Total Pageviews

Monday, April 30, 2012

இமாலய வெற்றி


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடம் - மத்திய அரசு சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு எனும் தேனினும் இனிய செய்தியினை (13.4.2012) நாளேட்டின் வாயிலாகப் படித்தேன்.
எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக் குக் கல்வியைக் கொடுக்காதே என்று கூறுவதுதான் மனுதர்மம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எதையும் சமுதாயச் சிந்தனையோடு, தொலை நோக்குப் பார்வையோடு சீர்தூக்கிப் பார்த்து அதனால் ஏற்படும் விளைவு களைப் பற்றி நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருபவர் ஆவார். ஆதலால், பார்ப்பனர்களால் திட்டமிட்டு எழுதப்பட்ட மனுதர்மத்தின் சூட்சமத்தை, நயவஞ் சகத்தை பட்டிதொட்டி எங்கும் உள்ள பாமர மக்களிடம் எடுத்துக்கூறி, இடை விடாது சூறாவளிப் பிரச்சாரம் மேற் கொண்டார்.
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் எழுச்சிமிகு உரையினைக் கேட்டு பாமர மக்கள் சிந்திக்கத் தொடங் கினர். பெரும்பான்மையான மக்கள் மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும், புதிய எழுச்சியும் பிறந்தது. இதன் மூலம், பாமர மக்கள் படிப்படியாக கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் நன்கு உணரத் தொடங்கினர்.
தந்தை பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாகவும் இருந்து செயல்பட்டதின் பயனாய் நாடெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளி கள் திறக்கப்பட்டன. பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று போற்றப்பட்ட காமராசர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில்தான் கிராமங்கள் தோறும் கல்வி நீரோடை மடை திறந்த வெள்ளம்போல பாய்ந்தோடின.
இதன் பயனாய் பாமர மக்கள் தங்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதன் காரணமாக, சூத்திர மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற மேற் கண்ட, இருபெரும் இன மீட்பாளர்களும் வழிகோலினர் என்பது காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பேருண்மையாகும்.
இதன் மூலம், எதைக் கொடுத்தாலும் சூத்திர மக்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்காதே என்று பார்ப்பனர்களால் திட்டமிட்டு எழுதப்பட்ட, மனிதநேயமற்ற மனுதர்மத்தின் கோரமுகத்தை மக்கள் மன்றத்தின் முன்பு மண்டியிடச் செய்த பெருமை உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களையும் மட்டுமே சேரும்.
மேற்கண்ட தலைவர்களின் சீரிய முயற்சியாலும், உயர்ந்த நோக்கத்தாலும் ஏழை - எளிய மாணவர்கள் பலர் படித்துப் பட்டம் பெற்று தற்போது மாவட்ட ஆட்சி யராகவும், தலைசிறந்த நீதிபதிகளாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும், மனித உயிர் காக்கும் மருத்துவராகவும் மற்றும் பல்வேறு உயர் பதவிகளில் அங்கம் வகித்து தத்தமது துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர் என்பதை அறியும் போது; தன்னலம் கருதாமல் இனத்தின் மீட்சிக்காக அயராது உழைத்த நமது இன மீட்பாளர்களை இந்தவானம் உள்ளவரை, வையகம் உள்ளவரை திராவிடர் இன மக்கள் நன்றி உணர்வோடு நாளும் நினைத்து புகழ்வர் என்பது உறுதி.
அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல்; அனைத்து குழந்தைகளும் அடிப்படைக் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசால் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அவை அரசியல் சட்டத்தின் 21 (ஏ) பிரிவின்கீழ் நாடாளுமன் றத்தின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடங்களை கட்டாயம் ஒதுக்கி அவர் களுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்பதே இச்சட்டத்தின் உயரிய நோக்கமாகும்.
ஆனால், ஒரு சில தனியார் பள்ளிக் கூடங்கள் மற்றும் நிர்வாகிகள் இவ்வர லாற்று உண்மைகளை சற்றும் உணராத வர்களாக அல்லது தெரிந்தும் தெரியாத வர்களாக, மய்ய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஏழை - எளிய மாணவர்களைச் சேர்த்தால் பள்ளியின் தரமும், ஒழுக்கமும் சீர்கெட்டு விடும் என்றும் மேலும் இவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று மனுதாக்கல் செய்வதும், வாதிடுவதும் என்பது ஏழ்மையை கொச்சைப்படுத்தும் இழிவான செயல் மட்டுமின்றி, குழந்தை களின் அடிப்படை உரிமையான கல்வி பெறும் உரிமையைத் தடுக்கும் உரிமை மீறல் செயலாகும்.
தற்போது இவ்வழக்கில், மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியும், அவை செல்லும் என்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ப்பு தீர்ப்பினை (12.04.2012) உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடக் கூறியுள்ளனர்.
தந்தை பெரியார் அவர்களின் பெரு முயற்சியால் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையால்  தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர் என்பது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த இமாலய வெற்றியாகும்.
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்

பி.ஜே.பி.யின் உண்மை முகம்!


பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத்  தலைவராக பங்காரு லட்சுமணன் 2001 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுத நிறுவனம் ஒன்றின் பெயரால் இராணுவத் துக்கு எதிராகப் போலி ஆயுதப் பேர ஒத்திகை ஒன்றினை தெகல்கா இணையதளம் நடத்தியது.
தெர்மல் பைனாக்குலர் என்ற பொருளை இந்திய இராணுவத்துக்கு வாங்கிட சம்பந்தப்பட்ட பிஜேபி தலைவர் பங்காரு லட்சுமணன் பரிந்துரை செய்ய வேண்டும் - அதற்காக இலஞ்சமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கையில் வாங்கி மேசையின் அறையில் வைக்கப்பட்டது இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்டது (5.1.2001).
பிறகு தெகல்கா அதனை ஒளியும் பரப்பியது. மற்ற மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் அதனை சாங்கோ பாங்கமாக வெளியிட்டு, பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதன் காரணமாக பங்காரு லட்சுமணன் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி நேர்ந்தது. இலஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவு 9இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது பதினொரு ஆண்டு காலமாக இந்த வழக்கு சி.பி.அய். நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பி.ஜே.பி. தலைவர் பங்காரு லட்சுமணன் செய்த குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்பட்டது என்று கூறி நீதிபதி கன்வல் ஜீத் அரோரா பங்காரு லட்சுமண னுக்கு 4 ஆண்டு சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். இப்பொழுது திகார் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளார்.
இதன் மூலம் பி.ஜே.பி. என்பது நேர்மையான அரசியல் கட்சி; தார்மீகப் பண்பாடுகளைக் கொண்டது என்று பறைசாற்றப்பட்டதெல்லாம் அக்மார்க் பொய் என்பது அம்பலமாகி விட்டது.
இந்தத் தீர்ப்புக் குறித்து பிஜேபியின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டு இருப்பது மிகப் பெரிய நகைச்சுவையே. அது தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று; பி.ஜே.பி.க்கும் அந்த இலஞ்சத்துக்கும் சம்பந்தமில்லை என்று மிக சாமர்த்தியமாகச் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஒன்றை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். 11 ஆண்டுகளுக்கு முன் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் என்ன கூறினார்? கட்சிக்காக நன்கொடையாக அந்தப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது என்று கூற வில்லையா?
ஆக கட்சிக்காக ஆயுத பேர ஊழல் நடந்தது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லையா?
உண்மை இவ்வாறு இருக்க பங்காரு லட்சுமணன் இலஞ்சம் பெற்றதை கட்சியைச் சம்பந்தப்படுத்திப் பார்க்கக் கூடாது என்பது - பங்காரு லட்சுமணன் பெற்ற இலஞ்சத்தைவிட மிக மோசமான ஒழுக்கமற்ற கருத்தாகும். இதன் மூலம் பி.ஜே.பி. என்பது, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்தைப் போல ஒழுக்கமற்றது ஆபாசமானது என்பது விளங்கவில்லையா?
நமக்குள்ள வருத்தம் என்ன என்றால், பிஜேபியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர் பலி கொடுக்கப்பட்டுள்ளாரே என்பதுதான்; வெறும் ஒரு லட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றதற் காக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்  4 ஆண்டுத் தண்டனை பெற்றுள்ளார்.
இதைவிட பிஜேபியில் பெருங் கொள்ளை அடித்தவர்கள், பெருங்குற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் எந்தவிதத் தண்டனைக்கும் ஆட்படாமல் சுதந்திரமாக ராஜ நடைபோட்டுத் திரிந்து கொண்டுள்ளார்களே - என்பதுதான் நமது வேதனை.
குற்றங்களை யார் செய்தாலும் அது தவறுதான் - தண்டனை அளிக்கப்பட வேண்டும்தான். அதே நேரத்தில் பெரிய பெரிய குற்றங்களைச் செய்த வர்கள் தப்பித்துக் கொள்கிறார்களே. அது ஏன் என்பதுதான் நமது நியாயமான கேள்வியாகும்.

புதுமைச் சமுதாயம் படைக்க சூளூரை ஏற்போம்!


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் மே தின வாழ்த்து

புதுமைச் சமுதாயம் படைக்க சூளுரை ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு:

நாளை மேதினியெங்கும் கொண்டாடப்படும் நாளான மே நாள் என்பது உலக தொழிலாளர் உரிமைப் போர் வென்ற நாள்! இங்கே தொழிலாளர் என்றால் மனுதர்மப்படி சூத்திரன் பஞ்சமர் தான்!

இன்னும் சூத்திரப் புரட்சி வெடித்து, ஜாதி, வருண, வர்க்கபேதம் ஒழிந்த ஒரு புதுமைச் சமுதாயம் படைக்க சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டிய நாளாகும்!

அனைவருக்கும் நமது மே தின வாழ்த்துக்கள் புதியதோர் உலகு செய்ய புறப்படுவோம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

மிக முக்கிய கூட்டம் உலகத் தமிழர்களை ஈர்க்கக் கூடியதுதனித் தமிழ் ஈழம் அமைந்திட தமிழர்கள் பகுதியில் அய்.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு!


கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவு

கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில்  தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் (சென்னை அண்ணா அறிவாலயம் - 30.4.2012).
சென்னை, ஏப்.30- தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட அய்.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப் பினை விரைவிலே நடத்திட வேண்டும் என்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இன்று காலை சென்னையில் கலைஞர் தலைமையில் கூடிய டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவாக எடுக்கப் பட்டது. அதன் விவரம் வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், 30-4-2012 இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
டெசோ உருவாக்கம்
இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும்; Tamil Eelam Supporters Organisation (TESO)என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அமைப்பின் குறிக்கோள்
பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம்; மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப் பட்டு, அணிஅணியான அல்லல் களால் அனுதினமும் அலைக்கழிக்கப் பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திரு நாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
தீர்மானம்
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப் பட்ட இந்தோனேசிய அரசின் தலை மை வழக்குரைஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்கு தலை உறுதி செய்திருக்கிறது. வாழ் வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங் கள் இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25ஆம் தேதியன்று நியூயார்க் கில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு; போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும்; வீராங்கனைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக் கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்
இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி அய்.நா. குழு பரிந்துரைத்துள்ள வாறு சர்வதேச விசாரணை ஆணை யத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப் பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும்; இந்துக் கோவில் கள், கிறித்துவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
பொது வாக்கெடுப்பு
இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக் கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள்பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. அய்க்கிய நாடுகள் மன்றத் தின் தலையீட்டினையடுத்து இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டு; கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீ காரத்தை ஏற்கெனவே பெற்றிருக் கின்றன. அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் இலங்கைத் தமி ழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமி ழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற் றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது; நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப் படையில் தனி ஈழம் அமைவதற்கு அய்க்கிய நாடுகள் மன்றம் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவை யான ஒத்துழைப்பினையும் ஆதர வினையும் நல்குவதோடு; அய்.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும்.
தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை அய்.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக் கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக் கெடுப்பு ஒன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது.
தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட, அய்.நா. மன்றம், தமிழர் கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை (Referendum) விரைவிலே நடத்திட வேண்டு மென்றும்; அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டுமென் றும்; இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நிறைவாக செய்தியாளர்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: