Total Pageviews

Saturday, May 27, 2017

கலைஞரிடம் உள்ள போர்க் கருவிகளை தளபதி ஸ்டாலின் கூர்மையாகப் பயன்படுத்துவார்

செய்தியாளர் கேள்விக்குத் தமிழர் தலைவர் பதில்
சென்னை, மே 26, கலைஞரிடம் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா தந்த போர்க் கருவிகளை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சரியாகப் பயன்படுத்துவாரா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பயன்படுத்துகிறார், அவசியம் வரும்போது இன்னும் கூர்மையாகப் பயன்படுத்துவார் என்று பதில் சொன்னார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். சென்னை பெரியார் திடலில் இன்று (26.5.2017) நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
உறவுக்குக் கைகொடுப்பது என்பது வேறு;
உரிமைக்குக் குரல் கொடுப்பது என்பது வேறு.
செய்தியாளர்: மத்திய அரசுக்கு ஏன் இந்த   அள விற்குப் பணிந்து போகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பதில் சொல்லும்பொழுது, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது - அதற்காக ஒரு இணக்கமான போக்கு வேண்டும் என்பதற்காகத்தான், முதலமைச்சர், பிரதமரை சந்திக்கிறார் என்று விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: பிரதமரை, ஒரு முதலமைச்சர் சந்திப்பது தவறு என்று சொல்லக்கூடிய அளவிற்கு அரசியல் சூனியங்கள் அல்ல நாங்கள்; ஏற்கெனவே நான் சொன்னேன், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது ஒரு அற்புதமான வாக்கியத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள் - நடைமுறைப்படுத்தினார்கள்.
உறவுக்குக் கைகொடுப்பது என்பது வேறு;
உரிமைக்குக் குரல் கொடுப்பது என்பது வேறு.
உதவி கேட்பது என்பது வேறு. அதேநேரத்தில், அதற்காக அடிமையாக மாறுவது என்பது வேறு.
ஜி.எஸ்.டி. முறையை அமல்படுத்தினால், மாநில வருவாயே குறையவிருக்கிறது. ஆகவே, எங்கோ இருந்து வரும் பணம் அல்ல - மத்திய அரசு நிதி என்பது - அது மக்களுடைய பணம்தான்.
இன்னுங்கெட்டால், ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி.ராமாராவ் அவர்கள் மிக அழகாக சொன்னார்,
ஆளுவதற்கு உண்மையில் மக்கள் இருப்பது மாநில அரசுக்குத்தான். மத்திய அரசு என்பது  ஒரு கற்பனை என்று சொன்னார்.
நம்முடைய வருமானம்தான் அங்கே செல்கிறது. நாம் கொடுக்கும் வருமான வரிதான். நாம் அவர்களிடம் தருமம் கேட்கவில்லை, பிச்சை கேட்கவில்லை. நம் மக்களிடமிருந்து வசூலித்த வரியைத்தான் - நமக்கு நிதியாக தருகிறார்கள்.
உதவி கேட்பது என்பதோ, நிதி உதவி கேட்பது என்பதோ வேறு. அது எங்களுக்குப் புரியும். அப்படிப் பார்த்தால்கூட, அதில் வெற்றி பெற்று இருக்கிறார்களா? 40 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்கள்; கிடைத்தது என்ன? 1748 ஆயிரம் கோடி ரூபாய்தான். அதனு டைய அடிப்படை என்ன? இவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்களா? கெட்ட வாய்ப்பாக, அதிலும் கூட இவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வருத்தத் திற்குரியது - கண்டனத்திற்குரியது.
கனவு காணுகின்ற சிலர் உள்ள தமிழகம்
செய்தியாளர்: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர், "கழ கங்கள் இல்லாத தமிழகம் - கவலையில்லா தமிழகம் - பா.ஜ.க. ஆளுவோம்" என்று சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார்களே, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர் ஆசிரியர்: கனவு காணுகின்ற சிலர் உள்ள தமிழகம் என்பதையும் அதனோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
முதலில் தமிழ்நாட்டை காப்பாற்றுவோம்
செய்தியாளர்: பா.ஜ.க.விற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போகிறோம் மக்களைத் திரட்டி என்று சொல் கிறீர்களே, இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தப் போகிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: எங்களுக்குத் தமிழ்நாடுதான் முக்கியம். முதலில் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவோம். பிறகு, இந்தியா, தானாகவே தமிழ்நாட்டைப் பார்த்து, காப்பாற்றிக் கொள்ளும். அதே நேரத்தில் இதற்குப் பெரியார்
கொள்கை இந்தியா எங்கும் தேவைப் படும்.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
செய்தியாளர்: தமிழக சட்டப்பேரவையில் முன் னாள் முதலமைச்சர் படத்தினை திறப்பதற்காக பிரதமர் மோடியை முதலமைச்சர் அழைத் திருக்கிறாரே, குற்றம் சாட்டப்பட்டவரின் படத்தினை சட்டப் பேர வையில் திறக்கலாமா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: குடியரசுத் தலைவர் காஞ்சி புரம் வருவதற்காக சுற்றுப் பயணம் திட்டம் போட் டார்கள் சென்ற வாரம். ஏற்கெனவே, சங்கராச் சாரியார் கொலை வழக்கில் சிக்கி, 82 பிறழ் சாட்சியங்களை வைத்துதான் வெளியில் வந்தார். அதற்குப் பிறகு புதுவை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வில்லை. ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் கேட்டார்கள். இப்படி இருக்கும் பொழுது, ஒரு கொலைக் குற்றவாளி இருக்கின்ற மடத்திற்கு குடியரசுத் தலைவர் வரலாமா? அவர் வருவது மதச்சார்பின்மைக்கும் கேடு - நியாயத்திற்கும் கேடு என்று விடுதலை எழுதியது - திராவிடர் கழகம் சுட்டிக்காட்டியது. ஒத்தக் கருத்துள்ளவர்களும் சுட்டிக்காட்டினார்கள்.
குடியரசுத் தலைவர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்தார். மோடி என்ன செய்வார் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
முதலில் சொல்லியது திராவிடர் கழகம்தான்
செய்தியாளர்: சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்தபொழுது, நீங்கள் அதனை வரவேற்றீர்கள். தமிழர் தமிழ்நாட்டை ஆளலாம் என்றும் வரவேற்றீர்கள். இப்பொழுது அ.தி.மு.க. அணியினர் பா.ஜ.க.வோடு இணக்கமாக இருக்கிறது என்கிற ஒரு குற்றச்சாட்டை சொல்கிறீர்கள். இந்த நேரத்தில், சசிகலா இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: முதலில் உங்கள் கேள்வியே தவறு. அந்த இரண்டு அணியும் பிரியக்கூடாது என்பதற்காகத்தான் நான் அதனை சொன்னேனே தவிர, அவர்கள் வரவேண்டும் என்கிற கருத்தில் சொல்லவில்லை.
அ.தி.மு.க. இரண்டாக உடைப்பதற்கு மத்திய பி.ஜே.பி. அரசு முயற்சி செய்கிறது என்று முதலில் சொல்லியது திராவிடர் கழகம்தான் - இன்றைக்கு அதுதான் நடந்திருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டித்தான், இந்தப் பிளவு ஏற்படாமல் இருப்பதற்கு  அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதனைச் சொன்னோம்.
தமிழகத்தில் தற்போதுள்ள  ஆட்சியின் எல்லையற்ற பலகீனத்தைக் காட்டுகிறது
செய்தியாளர்: ஊடகத்துறையில் பேசுகின்ற பா.ஜ.க.வினர் தமிழகத்தை நாங்கள்தான் ஆட்சி செய்வோம் என்று சொல்கிறார்களே, இது எதைக் காட்டுகிறது?
தமிழர் தலைவர் ஆசிரியர்: இது எதைக் காட்டுகிறது என்றால், தமிழகத்தில் தற்போதுள்ள  ஆட்சியின் எல்லையற்ற பலகீனத்தைக் காட்டுகிறது.
பெரியார் கொடுத்த போர்க் கருவி அண்ணாவிடம், அண்ணா கொடுத்த போர்க்கருவி கலைஞரிடம்
செய்தியாளர்: தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மீண்டும் உடல்நலம் தேறி பணிகளைத் தொடர வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் இப்பொழுது பா.ஜ.க.  கால் ஊன்ற ஆசைப்படும்  சூழல் இருக்கிறது. இப்பொழுது கலைஞர் அவர்கள் அவ ருடைய பணிகளை செய்ய முடியாத சூழல் உள்ளதே?
தமிழர் தலைவர் ஆசிரியர்: கலைஞர் அவர்கள் பேசவேண்டிய அவசியமில்லை. கலைஞர் அவர்கள் நடந்துகாட்டிய, வகுத்துக்காட்டிய வியூகங்கள் அப் படியே இருக்கின்றன. அந்த வியூகங்கள், கருவிகள், போர்க் கருவிகள் அப்படியே இருக்கின்றன. அந்தப் போர்க் கருவிகள், பெரியார் கொடுத்த போர்க் கருவி அண்ணா கொடுத்த போர்க்கருவி கலைஞரிடம்  இன்னமும் பளிச்சென்று இருக்கிறது. எனவேதான், ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர்தான் முக்கியமே தவிர, ஆயுதத்தை சில நேரம் பயன்படுத்தலாம், சில நேரம் பயன்படுத்தாமல் வைக்கலாம் - என்றாலும்,
ஆயுதங்கள், ஆயுதங்களே!
செய்தியாளர்: ஆயுதங்களை சரியாகப் பயன் படுத்தவில்லை - செயல்படவில்லையே?
தமிழர் தலைவர் ஆசிரியர்: செயல்படவேண்டிய நேரத்தில் ஆயுதங்கள் சரியாக செயல்படும். காரணம், நாம் எந்த ஆயுதங்களை எடுக்கவேண்டும் என்பதை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்.
அவசியம் வரும்பொழுது இன்னும் கூர்மையாகப் பயன்படுத்துவார்
செய்தியாளர்: தி.மு.க. செயல் தலைவர் அந்த ஆயுதங்களை சரியாகப் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: பயன்படுத்துகிறார். அவசியம் வரும்பொழுது இன்னும் கூர்மையாகப் பயன்படுத்துவார்.
செய்தியாளர்: பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது, அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர் ஆசிரியர்: இதனை வரவேற்று நாங்கள் அறிக்கை கொடுத்திருக்கின்றோம். முதன் முதலில் அண்ணா நூலகத்திற்கு உயிர் வந்திருக்கிறது. அதற்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், பள்ளி கல்வித் துறையில் ஒரு நல்ல அதிகாரி வந்திருக்கிறார். அவருக்குரிய ஒத்துழைப்பை அந்தத் துறை அமைச்சர் கொடுக்கிறார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு துறை இருக்கிறது என்றால், அது பள்ளிக்கல்வித் துறைதான். அதுபோன்ற அதிகாரிகளும், சகாயம் போன்ற அதிகாரிகளும் வந்தால், ஆட்சி சிறப்பாக இருக்கும் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.
செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது, பற்றி?
தமிழர் தலைவர் ஆசிரியர்:  அவரே இன்னும் முடிக்கவில்லை, அதனால் வேற விஷயத்தைப்பற்றி கேள்வி கேளுங்கள்.
ஆணவக் கொலை என்கிற பெயரையே நாங்கள்தான் கொண்டு வந்தோம்!
செய்தியாளர்: மத்திய பி.ஜே.பி. ஆட்சி மூன்றாண்டுகளைக் கடந்திருக்கிறது; தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அரசு நூறு நாள்களைக் கடந்திருக்கிறது. இந்நிலையில், மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.வும் சரி, தமிழகத்திலும் சரி, ஜாதி ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;  ஆணவப் படுகொலையினால் இறக்கிறார்கள் - இதனைத் தடுக்க திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியில்லை என்றால், தமிழகத்தை ஆள்பவரின் தவறா இது?
தமிழர் தலைவர் ஆசிரியர்: உங்களுடைய கேள்வியே தவறு. திராவிடர் கழகம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்பொழுது கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறது. போராட்டங்களை நடத்தியிருக்கிறது. நாங்கள் என்ன அதிகாரத்திலா இருக்கிறோம்? அதிகாரத்தில் இருப்பவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டி, செயல்பட வைப்பதுதான் எங்களுடைய வேலை. அதற்குத்தான் பிரச்சாரம் செய்கிறோம்; கண்டனக் கூட்டங்களை நடத்துகிறோம். அதற்காக தனிச் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறோம். தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
85-க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடைபெற்று இருக்கிறது. அந்தக் கொலையை நியாயப்படுத்தவில்லை நாங்கள். 200 கலப்புத் திருமணங்கள் நடைபெற்று, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, அது  கண்களுக்குத் தெரியவில்லையா? எங்கள் கொள்கை தோற்றுப் போய்விட்டது என்று காட்டுவேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய பேர்  ஊடுருவியிருக்கிறார்கள். அதனால், அப்படி காட்டுகிறார்கள். ஒரு ஆணவப் படுகொலை நடந்தாலும் அதனைக் கண்டிக்கவேண்டும். அது வேறு விஷயம்.   5 ஆயிரம் கார்கள் பாதுகாப்பாக சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 5 கார்கள் விபத்துக்கு ஆளாகின்றன. திருப்பதி கோவிலுக்குச் செல்கிறவர்களும் விபத்திற்கு ஆட்படுகிறார்கள் - அதற்காக யாரும் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. கவுரவக் கொலை என்று சொல்லாதீர்கள் என்று சொல்லி, ஆணவக் கொலை என்கிற பெயரையே நாங்கள்தான் கொடுத்தோம்.
அதுமட்டுமல்ல, இன்னமும் அதனைக் கண்டித்து, மத்திய அரசும், மாநில அரசும் அதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம், ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் எங்களுடைய இயக்கம்.
கலைஞரின் வைர விழா அழைப்பிதழ்!
செய்தியாளர்: தி.மு.க. தலைவர் கலைஞரின் வைர விழாவிற்கான அழைப்பிதழை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள் பலருக்கு கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே...?
தமிழர் தலைவர் ஆசிரியர்: இந்தக் கேள்வியை கேட்கவேண்டியது, விழா நடத்துகிறவர்களிடம்தானே தவிர, என்னிடம் அல்ல. அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும். பல காரணங்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காரணத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர்களிடம்தான் திருப்பிக் கேட்கவேண்டுமே தவிர, அதற்கு நான் விளக்கம் சொல்வது நன்றாக இருக்காது.
மடியில் கனம்; வழியில் பயம்!
செய்தியாளர்: தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கின்ற முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் சரி அவர்கள்மீது உள்ள குற்றச்சாட்டினால்தான், மத்தியில் உள்ளவர்கள் இவர்களை ஆட்டுவிக்கிறார்கள் - நீங்கள் குறிப்பிடுவதுபோல அந்தக் குற்றச்சாட்டினால்தான் இவர்கள் அடிமைகள்போல் இருக்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு உள்ளவர்களை விலக்கி, புதியவர்களை நியமிக்கவேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துகிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: பதவி சுகம் கண்டவர்கள் யாரும் விலகமாட்டார்கள்.  மடியில் கனம், வழியில் பயம்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (2)

 பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையில் பரிதிமாற் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி...
அவ்வளவு சிறப்பான புத்தகம். அதனை அவரே மொழி பெயர்க்க வேண்டும் என்றும், அதனைத் தாங்களே வெளியிடுவதாகச் சொல்லித் தமிழில் இந்து முக்காலி என்று எழுதியதை உண்மை விளக்கம் பதிப்பகம் எனப் பெயரிட்டு வெளியிட்டார் என்றால் நம் தமிழர் தலைவரின்உள்ளம் எவ்வளவு பேருள்ளம்.
அதில் மக்களிடையே தோன்றும் பிணக்குகள் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு தவிர்க்க முடியாத அறிவு யாதெனில் விஞ்ஞான ரீதியானதும் பொது நோக்குடைய கல்வியே ஆகும் என்பார் சுப்பிரமணியனார்.
இந்துத்துவா என்று நாம் கூறுவதினுடைய மூன்று நிறுவனங்கள் அடிப்படையானவை என்று கூறி அந்த மூன்று நிறுவனங்கள் ஜாதி வேறுபாடுகள், கூட்டுக்குடும்பம், கர்மா, இந்த மூன்றும் அகற்றப்பட்டால் இந்துத்துவத்தின் தன்மையே மாறிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் சுப்பிரமணியன்
ஆசிரியர் பற்றி பேராசிரியர் மனந்திறந்து எழுதியவை
“உண்மையான நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் ஒருவர் வீரமணி அவர்கள் முக்கிய மானவர். உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிக்கு வருகிறவர். எனது இரண்டு நூல்களை அவர் செலவில் அச்சிட்டு வெளியிட்டார். அவர் தான் தஞ்சையில் நிறுவியுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் பல சான்றோர்களின் முன்னிலையில் ஒரு தனி நிகழ்ச்சியில் தலை சிறந்த அறிவுக்கருவூல செவ்வியாளர் என்று விருது அளித்து கவுரவித்தார். இது 2008 செப்டம்பர் திங்களில் நிகழ்ந்தது” என்று எழுதியிருக்கிறார். தந்தை பெரியார் இயக்கத்தில் பார்ப்பனர்களுக்கு இடமில்லை. ஆனால் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டி.லிட்பட்டம் வழங்கித் தகுந்தவர்களைப் பாராட்டும்.
170 நூல்களில் Sanfam Polity சங்க காலத்தை கி.மு. 3 முதல் 3 வரை என வரையறை செய்த சிறப்பான படைப்பு.
கீழ்க்கண்ட நூல்களில் சர்ச்சைக்குரியவை
1) Hindu Tripod
2) Brahmin in Tamil Country
3) A Psychobiography of C.Subramania Bharilss
4) Gandhi and his associates
5) Epic Muslimks
6)  தர்மதேவதை
7) திருக்குறள் கட்டுரைகள்
தர்மதேவதையை மட்டும் சுட்டிக்காட்டுவேன் நேரமின்மையால்
இக்கட்டுரையில் துரோணர் ஏகலைவனிடம் குருதட்சணையாகக் கட்டை விரலைக் கேட்கிறார். இதற்கு ஏகலைவன், “எனது வலது கட்டை விரலால் உங்களுக்கு ஆகக்கூடியது ஒன்றுமில்லை. நான் வேட்டை ஆடி ஜீவனம் செய்பவன். கொடுக்க முடியாது “என்று மறுக்கும் விதத்தில் ஏகலைவன் கதையையே மாற்றி இதுதான் தர்மம் என்று எழுதிய துணிச்சல்காரர் பேரா.சுப்பிரமணியன்.
கொள்கை அடிப்படையில் ஆசிரியர் அவர் களுக்கு முற்றிலும் மாறுபட்டவர். ஆனால் அவர் நட்புடன் பழகியமைக்கு ஒரு நிகழ்வு.
Psycho Biography of C.Subramania Bharathiar எனும் புத்தகம் ஒன்றை எழுதித் தம் மகன் சுந்தரேசனிடம் கொடுத்து “நீ வீரமணி வீட்டிற்குச் செல். அங்கே அவருடைய வாழ்விணையர் இருப்பார். நான் கொடுத்தேன் என்று சொல்லி என்னிடம் பேசச்சொல். இல்லையென்றால் பார்க்க வேண்டும் என்று சொல்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
அவருடைய மகன் சுந்தரேசன் அவர்களும் ஆசிரியருடைய இணையர் திருமதி மோகனா அம்மையாரிடம் வந்து புத்தகத்தைக் கொடுத்திருக் கிறார். அந்த ஆங்கிலப் புத்தகத்தில்,
“DEDICATED TO Mrs. MOHANA VEERAMANI. A MODEL REPRESENTATIVE OF RESPECTED WOMANHOOD
என்று போட்டிருக்கிறார்.
காலமானபோது
பேராசிரியர் காலமானபோது சென்னையிலிருந்து இறுதி அஞ்சலி செலுத்த உடுமலைப்பேட்டை சென்ற ஆசிரியர், பார்ப்பனராயிற்றே, பார்ப்பனர்கள் இறந்துவிட்டால், தாயானாலும், தந்தையானாலும் வீட்டிற்கு வெளியே கிடத்திவிடுகிறார்கள். அது டெட்பாடி அவ்வளவுதான் என்று எண்ணி அங்கே - சென்று பார்த்தால் கண்ணாடிப் பேழையில் உடல் இருந்தது.
அங்கே தலைப்பகுதியில் மறைந்த பேராசிரியரின் வாழ்விணையர் படம், பக்கத்திலேயே ஆசிரியரும், அவருடைய வாழ்விணையரும் இருக்கும் படம். அதைப்பார்த்தபோது ஆசிரியரின் கண்கள் பனித்து விட்டன.
அவருடைய மகன் சுந்தரேசன் சொன்னது. அப்பா நான் இறந்தால் இந்த மாதிரி முறையில் தான் செய்ய வேண்டும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. அவர்கள் படம் இருக்க வேண்டும் “கடைசியாக என்னுடன் அவர்கள் இருந்தார்கள் என்ற எண்ணம் வரவேண்டும்“ என்று சொல்லியிருக்கிறார் பேராசிரியர். உண்மையில் உணர்வூட்டமான நிகழ்வு.
தோழர்
ஈ.வெ.ரா.நாகம்மையார்
தந்தை பெரியார் வாழ்க்கைச் சரித்திரத்தில் முன் பகுதியை நிறை ஏற்படுத்தியவர் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார். அடுத்த பகுதியில் நிறை செய்தவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்.
அன்னை நாகம்மையார் வரலாறு திராவிட இயக்க முன்னணிப் பெண்மணி ஆனபோதிலும் இருட்டில் இருக்கிறது. எனவே தான் இந்த அறக்கட்டளைப் பொழிவிற்கு நாகம்மையார், மணியம்மையார் ஆகி யோரைத் தலைப்பாக் கொண்டேன்.
நாகம்மையார் நன்கு அறியப்படாதவர், அவரு டைய தொண்டு, பணி, சிறப்பு குறித்து, திராவிடர் கழகத் தோழர்களே நன்கு அறியவில்லை. மணியம்மையார் தவறாக விமரிசிக்கப்பட்டவர்.
இருவர் வாழ்க்கை வரலாற்றையும் தோழர் ஈ.வெ.ரா.நாகம்மையார், தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் என இருபெரும் நூல்களைப் படைத்திருக்கிறேன். அன்னை நாகம்மையார் சுயமரியாதை இயக்கத் தாய் என்றால் அன்னை மணியம்மையார் திராவிட இயக்கத்தாய். இருவருக்கும் உள்ள ஒற்றுமை, இந்த இருவரும் இல்லை என்றால் நம் சமுதாயத்திற்குத் தந்தை பெரியாரின் தொண்டு இல்லை. பெரியாரே இல்லை. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றும் அல்ல. ஆம்! பெரியாரே இல்லை, சமூகநீதி இல்லை. நாம் எல்லாம் படிப்பு, பதவி பெற வாய்ப்பு இல்லை.
இருவருக்கும் உள்ள வேறுபாடு என்றால் - அன்னை நாகம்மையார் தேசிய இயக்கமும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி - இரண்டு இயக்கங்களும் கொண்டாட வேண்டிய பெண்மணி.
அன்னை மணியம்மையார் திராவிட இயக்கம் கொண்டாட வேண்டிய தியாக மெழுகுவர்த்தி. தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுக்காலம் வாழவைத்துத் தன் வாழ்க்கையை 58 ஆண்டுக்குள் சுருக்கிக் கொண்டவர்.
நாகம்மையார் வாழ்க்கை ஏட்டின் இரு பகுதிகளில் அவர் வாழ்ந்த 48 ஆண்டுக்கால வாழ்க்கையில் முதல் பகுதி தேசிய இயக்க வீராங்கனை. இரண்டாம் பகுதி சுயமரியாதைத்தாய்.
திரு. வி.க. சுருக்கமாகக் குறிப்பிடுவதே இதற்குச் சான்று. “நாகம்மையார் பெண்மைக்கு ஓர் உறையுள். வீரத்திற்கு ஒரு வைப்பு. காந்தியத்திற்கு ஓர் ஊற்று. சமூகநீதிக்கு ஒரு தூண். சாதியத்திற்கு எதிரான வீரவாள்”.
இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்த ஆண்டில் பிறந்தவர் என்று மட்டும் யூகிக்கின்ற அவர் தமிழ் நாட்டுக் காங்கிரசின் முதல் பிரதேசக் காங்கிரசு உறுப்பினர். இது வரலாற்று உண்மை.
நாகம்மையார் யார்?
தந்தை பெரியாரே கூறக்கேட்போம் “நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும், எனக்கு வாழ்வில் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்“.
1933இல் நாகம்மையார் உயிரோடிருந்த வரை யிலும் தந்தை பெரியார் இல்லம் எப்பொழுதும் விருந்துக் கூடமாகவே இருந்தது. ஏனென்றால் நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே.
ஒன்று தந்தை பெரியார் எப்பணியில் ஈடுபட் டாலும் தானும் உறுதுணையாக இருப்பது.
இரண்டு தம் இல்லம் வரும் எல்லோருக்கும் முகஞ்சுளியாது உணவு வழங்குவது.
அதனாலே தான் தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தவரை அன்னை நாகம்மையார் பட்டாடை துறந்து முரட்டுக் கதர்ச்சேலையை அணிந்தார்.
1921இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக் காந்தியிடம் அப்போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று மண்ணுருண்டை மாளவியா எனத் தந்தை பெரியார் கூறியவர் கூறியபோது அது என் கையில் இல்லை, ஈரோட்டில் இரு பெண்கள் கையில் என அதில் ஒரு கை நாகம்மாள் என்பது இன்று நாடறிந்த செய்தி.
நாடறியாத முதல் செய்தி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முதல் பெண்மணி. 4.12.1923 திருச்சி தெப்பக்குளம் முனிசிபல் சத்திரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசின் முதல் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5.12.1923 சுதேசமித்திரன் வெளியிட்ட செய்தி இது.
அடுத்த இரண்டாவது நிகழ்ச்சியைத் திரு. வி.க.வே கூறக்கேட்போம்.
“வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூடினார்.
வைக்கம் வீரர் என்று தந்தை பெரியாரைப் பாராட்டுகிறோம். ஆனால் வைக்கம் வீராங்கனை நாகம்மையாரைக் குறிப்பிடத்தவறுகிறோம்.
தந்தை பெரியார் வைக்கம் அறப்போரில் ஒரு மாதம் சிறைப்பட்டு விடுதலை ஆனதும், பிரஷ்ட உத்தரவு போடப்பட்டு மீறியதற்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று திருவாங்கூர் சிறையில் அடைக்கப்ட்டார்.
அப்போது நாகம்மையார் விடுத்த அறிக்கை 12.9.1924 நவசக்தியில் (பக்கம் 8) வெளியானது.
“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு 11.9.1924 மறுபடியும் இராஜத்துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாக சொல்லி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அவர் திரும்பத்திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள்வளர வேண்டும் என்றும் கடவுளையும் மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்.
அவர் பாக்கி வைத்து விட்டுப் போனதாக நினைத்துக்கொண்டு போகிற வரைக்கும் சத்தியாகிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச்சரியாக அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்கு வர தலைவர்களையும் தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்திக் கொள்கிறேன்.”
நாகம்மையார் வைக்கம் அறப்போரை வெற்றி பெறச் செய்தவர். தோழர் எஸ்.இராமநாதன், தமிழகத்துத் தேசிய இயக்கப் பெண்டிரைச் சேர்த்துக் கொண்டு போராட்டக் களத்தில் வீராங்கனையாக விளங்கினார். திருவாங்கூர் அரசில் சுற்றுப்பயணம் செய்து போராட்டத் தீ அணையாமல் காத்தார். மகளிர் பிரிவு அமைத்து வீதியில் அமர்ந்து, இராட்டையில் நூல் நூற்று நிதி திரட்டிப் பிடி அரிசி பெற்று போராட்டத்திற்கு உயிர் கொடுத்தார். போக்குவரத்துக்குத் தடையாய் இருந்ததாக குற்றஞ்சாட்டடப்பட்டு அய்ந்து ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டடு அதைக் கட்ட மறுத்து கோர்ட்டு கலையும் வரை சிறைப்பட்டார். விசாரணைக்கு முந்தி எட்டு நாள் ரிமாண்டில் அடைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் விடுதலைப் போரில் சிறை சென்ற முதல் பெண்மணிகள் நாகம்மையாரும் கண்ணம்மாளும் தான்.
யார்யாருக்கோ சிலை வைக்கிற, தெருக்களுக்குப் பெயர் வைக்கிற,ஸ்டாம்ப் வெளியிடுகிற தேசீயம் பேசுவோர் நாகம்மையார் தொண்டை உணரவில்லை என்பது வேதனைக்குரியது இன்றாவது செய்வார்களா?
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் குடும்ப உறவோடு விளங்கியது எனில் அதற்குத்தந்தை பெரியார், தாயார் நாகம்மையார். தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை மாநாடுகளில் பங்கேற்றார். தந்தை பெரியாருடன் மலேசியப் பயணம் சென்று வந்தார்.
தந்தை பெரியார் மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் செய்த 1923 டிசம்பரில் பத்து மாத காலம் மேல்நாட்டுப் பயணம் புறப்பட்டபோது ஏற்பட்ட உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும், “குடி அரசுப்” பத்திரிகைகையயும் தளராமல் நடத்தியவர். எனவே தான் 1950இல் சிவகாமி சிதம்பரனார் எழுதிய வரிகள் மெய்ப்பிக்கும். “ஈ.வெ.ரா. சுற்றுப்யபயணத்திலிருந்த சுமார் 10 மாதங்களுக்கும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன் செய்த வேலையை விட அதிக வேலை செய்தது. இதற்குக் காரணம் அன்னையார் இயக்கத்தோழர்களுக்கு அளித்த உற்சாகமேயாகும். தந்தை பெரியார் சுயமரியாதை வீரர் ஆன போதிலும் அவரையே விஞ்சக்கூடிய சாதனை நிகழ்த்திய பெண்மணி அவர்”.
தாலியைப் புனிதமாக ஒரு காலத்தில் கருதியவர் தாலி கட்டாத ஒரு புரட்சித் திருமணத்தை நடத்தியவர்.
25.7.1929இல் கோபாலகிருஷ்ணன் - ஆர்.என்.லட்சுமி விதவா விவாகம் சடங்குகள் ஒழித்த திருமணம், தந்தை பெரியார் இல்லத்தில் நாகம்மையாரால் குத்தூசி - குருசாமி - குஞ்சிதம் அம்மையார், சிவகாமி - சிதம்பரனார். நீலாவதி ராமசுப்பிரமணியம்! திருமணங்களைத் தந்தை பெரியாருடன் இணைந்து நடத்தினார்.
12.9.1932 இரவு 9.30 மணிக்கு நாகம்மையார் தலைமையில் திரு. முருகன் - திருமதி. செல்லம்மாள் திருமணம் மாலை மட்டும் சூடித் தாலிக் கட்டாமல் நடைபெற்றது. தந்தை பெரியார் இல்லாமல் நடைபெற்ற மணம். இது நடைபெற்றது இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன், நிகழ்த்தியவர் நாகம்மையார்.
பத்திரிகை வெளியீட்டாளர்
“குடி அரசு” என்பது அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையால் வீறு கொண்ட மனித நேயத்தின் ஒளிக்கதிர். ஓய்வறியாப் போர் வீரரான தலைவர் பெரியாரின் முனை மழுங்காப் பகுத்தறிவு ஆயுதம் என்பார். அந்த “குடிஅரசை” தந்தை பெரியார் அய்ரோப்பியப் பயணம் செய்தபோது  வெற்றிகரமாக நடத்தியவர் அன்னையார்.
1928இல் வெளியான ரிவோல்ட் தந்தை பெரியாரை ஆசிரியராகவும், நாகம்மையாரை வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்த ஏடு.
நாகம்மையார் 11.5.1933 மறைந்தார். தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி 14.5.1933இல் வெளியாயிற்று. இந்த இரங்கல் செய்தி தந்தை பெரியார் எத்தகைய மனிதர்? மனைவி மீது அன்புப் பிடிப்புடையவர் என்று காட்டும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மாயாவதியும் - முலாயம்சிங்கும் என்ன செய்யவேண்டும்?

ஜாதிக்கலவரம் உத்தரப்பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் பரவி விட்டது, செவ்வாய்கிழமை ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது  மீண்டும் கலவரம் வெடித்ததில் இரண்டு தலித் இளைஞர்கள் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
மாநிலம் முழுவதும், இணைய தள சேவை, தொலைப்பேசி சேவை துண்டிக்கப்பட்டன.  தொடர்ந்து ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டு வந்த தலித் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அம்பேத்கர் பிறந்த நாளின்போது விழாவைக் கொண்டாடக் கூடாது என்று உயர்ஜாதியினர் மிரட்டி யதும், அதை மாவட்ட நிர்வாகமும் ஏற்று  தலித்துகள் அம்பேத்கர் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டததைத்தொடர்ந்து மேற்கு உத்தரப்பிரதேச மாநிலப் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது, இந்த நிலையில் இம்மாதம் அய்ந்தாம் தேதி மகாரானா பிரதாப் சேனா என்ற உயர்ஜாதி அமைப்பைச்சேர்ந்தவர்கள் ரானா பிரதாப் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினர். இதனை தட்டிக்கேட்டு மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளிக்கச்சென்ற தலித்துகள் கடுமை யாக தாக்கப்பட்டனர். தலித்துகளின் வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன. சகரன்பூர் மாவட்டத்தில்  2 கிராமங்களில் தலித்வீடுகள் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டன.
இது குறித்து திங்களன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதியும் விரைந்து சென்று பார்வையிட்டுள்ளார்.
இவர்கள் சென்ற பிறகு பிரதாப் சேனா அமைப்பினர் மீண்டும் தலித்துகள் வாழும் பகுதிக்குள்  நுழைந்து வாள் மற்றும் கத்திகளால் தாக்குதல் நடத்தினர். இதிலும் ஒரு தலித் இளைஞர் கொல்லப் பட்டார்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மாநில காவல்துறை ஆணையர், உ.பி. உள்துறை செயலாளர், காவல்துறை ஆணையர் (சட்டம்- ஒழுங்கு) மற்றும் சிறப்பு மாநில தலைமைச் செயலாளர் போன்றோர் அடங்கிய குழு சகரன்பூருக்கு சென்று  நிலைமையைச் சமாளிக்க முயன்றது,  முடியவில்லை.  புதன் கிழமை மீண்டும் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
சகரன்பூருக்கு அருகே உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த தலித்துகளை 40 பேர் கொண்ட கும்பல் வாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
இக்கலவரம் தொடர்பாக உயர்ஜாதியினரை தலித்துகள் தாக்கிவிட்டதாக வதந்தி பரப்பப்பட்டு சகரன்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாழும் தலித்துகளின் குடியிருப்புகள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.  கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக மாவட்ட ஆட்சியாளர் என்.பி.சிங் மற்றும் மண்டல காவல்துறை ஆணையர் ஜே.கே.ஷாகி, மாவட்ட இணை ஆணையர் சுபாஷ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம்  என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. (இவர்கள் அனைவரும் சமீபத்தில் சாமியாரும் முதல்வருமான ஆதித்தியநாத்தால் ஜாதி ரீதியாக முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்). இந்த நிலையில் முதல்வர் தனது சமூக வளைதளத்தில் இருந்து நேற்று முழுவதும் மக்கள் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டி ருந்தார். (கடந்த மூன்று  நாள்களாக மாநிலம் முழுவதும் இணைய தளம், மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).
நேற்று முதல் நாள்  இரவு மலிகிபூர் என்ற இடத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது, கலவரம் நடக்கும் சில மணி நேரத்திற்கு முன்புதான் மாநில உள்துறை செயலாளர் அப்பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான்.
மாநில அரசு இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட விபரம் வருமாறு:
கலவரம் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட தலித்துகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீம் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இக்கலவரம் தொடர்பான மகாரனா பிரதாப் சேனா அமைப்பினர் மீது இரண்டு முதல் குற்ற அறிக்கைகள் மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மே 5 ஆம் தேதியன்று ரானாபிரதாப் சேனாவினர் தலித்து களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.
மே 9 ஆம் தேதியன்று புகார் அளிக்க வந்த தலித்துகள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தி விரட்டினர்.
மே 21 ஆம் தேதியன்று தலைநகர் டில்லியில் பீம் ஆர்மியினர் பத்தாயிரம் பேர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இப் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மே 23 ஆம் தேதியன்று  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மாயாவதியின் வருகைக்குப் பிறகு மீண்டும் கலவரம் மூண்டது. இதில் தலித் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மே 24 ஆம் தேதியன்று செங்கல் சூளையில் பணிபுரிந்த தலித்துகள் தாக்கப்பட்டனர். இருவர் கொலை செய்யப்பட்டனர்.  மாலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு தலித் கொல்லப்பட்டார்.
மாநிலம் முழுவதும் கலவரச் சூழல் நிலவும் போது அலகாபாத், அயோத்தியா போன்ற இடங்களில் ராமாயண கண்காட்சி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உகந்த நல்ல நாள் பார்க்கவும் பண்டி தர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் பூசாரியான முதலமைச்சர்.
மோடிக்கு நிகரானவர் யோகா சாமியார் ஆதித்தியநாத் என்று ஒரு பக்கம் பிரச்சாரம் . உண்மைதான். மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது? ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவரின் ஜோடி என்று கருதப்படும் யோகி ஆதித்தியநாத்தின் ஆட்சியில், உ.பி.யில் தாழ்த்தப்பட்டோர் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
இதற்குமேலும் மாயாவதிகளும், முலாயம்சிங்குகளும் முரண்டு பிடித்து நிற்பார்களேயானால், மேலும் மோசமான நிலைக்குத் தயாராகித்தான் தீரவேண்டும். கன்சிராம் பாதையை மீண்டும் மாயாவதி தேர்வு செய்யவேண்டும். சர்வஜன் போய் பகுஜன் பாதைக்குத் திரும்பட்டும் செல்வி மாயாவதி!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: