Monday, October 24, 2016

தந்தி தொலைக்காட்சியில் நடந்ததென்ன?


18.10.2016 அன்று தந்தி தொலைக்காட்சியில் "ஆய்த எழுத்து" நிகழ்ச்சியில் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியும், பிஜேபியைச் சேர்ந்த ராகவன் என்பவரும் பங்கெடுத்துள்ளனர்.
விவாதத்திற்கு இடையில் பிஜேபி ராகவன், கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களைப் பார்த்து கிறிஸ்தவர் என்று மத அடையாளத்தைச் சுட்டிக் காட்டினார். (அவர் கிறிஸ்தவரல்ல என்பது வேறு விஷயம்) அந்த இடத்திலேயே ஒருங்கிணைப்பாளர் குறுக்கிட்டு, ஒருவரை மதத்தைச் சொல்லி  அடையாளங் காட்டுவது தவறு என்று சுட்டிக்காட்டி  எச்சரித்திருக்க வேண்டும். அந்தக் கடமையை ஒருங்கிணைப்பாளர் அம்மணி செய்யத் தவறியது ஏன்?
திரு. கிருஸ்துதாஸ் காந்தி அவர்கள் தனது விவாதத்தில் "கடவுள் மறுப்பாளர்களுக்கு கருத்துக் கூற உரிமையுண்டு. கடவுள் மறுப்பாளர்கள், ராமரை செருப்பாலடிப்பது தவறு என்று சொல்வீர்களா?" என்ற வினாவை எழுப்பினார்.
அவ்வளவுதான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பிஜேபியினர் தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கமாகக் கையாளும் கூச்சலைப் போட ஆரம்பித்தார் திரு. ராகவன்.
"ராமரை அடிப்பது தவறு என்றால் இந்துக்களே குல தெய்வமாகப் போற்றும் இராவணனை எரிப்பது மட்டும் நீதியாகுமா?" என்று சொல்ல வருவதற்குள் அவர் பேச்சு இடைமறிக்கப்பட்டதால் ராமனை அடிப்பது என்பதை மட்டும் பெரிதுபடுத்தி அமர்க்களம் செய்துள்ளனர்.
நிகழ்ச்சியின் இடைவெளியிலும்கூட, தம் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் கிறிஸ்து தாஸ் காந்தி.
அத்துடன் விட்டு விடுவார்களா சங்பரிவார்க் கூட்டம்? இரவு முழுவதும், பொழுது விடிந்தும் தொலைப்பேசி மூலம் மிகக் கேவலமான முறையில் இழித்துப் பழித்தும், வன்முறை வார்த்தைகளாலும், சிறுமைப்படுத்தியுள்ளனர்.
ஆத்திரப்படாமல், தன் நிலைப்பாட்டைக் கண்ணியமாக எடுத்துச் சொன்னதோடு அல்லாமல் தமது வார்த்தை காரணமாக தூண்டி விடப்பட்ட அமைதியின்மைக்கு வழி வகுக்குமேயானால், அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியோடு மன்னிப்புக் கோரும் வகையில் செய்தி ஒன்றையும் வெளியிட்டார் கிறிஸ்து தாஸ் காந்தி அவர்கள். அது இந்து நாளேட்டில்கூட வெளிவந்தும் விட்டது. அதனை எடுத்து பலர் சமூக வலைதளங்களில்கூட பரப்பியும் உள்ளனர்.
இவ்வளவுக்குப் பிறகும் சங்பரிவார்க் கூட்டத்தால் தூண்டி விடப்பட்டு, கிறிஸ்து தாஸ் காந்தியின் கொடும் பாவியைக் கொளுத்தியுள்ளனர். காவல் நிலையங்களில் புகாரும் கொடுக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே 'தினமலர்' ஏடு தனக்கே உரித்தான விஷமத்தனத்தோடு "ராமரை செருப்பால் அடிப்பேன்; மாஜி அய்.ஏ.எஸ். அதிகாரி பேச்சு" என்று தலைப்பிட்டு, அந்த அதிகாரியின் இல்ல முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணையும் வெளியிட்டுள்ளதன் நோக்கம் என்ன?
அவர்மீது நேரடியாக வன்முறையைத் தூண்டும் போக்கிரித்தனம் தானே இதில் ஒளிந்திருக்கிறது.
தினமலரின் வன்முறை தூண்டிவிடும் இந்த நடவடிக்கைபற்றி பிரஸ் கவுன்சிலுக்குப் புகார் செய்ய வேண்டாமா?
பிஜேபியின் தேசிய செயலாளரான பார்ப்பனர் ஒருவர் தந்தை பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னபோது இந்தக் கூட்டம் என்ன செய்தது? எங்கே போனது?
பொது வாழ்வில் இதுபோன்ற அவமானங்களைத் துடைத்து எறிந்து விட்டுதான் பொதுப் பணியைத் தொடர்ந்தவர் தந்தை பெரியார்.
1944இல் கடலூரில், ரிக்ஷாவில் தந்தை பெரியார் சென்ற போது இந்தக் கூலிகளின் முன்னோர்கள் அவர்மீது செருப்பெடுத்து வீசவில்லையா? அந்த இடத்தில்தான் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் கருணானந்தம் கவிதை பாடவில்லையா? இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அவற்றையெல்லாம் புறங்கண்டுதான் இந்த இயக்கத்தின் கொள்கைகள் வெற்றி பெற்று வீறு நடை போட்டு வருகின்றன.
1971ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் போது, ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சென்ற தந்தை பெரியார்மீது ஜனசங்கத்தினர் கருப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் செருப்பை வீச, தந்தை பெரியாரை நோக்கி வந்த அந்த செருப்பை கழகத் தோழர் ஒருவர் லாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட ராமன் உருவத்திற்குச் சாத்துப்படி செய்தார். இதற்குக் காரணமானவர்கள் ஜனசங்கத்தினர் ஆனாலும் சேலத்தில் ராமனை திகவினர் செருப்பாலடித்தனர் என்றே பிரச்சாரம் செய்தனர். கூப்பாடு போட்டனர். அது சட்டப் பேரவைத் தேர்தல் நேரம் என்பதால் கோயில் கதவு அளவு சுவரொட்டிகளை நாடெங்கும் அச்சிட்டு ஒட்டி, இந்தப் பிரச்சினை மூலம் திமுகவைத் தோற்கடித்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.
முடிவு என்னவாயிற்று? 1967 தேர்தலில் 138 இடங்களை பெற்ற திமுக - ராமனை செருப்பாலடித்த திமுகவுக்கா ஒட்டு என்று மித்திரபேதம் செய்து பிரச்சாரம் செய்த பிறகு திமுகவுக்குக் கிடைத்த இடங்கள் 184. இதுதான் தமிழ்நாடு என்பதை இந்துத்துவா கூட்டம் உணர வேண்டும்.
இராமாயணக் கதையின்படி இந்த நாட்டில ராமன் செருப்பு 14 வருடம் ஆட்சி செய்திருக்கிறது என்பதை உணர வேண்டும் அதற்காக வெட்கப்பட வேண்டாமா?
மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதியை இந்த 2016-லும் கடைப்பிடிக்க விரும்புகிறார்களா?
ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லும் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. சம்பூகன் என்பவன் தவம் செய்தான் என்பதற்காக ராமன் அவன் தலையை வாளால் வெட்டிக் கொன்றானே; அதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன? சம்பூகன் சூத்திரன் (மனுதர்மப்படி விபச்சாரி மகன்) அவன் தவம் செய்யக்கூடாது வருண தர்மத்தைமீறினால் சூத்திரன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தானே ராமன், சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றான்.
அந்த ராமனை நாங்கள் மதிக்க வேண்டுமா? ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்று சொல்லும் இந்த இந்துத்துவாவாதிகள் இதன் மூலம் இந்த 2016-லும் நம்மைச் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று இழிவுபடுத்துவதாகத்தானே அர்த்தம்.
டில்லியில் ராம் லீலா நடத்தி இராவணன் உருவத்தை ஆண்டுதோறும் எரித்து வருகின்றனர். அதனைக் கண்டித்து தந்தை பெரியார் நினைவு நாளினையொட்டி (25.12.1974) சென்னைப் பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் இராவண லீலா நடத்தி ராமன் லட்சுமணன், சீதை உருவங்களை எரித்தோமே! நீதிமன்றமும் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்புக் கூறியதை நினைவூட்டுகிறோம்.
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பஞ்சமர் புரட்சி வெடிக்கட்டும்!
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
சூத்திரர் புரட்சி வெடிக்கட்டும்!
குறிப்பு: பார்ப்பனர்கள் ஒட்டு மொத்தமாக கைப்பேசிகளையும் சமூகவலை தளங்களையும் பயன்படுத்தித்தான் தாங்கள் விரும்புவதை பரப்புவதில் வேகத்தோடு வெறித்தனத்தைக் காட்டுகிறார்கள் அந்த உணர்வு நம் மக்களுக்கு வர வேண்டாமா? - சிந்திப்பீர்!
- கருஞ்சட்டை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...