Total Pageviews

Saturday, March 30, 2013

ஒட்டுமொத்தமாக களவாடப்பட்ட 69% இட ஒதுக்கீடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமன மோசடி (3)

ஒட்டுமொத்தமாக களவாடப்பட்ட 69% இட ஒதுக்கீடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமன மோசடி 


(தகுதித் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? அதனால் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பா? என்பது குறித்து நாம் இங்கே விவாதிக்கவில்லை. அது வேறு செய்தி. தகுதி தேர்வு வைத்தாகிவிட்டது, ஆனால், அந்தத் தேர்வு முடிவுகளிலும், பணி நியமனத்திலும் இட ஒதுக்கீடு என்னும் அரசமைப்புச் சட்டப்படியான சமூகநீதி எப்படி மோசடியாகப் பறிக்கப் பட்டிருக்கிறது என்பதைப்பற்றிதான்....)
சார், என்ன இருந்தாலும் சொல்லுங்க...? 60% மார்க் கூட எடுக்காதவங்களையெல்லாம் எப்படி சார் ஆசிரியரா ஏத்துக்க முடியும்? என்றொரு கேள்வியை கோபமாக, செல்லமாக, ஆதங்கமாக என்று பல பாவனைகளில் பலரும் கேட்பார்கள்.
தரத்தைப்  பற்றிக்கவலைப்படும் இந்தக் கேள்வி நியாயமானதுதான்! இந்தக் கேள்வியை இப்படியும் கேட்கலாம்.
மொத்தமதிப்பெண்கள் 100% .... முழுமையான, நல்லதரமானஆட்கள் கிடைக்க வேண்டும் என்றால், 100%-த்தைதானே தகுதி அளவுகோலாக வைத்திருக்க வேண்டும்! எதற்காக 40% மதிப்பெண்களைக் குறைத்து, 60% என்று நிர்ணயித்தார்கள்.....? அப்படி யானால், தரத்தில் சமரசம் செய்து கொள் கிறார்களா..? அது எப்படி சார்..... எல்லாரும் 100% எடுக்கமுடியும்? இப்படி செஞ்சா, என்னைக்குக் காலி இடங்களை நிரப்பி முடிக்கிறது?
இப்போ புரியுதுல்ல. தரத்தயெல்லாம் முழுசா யாராலயும் பேண முடியாது!.... இருக்கக்கூடிய எதார்த்த சூழல மனசுல வச்சு. இப்போதைக்கு இவங்க இவ்வளவு எடுத்தாலே தகுதியான ஆளு தான்னு... ஒரு மதிப்பெண் நிர்ணயிக்கப்படுது.... அதுக்குப் பேருதான் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்....!
சரி அப்படிப்பார்த்தா 60%-ங்கிறது ஓரளவுக்குச் சரியான தகுதி மதிப்பெண் தானே நானும் உங்க வாதத்துக்கே வர்றேன்!
சரிதான். இப்பதான் நீங்க கொஞ்சம் மெல்ல விளங்கிக்க ஆரம்பிச்சிருக்கீங்க.... இன்னும் கொஞ்சம் மேல யோசிங்க..... அப்படி நிர்ணயிக்கப்படுற தகுதி மதிப்பெண் எந்தப் பிரிவினருக்கு என்பது தான் கேள்வி!
சரி, விடுங்க... எல்லா வாய்ப்பும் கிடைக்கிறவங்களுக்கே 60% எடுத்திருந்தால் போதும் என்பது தானே உங்க தகுதி அளவுகோல்.
இயற்கை நீதிப்படி பார்த்தால்கூட, எதையும் பார்த்துப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு மறுக் கப்பட்டு, அனைத்தையும் செவி வழியாக மட்டுமே கேட்டு உணர்ந்து கொள்ளவேண்டிய பார்வையற்ற வர்களுக்கும், முற்பட்ட வகுப்பினருக்கும் ஒரே தகுதி அளவுகோல் என்பது சரிதானா? பார்வையற்றோர் எப்படி ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களோ, அதுபோலத்தான், பிற்படுத்தப் பட்டோர் தொடங்கி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வரை முற்பட்ட வகுப்பினரோடு ஒப்பிடுகையில், ஏதோ ஒரு வகையில் வளர்வதற்கான சமவாய்ப்புச் சூழல் மறுக்கப்பட்டு, பாதிப்புக்குள் ளாகியிருக்கிறார்கள்!
இதையெல்லாம், கணக்கில் எடுத்து, மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் விவாதித்துதானே, தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களும் அவர்களது வழிவந்தோரும் பெரும் முயற்சி செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஓரளவேனும் தீர்வு வழங்குவதற்காக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்னும் அரசியல் சாசன ஷரத்தே ஏற்படுத்தப்பட்டது!
அதெல்லாம் சரிங்க... 60% ங்கிறதே....
அப்படி வாங்க... நாங்க கேட்கிற இடஒதுக்கீடு கருணைய அடிப்படையா வச்சு கிடையாது. பொதுப் பிரிவினருக்கு 60% எடுத்தால் போதும்னு 40 சதவிகிதம் குறைச்சு நிர்ணயிச்சிருக்கிறது கருணைல கொடுத்ததா? இல்லைல... குறைந்தபட்ச மதிப்பெண்-னு முன்னேறிய ஜாதியினருக்கு ஒரு எல்லை வைக்கிற மாதிரி, எல்லா தரப்பினருக்கும்  ஒவ்வொரு எல்லை இருக்குமில்லையா? அந்த எல்லையை (குறைந்தபட்ச தகுதி அளவுகோலை) ஏன் வைக்கலைங்கிறது தான் இப்போ கேள்வி.
மேற்சொன்ன விளக்கம் - தகுதி, திறமை மோசடிப் பேச்சாளர்களுக்கு உரியது. ஆனால், உண்மையில்  TET விசயத்தில் இந்த விவாதம் எல்லாம் தேவையே இல்லாதது. ஏனென்றால் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தச் சொன்ன மத்திய அரசின் சட்டமே ஒவ்வொரு சமூகத் தினருக்கும் உரிய விகிதத்தை, தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கச் சொல்கிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இப்படித் தான் நிர்ணயிக் கப்பட்டிருக்கிறது.
இதோ,  NCTE (National Council for Teacher Education)  வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள் http://www.ncte-india.org/RTE-TET-guidelines[1]%20(latest).pdf என்ற பக்கத்தில் இருக்கிறது.
அதன் விதி எண் 9(அ) சொல்வது என்ன?
Qualifying marks
9. A person who scores 60% or more in the TET exam will be considered as TET pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation  policy;
9. ஆசிரியர் தகுதித் தேர்வில் 60ரூ அல்லது அதற்கு மேல் எடுக்கும் நபர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவார். பள்ளி நிர்வாகங்கள் (அரசு, உள்ளாட்சி அமைப்பு கள், அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத)
(அ) அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப SC/ST, OBC   மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப் பெண்களில் தளர்வு வழங்கிக் கொள்ளலாம்.
இந்திய அளவில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் என்பதால், அந்தந்த மாநிலத்துக் கேற்ப, அமைப்புகளுக்கேற்ப அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று இவ்வளவு தெளிவாக NCTE கொடுத்திருக்கும் வழிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டுத் தான், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அசாம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம், பீகார், கேரளா என இந்தியாவின் பிற மாநிலங்கள் அனைத்திலும் இடஒதுக்கீட்டுக்கான இந்த நடைமுறை பின் பற்றப்பட்டிருக்கிறது. பொதுப் போட்டிக்கான தகுதி மதிப்பெண்கள் 60%  என்றும், இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 55 என்றும் அறிவித்து முடிவுகள் வெளியிடப்பட் டுள்ளன.
ஒரிசாவில் பொதுப் பிரிவினருக்கு 60%, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50% ஆந்திராவில் பொதுப் பிரிவினருக்கு 60%, பிற்படுத்தப்பட்டோருக்கு 50%, தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40% என தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் சகல வசதி-வாய்ப்பு களும் படைத்த ஆங்கில வழியில் படித்த பார்ப் பனர்கள் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே 60% தான், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ்வழிக் கல்வி கற்றோர், பெண்கள், கைம்பெண்கள் உள்ளிட்ட தமிழ் நாட்டின் அத்தனை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானதல்லவா?
தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணையிலும் (G.O. (Ms) No. 181, School Education (C2) Department, Dated 15.11.2011) NCTE  வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளது. ஆனால் தாங்கள் பின்பற்றப்போகும் அளவுகோல் என்ன என்பதை அப்போது வெளிப்படுத்தவில்லை. அரசாணையில் வெளிப்படுத்தாத முடிவை 07.03.2012இல் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் (04/2012) General Information என்ற தலைப்பில் தெரிவித்துள்ளது தமிழ்நாடு ஆசிரியர் தேர் வாணையம் (TRB).
Candidates securing 60% and above in the tests will be issued a TET Eligibility Certificate mentioning the language opted under Language I, which will be valid for 7 years from the date of issue of the certificate.
சமூக நீதிக்கெதிரான முக்கியமான இந்த முடிவை எடுத்தது யார்? இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வகுப்புவாரியாக நிர்ணயிக்கவேண்டிய அளவு கோலை நிர்ணயிக்காமல் விட்டது எப்படி? இதில் நாம் கேட்கும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் நிர்ணயம் - சட்டப்படியும், சமூக நீதிப்படியும் நமக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமை. இது சலுகையோ, போனால் போகிறது என்று போடுகிற பிச்சையோ அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், ஆசிரியர் சங்கங்கள் கூட இந்த மோசடியைக் கண்டு பிடிக்கவில்லை என்பது தான் கொடுமை!
இந்திய அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த சமூகநீதி உரிமையை வழங்காமல் செய்தது மாபெரும் குற்றம் அல்லவா?
தகுதி அளவுகோல் 60% என்பது (தமிழ்நாட்டில் 150 மதிப்பெண்களில் 60% என்றால் 90 மதிப்பெண்கள்) பொதுப் பிரிவினருக்கானது. அப்படியானால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு? 60% மதிப்பெண்ணுக்கு மேல் என்று அளவு வைத்து நிரப்பப்பட்ட இடங்கள் எல்லாம் பொதுப்போட்டி இடங்கள் என்றால் மிச்சம் இருக்கும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான 69% இடங்கள் களவாடப்பட்டுள்ளது தெரியவில்லையா?
இதுவரை நாம் பார்த்தது தகுதி மதிப்பெண்களில் சமூகநீதியும், மத்திய அரசின் ஆணையும் எப்படி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே! இனி, அடுத்த மோசடியைப் பார்ப்போம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, March 28, 2013

அம்பலமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடி (2)

இட ஒதுக்கீடே வழங்கப்படாமல் 21,000 பணி நியமனங்கள்! அம்பலமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடி
நேற்றைய விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம் தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம் கருத்துக்கூறி வருகின்றனராம் முகநூலில்!
அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன என்றும் தெரியாது. ஏன் என்றும் தெரியாது. இதில் தகுதிக் குறைவு என்பதற்கு பேச்சே கிடையாது என்பதும் புரியாது. ஆயிரம் முறை சொன்னாலும் அதுகள் பேசுவதைப் பேசிக் கொண்டுதானிருக்கும். அவர்களுக்கும் இறுதியில் நாம் விளக்கம் சொல்வோம்.
முதலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்திருக்கும் மோசடிகள் பற்றித் தெரிந்து கொள்ள அடிப்படையாகச் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இடைநிலை ஆசிரியர்கள் (Secondary grade)
2. பட்டதாரி ஆசிரியர்கள் (Graduate assistants / BT assistants)
3. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (Post Graduate assistants)
  • இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அவசியமில்லை. நேரடிப் போட்டித் தேர்வோ அல்லது பதிவு மூப்பு அடிப்படையிலோ பணி நியமனம் செய்து கொள்ளலாம் (முன்பிருந்த முறைப்படியே).
இது குறித்து மத்திய அரசு புதிய விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை.
ஃ    மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு, அவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர்களாகப் பணிபுரியத் தகுதியானவர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த பின்னர் தனியாக இப்படியொரு தேர்வு எதற்கு என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங் களிலும் எதிர்ப்புக் கிளம்பினாலும் இப்போது நாம் பேசப் போகும் செய்தி, அப்படி நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் - அவற்றின் முடிவுகள் - பணி நியமனங்கள் ஆகியவை சட்டப்படி நடந்திருக்கின்றனவா என்பது பற்றித்தான்.
  • கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான முறைகேடு அரங்கேறியிருக்கிறது. நாமும் ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.
முதலில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த விவரங்கள். பணி நியமனங்கள் என்று வரும்போது எவ்வளவு காலிப் பணியிடங்கள்? அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு? என்பதைக் குறிப்பிட்டு அறிவிக்கை (Notification) வெளியாகும். நாமும் இந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளதா என்பதைப் பார்த்தாலே போதுமானது.
ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று மொத்தமாக 21,000 பேருக்கு வேலை. அதில் 10,000க்கும் மேற்பட்ட  இடைநிலை ஆசிரியர்கள் 8000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 3000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என்று செய்தி வெளிவந்த போது, நாமும் நிரப்பப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டி ருக்கிறதா என்ற பார்வையுடன் தான் இப்பிரச்சினையை அணுகத் தொடங்கினோம்.
அப்போதுதான் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் கொண்ட அறிவிக்கை கூட வெளியிடப்படாதது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையின் வேர் இன்னும் ஆழத்தில் இருப்பதும் புரியவந்தது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். அதென்ன தகுதித் தேர்வு? போட்டித் தேர்வு? தனித்தனியாகவா இருக் கிறது? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் நீங்கள் விழித்துக் கொண்டீர்கள் என்று பொருள். ஏனென்றால் இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் குழம்ப வைத்ததுதான் இந்தப் பணி நியமன மோசடியில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி!
UPSC, TNPSC, TRB என்றெல்லாம் நடத்தப்படுகின்ற னவே அவைதான் போட்டித் தேர்வுகள். அதாவது மொத்த காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்பதை அறிவித்து அதற்காகவென்றே நடத்தப்படுவதுதான் போட்டித் தேர்வு.
NET, SLET, SET, TET போன்றவையெல்லாம் தகுதித் தேர்வுகள் (Eligibility Test). இவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது வேலை பெறுவதற்கான தகுதித் தேர்வே தவிர, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை என்பது கிடையாது.
போட்டித் தேர்வு
1. வேலை வாய்ப்பிற்கான அறிவிக்கைகளின் கீழ் நடத்தப்படும் தேர்வு.
2. ஒவ்வொரு ஆண்டும் நடத்த அவசியம் இல்லை (எ.கா. TNPSC)
3. பெற்றுள்ள மதிப்பெண்களைப் பொறுத்து ஒவ்வோ ராண்டும் வகுப்பு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் மாறும்.
4. இதில் வெற்றி பெறுவோருக்கு தேர்ச்சிச் சான்றிதழ் தரப்படாது. மதிப்பெண்களை வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய முடியாது.
5. கட்-ஆப்க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி.
6. இதிலிருந்து நேரடியாக பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தயாரிக்க முடியும்.
தகுதித் தேர்வு
1. வேலை வாய்ப்புக்கான அறிவிக்கைக்கும் தகுதித் தேர்வுக்கும் தொடர்பில்லை
2. ஒவ்வோராண்டும் நடத்தப்படும் (TET ஒன்றுக்கு மேலும் நடத்தப்படலாம்).
3. மொத்த இடங்கள் எவ்வளவு என்ற பிரச்சினை இல்லை. எனவே வகுப்பு வாரியான தனித்தனி தகுதி அளவுகோல்கள் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகோல்கள் மாறாது.
4. வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்ட தனித்தனி தகுதி அளவுகோலுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
5. தகுதித் தேர்வில் பெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை என்பது உறுதி கிடையாது. இதில் வெற்றி பெற்றோரை தனியே விண்ணப்பிக்கச் சொல்லி, அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முறை என்னவோ அதற்கேற்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டித் தேர்வு மதிப்பெண் கட்-ஆப் / பதிவு மூப்பு தேதி கட்-ஆப் ஆகியன வகுப்பு வாரியாக அறிவிக்கப்படும். மற்றபடி இது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே!
6. இதிலிருந்து நேரடியாகப் பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியல்  தயாரிக்க முடியாது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்து வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வதுபோல தகுதித் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதற்குள் அரசு அறிவிக்கும் ஆசிரியர் பணிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இந்தத் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். (தனியார் பள்ளிகளிலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் பணியில் இடம் பெற முடியும் என்பதுதான் இப்போதைய சட்டப்படியான நடைமுறை) அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க இத்தகுதி மதிப்பெண்கள் பயன்படும். பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வோ / பதிவு மூப்போ / வெயிட்டேஜ் மதிப்பெண்ணோ காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்பு வாரியான கட்-ஆப் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
இப்படியான தகுதித் தேர்வுகள் பல ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படுகிறது. NET / SLET தேர்வுகளில் வெற்றி பெற்றோர் தான் கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோ ராவர்.
அதேபோலத்தான் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு)ல் பெற்ற தேர்ச்சி பெற்றோர் தான் பள்ளி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெறுவதற்கு மட்டும்தான் TET பயன்படும்; பயன்படுத்தப்பட வேண்டும். மற்றபடி பணி நியமனத்திற்கும் TET-க்கும் நேரடித் தொடர்பே கிடையாது.
சரிங்க அப்படின்னாலும் TET-ல தகுதி மதிப் பெண் ணுக்கு மேலே தானே வேலை கொடுத்திருக்காங்க. தகுதி பெறாதவங்களையெல்லாம் வேலைக்கு எப்படி எடுக்க முடியும்? கல்வித்தரம் கெட்டுப் போயிடாதா? வேணும்னா அடுத்த வருசம் எழுதி தகுதிப்படுத்திக்க வேண்டியது தான்.
இந்த மாதிரிப் பிரச்சினையெல்லாம் NET/SLET-ன்னு சொன்னீங்களே அங்கேயெல்லாம் வருதா? என்று இந்த தகுதித் தேர்வில் தோல்வியடைந் தாகச் சொல்லப் படும் சிலரே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அப்படி தகுதியானவர்கள், தகுதியில்லாத வர்கள் என்று பிரித்துச் சொல்லும் மாபெரும் அளவுகோலான தகுதி மதிப்பெண் என்பது எவ்வளவு?
60 விழுக்காடு
அதாவது 100-க்கு 40 விழுக்காடு குறைவான மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை அவர்கள் தகுதியு டையவர்கள் என்பது தானே உயர்ந்தபட்ச தகுதிக்கான அளவு கோல்!
ஆமாம். அதேதான்.
இந்த 60 விழுக்காடு மதிப்பெண் என்பது யார் யாருக்கு?
அனைவருக்கும்தான். அதிலென்ன சந்தேகம்?
அனைவருக்கும் எப்படி ஒரே அளவுகோல்? இந்திய அரசியல் சட்டத்தில் சமூகநீதி அடிப்படை யிலான தனித்தனி அளவுகோல்கள்தான் நிர்ணயிக்கப் பட வேண்டும். திறந்த போட்டிப் பிரிவினருக்குத்தானே 60 விழுக்காடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியெனில் பிற்படுத்தப்பட்டோருக்கு...? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு...? தாழ்த்தப்பட்டோருக்கு...?
பழங்குடியினருக்கு...?
மாற்றுத் திறனாளிகளுக்கு...?
பார்வையற்றோர்களுக்கு...?
60, 60, 60, 60, எல்லோருக்கும் 60 விழுக்காடுதான், யாருக்கும் தனித்தனியாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட வில்லை.
இப்போது புரிகிறதா? பார்ப்பனர்கள் முதல் பார்வையற்றோர் வரை அனைவருக்கும் ஒரே அளவுகோல்! எப்படி இருக்க முடியும்? சமூக நீதியில் மோசடி என்றோமே அதன் அடிப்படை புரிகிறதா இப்போது? இதுவரை இந்தியாவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கவே முடியாது.
அரசியல் சட்டத்திற்கு விரோத மாக, உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை வழங்கியிருக்கும் எண்ணற்ற தீர்ப்புகளுக்கு மாறாக, இந்த தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்திற்கும் ஆணைக்குமே புறம்பாக இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது. திட்டமிட்ட சதி அரங்கேறியிருக்கிறது.
NCTE எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆணைய விதிப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தகுதித் தேர்வுகளை நடத்தி வகுப்புவாரியான தனித்தனியான கல்வி அளவுகோல்களை வெளியிட்டு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தந்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் வகுப்புவாரியான கட்-ஆப் மதிப்பெண்ணே கிடையாது என்று சமூகநீதிக்கும், அரசியல் சட்டத்திற்குமே எதிரான நிலைப்பாடு எப்படி எடுக்கப்பட்டது?
ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்று கேட்பதற் கான அடிப்படை வாய்ப்பையே இல்லாமல் செய்து, சமூகநீதிப்படி வேலை பெறும் தகுதிக்கான ஊற்றுக் கண்ணையே அடைத்தது யார்?
முன்னேறிய ஜாதியினரும், அனைத்து வாய்ப்புகளும் பெற்றவர்களே 40 விழுக்காடு குறைவாக 60 விழுக்காடு எடுத்திருந்தாலும் தகுதியானவர்கள்தான் என்னும்போது அவர்களை விட வாய்ப்புக் குறைந்த, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பார்வையற்றோருக்கும் சமூகநீதிப்படி நிர்ண யிக்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் ஏன் நிர்ணயிக்கப்பட வில்லை? திறந்த போட்டியைத் தவிர 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வெற்றிருக்க வேண்டிய ஒடுக்கப்பட்டவர்களுக் கான இடங்கள் ஒட்டு மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது இன்னும் விளங்கவில்லையா? இடஒதுக்கீடே வழங்கப்பட வில்லை என்பது புரியவில்லையா?
சட்டமும், நீதிமன்றமும் TET விசயத்தில் சொல்லியிருப் பவை என்ன? நடந்திருப்பது என்ன? நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? நடந்துள்ள சதியின் விவரங்கள் நாளைய விடுதலையில்!
தோழர்களே, பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்த்து விட்டீர்களா? அவர்களை ஒன்று திரட்டத் தயாராகி விட்டீர்களா?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, March 27, 2013

ஆசிரியர் பணி நியமனத்தில் சமூகநீதிக்குச் சவக்குழியா? - (1)


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்தில் சமூகநீதிக்குச் சவக்குழியா?


கடந்த ஆண்டு இறுதியில் (13.12.2012) சென் னையில் ஓர் அவசரத் திருவிழா அரங்கேறியது. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை! விடிய விடிய கலந்தாய்வு நடத்தி பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டன.
இதுவரை கல்வித் துறை வரலாற்றில் இல்லாத   ‘‘மாபெரும் புரட்சி!‘‘ 36 பேருக்குத் தமிழக முதல்வரே நேரில் வந்து ஆணை வழங்கினார். மற்ற அனைவருக்கும் அமைச்சர்கள் ஆணை வழங்கினர் என்று ஊடகங்களெங்கும் செய்தி கள் நிரம்பி வழிந்தன. ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நாட்டில் இத்தகைய நிகழ்வு புரட்சிதான்.
‘‘அப்படியே, இன்னும் இருக்கும் ஆசிரியர் தேவையையும் உடனடியாகத் தீர்த்து வைத்து விட வேண்டியதுதானே, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தான் லட்சக் கணக்கில் இருக் கிறார்களே?’’ என்றொரு கேள்வி எழுந்தது.
‘‘இல்லை, அவர்களுக்கெல்லாம் இன்னும் தகுதி வரவில்லை.’’
‘‘அப்படியா, அவர்களெல்லாம் ஆசிரியர் பயிற்சியோ, ஆசிரியர் பட்டப்படிப்போ முடித்த வர்கள் தானே!’’
‘‘இருக்கலாம். இருந்தாலும் அவர்களுக்குத் தகுதி உண்டா - இல்லையா என்பதைத் தனித் தேர்வு நடத்தித் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் ஆணை. அதுதான் ஆசிரி யர் தகுதித் தேர்வு. அதில் தேர்வானவர்கள் தான் ஆசிரியர் ஆவதற்கான தகுதி பெற்றவர்கள்.’’
‘‘ஓகோ... பிறகெதற்கு ஆசிரியர் பட்டமோ, பயிற்சியோ? சரி, அது இருக்கட்டும். அப்படி தமிழ் நாட்டில் எத்தனைப் பேர் ஆசிரியர் களாகத் தகுதி பெற்றவர்கள்? அதில் எத்தனைப் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது?’’
‘‘தகுதி வாய்ந்தவர்கள் அத்தனைப் பேருக் கும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தானே இந்த விழா!’’
‘‘பரவாயில்லையே... தகுதி உடையவர்கள் அத்தனைப் பேருக்கும் வேலை என்பது சாதனை தான். எவ்வளவு பேர் மொத்தம் தேர்வு எழுதி னார்கள்?’’
‘‘6.5 லட்சம் பேர்.’’
‘‘தேர்வானவர்கள்?’’
‘‘அதுதான் சொன்னோமே... முதுநிலைப் பட்ட தாரிகள் தவிர்த்து கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேருக்கும் மேல்.’’
‘‘என்னப்பா இது? அப்போ மிச்சமிருக்கிற 6.25 லட்சம் பேர் ஆசிரியர் தகுதியற்றவர்களா?’’
‘‘தகுதியும், திறமையும் தானுங்களே முக்கியம். தரம் தான் நிரந்தரம். அதனால தான் இப்படி வடிகட்டி எடுத்திருக்காங்க..’’
‘‘ஆமா... மொத்தம் எவ்வளவு பணியிடங்கள் காலி. அதுல எவ்வளவு பேர் நிரப்பப்பட்டி ருக்காங்க... எந்தெந்தப் பிரிவுல எவ்வளவு பேர் வேணும். எவ்வளவு பேர் தேறியிருக்காங்க...’’
‘‘அது தெரியலிங்களே....’’
‘‘அட... வேலைக்குப் போடுறதுன்னா... அதுக்கு முன்னாடியே அறிவிக்கை ஒன்னு முறைப்படி கொடுப்பாங்கப்பா... எவ்வளவு இடங்கள் காலி? அதில் திறந்த போட்டி எவ்வளவு? பிற்படுத்தப் பட்டோருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கு எவ்வளவு? தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு? அதில் பெண்கள் எவ்வளவு? மாற்றுத் திறனாளி கள் எவ்வளவு? எல்லாமே விவரமா வந்திருக் குமே! அதைப் பார்த்தா தெரிஞ்சுடுமே!‘‘
‘‘அது வந்து... அது வந்து.... அது வரலீங்களே!’’
‘‘எது வந்தது... எது வரல?’’
‘‘தேர்வானவங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாச்சுங்க... ஆனால் வேலை கொடுக் கிறதுக்கான அறிவிக்கை வரலீங்க...’’
‘‘அட.. நீ தெரியாம சொல்றப்பா... கண்டிப்பா வந்திருக்கும். சட்டப்படி அது வராம வேலையே போட முடியாதுப்பா!’’
‘‘இல்லீங்க... எவ்வளவு இடம் காலியாயி ருக்குங்கிற அறிவிக்கை வரவே இல்லீங்க’’
‘‘என்ன?’’
இந்த அதிர்ச்சிதான் ஆரம்பம்!
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. முடிவு வெளிவந்தது. கொஞ்சம் பேர் தான் தகுதியானார்கள். பாவம், போனால் போகுதே என்று மற்றவர்களுக்கு மட்டும் மறுதகுதித்(!?)தேர்வு நடத்தப்பட்டது. முடிவு வெளிவந்தது. அதில் தகுதி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கெல்லாம் பணிகள் வழங்கப்பட்டன. இதுவரை இல்லாத புரட்சி இது!
என்று 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள் கதையை!
ஆனால், இதற்கு நடுவே தொக்கி நிற்கின்றன ஆயிரம் கேள்விகள்? அதற்கெல்லாம் யார் விடை சொல்வார்? 21 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்றால், திறந்த போட்டியில் எவ்வளவு பேர் தேர்வு செய்யப் பட்டனர்?
பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர்?
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர்?
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எவ்வளவு பேர்?
ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு உண்டே?
பிற்படுத்தப்பட்டோரில் இஸ்லாமியர் எவ்வளவு பேர்?
தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியர் எவ்வளவு பேர்?
மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு பேர்?
இன்னும் இருக்கும் இட ஒதுக்கீட்டு வாய்ப்புப் பெற்றோரெல்லாம் எவ்வளவு பேர்?
‘‘அப்படியெல்லாம் கிடையாது சார்? தகுதியான வங்களுக்கெல்லாம் வேலை. அதில எல்லா பிரிவினரும் இருக்காங்க ’’இதுதான் பதில்.
தகுதி, தகுதி என்று மீண்டும் மீண்டும் இவர்கள் அழுத்திச் சொல்லும்போதே இதில் ஏதோ மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்று பொறி தட்டவில்லையா?
‘‘தகுதியானவர்களுக்கெல்லாம் வேலை. அதில் அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள்.’’
சரி, தகுதிக்கான அளவுகோல் என்ன?
தகுதித் தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் எங்கே? அதில் இட ஒதுக்கீடு அளவுப்படியே தேர்வானவர்கள் எண்ணிக்கையும் இருக்கிறதா? இல்லை, மிகச் சரியாக அவரவர் இட ஒதுக்கீடுக்கேற்ப தேர்வாகியிருக் கிறார்களா?
தேர்வு என்று முடிந்தால் அதற்கு முடிவு என்று வெளியிடப்பட்டிருக்க வேண்டுமே? எங்கே அது?
வேலைவாய்ப்புப் பெற்றோரின் இடஒதுக்கீட்டு விவரம் என்ன? என்ற கேள்விகள் நம் முன் எழும்.
ஆனால், இதற்கெல்லாம் மூலமான கேள்விகள் இன்னும் இருக்கின்றன. ஆனால், அப்படியொரு கேள்வியையோ, அதை எழுப்புவதற்கான வாய்ப்பையோ மறந்தும் ஏற்படுத்தவில்லை, ஆசிரியர் தேர்வு வாரியம்.
அந்தக் கேள்விதான். ‘‘ஒவ்வொரு பிரிவினருக்கு மான, கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு?’’ என்பது. இட ஒதுக்கீட்டை சந்தேகமற உறுதி செய்யும் ஒரே அளவுகோல் கட்ஆப் மதிப்பெண்கள்தானே!
சமூகநீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் நடந் திருக்கும் மாபெரும் சமூகநீதி மோசடி அங்கேதான் தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக சமூகநீதிக்குக் குழி தோண்டியிருக்கும் இந்த பணி நியமனத்தில் நடந்திருப்பது என்ன?
தகுதித் தேர்வின்மூலம் இட ஒதுக்கீட்டு அளவு கோலின்படி ஆசிரியர் தகுதி கிடைத்திருக்க வேண்டிய 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் படிப்பு முடித்தவர்களின் எதிர்காலத்தை இருளாக்கியது யார்?
நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து ஆணை வழங்கிய பின்னும், அடுத்த மாதமே அந்த ஆணையைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டு, அதேபோன்ற புதிய மோசடியை அரங்கேற்றும் தைரியம் எங்கே இருந்து வந்தது?
மறுக்க முடியாத ஆதாரங்களுடன் மேலும் விவரங்கள் நாளை 'விடுதலை'யில்!
சமூகநீதியில் அக்கறை கொண்டோரே, இந்த மாபெரும் மோசடிக்கெதிராக களம் காணவேண்டிய நாள் தொடங்குகிறது, எதிர்பாருங்கள்!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: