Total Pageviews

Saturday, September 29, 2012

பள்ளிகளில் சர்வ சமய வழிபாடா?


தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க)
இப்படி ஓர் ஆணைக்கு அவசியம் என்ன? சர்வ சமய வழிபாடு என்ற ஒன்று சரியானது தானா? அப்படி ஒரு திட்டம் அவசியமானது தானா?
இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதன் பின்னணி என்ன? முதல் அமைச்சர் அல்லது வேறு அமைச்சர் யாராவது இப்படி ஓர் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினரா?
சமயவழிபாடு கட்டாயம் என்றால், எந்தச் சமயத்தையும் சாராத பிள்ளைகளின் நிலை என்ன?
சமய நம்பிக்கையுள்ள மாணவன் அல்லது மாணவிதான் பள்ளிக்கூடம் செல்லவேண்டுமா?
இந்த நம்பிக்கை இல்லாதவர்களின் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாதா?
மதச் சார்பற்ற ஓர் அரசின் இத்தகு ஆணை சட்டப்படி சரியானதுதானா?
சர்வசமய வழிபாட்டின் மூலம்தான் ஒழுக் கத்தைக் கற்பிக்க முடியுமா?
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அறிவைக் கூர்மைப்படுத்துவற்கா அல்லது மழுங்கச் செய்வதற்கா?
இந்திய அரசமைப்புச் சாசனம் 51 -கி(லீ) விஞ் ஞான ரீதியான சிந்தனை, அணுகுமுறை, மனிதாபி மானம்,  ஆய்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப் பது காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?
அதற்கு மாறாக சர்வசமய பிரார்த்தனை நடத் துவது சட்டத்தையே அவமதிப்பதாக ஆகாதா?
இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறப்பட் டுள்ள மேற்கண்ட கடமைக்காக எந்த செயல் திட்டம் கல்வித் துறையிடம் உள்ளது?
தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆணையின் கர்த்தா யார்?
இதில் காவிகளின் - ஆர்.எஸ்.எஸ்.சின் ஊடுரு வல் ஏதாவது இருக்கிறதா?
இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும். தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆணை உடனடியாக விலக்கிக் கொள்ளப் படவும் வேண்டும்.
இல்லையென்றால் பகுத்தறிவாளர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும்!
எச்சரிக்கை!  எச்சரிக்கை!!
(குறிப்பு: யோகா பயிற்சி என்ற பெயரால் கடைப் பிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளும் கைவிடப்பட வேண்டும்.).

தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணை
சுருக்கம்
பள்ளிக் கல்வித்துறை- அனைத்து வகை அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2012-2013ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது திட்டங்கள் சிறப்பாக அமைய பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளல் ஆணை வெளியிடப் பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் (இ1) துறை
அரசாணை (1டி) எண்.264    நாள்:06.07.2012 படிக்கப்பட்டது:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின், கடித ந.க.எண்.796/ஈ2/2012 நாள் 16.05.2012.
---------
ஆணை:
2012- 2013 ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையையும் நடைமுறைப் படுத்த ஆணையிடப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் மாணவர்களுக்குப் புத்தகச் சுமை, பாடச் சுமையைக் குறைத்து, மன அழுத்தமின்றிப் பாடங்களை மனப் பாடம் செய்யாமல், செயல்பாடுகள் வாயிலாகப் புரிந்து கொண்டு கற்பித்தல் ஆகும் என்றும், இம்முறைமூலம் மாணவர்கள் அறிவை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, மாணவர்களின் அனைத்துத் திறன்களையும் முழுமையாக வெளிக்கொணர்ந்து நல்ல பண்புகளை உடைய ஆளுமைத் திறன் பெற்றவர்களாக உருவாக்க இயலும் என்றும் தெரிவித்து, மேற்கண்ட நோக்கங்கள் முழுமை யாகவும், சிறப்பாகவும் அமைய, பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆணை வெளியிடுமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசிடம் வேண்டியுள்ளார்.
2) மேற்காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலிக்கப்பட்டு பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கீழ்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று பொது காலை வழிபாட்டுக் கூட்டமும் மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அனைத்து மாணவர்களும் சுழற்சி முறை யிலும் அமைக்குமாறும், சான்றாகப் பட்டியலில் உள்ள நிகழ்வான தமிழ்த்தாய் வாழ்த்தை ஒவ்வொரு மாணவனும் தன்முறை வரும்போது பாட வேண்டும். இச்செயல்பாடுகளை மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கையேட்டினைப் பள்ளிகள் பின்பற்றுதல் வேண்டும்.
வ. எண்.                       நிகழ்வுகள்                                              நிமிடங்கள்

1.               தமிழ்த்தாய் வாழ்த்து                                                   1.30
2.               கொடி ஏற்றுதல், கொடி வணக்கம் *                              2
3.               கொடிப் பாடல்*                                                             2
4.                உறுதிமொழி                                                                4
5.               சர்வ சமய வழிபாடு*                                                    1
6.               திருக்குறள் மற்றும் விளக்கம்                                     2
7.              செய்தி வாசித்தல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)               4
8.              இன்றைய சிந்தனை (பொது அறிவு/பழமொழி)            2
9.              பிறந்தநாள் வாழ்த்து                                                   0.30
10.            ஆசிரியர் உரை                                                              1
மொத்தம்                         20
* வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மட்டும் செயல்படுத் தப்பட வேண்டும் மற்ற நாள்களில் செயல்படுத்த தேவையில்லை.
தியானம் 5 நிமிடம்
(i)  மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக
எளிய யோகா பயிற்சி - 15 நிமிடங்கள்.
அடுத்த 15 நிமிடங்களில் கையேட்டில் உள்ளவாறு பின்வரும் பாட இணைச் செயல்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
1. விழுமக் கல்வி
2. உடல் நலக்கல்வி
3. கலைக்கல்வி
4.    பணி அனுபம்
5.    சுற்றுச்சூழல் கல்வி
6.    முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள்
(ii)  மதிய உணவு இடைவேளைக்குப் பின்
1. வாய்ப்பாட்டை செலுத்துல்.
2.    ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல்.
3.    ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல், வாக்கியமாக அமைத்தல்...
ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை யன்று இறுதி ஒரு மணி நேரம்.
(III) மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழிகள் கூறுதல், படைப்பாற் றல் போன்ற செயல்பாடுகளை ஒவ் வொரு மாணவரும் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3) மேற்கூறிய செயல்பாடுகளை, அனைத்து வகை அரசு மேல் நிலை, உயர் நிலை, நடுநிலை, மற்றும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலே - இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்திட இவ்வாணையினை சுற்றறிக்கையாக அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
(ஆளுநரின் ஆணைப்படி)
த.சபிதா
அரசு முதன்மைச் செயலாளர்
பெறுநர்:
மாநில கல்வியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், சென்னை-6
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை -6
தொடக்கக் கல்வி இயக்குநர்,  சென்னை -6
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர், சென்னை - 6
நகல்:
மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை -9
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை - 9 பிற்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை - 9.
//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
பிரிவு அலுவலர்

- மின்சாரம்

Friday, September 28, 2012

வடபழனி முருகனுக்கு கோவிந்தா திருடு போன மூன்று வெள்ளிக்கட்டிகள்


சென்னை, செப்.28-  சென்னை வடபழனி முருகன் கோவிலில் லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று வெள்ளிக்கட்டிகள் திருடு போய் உள்ளன. முருகனுக்கே கோவிந்தா (பட்டை நாமம்) போட்டவர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறதாம்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர். முருகபக்தரான இவர் கடந்த ஜனவரி மாதம் வடபழனி முருகன் கோவிலுக்கு 7 வெள்ளி கட்டிகளும், 100 கிலோ வெள்ளி துகள்களும், கொலுசுகளும் காணிக்கையாக வழங்கினார்.

இதனை அப்போதைய கோவில் துணை ஆணையராக பணியாற்றி வந்த காவேரி பெற்று கோவில் பெட்டகத்தில் வைத்திருந்தார்.

இவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இளம்பரிதி என்பவர் துணை ஆணையராக பதவி ஏற்றார். உடனடியாக கோவில் பெட்டகத்தில் உள்ள நகைகளை சரிபார்த்தார். அப்போது 7 வெள்ளி கட்டிகளில் 3 கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக 3 இரும்பு கட்டிகளில் வெள்ளை வர்ணம் பூசிவைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெட்டகத்தின் சாவி வைத்திருந்த 6 குருக்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக குருக்கள் கூறினர். காவல்துறையில் புகார் செய்யப்படும் என்று கூறிய உடன், ஒரு வழியாக 3 வெள்ளி கட்டிகளையும் தாங்கள் வாங்கி வைத்து விடுகிறோம் என்று குருக்கள் கூறினர். அதன்படி ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் ஒரு கிலோ 600 எடையுள்ள 3 வெள்ளி கட்டிகளை வாங்கி பெட்டகத்தில் வைத்தனர்.
கோவில் இணை-ஆணையர் திருமகளின் கவனத்திற்கு இந்த திருட்டு சம்பவம் வந்தது. அவர் காணாமல் போன வெள்ளி கட்டிக்கு பதிலாக புதிதாக வாங்கி தந்தால் அதனை ஏற்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்கவும் முடியாது. திருடியவர்கள் யார் என்று தெரியவேண்டும் என்று கூறி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து இணை-ஆணையர் திருமகள் கூறும் போது,
``இந்த திருட்டு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறேன்,'' என்றார். இந்நிலையில் வடபழனி காவல்துறை உதவி ஆணையர் சங்கரலிங்கம் வடபழனி கோவிலுக்குச் நேற்று சென்று நேரடி விசாரணை நடத்தினார். புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கடவுளுக்குச் சக்தி இல்லை என்பது பல வழிகளிலும் கண்கூடத் தெரிந்தும், பாழாய்ப் போன பக்தர்கள் கல்லை நம்பி மோசம் போவது தொடர்கதையாக அல்லவா இருக்கிறது.
இப்போது புரிகிறதா, முருகனுக்கு கோவிந்தா (பட்டை நாமம்) என்பது.


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, September 27, 2012

சமூக நீதியாளர்களின் முக்கிய கவனத்துக்கு:


சமூக நீதியாளர்களின் முக்கிய கவனத்துக்கு:

இடஒதுக்கீட்டு உரிமையை மத்திய மருத்துவக் கவுன்சில் சட்ட விரோதமாக வழிப்பறி செய்யும் வேலையில் இறங்கி இருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் கொடுமையை மாநிலங்கள் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசில் பார்ப்பனீயம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது என்றாலும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு மிகப் பெரிய பார்ப்பனீயத்தைச் செய்து வருகிறது.

இளநிலை மருத்துவக் கல்வி
இளநிலை மருத்துவக் கல்லூரிகளில் (எம்.பி.,பி.எஸ்.,) இரு பால் மாணவர்களைச் சேர்த்திட அகில இந்திய அடிப்படையில் தேசிய நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்துகிறது இந்திய மருத்துவக் குழு (Medical Council of India) . ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 விழுக்காடு இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப நுழைவுத் தேர்வு நடத்துகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு  இடஒதுக்கீடு கிடையாது
இந்திய அளவில் இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 2503 (தமிழ்நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 320). நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படும் இந்த இடங்களில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு 15 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்கிற கொடுமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த 2503 இடங்களில் திறந்த போட்டிக்கான இடங்கள் (பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்) 1848. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 364 இடங்கள். பழங்குடி மக்களுக்கு 181 இடங்கள் கிடைக்கும். 27 விழுக்காடு அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 675 இடங்கள் கிடைக்கவேண்டும். ஆனால் கிடைப்பதோ வெறும் 37 இடங்கள் மட்டும்தான். அதாவது ஒரே ஒரு சதவிகிதம்தான். 27 சதவிகிதம் எங்கே? ஒரு சதவிகிதம் எங்கே?

முதுநிலை மருத்துவக் கல்வியிலும் . . .
இதே போல மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மற்றும் டிப்ளோமா வகுப்பில் (எம்.டி., எம்.எஸ்., போன்றவை) சேர்வதற்கும் அகில இந்திய அளவில் ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாநிலத்தி லிருந்தும் 50 விழுக்காடு இடங்கள் மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 1000. இதிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே இல்லை.
வஞ்சக நடவடிக்கை
இந்தக் கொடுமையை அனுமதிக்கலாமா? போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை மத்திய மருத்துவக் கவுன்சில் மத்திய அரசின் துணையோடு வஞ்சகமாக, சட்ட விரோதமாக வழிப்பறி செய்யும் ஒரு வேலையில் இறங்கி இருப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டாமா?
பொய்யான தகவல்!
இதில் மேலும் ஒரு கொடுமை என்ன தெரியுமா? இப்போதுள்ள நிலையில் முதுநிலை மருத்துவம் படிப்பதற்கு பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது; இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருப்பதால் ஒரே ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துகிறோம் என்று சமாதானம் சொல்லப் படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது நியாயந்தானே என்று நினைக்கக் கூடத் தோன்றும்.
இதாவது உண்மையா? இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் இவற்றுக்குப் பொருந்தாதாம். இந்த  மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்குத் தனித் தனியாகத்தான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமாம்.
எப்படிப்பட்ட மோசடியான - தந்திரமான அணுகு முறைகள் பார்த்தீர்களா?

மற்றொரு அதிர்ச்சித் தகவல்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் படிக்கும் (எம்.பி.,பி.எஸ்.,) மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டம் பெறுவதற்கு 30 விழுக்காடு இடங்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டுமாம்! நுழைவுத் தேர்வில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்களை தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப் பட்டவர்களோ பெறாத பட்சத்தில் அந்த இடங்களும் திறந்த போட்டிக்குக் கொண்டு போகப்படுகின்றன.
இளங்கலை மருத்துவக் கல்லூரியில் சேர மத்திய தொகுப்புக்கு 15 விழுக்காடு இடங்கள் போக மீதி இடங்கள் +2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் இருபால் மாணவர்களும் சேர்க்கப் படுகின்றனர். தமிழ்நாட்டில்தான் நுழைவுத் தேர்வு கிடையாதே. இப்பொழுது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இனி அந்த இடங்களுக்கும் சேர்த்து இந்திய அளவில் தேசிய நுழைவுத் தேர்வை நடத்துவார்களாம். மாநில உரிமைகளைக் கேள்வி கேட்பாரின்றி அபகரித்துக் கொள்ளும் அநியாயம் அல்லவா இது?
என்ன கொடுமை இது! விழித்திருக்கும் பொழுதே விளையாடும் போக்கிலித்தனமான செயல் பாடுகளை முறியடித்தாக வேண்டும். தாழ்த்தப்பட்டவர் களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளித்து, பிற்படுத்தப் பட்டோருக்கு அளிக்காதது பிரித்தாளும் சூழ்ச்சியாகும். இதற்கு யாரும் பலியாகிவிடக்கூடாது.

முதல் அமைச்சர் கவனத்துக்கு . . .
தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, இட ஒதுக்கீட்டில் தலைக்கு மேல் தொங்கும் கொ(டு)லை வாளினை அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு அறவேயில்லை என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டி தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கான சமூக நீதி உணர்வை வெளிப்படுத்தவேண்டும்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் (சமூக நீதி உணர்வில் யாருக்கும் சளைத்தவர்  அல்லர் கலைஞர் அவர்கள்.) இதில் தலையிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
சமூக நீதியில் அக்கறை உள்ள கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். அடுத்து அனைவரையும் ஒன்று திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
27.9.2012
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Adobe Flash Player not installed or older than 9.0.115!
Get Adobe Flash Player here


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, September 26, 2012

புற்றுநோய்த் தடுக்கும் தொண்டறப் பணி தொடக்கம் வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளித்து ஊக்கப்படுத்தலாம் தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வைர விழா புற்றுநோய்த் தடுக்கும் தொண்டறப் பணி தொடக்கம் வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளித்து ஊக்கப்படுத்தலாம் தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (பெரியார் டிரஸ்ட்) 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி கிராமப் புறங்களில் புற்றுநோயால் பாதிப்புக்கு ஆளாகும் பெண் களுக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுப் பிரச் சாரம் மேற்கொள்ளப்படும் திட்டம்பற்றி பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நமது இயக்கத்தைப் பொறுத்தவரை, வரலாற்றுப் பெருமையை - கால வளர்ச்சியில் திளைக்கும்போது - வெறும் வெளிச்சம் போட்டுக் காட்டிடும் விழாக்களாக மட்டும் அவற்றை நடத்தி முடித்திடுவதில்லை.
வெள்ளி விழா (25 ஆண்டுகள்), பொன்விழா (50 ஆண்டுகள்), வைர விழா (60 ஆண்டுகள்), பவள விழா (75 ஆண்டுகள்), நூற்றாண்டு விழா என்ற வரலாற்று மைல் கற்களைச் சுட்டிடும்போதுகூட புதியதோர் லட்சியப் பாதை யில், மேலும் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பயணிக்க வேண்டும் என்பதே பகுத்தறிவாளர்களாகிய பெரியார் தொண்டர்களின் நோக்கமும், செயலுமாகும்.
பெரியார் நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக்
அதன் அடிப்படையில்தான் 1979 இல் தஞ்சையில் திரா விடர் கழகத்தால் தரப்பட்ட 100 பவுன்களை (அப்போது பவுன் விலை 800 ரூபாய்தான்!) மூல நிதியாக வைத்தே, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கைத் தொடங் கினோம். (அன்னையார் மறைந்து நான் பொறுப்பேற்றுச் சில மாதங்களில்) நூற்றாண்டு அய்யாவுக்கு வந்த நிலை யில் - ஓராண்டு முழுவதும் பிரச்சாரமாக மாவட்டத் தலை நகர்களில் விழா எடுத்தோம். (எம்.ஜி.ஆர். அவர்கள் தலை மையில் அமைந்த அரசும் ஓராண்டு விழா நடத்தியது).
திருச்சியிலும் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி நூற்றாண்டு நினைவாகத் தொடங்கப் பெற்றது.
ஆக்க ரீதியாக நம் அய்யாவின் கொள்கைகள் சமுதாய வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக் - தொழில் நுட்பக் கல்லூரியை தஞ்சை வல்லத்தில் தொடங்கி, அது தனது 32 ஆம் ஆண்டில் பீடுநடை போட்டு, கனடா அரசாலும், தமிழ்நாட்டு அரசாலும் தலைசிறந்த கல்லூரி என்ற விருதினைப் பெற்று வளர்ந்து வருகிறது.
பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம்
அதுபோலவே, எனக்கு எடைக்கு எடை வெள்ளிக் கட்டிகள், தங்கம், புதுக்கோட்டையிலும், தஞ்சையிலும் என்றும் நினைவில் வாழும் கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்களது பெருமுயற்சியால் மக்களால் அளிக் கப்பட்டது. மூன்று கோடி ரூபாய் மூலதன நிதியாகித் தான் தஞ்சையில் உலகின் முதல் பொறியியல் கல்லூரி - பிறகு அது வேக வளர்ச்சி பெற்று பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகமாய் தடைக்கற்களைத் தாண்டி - வளர்ந்தோங்கி உலகத்தாரின் மலைப்பைப் பெறுகிறது. மேனாள் குடியரசுத் தலைவர் அறிஞர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் போன்றவர்கள் - அதன் சாதனைபற்றி அவர்தம் நூலில் எழுதிப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள்! இன்னும் பல உண்டு.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய அறக்கட்டளை யின் உண்மை வயது 81 ஆண்டுகள் (1931 லேயே நிறுவப் பட கருத்துரு கொள்ளப்பட்டது). ஆனால், அதிகாரப்பூர்வ மாக பதிவு செய்யப்பட்டது 1952, செப். 23; அதற்கு இப் போது 60 ஆண்டுகள் என்பதால், வைர விழா எளிமையாக ஆடம்பர வெளிச்சம் இன்றி, ஆக்கப் பணிகளையே அணிகலன்களாக்கி அழகுபட அது நடந்தேறியுள்ளது!
புற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கை
அதில் துவக்கப் பெற்ற திட்டங்களில் - மனித நேயப் பணிகளில் ஒன்று, நமது மகளிருக்கு வரும் புற்றுநோய் களை காலத்தே விரைந்து அறிந்து கொண்டு சிகிச்சை மூலம் பாதிப்பு உள்ளவர்களைக் காப்பாற்றிட முடியும் என்ற விழிப்புணர்வை, சோதனைகளை நடத்திட (தக்க மருத்து வர்கள்மூலமாக) நடமாடும் ஊர்தி - மருத்துவமனையுடன் கிராமப்புறங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பது என்பதை வாரத்திற்கு ஒருமுறை (டாக்டர்கள் விடுமுறை நாள்களாக 2 நாள்களைத்தான் ஒதுக்கிடும் நிலை இருப்பதால்) சென்று ஆய்வு - மருத்துவம் - அறிவுரை வழங்கிடும் ஏற்பாட்டின் தொடக்க விழாவும் நடைபெற்றது.
அறக்கட்டளை இதற்குரிய மூலதனச் செலவினை ஏற்றுள்ளது என்றாலும்கூட, வாரந்தோறும், மருத்துவர்களாக பணிபுரிவோர் - இவர்களுக்காகும் குறைந்தபட்ச செலவு எல்லாம் சேர்த்து ரூபாய் 22,000 (இருபத்தி இரண்டாயிரம்) ஆகலாம்.
மாதம் ஒன்றில் இரண்டு அல்லது மூன்று (வார) முகாம்களை - கிராமங்களில் அமைத்து இந்த மனிதநேயப் பணியைத் தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு புற்றுநோயால் மரணம் 4 லட்சம் பேர்
உலக அளவில் ஆண்டுதோறும் ஒரு கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 60 லட்சம் பேர் மரணமடைகிறார்கள்.
இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். 4 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.
ஆட்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றவர்கள் எண்ணிக்கைப் பெருகியே வருகிறது.
இருப்பினும் மருத்துவ ஆராய்ச்சியின் பயனாக, தக்க நேரத்தில் நோய் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்தி மீள வைக்க முடியும் என்பதால்,  தடுப்பு முறைகளையும் பிரச்சாரம் செய்து வெல்லலாம்; ஏழை, எளிய கிராமத் தாய்மார்கள் மத்தியில் இத்திட்டம் தொடக்கத்தின்போதே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது!
புற்றுநோய் மருத்துவர் திரு. டாக்டர் கோவிந்தராஜூ அவர்கள் நடத்தும் அறக்கட்டளை சார்பில் பகுதிச் செலவினை ரூபாய் 11,000 (பதினோராயிரத்தினை) அளிப்பதாக 23.9.2012 திருச்சி விழாவிலேயே அறிவித்தார் பெரும்தொண்டுள்ளத்தோடு!
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன
விடுதலை இணையத்தில் படித்த சிகாகோ பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த திருமதி அருள்செல்வி - பாலு அவர்கள் (தொலைப்பேசி வாயிலாக) ஒரு வாரச் செலவை தனது குடும்பம் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
தங்களது பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் நினைவாக ஒவ்வொரு வாரச் செலவுத் தொகையை வசதியும், தரும உள்ளமும் படைத்தவர்கள் அனுப்பினால், அந்தந்த வாரம் என்று முறையாக அவரவர்கள் பெயர்கள் பதிவு செய்து  First Come First Served என்ற முறையில் அவரவர்கள் அறிவிக்க விரும்பும் பெயர்களால் அந்த வார அறப்பணி நடைபெறும்.
இதற்கென நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், வெளிநாட்டவர்களானால் தங்களது நன்கொடைகளை Periyar Maniammai ‘‘Institute of Science and Technology’’ என்ற பெயரில் Drafts  - வரைவோலை எடுத்து அனுப்புவ தோடு, விவரமான கடிதம் ஒன்றையும் அதன் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
உள்நாட்டவர்கள் ஆனால், வரைவோலைகளை - செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் - Secretary, The Periyar Self-Respect Propaganda Institution என்ற பெயரில் Cross செய்து, கடிதத்துடன் அனுப்பிடலாம்.
அனைத்து மக்கள் பங்கு பெறும் இயக்கமாக (Campaign) இது நடந்தால்தான் இதற்குப் பெருமை என்பதால் இவ்வேண்டுகோள்.
துண்டேந்தியும் தொண்டு செய்வோம்!
இந்தத் தொண்டறப் பணிகளை எப்படியும் துண்டு ஏந்தியாவது தொய்வின்றி நடத்திடும் திட சித்தம் உள்ள தோழர்கள், தோழியர்களுடன் இந்த வைர விழாவில் புதியதோர் மனிதநேயப் பணி நல்ல துவக்கமாகி தொடருகிறது.
ஏற்கெனவே தஞ்சையில் பல ஆண்டுகளாக, நீதியரசர் ஜஸ்டீஸ் E. பத்மநாபன் அவர்களால் தொடங்கப் பெற்று சிறப்புடன் பணியாற்றி வருவதன் (புற்றுநோய் தடுப்பு - ஆய்வு) இரண்டாவது கட்டப்பணி இது.
மேலும் பாய்ச்சலுடன் (Deep Foreward) தனது பயணத்தை நடத்திடும்.
தஞ்சை புரா கிராமங்களில், இப்பணி தொடரக்கூடும்.
கடவுளை மற; மனிதனை நினை! - தந்தை பெரியார்.

சென்னை 
26.9.2012
கி. வீரமணி
செயலாளர்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

அறக்கட்டளையின் பணியும்- நமது கடமையும்! (2)


பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் வைர விழா என்பது தமிழ்நாட்டின் சமூக, கல்வி வளர்ச்சி மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு என்னும் திசையில் அது சாதித்திருக்கும் பட்டியலை நினைவு கூர்வதாகும்.
மருத்துவ உதவிப் பணிகளும் சாதாரண மானவையல்ல; சென்னை, திருச்சி, வல்லம், சோழங்கநல்லூர், சேலம், திருவெறும்பூர் என்று இதன் மருத்துவப் பணிகளின் கரம் நீளக் கூடியதாகும். இயக்கத் தோழர்கள் பலருக்குத் தேவையான  மருந்துகளையும் வாங்கிக் கொடுத்து வருகிறது. அதனை ஓர் அமைப் புக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற் காகவே பெரியார் மருத்துவக் காப்பு நிதி என்ற ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (வாய்ப் புள்ளவர்கள் நிதி தரலாமே!)
கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் மனிதனை நினை என்று சொன்னதன் பொருளுக்கான விளக்கமும் - செயல்முறையும் இதன்மூலம் விளங்குமே!
பெரியார் அறக்கட்டளை ஒரு பக்கம் வளர்ந்து, அதன் பணிகள் பரவலாக விரிந்து, பயன்பெறுவோர் எண்ணிக்கையும் பெருகி வந்தாலும் உள்ளுக்குள் புகுந்து அழிக்கும் கிருமிகள்போல கூட இருந்தே குழி வெட்டிய கொடுமைகளும் நிகழ்ந்தன.
வெளிப்படையான இன எதிரிகள் ஒரு பக்கம் - இந்தத் தொண்டால் யார் பலன் அடைகிறார் களோ, அவர்களே அதனைப் புரிந்துகொள் ளாமல் எதிரிகளுக்கு அம்பாகப் பயன்படும் கொடுமை ஒருபுறம் - கூட இருந்தே உடன் கொல்லும் துரோகம் இன்னொருபுறம் - இவற்றையெல்லாம் கடந்துதான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் பணிகளும் ஓங்கி ஓங்கி வளர்ந்திருக்கின்றன.
வருமான வரித்துறை என்பது ஓர் ஆயுத மாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் முகம் கொடுத்து, சட்டப்படி அறக்கட்டளை என்று ஏற்கும்படிச் செய்த வகையில், நமது மதிப்பிற் குரிய அறக்கட்டளையின் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றியிருக்கும் பணியை யாராலும் அளவிடவே முடியாது. பாதுகாத்தது மட்டுமல்ல - அதனை வளர்த்திருக்கும் நேர்த்தி களையெல்லாம் எண்ணிப் பார்த்தால், இயக்கம் மட்டுமல்ல, இந்த நிறுவனங்களால் பலன் பெறுவோரும் காலாகாலத்திற்கும் நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளனர்.
தனது மகத்தான இந்த வெற்றிகளுக்குப் பின் பலமாக, பின்புலமாக இருந்தவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவிக்கும் பண்பாட்டை உள்ளடக்கியதுதான் திருச்சி விழா. இது பாராட்டு விழா அல்ல - நன்றி காட்டும் விழா என்று குறிப்பிட்டது மிகச் செறிவானதாகும்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அப்படி நன்றி காட்டப்பட்டவர்கள் அவ்விழாவில் சொன்ன கருத்து - மிக உயர்ந்த சீலத்தைக் கொண்டதாகும். தந்தை பெரியார் அவர்களால் பலன் பெற்ற இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள், தந்தை பெரியார் அவர்களின் நிறுவனத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காக நாங்கள் தான் நன்றி கூறவேண்டும் என்று சொன்னார் களே, அந்த மெருகேறிய உள்ளங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே!
தந்தை பெரியார் அவர்களை உணர்ந்தவர்கள், புரிந்துகொண்டவர்களின் ஒவ்வொரு செயல்பாடும், பண்பாடும் பெருநிலை கொண்டதாகத்தானிருக்கும் என்பதற்கு இவையெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து, அதனால் பலன் பெறும் மக்களின் தொகையும் பெருக நம்மால் இயன்ற உதவிகளைத் தொடர்வது என்று தமிழர்கள் உறுதி கொள்வார்களாக!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!