Thursday, May 28, 2009

சென்டிமென்ட்

ஒற்றைப்பத்தி

"சென்டிமென்ட்"

நம் நாட்டில் அண்மைக் காலமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தைதான் "சென்டிமென்ட்!" மனோபாவம், 

சுயமனோதத்துவமுடைய ஒன்று என்றெல்லாம் அகராதிகள் அர்த்தம் கூறுகின்றன.

சுருக்கமாகக் கூறுவது என்றால் அறிவும், துணிவும் இல்லாதவர்கள் மத்தியில் உருவாகும் ஒரு வகையான கோழைத்தனம் இது என்றே சொல்லவேண்டும்.

திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டிய விளையாட்டுப் போட்டி களில் ஈடுபடுபவர்களுக்குக் கூட இந்தத் தன்னம்பிக்கையற்ற கோழைத்தனம் ஏற்படுவதுண்டு.

குறிப்பிட்ட வண்ணத்தில் கைக்குட்டை வைத்திருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்று நினைப்பவர்கள் உண்டு.

அதேநேரத்தில் அந்த வண்ணத்தில் கைக்குட்டையை வைத்துக்கொண்டு விளையாடச் சென்ற போதெல்லாம் வெற்றி பெற்று இருக்கின்றனரா? தோல்வியே அடைவதில்லையா? என்ற கேள்வியை எழுப்பி சுய மதிப்பீடு செய்யும் அளவுக்கு அவர்களின் அறிவு விரிவடைவதில்லை. தோல்விக்கு வேறு ஏதாவது காரணம் கூறி தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொள்ளும் தலைப்பிரட்டைகள் இத்தகையவர்கள்.

அரசியலிலும் இந்த நிலைப்பாடு உண்டு. ஜோதிடர்களின் செல்வாக்கு அரசியலில் ஓங்கி நிற்கிறது என்றால் அதற்கு இது தான் காரணம்.

தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் தங்களைப்பற்றிய குறிப்புகளோடு ஜாதகத்தையும் கொண்டு வரவேண்டும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார் - முடிவு என்னவாயிற்று? இதற்குப் பிறகாவது ஜோதிடக் கூவத்திலிருந்து அரசியல்வாதிகள் வெளியேறவேண்டாமா?

தேனி மக்களவைத் தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்றவர்கள் அடுத்தமுறை வெற்றி பெறமாட்டார்கள் என்று ஒரு கதை. ஆரூண் (காங்கிரஸ்) அவர்கள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற்றுவிட்டாரே - அந்த நம்பிக்கையாளர்கள் எதில் போய் முட்டிக்கொள்வார்கள்?


இன்னொரு செய்தி - நடிகர் நெப்போலியன் குறித்து... அவர் வெற்றி பெற்றால், அவர் சார்ந்த கட்சி ஆட்சியைப் பறி கொடுத்துவிடும் என்று ஒரு கிளப்பல்! வில்லிவாக் கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்; ஆனால், தி.மு.க. ஆட்சிப் பீடம் ஏறவில்லை என்று கதை கட்டினர்; கடந்த தேர்தலில் மயிலாப்பூரில் தோற்றார்; தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துவிட் டது என்று காக்கை உட் கார பனம் பழம் விழுந்தது போல சில நடவடிக்கைகள் அமைந்துவிட்டால், பார்த்தீர்களா - பார்த்தீர்களா? நாங்கள் சொல்வது எவ்வளவு கரெக்டாக இருக்கிறது என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுப் பேசுவோர் உண்டு.

இப்பொழுது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்; மத்தியில் அவர் சார்ந்த கூட்டணி ஆட்சியும் அமைந்துவிட்டதே - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? மூடத்தனத்திற்கு அடிமையானால் சிந்தனையாவது, மண்ணாங்கட்டியாவது!

- மயிலாடன்
படியுங்கள்: விடுதலை
நன்றி:http://files.periyar.org.in/viduthalai/20090527/news06.html


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...