Wednesday, October 26, 2016

அனைத்துக்கட்சிக் கூட்டத்தை குறை கூறுவோர்கள் கருநாடகத்துக்குத் துணை போனவர்களே!

  • தமிழர்களின் வாழ்வாதாரக் காவிரிப் பிரச்சினை
  • அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆளும் கட்சி கூட்டாத காரணத்தால்
  • அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகக் கடமையை எதிர்க்கட்சித் தலைவர் செய்துள்ளார்
குறை கூறுவோர்கள் கருநாடகத்துக்குத் துணை போனவர்களே -
குறையைத் திருத்திக்கொண்டு அடுத்த கூட்டங்களிலாவது கலந்துகொள்ளட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்!

தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் குறித்து விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் வைத்த வேண்டுகோளை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று (25.10.2016) கூட்டினார்.

ஆளும் கட்சி தரப்பில் அத்தகைய கூட்டத் தைக் கூட்டாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் தனது சட்ட ரீதியான ஜனநாயகக் கடமையைத்தான் செய்துள்ளார். கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், அந்த முயற்சியைக் குறை கூறுவது - கருநாடகத்துக்கு உதவி செய்வதாகவே ஆகும் - அத்தகையவர்கள்  திருந்தவேண்டும்; அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கு உள்ள காவிரி நீர்ப் பங்கீட்டு உரிமையை அறவே மறுக்கும் கருநாடக அரசு, அரசமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும்கூட கட்டுப்பட மறுத்து குறுக்குச்சால் ஓட்டுகிறது.

இரு மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்து, அரசமைப் புச் சட்டப்படி தனது கடமையாற்ற வேண்டிய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு - நடு நிலை பிறழ்ந்து - சட்டக் கடமையைச் செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் முதல் இரண்டு நாள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்டு விட்டு, அடுத்த மூன்றாவது, நான்காவது நாளில் - கரு நாடகாவில் 2017 ஆம் ஆண்டு (நடைபெறவிருக்கும் தேர்தலில் தாங்கள் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ என்னமோ,) ‘‘அந்தர் பல்டி’’ அடித்து, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, நாடாளுமன்றம்தான் இதுபற்றிக் கூற முடியும் - உச்சநீதிமன்றம் விசாரித்து ஆணையிட முடியாது என்ற பொருந்தா வாதத்தை முன் வைத்தனர்.
மூன்று நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்கைத்தான் விசாரிக்க முடியும் என்று ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து, தனது ஒரு சார்பு நிலையை மறைக்க, இப்படி ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டுள்ளது!

சுய முரண்பாடு!

நாடாளுமன்றம்தான் முடிவெடுக்கவேண்டும் என்ற அதன் நிலைப்பாடு சரியென்றால், மூன்று நீதிபதிகள், அய்ந்து நீதிபதிகள் விசாரித்தால் மட்டும் சட்டப்படி இது சரியாகுமா? இதைவிட சுய முரண்பாடு வேறு உண்டா?

இவ்வளவு சட்ட வலிமை, உச்சநீதிமன்றத்தின் ஆணை அடிப்படையில், தமிழ்நாட்டின் சம்பா பயிரைக் காக்க, குறிப்பிடும் அளவுக்காவது தண்ணீரைத் திறந்துவிடவேண்டும் என்பதையும் ஏற்காத கருநாடக அரசும், அதன் அனைத்துக் கட்சித் தலைவர்களும், முன்னாள் பிரதமர், முன்னாள், இன்னாள் முதல்வர்கள் எல்லோரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, சட்ட மன்றத்தை, இரு அவைகளை - அடிக்கடிக் கூட்டி - ஒருமித்துள்ளோம் தமிழ்நாட்டு உரிமைகளை மதிக் கத் தயாரில்லை; உச்சநீதிமன்ற ஆணையையும் ஏற்க மாட்டோம் என்று கூறும் நிலை கருநாடகத்தில்!

கருநாடகமும் - தமிழ்நாடும்!

ஆனால், நமது தமிழ்நாட்டில்...........? மகா வெட்கக்கேடு!

அத்தனைக் கட்சிகளும் ஓங்கி ஒலித்து, மீண்டும் மீண்டும் கூவினாலும், ஆளுங்கட்சி (அ.தி.மு.க.) அனைத் துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுப்பதில் திட்டமிட்ட பிடிவாதம் காட்டுகிறது!
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்திய நிலையில், தமிழக முதலமைச்சர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பொறுப்புகளை சட்டப்படி கவனிக்கும் மூத்த அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் குரலை ஓரணியில் திரண்டு ஓர் குரலாக ஒலிக்கலாம் என்று கேட்டதற்குப் பதில் வரவேயில்லை.

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிருக்கான நீர் வரத்து கேள்விக்குறியாகிவிடும் அபாய நிலையில், தனக்கு முழு விருப்பமில்லாவிட்டாலும், விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க, தனது கட்சித் தலைவர் கலைஞரின் அனுமதியோடு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (25.10.2016).

அதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கலந்துகொள்ள வில்லை. புரிகிறது - நியாயப்படுத்த முடியாவிட்டாலும்கூட!

கலந்துகொள்ளாவிட்டாலும் தேவையற்ற விமர்சனங்கள் தேவையா?

எதிர்க்கட்சிகளாக (சட்டமன்றத்தில் உள்ளே இல்லா விட்டாலும்) வெளியே உள்ள பா.ஜ.க. மற்றும் மக்கள் நலக் கூட்டணி (அது இப்போது சுருங்கிய கூட்டணி) நான்கு கட்சிகளும் ஏனைய பா.ம.க., தே.மு.தி.க. போன்ற சில கட்சிகளும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இவர்கள் கலந்துகொள்ளாவிட்டாலும்கூட பரவா யில்லை; தேவையற்ற விமர்சனங்களைச் செய்து, தங்களது நிலைப்பாட்டின் முரண்பாட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர் என்பது வேதனைக்குரியது! (வி.சி.க. தலைவரின் நிலை இதில் விலக்கு)

தீப்பிடித்து எரியும்போது தீயை அணைக்க முன்வர வேண்டிய நிலையில், வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நியாயம் - நேர்மை?

விவசாயிகளைக் கொண்ட அத்தனை  அமைப்புகளும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஓர் குரலில் கூட்ட முயற்சியை வரவேற்றார்களே - அதிலிருந்தாவது தங்களது கலந்துகொள்ளாத முடிவு சரியானதல்ல என்பதை கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சிகள் உணர வேண்டாமா?

தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் புதிய கண்டுபிடிப்பு

இதில் ஒரு விசித்திரம் வழியும் வேடிக்கை என்ன வென்றால், ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு, தி.மு.க.வுக்கு இக்கூட்டம் கூட்ட எந்த தார்மீக உரிமையும் இல்லை!’
தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர்களின் புதிய கண்டுபிடிப்பு இது.
அவர்கள் சிந்தனைக்குச் சில ஜனநாயக மரபுப்படியான கருத்துகளை முன்வைக்க விரும்புகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவருக்குரிய
சட்டப்படியான நிலை!

1. எதிர்க்கட்சித் தலைவர், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குரலைப் பிரதிபலிப்பவர் என்பதும், ஆளுங்கட்சிக்கு மாற்று - ‘நிழல் அமைச்சரவை அமைத்துச் செயல்படும்‘ உரிமை படைத்தவர் என்பதும், சட்டப்படியான அமைச்சர் தகுதியுள்ள ஜனநாயகப்படி உரிமை படைத்தவர் ஆயிற்றே - மறுக்க முடியுமா?

ஆளுங்கட்சி - இதுபோன்ற முக்கிய நெருக்கடியான தருணத்தில், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத் தைக் காப்பாற்ற - அவர்கள் வேண்டுகோளை ஏற்று கூட்டம் கூட்டுவது தார்மீக நெறிப்படியும், அரசமைப்புச் சட்டப்படியான கடமைப்படியும்கூட தேவையும், நியாய மும் அல்லவா?

2. அதுமட்டுமா? சபாநாயகர் தேர்வுக்குப் பின்னர் சட்டமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ஒரு பக்கமும், மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவரும்  அவரை அழைத்து நாற்காலியில் அமர வைக்கும் மரபு எதைக் காட்டுகிறது?

இதைப் புரியாதவர்களா இத்தலைவர்கள்?
இன்னொருவர்,இந்தக்கூட்டம்அரசியல்ஆதாயத் திற்காகக் கூட்டப்படுகிறது என்று கூறி, மேலும் இக் கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாத கட்சிப் பிரச்சினைகளை எல்லாம் கூறினார்!

பா.ஜ.க. நிலையையே எடுத்த அரசியல் கட்சிகள்!

முந்தைய நிலை தி.மு.க. - காங்கிரஸ் என்றெல்லாம் ஏதோ கூறுவது, அவரின் அரசியல் தடுமாற்றத்தைத்தான், காழ்ப்புணர்வைத்தான் காட்டுகிறதே தவிர, இன்றைய நிலையில் அவருக்குப் பெருமை சேர்க்க உதவாது!

‘கலந்துகொள்ளமாட்டோம்‘ என்று பா.ஜ.க.வினர் எடுத்த நிலையும், இவர்கள் எடுத்த நிலையும் ஒன்று என்கிறபோது, இவர்கள் மத்திய அரசின், கருநாடக அரசின் நிலைப்பாட்டிற்குத் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ துணை போகிறார்கள் என்றுதானே பொருள்?

தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் பேசுவது, அவர்களது தலைமை எடுத்த முடிவிற்கு ஏற்பத்தானே தவிர வேறில்லை. அதுபற்றி மேலும் விளக்கத் தேவையும் இல்லை.
இனியாவது முடிவை மாற்றிக் கொள்ளட்டும்!

நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும்; இனி தமிழ் நாட்டு உரிமை, வாழ்வாதாரம் என்ற ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தி, தங்களின் முடிவை மாற்றி, அடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டும்போது வந்து கலந்துகொண்டு, தங்கள்மீதான அரசியல் பழியைத் துடைத்துக் கொள்வார்களாக!

இப்படி எதிர்க்கட்சித் தலைவரால் கூட்டப் பெற்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களில், முதல் தீர்மானமே இக்கூட்டத்தின் பெருநோக்கையும், பெருந்தன்மையையும், ஜனநாயகத்தின் மாண்புகளையும் நினைவூட்டுவதாக அமைந்தது.

1. தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்டுக!

2. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட தமிழக அரசுக்கு மீண்டும் வேண்டு கோள் விடுத்துள்ள பாங்கே; இது அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகளால் கூட்டப் பெற்ற கூட்டமல்ல; மறந்துவிட்ட கடமைகளை மீண்டும் ஆளுங்கட்சிக்கும், இக்கூட்டத்திற்கு வர வாய்ப்பற்றுப் போனவர்களின் மறுசிந்தனைக்கும் உரியதாக அமைந்த பாங்கு, இவர்களின்  அரசியலுக்கு அப்பாற்பட்ட நனி நாகரிகம் காட்டுவதாகும்!

அரசியல் பிழைத்தோருக்கு அறம் ஒரு கூற்றம் என்பதை யாரும் மறக்கக்கூடாது.


கி.வீரமணி              
தலைவர்,   திராவிடர் கழகம்

சென்னை
26.10.2016 

Tuesday, October 25, 2016

இரண்டு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: நியாயமா? தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை


இலங்கையில் ஆட்சி மாறினாலும், பழைய காட்சிகள், கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன!

குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள், அவர்களை கைதிகளைப் போல தமிழர் வாழும் பகுதிகளிலேயே சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களாக - பெரிதும் இராணுவக் கண்காணிப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களாகவே - அவர்தம் வாக்குகளைப் பெற்றதா லேயே இராஜபக்சேவுக்கு எதிராக ஆட்சியைப் பிடித்த சிறீசேனா, ரனில் விக்ரமசிங்கே ஆகிய அதிபர், பிரதமர் தலைமையிலான ஆட்சியின் மனப்போக்கில் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிட வில்லை. இது வேதனைக்குரியது.
நெஞ்சைப் பிளக்கும் செய்தி

என்ன கொடுமை! நெஞ்சைப் பிளக்கும் செய்தி; யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை, எவ்வித காரணமும் இன்றி, சிங்களக் காவலர்கள் சுட்டுக் கொன்றுள்ள கொடுமை ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமையாகும்!

சிங்கள இனவெறியர்களின் போக்கும், தமிழர் களைப்பற்றிய நோக்கும் மாறவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டல்லவா?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜன், பவுன் ராஜ் சுலெக்ஷன் ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நிறுத்தச் சொன்னவுடன் நிறுத்தாமல் சென்றதாகக் கூறி, உடனே (சிங்கள) காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள்!

போர் முடிந்து 7 ஆண்டுகளுக்குமேல் ஆகியும், அரசியல் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்படாமல், கொடுமைக்கு ஆளாவதாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் இந்திய அரசு என்ன செய்கிறது?

இதுகுறித்து சர்வதேச மனித உரிமை ஆணையம், இந்திய அரசு கவலை கொள்ளவேண்டாமா?

இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு கோரத் தான் நமது இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சென்று பேசுகிறாரே தவிர, அங்குள்ள ஈழத் தமிழர் வாழ உரிமைபற்றியோ, அன்றாடம் அடித்து விரட்டப்படும் தமிழக மீனவர் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ பேசப் போயிருப்பதாகத் தெரியவில்லை.

நெஞ்சு பொறுக்குதில்லையே!


தமிழினம் நாதியற்றுப் போன இனமா? அய்.நா.வால் போர்க்குற்றம் பற்றிய விசாரணைக் கமிஷனின் வேகம்கூட மங்கி மங்கி வருகிறது! ஒப்புக்குச் சப்பாணியாகவே ஆகிவிட்டது!
தமிழ்நாட்டிலோ, எங்கும் அரசியல் பிரச்சினை; எதிலும் கட்சி - வாக்குக் கண்ணோட்டம். அதன் காரணமாக அவிழ்த்துக் கொட்டப் பெற்ற நெல்லிக் காய் மூட்டை போன்ற அவலம் தொடரும் நிலை!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

சுட்டது விபத்து என்று தப்பிக்கும் முயற்சியைக் கண்டனம் செய்யவேண்டாமா?


கி.வீரமணி 
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
24.10.2016



Monday, October 24, 2016

தந்தி தொலைக்காட்சியில் நடந்ததென்ன?


18.10.2016 அன்று தந்தி தொலைக்காட்சியில் "ஆய்த எழுத்து" நிகழ்ச்சியில் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியும், பிஜேபியைச் சேர்ந்த ராகவன் என்பவரும் பங்கெடுத்துள்ளனர்.
விவாதத்திற்கு இடையில் பிஜேபி ராகவன், கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களைப் பார்த்து கிறிஸ்தவர் என்று மத அடையாளத்தைச் சுட்டிக் காட்டினார். (அவர் கிறிஸ்தவரல்ல என்பது வேறு விஷயம்) அந்த இடத்திலேயே ஒருங்கிணைப்பாளர் குறுக்கிட்டு, ஒருவரை மதத்தைச் சொல்லி  அடையாளங் காட்டுவது தவறு என்று சுட்டிக்காட்டி  எச்சரித்திருக்க வேண்டும். அந்தக் கடமையை ஒருங்கிணைப்பாளர் அம்மணி செய்யத் தவறியது ஏன்?
திரு. கிருஸ்துதாஸ் காந்தி அவர்கள் தனது விவாதத்தில் "கடவுள் மறுப்பாளர்களுக்கு கருத்துக் கூற உரிமையுண்டு. கடவுள் மறுப்பாளர்கள், ராமரை செருப்பாலடிப்பது தவறு என்று சொல்வீர்களா?" என்ற வினாவை எழுப்பினார்.
அவ்வளவுதான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பிஜேபியினர் தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கமாகக் கையாளும் கூச்சலைப் போட ஆரம்பித்தார் திரு. ராகவன்.
"ராமரை அடிப்பது தவறு என்றால் இந்துக்களே குல தெய்வமாகப் போற்றும் இராவணனை எரிப்பது மட்டும் நீதியாகுமா?" என்று சொல்ல வருவதற்குள் அவர் பேச்சு இடைமறிக்கப்பட்டதால் ராமனை அடிப்பது என்பதை மட்டும் பெரிதுபடுத்தி அமர்க்களம் செய்துள்ளனர்.
நிகழ்ச்சியின் இடைவெளியிலும்கூட, தம் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் கிறிஸ்து தாஸ் காந்தி.
அத்துடன் விட்டு விடுவார்களா சங்பரிவார்க் கூட்டம்? இரவு முழுவதும், பொழுது விடிந்தும் தொலைப்பேசி மூலம் மிகக் கேவலமான முறையில் இழித்துப் பழித்தும், வன்முறை வார்த்தைகளாலும், சிறுமைப்படுத்தியுள்ளனர்.
ஆத்திரப்படாமல், தன் நிலைப்பாட்டைக் கண்ணியமாக எடுத்துச் சொன்னதோடு அல்லாமல் தமது வார்த்தை காரணமாக தூண்டி விடப்பட்ட அமைதியின்மைக்கு வழி வகுக்குமேயானால், அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியோடு மன்னிப்புக் கோரும் வகையில் செய்தி ஒன்றையும் வெளியிட்டார் கிறிஸ்து தாஸ் காந்தி அவர்கள். அது இந்து நாளேட்டில்கூட வெளிவந்தும் விட்டது. அதனை எடுத்து பலர் சமூக வலைதளங்களில்கூட பரப்பியும் உள்ளனர்.
இவ்வளவுக்குப் பிறகும் சங்பரிவார்க் கூட்டத்தால் தூண்டி விடப்பட்டு, கிறிஸ்து தாஸ் காந்தியின் கொடும் பாவியைக் கொளுத்தியுள்ளனர். காவல் நிலையங்களில் புகாரும் கொடுக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே 'தினமலர்' ஏடு தனக்கே உரித்தான விஷமத்தனத்தோடு "ராமரை செருப்பால் அடிப்பேன்; மாஜி அய்.ஏ.எஸ். அதிகாரி பேச்சு" என்று தலைப்பிட்டு, அந்த அதிகாரியின் இல்ல முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணையும் வெளியிட்டுள்ளதன் நோக்கம் என்ன?
அவர்மீது நேரடியாக வன்முறையைத் தூண்டும் போக்கிரித்தனம் தானே இதில் ஒளிந்திருக்கிறது.
தினமலரின் வன்முறை தூண்டிவிடும் இந்த நடவடிக்கைபற்றி பிரஸ் கவுன்சிலுக்குப் புகார் செய்ய வேண்டாமா?
பிஜேபியின் தேசிய செயலாளரான பார்ப்பனர் ஒருவர் தந்தை பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னபோது இந்தக் கூட்டம் என்ன செய்தது? எங்கே போனது?
பொது வாழ்வில் இதுபோன்ற அவமானங்களைத் துடைத்து எறிந்து விட்டுதான் பொதுப் பணியைத் தொடர்ந்தவர் தந்தை பெரியார்.
1944இல் கடலூரில், ரிக்ஷாவில் தந்தை பெரியார் சென்ற போது இந்தக் கூலிகளின் முன்னோர்கள் அவர்மீது செருப்பெடுத்து வீசவில்லையா? அந்த இடத்தில்தான் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் கருணானந்தம் கவிதை பாடவில்லையா? இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அவற்றையெல்லாம் புறங்கண்டுதான் இந்த இயக்கத்தின் கொள்கைகள் வெற்றி பெற்று வீறு நடை போட்டு வருகின்றன.
1971ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் போது, ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சென்ற தந்தை பெரியார்மீது ஜனசங்கத்தினர் கருப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் செருப்பை வீச, தந்தை பெரியாரை நோக்கி வந்த அந்த செருப்பை கழகத் தோழர் ஒருவர் லாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட ராமன் உருவத்திற்குச் சாத்துப்படி செய்தார். இதற்குக் காரணமானவர்கள் ஜனசங்கத்தினர் ஆனாலும் சேலத்தில் ராமனை திகவினர் செருப்பாலடித்தனர் என்றே பிரச்சாரம் செய்தனர். கூப்பாடு போட்டனர். அது சட்டப் பேரவைத் தேர்தல் நேரம் என்பதால் கோயில் கதவு அளவு சுவரொட்டிகளை நாடெங்கும் அச்சிட்டு ஒட்டி, இந்தப் பிரச்சினை மூலம் திமுகவைத் தோற்கடித்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.
முடிவு என்னவாயிற்று? 1967 தேர்தலில் 138 இடங்களை பெற்ற திமுக - ராமனை செருப்பாலடித்த திமுகவுக்கா ஒட்டு என்று மித்திரபேதம் செய்து பிரச்சாரம் செய்த பிறகு திமுகவுக்குக் கிடைத்த இடங்கள் 184. இதுதான் தமிழ்நாடு என்பதை இந்துத்துவா கூட்டம் உணர வேண்டும்.
இராமாயணக் கதையின்படி இந்த நாட்டில ராமன் செருப்பு 14 வருடம் ஆட்சி செய்திருக்கிறது என்பதை உணர வேண்டும் அதற்காக வெட்கப்பட வேண்டாமா?
மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதியை இந்த 2016-லும் கடைப்பிடிக்க விரும்புகிறார்களா?
ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லும் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. சம்பூகன் என்பவன் தவம் செய்தான் என்பதற்காக ராமன் அவன் தலையை வாளால் வெட்டிக் கொன்றானே; அதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன? சம்பூகன் சூத்திரன் (மனுதர்மப்படி விபச்சாரி மகன்) அவன் தவம் செய்யக்கூடாது வருண தர்மத்தைமீறினால் சூத்திரன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தானே ராமன், சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றான்.
அந்த ராமனை நாங்கள் மதிக்க வேண்டுமா? ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்று சொல்லும் இந்த இந்துத்துவாவாதிகள் இதன் மூலம் இந்த 2016-லும் நம்மைச் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று இழிவுபடுத்துவதாகத்தானே அர்த்தம்.
டில்லியில் ராம் லீலா நடத்தி இராவணன் உருவத்தை ஆண்டுதோறும் எரித்து வருகின்றனர். அதனைக் கண்டித்து தந்தை பெரியார் நினைவு நாளினையொட்டி (25.12.1974) சென்னைப் பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் இராவண லீலா நடத்தி ராமன் லட்சுமணன், சீதை உருவங்களை எரித்தோமே! நீதிமன்றமும் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்புக் கூறியதை நினைவூட்டுகிறோம்.
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பஞ்சமர் புரட்சி வெடிக்கட்டும்!
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
சூத்திரர் புரட்சி வெடிக்கட்டும்!
குறிப்பு: பார்ப்பனர்கள் ஒட்டு மொத்தமாக கைப்பேசிகளையும் சமூகவலை தளங்களையும் பயன்படுத்தித்தான் தாங்கள் விரும்புவதை பரப்புவதில் வேகத்தோடு வெறித்தனத்தைக் காட்டுகிறார்கள் அந்த உணர்வு நம் மக்களுக்கு வர வேண்டாமா? - சிந்திப்பீர்!
- கருஞ்சட்டை

மத்திய அரசின் துரோகம்!

சென்னையில் சிறப்பாக செயல்பட்டுவரும் ‘சிப்பெட்’ நிறுவனத்தை டில்லிக்கு மாற்றத் துடிக்கும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் - (கருநாடகத்துக்காரர்- காவிரி நீர்ப் பிரச்சினை யில் தமிழ்நாட்டுக்கு விரோதமாக, வெறித்தனமாக செயல் படக்கூடியவர்) அதன் கிளையைக் கன்னியாகுமரியில் திறக்கப்படுவதற்குப் பதிலாக ஆந்திராவிற்குக் கொண்டு சென்றுள்ளார்.
கச்சா ரப்பர் உற்பத்தியில் முதலிடம் இருக்கும் கன்னியா குமரி மாவட்டத்தில் சிப்பெட் நிறுவனம் தொடங்கவேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையாகும்.
இந்த நிலையில், தமிழகத்தின் இந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளி, கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 12 ஏக்கர் நிலத்தில், 50.73 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிப்பெட் கிளையைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் அனந்தகுமார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போன்றோர் கலந்து கொண்டனர்.

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை



தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் போன்ற வாழ் வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் குறித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு ஆற்றவேண்டிய சட்ட ரீதியான கடமையினை வலியுறுத்தும் தன்மையிலும் தமிழ்நாடு அரசே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. அதனை ஒரு பொருட்டாக தமிழ்நாடு அரசு எடுத்துக் கொள்ளவில்லை என்பது கெட்ட வாய்ப்பே!
ஆளும் கட்சி அந்தக் கடமையைச் செய்யத் தவறும் பட்சத்தில் அடுத்து அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியது சட்டமன்ற எதிர்க்கட்சியான தி.மு.க. வைச் சார்ந்தது என்பது ஒரு சரியான இயல்பான ஜனநாயக வழிமுறைதானே! அந்தக் கடமையைச் செய்ய தி.மு.க. முன்வந்ததற்காக கட்சி மாச்சரியங்களை ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு வரவேற்பதுதான் பிரச்சினையின் மீது கவலை கொண்டவர்களின் கடமையாக இருக்க முடியும்.

கருநாடக மாநிலத்தைப் பாரீர், கட்சிகளைக் கடந்து பொதுப் பிரச்சினைகளில் ஓரணியாக நிற்கிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறோம்; அப்படியொரு சந்தர்ப்பம் தமிழ்நாட்டிற்கு இப்பொழுது வரும்பொழுது ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு வந்து கைகோர்க்க வேண்டாமா?

உச்சநீதிமன்றம் ஆணையிட்டாலும் அதனை நிராகரிக்கும் துணிவு கருநாடகத்துக்கு வந்ததற்கே காரணம் -  அம்மாநில ஒற்றுமை,  சுருதிப் பேதம் காட்டாத ஒருமித்த உணர்வு.
அந்தப் பலம் நமக்கு இல்லாமல் போனதுதான், தீர்ப்பு இருந்தும் அதன் பலனை நாம் அனுபவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

அரசியலில் முடி பிளந்து விமர்சன வித்தாரம் காட்டக்கூடிய நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இந்தச் சிறிய விஷயம் உறைக்காமல் போனது ஆச்சரியமே!
இத்தகு முரண்பாடு ஒரு வகையில் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று உறுத்தல் ஏற்படாதது ஏன்? குறிப்பாக இடதுசாரிகள் இடம்பெற்ற நால்வர் அணி முரண்டு பிடிப்பது - எதிர்காலத்திற்கு மட்டுமல்ல - என்றென்றைக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களாக ஆகமாட்டார்களா?

நால்வர் அணியின் முக்கிய அங்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமைச் சகோதரர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்கள் காவிரிப் பிரச்சினையில் தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்தாரே - அதன் தன்மை என்ன? பொது வாழ்வில் நம்மைவிட இளையவரான சகோதரர் மானமிகு திருமாவளவனுக்கு உள்ள முதிர்ச்சி - பக்குவம் மூத்தவர்களுக்கு வராதது ஏன்?

கடந்தகால அரசியலைப் பேச ஆரம்பித்தால் நால்வர் அணி ஓர் அணியில் சேர்ந்திருக்க முடியுமா?

தனிப்பட்ட கோபதாபங்களால் தமிழர்களின் உயிர்ப் பிரச்சினையைச் சுட்டுப் பொசுக்கிட வேண்டாம் என்று கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

ஆளும் அ.இ.அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்புக் கொடுத்துள்ளார். இது ஏதோ தி.மு.க.வுக்கு அரசியல் ஆதாயம் என்று எதற்கெடுத்தாலும் ஓட்டுக் கண்ணாடிப் போட்டுப் பார்க்காமல், தமிழ்நாட்டுக்கு ஆதாயம் என்ற கண்ணோட்டம் வரவேண்டாமா?
ஏற்பட்டுள்ள ஆபத்தின் ஆழத்தினை ஆழமாக உணர்ந்து தந்தை பெரியார் கூறுவதுபோல - இனமானத்துக்காகத் தன்மானத்தைக் கூடத் துறக்கலாம் என்ற வழிகாட்டும் வெளிச்சத்தில் கையணைத்து அனைத்துக் கட்சிகளின், அமைப்புகளின் தலைவர்களோ, பிரதிநிதிகளோ, சங்கமித்து ஒருமித்த கருத்தை எட்டி, தமிழர்களுக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றுமாறு அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் உரிமையோடு, கனிவோடு வேண்டிக் கொள்கிறது.

இன்னும் இடையில் ஒரு நாள் இருக்கிறது - இணக்கமான முடிவுக்கு வருமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.


சென்னை
23.10.2016

Thursday, October 6, 2016

அரசியலா - அரசமைப்புச் சட்டமா?

காவிரி நதி நீர்ப் பிரச்சினை என்பது பல்வேறு நெருக் கடியான நிலையைத் தோற்றுவித்துவிட்டது. சட்டம், நியாயம், மரபு, நீதிமன்றத் தீர்ப்பு இவை அனைத்தையும் கருநாடக மாநில அரசு தூக்கி எறிந்ததால் ஏற்பட்ட வினைதான் இந்த நெருக்கடிக்குக் காரணம்.

இங்கு ஒரு சட்ட ஆட்சி என்பது உண்மை என்றால், சட்டப்படி நடந்திட கருநாடக அரசு கடமைப் பட்டிருக்கவில்லையா?

கருநாடக மாநில அரசு என்ன செய்து வருகிறது என்றால், ‘தனக்கு விஞ்சிதான் தானதர்மம்‘ என்று பாமரத்தனமாக பொதுவாக சொல்லுவார்களே - அந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்துக் கொண்டுள்ளது.

இப்பொழுது ஆளுகிற காங்கிரஸ் ஆட்சிதான் இந்தத் தவறினைச் செய்து இருக்கிறது என்று சொல்ல முடியாது. கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைப்பாட்டைத்தான் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகின்றன.

அதிக மழை பொழிந்தால், கருநாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அதற்குமேல் தாங்காது என்றால், உபரி நீரைத் திறந்துவிடும் ஒரு வேலையைச் செய்கிறது; எளிதாகப் புரியும் படிச் சொல்லவேண்டுமானால், தமிழ்நாட்டை வடிகால் பகுதியாகக் கருநாடகம் கருதுகிறது. இது ஓர் ஏமாற்றும், நயவஞ்சக நிலைப்பாடு அல்லவா!

கருநாடகத்தைப் பொருத்தவரையில் அரசியல் கட்சிகள் எத்தகைய அரசியல் உணர்வை வளர்த்து வருகின்றன என்பதுதான் முக்கியம்!

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைக் கொடுக்கக் கூடாது என்பதில் எந்தக் கட்சி ஆக்ரோசமாக குதியாட்டம் போடுகிறதோ, அந்தக் கட்சிதான் கருநாடக மக்களைக் காப்பாற்றும் கட்சி என்று கருநாடக மக்களுக்கு வெறியை ஊட்டி வளர்ப்பதில் கட்சிகளிடையே வரிந்து கட்டி நிற்கும் போட்டி இருந்து வருகிறது. அதனுடைய தீய விளைவுதான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

கருநாடக மாநில அரசியல் கட்சிகள் மட்டுமல்ல - மத்தி யில் ஆட்சியில் உள்ள கட்சியும் அதே பாணியில்தான் நடந்துகொண்டு வருகிறது என்பதுதான் வெட்கக்கேடு!
மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள காங்கிரசுக்கோ, பி.ஜே.பி.,க்கோ தமிழ்நாட்டில் போதுமான பலம் இல்லை; அதேநேரத்தில், கருநாடகத்தில் அந்த வாய்ப்பு உள்ளது. அதனால் மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் கருநாடகத்திற்கான ஒலிபெருக்கிகளாக செயல்படுகின்றன.

மத்திய அமைச்சர்களாக உள்ள கருநாடகத்தைச்  சேர்ந் தவர்களே ஒரு சார்பாக செயல்படுவது அப்பட்டமான சட்ட மீறல்தானே!

அதுவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட மத்திய அமைச்சர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது என்பது கண்டிப்பாக அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடியதுதானே!

இந்த நிலையில், தனது அமைச்சரவை சகாக்கள் சட்டத்தை தம் கையில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும்போது பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் மேற்கொள்ள வேண்டிய, செயல் படவேண்டிய கடமைப்படி நடந்துகொண்டாரா என்பது மிக முக்கியமான கேள்வி!

மத்திய அரசே, பிரதமரே எந்த அளவுக்கு எல்லை தாண்டிய தன்மையில் நடந்துகொண்டுள்ளனர்!

நடுவர் மன்ற தீர்ப்பு வழங்கி - அந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டு மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், சட்டப்படி அமைக்கவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை என்பது அதிமுக்கியமான அரசமைப்புச் சட்ட ரீதியான கேள்வியல்லவா!

காங்கிரஸ் ஏன் அந்தக் கடமையைச் செய்யவில்லை என்ற கேள்வியோடு, தனது ஆட்சி செய்யத் தவறிய கடமையை பட்டுத் துணிபோட்டு மறைத்துவிட முடியுமா? யார் செய்யத் தவறினாலும் குற்றம் குற்றமே!

அதுவும் உச்சநீதிமன்றம் தெளிவாக, திட்டவட்டமாக நான்கு நாள்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று கூறிய நிலையில், அதனை மத்திய அரசு சார்பில் வழக்காடிய தலைமை வழக்குரைஞர் ஏற்றுக்கொண்ட பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்த மாட்டோம் என்று அடங்காப்பிடாரித்தனமாக ஒரு மத்திய அரசு சொல்லுகிறது என்றால், இது ஒரு அடாவடித்தனமான மத்திய அரசு என்றுதானே முடிவு செய்யவேண்டும்.

அரசியல் சாசனத்தையே ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கும், அவிழ்க்கவே முடியாத பெருஞ்சிக்கலை மத்திய அரசே ஏற்படுத்தலாமா?

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறாரே - அவர் அதிகாரபலம் அற்ற வராக இருக்கலாம். பிரதமரை அழைத்து இதுகுறித்து விளக்க கேட்கவேண்டாமா? இந்தியாவில் நடக்கும் இந்த அரசியல் சாசனச் சிக்கலை மற்ற நாட்டவர்கள் கூர்மையாகக் கவனிக்கமாட்டார்களா? அதுவும் எல்லைப் புறங்களில் சில நெருக்கடிகள் நிலவும் ஒரு காலகட்டத்தில் அரசியல் சட்ட நெருக்கடியை மத்திய அரசு தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருப்பது நல்லாட்சிக்கான இலக்கணம் அல்லவே!

அரசியல் லாபம் முக்கியமா? அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு முக்கியமா?

முடிவு செய்யட்டும் பிரதமர்!

Tuesday, October 4, 2016

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பதா? ‘வேலியே பயிரை’ மேயலாமா?

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பது மத்திய அரசால், நாடாளுமன்றத்தால் அரசியல் சட்டப்படி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, மத்திய அரசினால் கெசட் செய்யப்பட்ட ஒன்று.

தற்போதைக்கு அது இயலாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியது - அசாதாரணமானது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அரசியல் சட்ட 292 ஆம் பிரிவின்படி ஏற்பட்ட தொடர் நிகழ்வு (செயல்படுத்த ஆணையிடும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு) என்பதால்தான், இதனை நான்கு நாளில் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசு இதனை ஏற்க இப்போது மறுப்பதன்மூலம், அரசியல் சட்டத்தின் கடமைகளைச் செய்யத் தவறும் ‘‘முதல் குற்றத்தை’’ அதுவே செய்ததாகாதா?

இது ஜனநாயகத்திற்கும் - கூட்டாட்சித் தத்துவத்திற்கும் விரோதமான போக்கு அல்லவா? தமிழ்நாட்டிற்கு மோடி அரசு இழைக்கும் பச்சை துரோகம் ஆகும்.

மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தால் அது வேலியே பயிரை மேயும் படு மோசமான, வன்மையான கண்டனத்திற்குரிய போக்காகும்.
மற்றவை விரிவாகப் பின்னர்.

- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
3.10.2016

கோட்சே சிலையை அகற்றாவிட்டால் கோட்சே உருவ எரிப்புப் போராட்டம்!

காந்தியார் பிறந்த நாளில் மீரத் நகரில் கோட்சேவுக்கு சிலையா?
கோட்சே சிலையை அகற்றாவிட்டால் கோட்சே உருவ எரிப்புப் போராட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள  முக்கிய அறிக்கை



காந்தியார் பிறந்த நாளில், குடியரசுத் தலைவர், பிரதமர் முதலியோர் காந்தியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதே நாளில், மீரத் நகரில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பனருக்குச் சிலை திறப்பதா? அந்தச் சிலையை அகற்றாவிட்டால் நாதுராம் கோட்சே உருவ எரிப்புப் போராட்டம் நடத்திட தேதி அறிவிக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வெளியிட்ட அறிக்கை வருமாறு.
மீரத் (உ.பி.) நகரில், கோட்சே சிலை திறப்பு விழாவை காந்தியார் பிறந்த நாளில் அகில பாரதீய ஹிந்து மஹா சபா - ‘‘திக்கர் திவாஸ்’’ என்ற பெயரில் கொண்டாடி மகிழ்கிறது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஏட்டின் செய்தி இது.

இதை எப்படி மத்திய - மாநில அரசுகள் அனு மதித்தன என்பது புரியாத புதிராக உள்ளது.

2014 இல் திறக்கப்பட முடியாத கோட்சே சிலை
2016 இல் அனுமதி பெற்றது எப்படி?


அதுமட்டுமா? காந்தியாரைக் கொன்ற மராத்திய சித்பவன் பார்ப்பனரான நாதுராம் விநாயக் கோட்சே யின் மார்பளவு (BUST) சிலையை உருவாக்கி 2014 இல் திறக்க முடியாததை, எவ்விதத் தங்கு தடையுமின்றி இப்போது ஆர்.எஸ்.எஸ். கூட்டுப் பரிவாரமான அகில பாரதீய ஹிந்து மகாசபா, ‘ஜாம் ஜாம்‘ என்று மேளதாளத்துடன் இப்போது செய்கிறது!
அதன் ‘‘தேசிய’’  உதவித் தலைவரான பண்டிட் அசோக் சர்மா என்ற பார்ப்பனர், மிக்க மகிழ்ச்சியுடன், ‘‘இந்தியர்கள் இனி காந்தி வழியில் நடக்கக்கூடாது; கோட்சேவைத்தான் வணங்கவேண்டும்‘’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்!

அதுமட்டுமா? இந்த அமைப்பின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநிலத் தலைவரான யோகேந்திரவர்மா என்பவர், ‘‘இந்தச் சிலைக்கான செலவு  45,000 ரூபாயை, நானே கொடுத்துவிட்டேன்; இம்மாதிரி நல்ல காரியங்களைச் செய்ய, மற்றவர்களிடம் பணம் வசூலிப்பது முறையல்ல’’ என்றும் இதோபதேசம் செய்துள்ளார்!

பச்சையான இந்துத்துவா ஆட்சியா?


பச்சையான இந்துத்துவா ஆட்சி நாட்டில் நடைபெறுகிறது என்பதற்கும், இந்து மதவெறி எந்த அளவிற்குக் கொடி கட்டிப் பறக்கும் கொடுமையின் உச்சத்திற்குச் சென்றுள்ளது என்பதற்கும் இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையா?
அதுவும் காந்தியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை நாடே கொண்டாடும் நிலையில், மத்திய - மாநில அமைச்சர்கள் காந்தியாரின் படத்திற்கும், அவரது சிலைகளுக்கும் மாலை போட்டு மரியாதை செய்யும் தருணத்தில், கோட்சே சிலையைத் திறக்க அனுமதித்து இருப்பது, எவ்வித தங்கு தடையும் செய்யாமல் அகமகிழ்வுடன் நடந்திருப்பது பச்சையான இரட்டை வேடம் அல்லவா?

நாட்டின் மதச் சார்பின்மை கொள்கைக்கு - வன்முறை இந்துப் பயங்கரவாதப் போக்கு நேர்மாறானது அல்லவா - இந்த கோட்சே சிலை திறப்பு - அரசமைப்புச் சட்டத்துக்கே அறைகூவல் அல்லவா!

ஒரு பக்கம் காந்தியார் சிலைக்கு மாலை - இன்னொரு பக்கம் கோட்சேவுக்குச் சிலையா?

பிரதமரும், மற்றவர்களும் காந்தியார் புகழ் பஜனையும் பாடுவது, இப்படி காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலையெடுப்பவர்களையும் அனுமதித்து மகிழ்ச்சியில் திளைப்பது இரட்டை வேடம் அல்லவா!

நாடு எங்கே போகிறது?


நாட்டில் உள்ள அத்துணை முற்போக்காளர்களும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களும் வெகுண்டெழுந்து உரத்த குரலில் இதைக் கண்டிக்க உடனடியாக முன்வரவேண்டாமா?
கோட்சே உருவ எரிப்புப் போராட்டம்!

இப்போக்குக்கு திராவிடர் கழகம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அச்சிலை அகற்றப்படாவிட்டால், தமிழ்நாடு முழு வதிலும் கோட்சே உருவ எரிப்பு அறப்போராட்டம் நடத்தி, மதவெறி ஒழிப்புப் போராட்டமாக அதனை நடத்திட வெகுவிரைவில் ஒரு தேதி குறிப்பிட வேண்டி வரும்.

அதைத் தவிர்க்க, மத்திய - மாநில அரசுகள் உடனடியாக அச்சிலையை அகற்றிட ஆணை பிறப்பித்துச் செயல்பட வைக்கவேண்டும்.

திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்பு!
கோட்சே சிலைக்கு அனுமதியா?


திருவள்ளுவருக்கு உத்தரகாண்டில், அரித்துவாரில் சிலை திறக்க எதிர்ப்பு -கோட்சே சிலை - அதுவும் காந்தியார் பிறந்த நாளில் திறப்பு என்றால், என்ன பொருள்?

அந்தோ, மதச்சார்பின்மையே உன் கதி இப்படியா?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
3.10.2016 

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...