Total Pageviews

Monday, October 28, 2013

சாமிகளின் பிறப்பும் இறப்பும்-14

மக்கள் சாமிகளும் மதச் சாமிகளும்
- ச. தமிழ்ச்செல்வன்
நாம் இதுவரை இரண்டுவிதமான சாமிகளைப் பற்றிப் பார்த்திருக்கிறோம். மக்களோடு வாழ்ந்து செத்துப்போனவர்களையே சாமியாகக் கும்பிடும் பழக்கத்தில் வந்த நாட்டுப்புறச் சாமிகள் அல்லது ஏழைச்சாமிகள் ஒருவகை.
இரண்டாவது வகை கற்பனையாக மனிதர்கள் உண்டாக்கிய புலால் மறுப்பு (சைவச் சாப்பாடு) போன்ற கருத்துகளை ஒட்டி உண்டாக்கப்பட்ட கற்பனைச் சாமிகள். அவற்றுக்கு மன்னர்களின் ஆதரவு இருந்ததால் அவை வசதியான சாமிகளாக _ பணக்காரச் சாமிகளாக மாறின. அவை பின்னர் மதங்களாக நிறுவன வசதியுடன் வளர்க்கப்பட்டன.
நம்ம ஏழைச்சாமிகளுக்கு மதம் கிடையாது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது எப்படிச் சாமியாக உண்டானதோ அப்படியே அந்தந்த ஊர்களில் மக்களால் வழிபடப்பட்டு வந்தது.
மன்னர்கள் என்றால் யார் என்று நாம் முதலில் புரிந்துகொண்டால்தான் அவர்கள் ஏன் மதங்களுக்குப் பின்னால் நின்று ஆதரித்தார்கள் என்பது புரியும். மன்னன் என்பவன் நம்மைப் போல சாதாரண ஆள்தான். அவன் வேலை என்ன? நாட்டை ஆள்வது மன்னனின் வேலை என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது. அது எப்படி அவன் மட்டும் பெரிய இவனா? மக்களையெல்லாம் ஆள்வதற்கு அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
ஆதிகாலத்தில் நாமெல்லாம் குரங்குகளாக இருந்தபோது மன்னன் கிடையாது. இனக்குழுக்களாக வேட்டையாடித் திரிந்த அடுத்த கட்டத்திலும் மன்னன் கிடையாது. எல்லோரும் எந்த மரத்திலும் பழம் பிடுங்கிச் சாப்பிடலாம். எந்த விலங்கையும் வேட்டையாடலாம். காட்டில் எதை வேண்டுமானாலும் தோண்டிச் சாப்பிடலாம் என்ற நிலைதானே அப்போது இருந்தது. அதில் ஒருவன் வந்து, இந்த மரம் என் மரம், இதை யாரும் தொடக்கூடாது.
தொட்டால் அடிப்பேன் என்று அடியாள் வைத்து தகராறு பண்ணினான். அவனுக்குப் பயந்து, சரி சரி உன் மரம்தான் நாங்க தொடவில்லை, விடு சாமி என்று ஒதுங்கிக் கொண்டார்கள். நாள் ஆக ஆக காட்டு மரங்களெல்லாம் என்னுடையது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான். அடியாட்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினான்.
காட்டைத் திருத்தி நான் சொல்றபடி யாரெல்லாம் எனக்காக விவசாயம் செய்கிறீர்களோ அவர்களுக்கு நான் சாப்பிடத் தருவேன் என்று ஆரம்பித்தான். இப்படி அநியாயத்துக்கு அடியாள் வைத்து பொதுச் சொத்தைத் தனிச் சொத்தாக மாற்றிய ரவுடிகள்தான் மன்னன் என்ற பேர் பெற்று உலகின் பல பாகங்களிலும் உருவானார்கள்.
சும்மா கிடந்த காடுகளையெல்லாம் அடியாள் வைத்து வளைத்துப் போட்டாலும் உழுது பயிரிட்டு செல்வமாகக் குவிக்க உழைப்பாளிகள் வேண்டுமே? ஆகவே மன்னர்கள் குதிரைப்படையை அனுப்பி காடுமலைகளில் எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் போய் மக்களை இழுத்து வந்து மன்னனுடைய வயல்வெளிகளில் உழச்சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள்.
அப்படி இழுத்து வரப்பட்ட மக்கள் அடிக்குப் பயந்து மன்னனுக்காக உழுதாலும் அவர்கள் மனசெல்லாம் அவர்கள் விட்டு வந்த ஊர் நினைப்பிலும் ஊரில் விட்டு வந்த அவர்களது சாமிகள் நினைப்பிலுமே இருந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர், அதாவது எல்லாம் உன் ஊர்தான் சும்மா அழும்பு பண்ணாம மன்னனுக்காக உழுங்கப்பா என்று பாட்டெல்லாம் கூட மன்னர்கள் புலவர்களை வைத்து எழுதிப் பாடிப் பார்த்தார்கள். உடல் மன்னருக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது. ஆனால் அவர்களின் மனசு பூராவும் ஊரில் விட்டு வந்த சாமிகளிடமே இருந்தது.
பார்த்தான் மன்னன். இது சரிப்பட்டு வராது. உடம்பு மனசு ரெண்டுமே நம்ம கண்ட்ரோலுக்கு வரணும், அப்பத்தான் மக்கள் எப்போதும் சீராக நமக்கு அடிமையாகக் கிடப்பார்கள். என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டான். அப்போது அவனுக்கு உதவிக்கு வந்தது மதம். எல்லோருக்கும் ஒரே சாமி ஒரே மதம் என்கிற நிலையை உருவாக்கினார்கள். ஆனால் மக்கள் ஏற்கவில்லை.
உங்க சாமி சிவபெருமான் எங்க சாமி சுடலைமாடனாச்சே. ரெண்டும் எப்படி ஒன்னாகும் என்று எதிர்க்கேள்வி போட்டார்கள். மதவாதிகள் அதற்கு ஒரு திட்டம் வகுத்தார்கள். ஏமாத்தணும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் வழிகளுக்கா பஞ்சம்?
அம்சம், அவதாரம் என்கிற இரண்டு கருத்துகளை மதவாதிகள் உருவாக்கினார்கள். காளியாத்தா யாரு? அது பார்வதியோட அம்சம் என்றார்கள். சுடலைமாடன் யாரு? அது சிவபெருமானோட இன்னொரு அவதாரம் என்றார்கள். இப்படியே நம்ம மக்கள் உண்டாக்கி வைத்திருந்த எல்லாச் சாமிகளையும் பணக்காரச் சாமிகளின் அம்சம், அவதாரம்தான் என்ற கதைகளைக் கட்டிவிட்டார்கள்.
அதை இதிகாசமாகப் புராணமாகக் கதையாக எழுதி ஊர் ஊராகப் போய் பாடிப் பரப்பவும் செய்தார்கள். கதாகாலட்சேபம், பாட்டுகள் மூலம் பிரச்சாரம் செய்து எல்லா மக்கள் தலையிலும் ராமாயணத்தை ஏற்றிவிட்டார்கள். படிக்காத மக்களுக்கும் கூட ராமாயணக் கதை அப்படித்தான் பரவியது.
மக்கள் உண்டாக்கிய சாமிகளுக்குப் பெரிய கோவிலோ கோபுரமோ உண்டா? கிடையாது, அவ்வளவு பெரிசாகக் கட்டுவதற்கு மக்களிடம் பணம் ஏது? ஆனால் மன்னர்கள் உண்டாக்கிய மதச் சாமிகளுக்கு மன்னர்கள் பெரிய பெரிய ஆலயங்கள், கோபுரங்கள் என்று கட்டினார்கள்.
ஒரு கோட்டை அழிக்காமல் சின்னக்கோடாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? அதற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய கோட்டைப் போட வேண்டும். அதைத்தான் மன்னனும் மதவாதிகளும் செய்தார்கள். பெரிய பிரம்மாண்டமான கோபுரங்களுக்குக் கீழே நம்ம மக்களின் சாமிகள் அடங்கிப் போயின.
காலப்போக்கில் கோபுரச் சாமிகளைப் பெருந்தெய்வங்கள் என்றும், மக்கள் உண்டாக்கின சாமிகளைச் சிறு தெய்வங்கள் என்றும் சொல்லிச் சிறுமைப்படுத்தினார்கள். உண்மையில் மக்கள் உண்டாக்கிய சாமிகள் சிறு தெய்வங்களா? இல்லை. அவைதான் முதலில் உண்டான சாமிகள். நம் ஊர்களுக்கு முதலில் வந்த சாமிகள் சீனியர் சாமிகள். இந்த சிவபெருமான், கிருஷ்ணர், ராமர், விநாயகர் எல்லோருமே ஜூனியர் சாமிகள். பின்னால் வெளியிலிருந்து நம்ம ஊருக்குள் மன்னர்கள் உதவியோடு வந்து சேர்ந்தவர்கள்தான்.
ஆகவே அறிவியல் பூர்வமாக, வரலாற்றுப் பூர்வமாக சாமிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ளும் நாம் நாட்டுப்புறத் தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று சொல்லவே கூடாது. அவற்றை மக்கள் படைத்த தெய்வங்கள் அல்லது மக்கள் தெய்வங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற சாமிகளை மன்னர் படைத்த சாமி அல்லது மதசாமி என்று சொல்லலாம்.
இரண்டு சாமிகளும் வேறு வேறுதான். அடிப்படையிலேயே வேறானவை. அவற்றைக் கயிறு போட்டுக் கட்டினாலும் ஒன்று சேராது.
அப்படி என்ன அடிப்படை வேறுபாடுகள்?
(தொடரும்)
//
Share

Tuesday, October 22, 2013

இருட்டை விட்டு வெளியே வரட்டும், இந்தியா டுடே!

இந்தியா டுடே வார இதழ் பெரியாருக்குத் தடை? எனும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது (16.10.2013, பக்கங்கள் 8, 9).
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்ட விருத்தாசலம் திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் மதவெறி, ஜாதி வெறி கொண்ட ஒரு சிறுகூட்டத்தார் வன்முறையில் ஈடுபட்டதைப் பற்றிக் கூறிவிட்டு, இந்தியா டுடே தன் கருத்தை எழுதுகிறது! எப்படி தெரியுமா?
இந்த சம்பவம், தமிழகத்தில் பெரியார் கொள்கை களை இனி சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது என்று எழுதுகிறது இந்தியா டுடே!
இது இந்தியா டுடேயின் ஆசையா? அல்லது நடைமுறை உண்மையா?
(1) எதிர்ப்பு நெருப்பாற்றில் நீச்சல் போட்டுப் போட்டுத்தான், இந்த இயக்கம் மகத்தான வெற்றி களைக் குவித்திருக்கிறது.
தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் எல்லாம்கூட செருப்புகள் வீசப்பட்டதுண்டு - கற்கள் வீசப்பட்ட துண்டு - முட்டையில் ஓட்டைப் போட்டு, அதில் மலத்தை வைத்து பெரியார்மீது வீசியதுண்டே! சால்வையால் அதைத் துடைத்து எறிந்துவிட்டு, தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்தாரே தவிர, தொடை நடுங்கி ஒதுங்கிடவில்லை.
சின்னாளப்பட்டியில் கடுமையாக கற்கள் வீசப்பட்ட நேரத்தில், தானும் முண்டாசு கட்டிக்கொண்டு, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டே!
இவற்றையெல்லாம் சந்தித்தே - தந்தை பெரியாரை ஒட்டுமொத்தமான சமூகமே ஏற்றிப் போற்றிடும் ஒரு நிலையைத் தன் வாழ்நாளிலேயே கண்டு கண் மூடினார்.
தேர்தல் அரசியலில் தன்னையோ, தன் இயக்கத் தையோ ஈடுபடுத்தாத தந்தை பெரியாருக்கு இந்த அமைச்சரவையே காணிக்கையாக்கப்பட்டது என்று ஒரு முதலமைச்சர் (அறிஞர் அண்ணா) சொன்னார் என்றால், அது என்ன சாதாரணமா?
இது சூத்திரர்களின் அரசு என்று சட்டப்பேரவை யில் ஒரு முதலமைச்சர் (கலைஞர்) கூறியதெல்லாம் எந்த அடித்தளத்திலிருந்து?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை எடுத்துக்கொண்டால்கூட, இத்தகு தாக் குதல்கள் ஒன்றும் புதியன அல்ல - இதற்கு முன்புகூட நான்கு முறைகள் அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்ட துண்டே! அதனால் என்ன ஓய்ந்துவிட்டாரா? பொதுத் தொண்டிலிருந்துதான் ஒதுங்கிவிட்டாரா?
உலகத்தில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத அள வுக்குப் பொது இடங்களில் தந்தை பெரியார் சிலைகளை எழுப்பி, கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுதானே வருகிறது - இப்பொழுதும்!
அதனை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் சென்றதும் உண்டே! ஆன்மிகவாதியான ஜஸ்டிஸ் திரு.மு.மு.இஸ் மாயில் அவர்களே கூட வழக்கைத் தள்ளுபடி செய்து, பெரியார் சிலையில், பெரியார் கருத்துகளைப் பொறிக் காமல், வேறு யாருடைய கருத்துகளைப் பொறிக்க வேண்டும்? என்று மண்டையில் அடித்துத் தீர்ப்புக் கூறினாரே!
பெரியார் மறைந்த ஓராண்டு நிறைவு நாளிலே இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களைக் கொளுத்தியது திராவிடர் கழகம்தானே - அன்னை மணியம்மையார்தானே - வழக்குப் போட்டார் களே - வெற்றி பெற்றனரா? மாறாகக் கழகம் அல்லவா வெற்றி பெற்றது.
எதிர்ப்பைப்பற்றி, உயர்த்தி எழுதுகிறார்களே! உண்மை என்ன? திராவிடர் கழகத் தலைவர் பயணம் செய்த வாகனத்தின்மீது தடிகொண்டு தாக்கிய தடியர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர்கள்தானே அதிகம். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை என்றால், அதற்குள் அரசியலும், கூட்டணியும் இரகசியமாக இருக்கிறது - அவ்வளவே!
(2) இன்னொன்றை புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு எழுதி இருக்கிறது - இந்தியா டுடே. கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே, அதனை இழிவுப்படுத்திப் பேசவேண்டிய அவசியம் இல்லை ஆசிரியர் வீரமணிக்கு என்று சொல்லுகிறது.
கடவுள் என்ற ஒன்று இல்லை என்று இந்தியா டுடே ஒப்புக்கொண்டதே கூட, திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியே!
இன்னொன்று கடவுளை இழிவுபடுத்திப் பேசவேண் டிய அவசியம் இல்லை என்று இதோபதேசம் செய்தும் உள்ளது.
எதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக் கிறார் வீரமணி? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்ற தோரணையில் எழுதலாமா?
இராமன் என்றும், கிருஷ்ணன் என்றும், விநாயகன் என்றும், சிவன் என்றும், பிரம்மா என்றும், சரஸ்வதி என்றும் கடவுள்கள்பற்றிப் புராணங்களை எழுதியது திராவிடர் கழகத் தலைவரா?
இந்தப் புராணங்களில் இந்தக் கடவுள்கள் பிறப்பு எல்லாம் ஆபாசமாகத்தானே எழுதப்பட்டுள்ளது.
பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து உருட்டித் திரட்டியவன்தானே விநாயகன் என்று எழுதி வைத்ததும்; - அதனை இன்றுவரை நம்பி விநாயகன் ஊர்வலங்களை நடத்துவதும் - அதனை மய்யப்படுத்தி சிறுபான்மை மக்களைத் தாக்குவதும் சரியானதுதானா?
சரஸ்வதியின் தந்தையும் பிரம்மா - கணவனும் பிரம்மா என்று எழுதப்பட்டுள்ளதே - இந்தக் கேவலத்தை எப்பொழுதாவது சுட்டிக்காட்டி - நாட்டு மக்களுக்கு நல்லதைச் சொல்லியிருக்கிறதா இந்தியா டுடேக்கள்?
ஒழுக்கமாகக்கூட ஒரு கடவுளை உண்டாக்க முடிய வில்லையே - அதற்காக வெட்கப்படவேண்டாமா?
பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் கூறப்பட்டுள்ளதே - இப்படிக் கூறுபவன் பகவான் கிருஷ்ணன் என்று கூறு வதும், அந்தக் கீதையை ஒப்பற்ற நூல் என்று புகழ்வதும் மதிமயக்கத்திலும், மூட நம்பிக்கைச் சகதியிலும் மூழ்கிக் கிடப்பவர்களுக்குச் சரியானதாகப் படலாம். காரணம், பக்தி வந்தால்தான் புத்தியைப் பயன்படுத்துவது இல்லையே!
ஆனால், சமூக அக்கறையும், ஒழுக்கத்தின்மீது உயர்நாட்டமும் - அறிவின்மீது அளப்பரிய ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஆபாசங்களையும், இழிவையும், அறியாமையையும் சுட்டிக்காட்டி, தேவைப்பட்டால் இடித்துக் காட்டிச் சொல்லவேண்டிய சமூக அக்கறை யும், கடமை உணர்ச்சியும் எங்களுக்கு இருக்கிறது!
அது இந்தியா டுடேயிடம் இல்லை என்றால், அய்ம்பொறிகளையும் பொத்திக்கொண்டு நாய் விற்ற காசு குரைக்காது என்ற தன்மையில் வியாபாரப் பொழைப்பை நடத்திக் கொள்ளட்டும்!
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அறிவு வெளிச்சப் பாதைக்கு அழைத்து வருவதையும் ஆண்டாண்டுக் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதிக்காக அயராது பாடுபடுவதை யும், பெண்ணடிமைத் தனத்தின் முதுகெலும்பை முறித்து ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற பாலியல் உரிமை களுக்காகக் குரல் கொடுப்பதையும், பிறவியில் பேதம் பேசும் வருணதர்மத்தையும், அதனைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட கடவுள்கள், புராணங்கள், இதிகாசங் கள், சாஸ்திரங்களை எதிர்ப்பதையும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்குவதையும் உயிர் மூச்சாகக் கொண்டு, எந்தவித சுயநலச் சிறைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், பதவிப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல், சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு, ஊருக்காக உழைக்கும் கழகத்தையும், அதன் தன்னிகரற்ற தலைவரையும் சரியாக எடை போடாமல் எழுதவேண்டாம் - இந்தியா டுடேக்கள்!

Friday, October 18, 2013

அலகு குத்துதல் - சிலுவையில் அறைதல் - சுத்தியில் வெட்டிக்கொள்ளல் உண்மை நிலை என்ன?

- சரவணா இராஜேந்திரன்


அலகு குத்துதல், பறவைக்காவடியில் தொங்குதல், தீ மிதித்தல், கற்பூரம் கொளுத்திக் கையில் வைத்தல் மற்றும் வாயில் போடுதல் ஆகிய செயல்கள் கோவில் விழாக்களில் சிலரால் செய்யப்படுவதை நாம் பார்த்திருப்போம். கடவுள் சக்தியாலோ, கடவுள் அருள் மனிதன் உடலில் ஏறுகிறது என்று பக்தர்கள் சொல்வதாலோ செய்ய இயலும் செயல்கள் அல்ல என்பதை விளக்குகிறது இந்த அறிவியல் விளக்கக் கட்டுரை.எச்சரிக்கை: இது ஒரு மதத்தைக் குறைகூறும் பதிவல்ல, உலகில் பல பகுதிகளில் இந்தப் பழக்கம் இயற்கைக்கு மாறான மனிதச்செயல் (Taboo) மற்றும், தொழில் முறை வித்தை, வீர விளையாட்டாகவும் காணப்படுகிறது.

உடலின் அனிச்சைச் செயல்கள்: மனிதத் தசை நார்கள், திடீரெனத் தாக்கப்படும்போது அதைத் தவிர்க்க மூளைக்குச் செய்திகளை அனுப்பும். மூளை உடனடியாக வலியை உருவாக்கும் எக்ஸைம்களை அனுப்பி இரத்த ஓட்டத்தைச் சுருக்க ஆரம்பிக்கும். அப்போது பாதிக்கப்படும் தசை நார்களுடன் இணைந்துள்ள அனைத்து செல்களும் ஒரு பாதுகாப்பு எதிர்வினையை உருவாக்கும்.

முதலில் தன்னிச்சையாக அந்தத் தாக்குதலைத் தவிர்க்க உடல் முயற்சிக்கும் தற்காப்பு நடவடிக்கை (Defence Activity).. பிறகு அதை உடலில் ஏற்படும் திடீர்க் காயங்கள் மற்றும் மேலும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.

எ.கா: யாராவது நம்மைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்க வருவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இது திடீர்த் தாக்குதலில் மட்டும்தான். ஆனால், அலகு குத்துபவர்கள், வித்தைக்காரர்கள், டாபோக்கள் இதை ஒரு தேவைப்பட்ட ஒன்றாக எடுத்துக் கொள்கின்றனர். இந்தச் செய்தி மூளைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து, மூளை இது தேவையான ஒன்றுதான் என்று உணர்ந்து ஆபத்தான சமயங்களில் செய்யும் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் நிறுத்திவிடுகிறது.

விளைவு, தசை நார்கள் பெரிய ஸ்க்ரூ ட்ரைவரைக் கொண்டு மெல்ல மெல்ல (முக்கியமான உள்ளுறுப்புகள் இல்லாத பகுதியில்) ஊடுருவ இடைவெளி தருகிறது. அங்குள்ள இரத்த நாளங்கள் கிழிபடும்போது ஏற்படும் வலியைத் தவிர வேறு ஒன்றும் உணரமாட்டோம்.

மற்றொரு விசித்திர செய்தி, நாம் அனைவரும் இதன் அனுபவத்தை உணர்ந்திருக்கிறோம். ஆம், செவிலியர், இரத்தப் பரிசோதகர், பல் மருத்துவர் மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் நமது உடலில் ஊசியால் குத்தும்போது ஏற்படும் அதே உணர்வுதான் அலகு குத்தும்போது ஏற்படுவது.

பறவைக்காவடி: நமது தசை நார்கள் ஒரு லாரியை இழுக்கும் அளவு வலுவானவைகள். முதுகில் கொக்கிகளைக் குத்தி அதில் ஒரு லாரியை இணைக்கும் கயிற்றைக்கட்டி இழுக்கச் சொன்னால், வலிமையுள்ளவர்கள் எளிதாக இழுத்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது நமது உடல் எடை என்பது பெரிய பிரச்சினையே அல்ல. அதாவது, ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, உங்களுக்கு விருப்பப்படும்போது அல்லது இயற்கை உபாதைகளுக்கு மட்டும் இறங்கி வந்தால் போதும். மற்றபடி நீங்கள் தொங்கிக்கொண்டே இருக்கலாம். ஈர்ப்பு விசையால் பாதிப்பு என்பது எடை தாங்காத அளவிற்கு எடை கூடும்போது தசைகள் கிழிபடும்.

தீ மிதித்தல்: இது மிகவும் எளிமையான ஒரு மெக்கானிசம். கிராமத்தில் அடுப்பு எரிக்கும்போது சில நேரங்களில் கனன்று கொண்டு இருக்கும் கட்டையில் இருந்து கனல் வெளியில் விழுந்ததும், அதனைக் கையில் எடுத்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினுள் போடுவதைப் பார்த்திருப்போம்.

இதே மெக்கானிசம்தான் தீ மிதிக்கும்போதும் ஏற்படுகிறது. நமது பாதங்கள் எண்ணிடலங்கா மெல்லிய இரத்த நாளம் மற்றும் கரோட்டின் செல்களால் ஆனது. இந்த கரோட்டின் செல்களை நுண்ணோக்கியால் பார்த்தோமென்றால் கண்ணாடிப் பொருட்களைப் பாதுகாக்கும் காற்றுக்குமிழ் அடங்கிய பிளாஸ்டிக் சீட் போன்று இருக்கும்.

அங்கு காற்றுக்குமிழ், இங்கு இரத்தம். இதுதான் வித்தியாசம். கரோட்டினுள் அதிக அழுத்தத்தில் பாயும் இரத்தம் குறிப்பிட்ட அளவு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நமது பாதங்களை உள்ளங்கைகளைக் காப்பாற்றுகிறது.

இது குறிப்பிட்ட அளவு மட்டும்தான் தணலைக் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் உலோகம், மணல், கல் போன்றவைகளில் இந்தத் தீமிதி வேலை செய்தல் கூடாது. காரணம், இவை தணலைப்போல் எளிதில் வெப்பத்தைக் குறைத்து கூட்டும் தன்மையுடையவை அல்ல.

கடவுள் சக்தி, நம்பிக்கை போன்றவைகள் இங்கு ஒரு ஏமாற்று வேலையாகத்தான் நடக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை.

பள்ளிப் பருவத்தில் ப்ளேடால் கையைக் கிழித்து பெண் நண்பரின் பெயர் எழுதுவது, மெழுகுவர்த்தியில் கம்பியைச் சுடவைத்து பெயர் எழுதுவது, காது மூக்கு குத்துவது, பச்சை குத்துவது போன்றவையும் இதே வகைதான்.

வடக்கில் உள்ள சாமி சாமியாரினிகள் செய்யும் முள்படுக்கை, ஆண்குறியில் செங்கற்களைக் கட்டித் தூக்குவது, மார்பகங்களில் கூரான உலோகங்களைக் கட்டி கடவுளர்களின் சிலைகளைத் தொங்கவிட்டு வருவதும் இதே முறையில்தான்.
 
இது உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் உள்ளது. கிறித்துவர்கள் சிலுவையில் அறைந்து கொள்வது, இஸ்லாமியரில் ஒரு பிரிவினர், கத்தியால் தங்கள் உடலில் கிழித்துக் கொள்வது போன்றவையும் இந்த வரைமுறையில் அடங்கும்.

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?


 ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் காவல்துறையும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை விலகல் செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.


பயங்கரமும் படுகொலையும் தாண் டவமாடிய குஜராத்திலிருந்து வருகி றேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட் டது. குற்றவுணர்வையும் அவமானத் தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள். அவர்களது முகத்தில் ததும்பும் துயரம் இப்படியொரு துக் கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர் களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக் கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சி யடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது..

இருப்பினும், கண்டவை கேட்டவை களில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஓர் எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக் கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெ டுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றி ருக்கிறார்கள். இதற்கென்ன சொல் கிறீர்கள்?

உயர் அழுத்த மின்கம்பியால்...

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சி யடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக் கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக் காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம் என்று அங்கிருந்த காவல்துறையினிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொளுத் தியது. பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். பாலியல் வன்முறை முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக் கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சவுக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங் களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணிய வைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக் குதல், திட்டமிட்ட இனப் படுகொலை. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல் லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான முழக்கங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற் றியில் காவித்துணியும் கட்டிய ஆட் களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில் களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள் இந்து  முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர்களை கட்டடத்திற்குள் வைத் துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட் டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

காவல்துறை மற்றும் அரசு எந்திரத் தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத் தையும் எல்லோரும் குற்றம் சாட்டு கிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்க வில்லை.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைக்குத்தான் அவர்கள் பாது காப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக் குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் காவல்துறையும் துப்பாக் கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்தி கள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையின ரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டி ருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப் படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தர வுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடு நிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர் களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரி யாவது நேர்மையாக நடத்து கொண்டி ருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரி களின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கெனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படு கின்றன. முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம் கள் தான் கவலைப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனர மைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லைஎன்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.
குஜராத்தின் கொலைகாரக்கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெரு மிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, பாலியல் வன்முறை செய்த இந்து மதவெறி யர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. இந்தியா ஒரு மதச்சார் பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப் படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின் நாயக னான நரேந்திர மோடி வரும் பாராளு மன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரய த்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார் என்ற வெறும் மாயக் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் தகுதியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டுள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என் பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆகவே வருங் கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

Thursday, October 17, 2013

அந்தரங்கம் புனிதமல்ல

இந்து ஆங்கில ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை சங்பரிவார்க் கும்பலைக் கொஞ்சம் வெலவெலக்கச் செய்து விட்டது; வித்யா சுப்பிரமணியம் என்பவ ரால் எழுதப்பட்ட கட்டுரை அது (8.10.2013 நடுப்பக்கக் கட்டுரை).
2005ஆம் ஆண்டில் அத்வானிக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க மோதலின்போது, தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற் பட்ட கோபத்தை அத்வானியால் அவ் வளவு எளிதாகக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வெளியிட்டதை அவரது சொற்களிலேயே பார்க்கலாம். 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தி விட்டது என்று கூறினார். நாம் கொண்டி ருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஒரு நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நல் தோற்றத்தைக் குலைத்து விடும் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்கு வதற்கு ஆர்.எஸ்.எசும்., பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று எல்.கே. அத்வானி பேசியதை - இந்து கட்டுரை எடுத்துக்காட்டி பிஜேபி யின் லகான் ஆர்.எஸ்.எஸின் கையில் தான் வலுவாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அபாயகரமான ஆர்.எஸ்.எஸ்.தான் பிஜேபியின் கர்த்தா; ஆர்.எஸ்.எஸ். காலை ஆட்டினால் பிஜேபி தலையாலேயே நடக்கும் என்கிற சங்கதி ஊருக்குத் தெரிந்தால் அரசியல் கட்சியான பி.ஜே.பி.க்கு மக்கள் மத்தியில் பெரும் சேதாரம் ஏற்படும் என்பதால், இந்து ஏட் டின் கட்டுரையை - _ தகவலை சங்பரிவார் -_ பிஜேபி வட்டாரத்தால் இரசிக்க முடியாது. இந்து ஏடு எழுதுவதற்கு முன்பே -_ மோடி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக் காரண மாகவே முன்னிறுத்தப்பட்டார் என்பது மலிவாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
மற்றவர்களைவிட அதிகாரப் பூர்வமில்லாத பிஜேபியின் _ மோடியின் பேச்சாளரான திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு இதன் பாரதூர விளைவு கள் என்னவென்று தெரியும் அல்லவா! அதனால் தமக்கே உரித்தான வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு மோடியின் கன்னத்தில் விழும் அறையைத் தம் கன் னத்தில் தாங்கிக் கொள்வதுபோல் எழுது கோலைத் தூக்கியுள்ளார்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்ற சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ்.
அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது (துக்ளக் 11.9.2013 பக்கம் 20).
எப்படியெல்லாம் நெளிந்து வளைந்து சப்பைக் கட்டுக் கட்டுகிறார் இந்த அய்யர்.
1976 நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஜனசங்கத்தைக் கலைத்து விட்டு ஜனதாவில்  அய்க்கியமானதே _ ஆட்சி யில் மாஜி ஜனசங்கத்தவர்களான வாஜ் பேயியும் அத்வானியும் அமைச்சர்களாகக் கூட இருந்தனரே _ -அந்த அய்க்கியம் குலைந்து போனதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், ஜனதா விலும் உறுப்பினர் என்னும் இரட்டை உறுப்பினர் தன்மை தானே _ - ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட ஜனதா உருக்குலைந்து போனதற்குக் காரணம்?  பல முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., உறவைத் துண்டிக்க மறுத்தது ஏன்? ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி மதக் கொள்கை தானே அதற்குக் காரணம்.
ஓர் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவா யில்லை; ஆர்.எஸ்.எஸ்.தான் எங்களுக்கு மிக மிக முக்கியம் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளராக இருந்த எச்.வி. சேஷாத்திரி இதோ பேசுகிறார்:
4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக் காட்சி அலைவரிசை 1-இல் அவர் அளித்த பேட்டி இதோ!
கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி..
சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்?
ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?
கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங் களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறை வேற்றும் என்று நம்புகிறீர்களா?
சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும், திறமையையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை பி.ஜே.பி.க்கு ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண் டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளை நிறைவேற்றுவார்கள். அதே போல, தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு எங்கள் தகுதி வாய்ந்த தொண்டரான இல. கணே சனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று கூறினாரே!
பிரதமர் வாஜ்பேயிலிருந்து மத்தியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள்.
அவர்களை பி.ஜே.பி.க்கு நாங்கள்தான் அனுப்பினோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று வெளிப் படையாக சொல்லவில்லையா?
ஆர்.எஸ்.எஸில் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரைத்தான் பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண் டுமென்று பி.ஜே.பி.யின் அமைப்பு விதியி லேயே திருத்தம் செய்யப்பட்டு விட்டதே! (The Hindustan Times 29.6.1997).
ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராஜுபையா என்ற இராஜேந்திர சிங் இடுப்பு எலும்பு முறிந்து ஜண்டேவலான் நகரில் மருத்துவ உதவி பெற்று ஓய்வில் இருந்தார். அவரை பிரதமர் வாஜ்பேயி சந்திக்கச் சென்றார்.
அது வெறும் உடல்நல விசாரிப்புக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; பல அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.
1) ஆர்.எஸ்.எஸின் நம்பிக்கை இல்லாத எவரையும் பி.ஜே.பி. வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வைக்கக் கூடாது.
2) ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு உறுப்பினர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். (ஆர்.எஸ்.எஸ். தலைவரான இராஜேந்திர சிங், பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி முதலியோர் அக்குழுவில் முக்கியமாக இருப்பர்).
3) சென்ற 12ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 70 பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சரியாகத் தெரியவில்லை என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றாரே சேஷாத்திரி.
பி.ஜே.பி. என்கிற அரசியல் கட்சிக்கு ரிமோட் கண்ட்ரோலாக இருப்பது சூப்பர் அரசியல் கட்சியான ஆர்.எஸ்.எஸ். தான் என்பது இன்னுமா விளங்கவில்லை?
5.2.1998 நாளிட்ட இந்து ஏட்டுக்கு எல்.கே. அத்வானி சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் சர்சங்சலக் (உயர் தலைவர் இராஜேந்திர சிங்) உட்பட யாரையும் கேட்காமலேயே வாஜ்பேயிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தேன் என்றாரே!
பிரதமர் பதவிகூட ஆர்.எஸ்.எஸ். தலைவரைக் கேட்டுத்தான் முடிவு செய் யப்பட வேண்டும் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று நிகரற்ற சக்தியாக விளங்கும் காலத் தில் இவர்கள் எப்படி நடந்து கொள்வார் களாம்?
இதோ வாஜ்பேயி கூறுகிறார்:
பாரதீய ஜனசங் கட்சியாக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸுடனான எங்கள் தொடர்பு வெறும் கருத்தியல் மட்டத் தோடும் வரலாற்று ரீதியானதாகவும் ஆகியது. இத்தகைய இறுக்கமான தொடர்போடு பத்தாண்டுகளைக் கடந்து விட்டோம். பி.ஜே.பி.க்குள் இருந்து வேலை செய்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்களின் கருத்தியல் அடித்தளத்தை எல்லோருக்கும் புரிய வைப்பதற்கு விருப்பப் பூர்வமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். சகோதர அமைப்புகளாகிய விஸ்வ இந்து பரிஷத், வித்யார்த்தி பரிஷத், பாரதீய மஸ்தூர் சபா, சேவாபாரதி, கல்யாண ஆஸ்ரம் ஆகிய வற்றோடு எங்களுக்குள்ள தொடர்பையும் அவர்கள் புரிய வைக்கிறார்கள். இந்த அமைப்புகள் அத்தனையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து பெற்ற உந்துதலின் அடிப்படையில் இயங்குபவை. எங்களது முயற்சிகளை இன்னும் நாங்கள் தீவிரப் படுத்த வேண்டும். அரசியலில் பாரதீய ஜனதா கட்சிக்குள்ள கூடுதல் வாய்ப்புகளின் அடிப்படையில் இவற்றுக்கான ஏற்பு அதிகமாகும்.
(டெலிகிராம் ஏடு 17.5.1990).
மேற்கண்ட ஆதாரங்கள் எதைத் தெரிவிக்கின்றன? ஆர்.எஸ்.எஸ்தான் அவர்களின் அடிப்படை ஆதாரச் சுருதி என்பது அப்பட்டமாக விளங்கி விட்டதே!
பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர்கூட ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற முழு நேரப் பேர் வழியாக இருக்க வேண்டும் என்று கட்சியின் அடிப்படை விதியிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளார்களே.
ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு பேர் கொண்ட குழுதான் தேர்தலில் போட்டி யிடுபவர்கள் யார் யார் என்பதை முடிவு செய்யும் என்கிற அளவுக்கு நிலைமை இருக்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது என்று முழு யானையைப் பிடி சோற் றில் மறைக்கப் பார்க்கிறார் மனு குலத்தாரான சோ.
6.3.1978 அன்று நாக்பூர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவரசும், பொதுச் செயலாளர் ராஜேந்திர சிங்கும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகள் ஓர் அரசியல் நோக்கம் கொண்டதுதான். நாங்கள் அதிகார அரசியலில் தீவிரம் காட்டாவிட்டாலும்கூட! அது மட்டுமல்ல; தற்போதுள்ள இதன் சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்கள் அரசியலில் பங்கெடுக்க முடியும். பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். (குஜராத்தில் ஒரு வெள்ளோட்டம் என்ற தலைப்பில் ஆதவன் - தீட்சண்யா எழுதிய கட்டுரை தினமணி 18.2.2000 பக்கம் 4).
ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார அமைப்புதான்; - அரசியலில் ஈடுபடாது என்று பேசுவது - எழுதுவது எல்லாம் பம்மாத்து வேலை என்பது நீதிமன்றத்தில் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே காட்டிக் கொடுத்து விட்டதே!
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது நடந்த ஒன்றை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது புதுடில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது (1998 அக்டோபர் 22).
அந்தக் கூட்டத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்ட போது தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளி நடப்புச் செய்தார்.
அந்த மாநாட்டில் அளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தைத் தயாரித்தவர் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் என்று கூறப்பட்ட சிட்டியங்லா. மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். சரஸ்வதி வணக்கம் வந்தே மாதரம் பாடல்கள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம். உபநிஷத்துகள் வேதங்கள் முதலியன பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த  ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம்; கடுமையான எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எசுக்குத் தெரிவிக்கப்பட வேண் டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அய்ந்து அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு பரம இரகசியமான செயல் ஆர்.எஸ்.எஸ்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளதே!
எந்த நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதோ அந்த நாளி லேயே ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் அணு ஆயுத இந் தியா என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழே வெளியிட்டது என்றால், இது எப்படி சாத்தி யமாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்!
அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிந்திருந் தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியுமா? குடியரசுத் தலைவருக்கே தெரியாத அரசு இரகசியம் ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பா.ஜ.க.வின் ஆட்சி லகான் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸிடம் தான் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அமைச்சர் பதவியேற்கும்போது அரசு இரகசியங்களைக் காப்பாற்றுவோம் என்றுகூறி உறுதி எடுத்தவர்கள். அதற்கு மாறாக அணுகுண்டு சோதனை போன்ற அரசு இரகசியங்களைக்கூட ஆர்.எஸ். எசுக்குத் தெரிவித்துள்ளார்களே.
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு Sangh My Soul
என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?
முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:
1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)
2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation)
(இதன் பொருள்: முஸ்லிம்க ளுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளு வதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:
1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.
2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.
பி.ஜே.பி.க்கு ஆர்.எஸ்.எஸ். வெறும் உடம்பு அல்ல அவர்கள் நம்பும் ஆன்மா! சொல்பவர் சாதாரணமானவரல்லர் - பிஜேபியின் மிகப் பெரிய தலைவர் வாஜ்பேயி.
இவர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி என்ன?
எனது புனிதமான இந்து மதத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும், இந்துக் கலாச் சாரத்துக்கும் பாடுபட்டு பாரத் வர்ஷத்தில், அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்த ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில் (ஆர்.எஸ்.எஸ்.) நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும், எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்.
இந்தச் சங்கத்தின் பணிகள்  அனைத் தையும் இதய பூர்வமாக ஏற்று வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் டிராயர் போட்டால் ஆர்.எஸ்.எஸ்., வேட்டி கட்டினால் பிஜேபி.
ஏற்கெனவே நரேந்திரமோடியைப் பற்றி நிலவும் கணிப்பு - ஊரும் உலகமும் அறிந்ததே!
ஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரை அதிகாரப் பூர்வமாக விழுந்து விடக் கூடாது என்பது அவர்களின் வியூகம்.
என்னதான் கம்பிமேல் ஏறி நின்று சாமர்த்தியம் காட்டினாலும் அத்வானியை உதாசீனம் செய்ததும் மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.தான் என்பது ஊர் சிரித்த ஒன்றே!
ஆர்.எஸ்.எஸைப்பற்றி அறிந்தவர் களுக்கு ஒன்று நன்றாகவே தெரியும்; குஜ ராத்  மாநில இனப்படுகொலையாளர்கள் தான் ஆர்.எஸ்.எசுக்குத் தேவைப்படுவர். அந்த வகையில் அவர்கள் மோடியைத் தவிர உறுதியாக வேறு யாரைத் தேர்வு செய்ய முடியும்?
அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை அவர்களின் அந்தரங்கமான ஆர்.எஸ்.எஸ். புனித மானதல்ல -_ அசிங்கமானது _- ஆபத் தானது! - அருவருப்பானது!! - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

அக்டோபர் 16-31 - 2013