அலி ஜின்னா - இந்தியா, பிரிவினை, விடுதலை என்ற தலைப்பில் ஜஸ்வந்த் சிங் எழுதி வெளியிட்ட புத்தகம், தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி, விளக்கம் கோராமலேயே ஜஸ்வந்த் சிங் வெளி-யேற்றப்பட்டதும், காந்தஹார் கடத்தல் மீண்டும் வெடித்தது. தனக்குத் தெரியாது என்று அத்வானி கூறியது அப்பட்ட-மான பொய் என்றும், தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை மீட்பது என்று வாஜ்பாய் தலைமையில் நடந்த அமைச்-சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்-பட்டபோது அதில் அத்வானியும் கலந்து கொண்டார் என்றும் குட்டை உடைத்த ஜஸ்வந்த் சிங், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அத்வானி பொய்யுரைக்-கிறார் என்று பகிரங்க-மாகவே குற்றம் சாற்றினார்.
அதுமட்டுமின்றி, கடத்தப்பட்ட விமானம், லாகூருக்குக் கடத்தப்படுவ-தற்கு முன்னர் அரை மணி நேரம் இந்திய மண்ணில் இருந்தபோது உள்துறை அமைச்சரான அத்வானி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது-தானே என்றும் ஜஸ்வந்த் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் அத்வானியால் பதில் சொல்ல முடியாத நிலையில், அவரது அரசியலால் பாதிக்கப்பட்ட மற்ற தலைவர்களும் அவருக்கு எதிராக திரும்பினர். யஷ்-வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா, முன்னாள் அமைச்-சர் அருண் ஷோரி ஆகியோரும் ஊடகங்களில் பேட்டியளித்து பிரச்-சனையை தீவிரப்படுத்தினர்.
பிரதமர் ஆசையால் அத்வானி செய்த தவறுகள்
தனது அரசியல் வாழ்விற்கு முடிவு கட்டும் அளவிற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்த அத்வானி மீது ஜஸ்வந்த் சிங் வைத்த மிகப் பெரிய குற்றச்சாற்று: பிரதமராக வேண்டும் என்ற ஆசை-யால் பீடிக்கப்பட்ட இந்த மனிதர் பல தவறுகளைச் செய்தார். வாக்கிற்காக பணம் கொடுக்கப்பட்டது என்று கூறி நாடாளுமன்றத்தில் பணம் கொட்டப்-பட்ட நாடகத்தின் மய்யம் அத்வானி-தான் என்று ஜஸ்வந்த் சிங் வீசிய குற்றச்-சாற்றுக்கு இதுவரை அத்வானி பதிலளிக்கவில்லை!
இந்த உண்மையை இன்றைக்கு நாட்டுக்குத் தெரிவிக்கும் ஜஸ்வந்த் சிங் இதுநாள்வரை அதனை அதே பதவி பெறுவதற்குத்தானே (கட்சி நலனைக் காக்க என்று கூறுகிறார்) நாட்டு மக்க-ளிடம் கூறாமல் மறைத்தார்? இப்படி உண்மையை மறைத்து வேறொன்றைச் செய்வது பாரதிய ஜனதா கட்சிக்குப் புதியதல்லவே! மண்டலை எதிர்த்து கமண்டல யாத்திரை! இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்-சிக்கு நிகராக வளர்ந்துள்ளது என்றால் அதற்குக் காரணமும் அத்வானிதான் என்பதை ஜஸ்வந்த் சிங் உட்பட அவர் மீது இன்று குற்றம் சாற்றும் தலைவர்-கள் ஒருவரும் மறுக்க முடியாது.
நமது நாட்டிலுள்ள இதர பிற்படுத்-தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வி.பி.சிங் பிறப்பித்தபோது - அவரை தலைவராகக் கொண்ட ஜனதா தளத்-தின் உதவியுடன் 88 தொகுதிகளைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க பலத்துடன் இருந்த பாரதிய ஜனதா கட்சி - மண்டல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் ஆட்சிக்கு அளித்து-வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று அறிவித்தது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஓதுக்கீடு அளிப்பதை சாதி ரீதியாக இந்திய சமூகத்தை பிளக்கிறார் வி.பி.சிங் என்று குற்றம் சாற்றியதோடு நிற்காமல், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டு-வோம் என்று கூறி, மதப் பிரச்சனையை திடீரென கையிலெடுத்தவர் அத்வானி.
நாட்டை கலவர பூமியாக்கினார்
அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்ட இரத யாத்திரை என்று தொடங்கி நாட்டை கலவர பூமியாக்கினார். ஆட்சியைப் பிடிக்கும் அரசியலுக்குப் பயன்படுத்தி, அதன் மூலம் மத ரீதியாக இந்திய சமூகத்தில் பிளவை உண்டாக்கிவிட்டவர் அத்வானிதான். மண்டல் அறிக்கைக்கு எதிராக கமண்ட-லம் ஏந்திய அத்வானி, வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் கோயில் கட்டும் முழக்கத்தை - ஆட்-சிக்கு ஆதரவு தரும் கட்சிகளின் நிபந்தனைக்கு உட்பட்டு -தள்ளிவைக்க ஒப்புக்கொண்டார்! ஆக, அத்வானி மட்டுமல்ல, அன்றைக்கு சமூக நீதியை அழிக்க மதவாதத்தை கையிலெடுத்து-தான் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து உ.பி.யிலும், பிறகு மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தது.
எனவே, அத்வானியை மட்டும் பதவிக்காக எதையும் செய்பவர் என்று பாரதிய ஜனதா கட்சியில் எவரும் குறை சொல்லத் தகுதியற்றவர்களே. அக்கட்சியின் நோக்கும், அதனை இன்றுவரை பின்னிருந்து இயக்கும் ராஷ்ட்ரிய சுயம் சேவக், கட்சிக்கும் பதவியும், அதிகாரமும் கட்டாயத் தேவையாகும். இல்லையென்றால் அப்போது ஜனசங்கமும் இப்போது பாரதிய ஜனதா கட்சியும் இருக்குமா?
இவர்களின் நேர்மையற்ற அரசியல் நடவடிக்கைகளால் இந்த நாட்டின் சமூக ஒற்றுமை பாழ்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் சீர்குலைந்தது. விடுதலைப் போராட்டத்தினால் வலிமையடைந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியானது. இந்திய மக்கள் மத்தியிலும், நாடாளுமன்ற அவைகளிலும் இவர்கள் பேசிய எந்தப் பேச்சிலும் நேர்மை-யில்லை. டெல்லியில் ஒருநிகழ்ச்சி-யில் பேசிய அத்வானி இலங்கையில் போரை நிறுத்துமாறு மிகவும் வலியுறுத்திப் பேசினார்.
போர் நிற்கவில்லை. அதன்பிறகு அப்பிரச்சனை தொடர்பாக தனது கட்சியின் தமிழகத் தலைவர்களையும் கூட அழைத்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஆனால் மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் எந்த அறிக்கையும் வரவில்லை.
பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடையந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொல்லத் திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது அத்வானிக்குத் தெரிவிக்கப்-பட்டது. அதனைத் தடுத்து நிறுத்த காட்டமான அறிக்கை வெளியிடுவார் என்று கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அல்லவா, தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அறிக்கை வெளிவரவில்லை.
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே படுகொலை செய்யப்பட்ட பின்னர், அங்கு எதுவுமே நடக்காதது-போல் அத்வானியும் அமைதி காத்தார். இவர்களைப் பொறுத்தவரை எல்லாமே வாக்கிற்காகவும் பதவிக்காகவும்தான். எதுவும் மக்களுக்காக அல்ல. அதனால்-தான் மசூதியை இடித்து இரத்த ஆற்றை ஏற்படுத்துகின்றனர். கலவரத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட வழிவகுக்கின்றனர். இப்-படிப்பட்ட அரசியல் வழிகொண்ட ஒரு தலைவரின் அரசியல் வாழ்வு முடிவிற்கு வருகிறதென்றால் அதற்காக இந்திய மக்கள் கவலைப்பட ஏதுமில்லை. இன்-றைக்கு ஆட்சியிலும் வெளியிலும் உள்ள மற்றத் தலைவர்கள் இவரினும் வேறுபட்டவர்களா என்று மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்பது நாட்டை பாதுகாத்துக் கொள்ள நிச்சயம் உதவும்.
No comments:
Post a Comment