Wednesday, February 22, 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே!

சென்னை - எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றுள்ள கொடுமை நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைக்கத்தக்க கொடூரமாகும்.
3 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, நகைகளையும் பறித்த பயங்கரம் அரங் கேறி இருக்கிறது. ஒரு குடிவெறி ஆண் ஓநாய்க்கு ஒரு பெண்ணும் துணைபோனார் என்பது கற்பனைக்கே எட்டாத கேவலத்தின் எல்லையாகும்.
குடிவெறியில் மகளையே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய தகப்பன்களைப்பற்றிய செய்திகள்கூட வந்ததுண்டு. குடி குடியைக் கெடுக்கும் என்பதையும் தாண்டி குடிவெறி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நாகரிகத்தையும், மனிதப் பண்புகளையும் சூறையாடக் கூடிய இழிவான ஒன்றாகும்.
மருத்துவக் காரணங்களுக்காக அன்றி வேறு எவ்வகையிலும் மதுவை இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை என்கிறபோது, மாநில அரசுகளோ, மத்திய அரசோ மதுவை எப்படி அனு மதிக்கின்றன என்று தெரியவில்லை.
நியாயமாக மத்திய அரசே இந்தியா முழுமைக்குமான மது விலக்குச் சட்டத்தைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்தியே தீரவேண்டும்.
கல்வி போன்ற மாநில ஆட்சிக்கான உரிமைகளில் மூக்கை நுழைத்து மத்திய அரசு பட்டியலுக்கும், பொதுப்பட்டியலுக்கும் கோழிக் குஞ்சை பருந்து தூக்கிச் செல்லுவதுபோல, மாநில அரசின் கருத்தினைக் கேட்காமலேயே அலக்காகத் தூக்கிச் செல்லும் மத்திய அரசு இந்த மதுவிலக்கை ஏன் மத்தியப் அரசுப் பட்டியலுக்குக் கொண்டு சென்று நாட்டு மக்களின் நலனைக் கட்டிக் காக்கக்கூடாது?
கூடா ஒழுக்கத்துக்குத் தூண்டுகோலாக இருப்ப தோடு மட்டுமல்ல - குடிப்பவனின் புத்தியைக் கெடுப் பதோடு, உடல்நலனையும் நார் நாராகக் கிழிக்கிறதே! இந்தப் பேரபாயத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக் கும் கடமை மத்திய அரசுக்குக் கிடையாதா?
மக்கள்நல அரசு (Welfare State) என்பதற்கு உண் மையான பொருளைப்பற்றி அரசு கவலைப்படவேண் டாமா?
சில மாநில அரசுகள் வருவாய்க் கருதி மதுக்கடை களைத் திறக்கின்றன. இதில் இன்னும் என்ன கேவலம் என்றால், மாதம் ஒன்றுக்கு மது இவ்வளவுத் தொகைக்கு விற்கப்பட்டாக வேண்டும் என்று இலக்குகளை நிர்ணயிப்பதுதான்.
மனித வளத்தைவிட பணம்தான் ஓர் அரசுக்கு முக்கியமாக ஆகிவிட்டதா? என்ற கேள்வி நிச்சயமாக இந்த இடத்தில் எழத்தானே செய்கிறது.
மூன்று வயது குழந்தை என்பதைக்கூட எண் ணாமல், காமவெறி கண்களை மறைப்பதை எந்த வகையில் ஏற்க முடியும்? அண்மைக்காலமாக இந்தப் பாலியல் வன்கொடுமைகள் சர்வ சாதாரணமாகி விட்டன - இதுகுறித்த செய்தி வராத நாளே கிடையாதே!
காதலிப்பதாக நடித்துப் பெண்களைக் கர்ப்பம் தரிக்கச் செய்யும் கயமைத்தனமும் பெருகி வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறு கடம்பூரில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை வேட்டையாடியது இந்து முன்னணிக் கும்பல்.
காதலனாக நடித்த அந்த மிருகம், தன் கயவாளி நண்பர்களோடு சேர்ந்து கூட்டுப் பாலியல் வன் மத்தை நடத்தி, ஏற்கெனவே கர்ப்பம் தரித்திருந்த அந்தப் பெண்ணின் கருவைக் கிழித்து வெளியில் எடுத்துநரவேட்டையாடியுள்ளனர்என்றால்,இந்த மிருகங்களைத்தண்டிக்கநாட்டில்இருக்கும் சட்டங் களே கூடப் போதாது என்றுகூட சொல்லத் தோன்ற வில்லையா?
பொது ஒழுக்கத்தை வளர்க்கவேண்டிய ஊட கங்கள் அரைகுறையுடையுடன் பெண்களை அட்டைப் படத்தில் போட்டு விற்கும் ஒரு வகை ‘விபச்சாரத்தனத்தில்’ ஈடுபடுகின்றன என்று சொன் னால், அது எப்படி தவறாகும்? நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்ற எண்ணம்தான் போலும்!
காவி வேட்டி உருவத்தில் காமவேட்டையாடும் சாமியார்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இப்பொழு தெல்லாம் ஓர் அரசியல் கட்சியின் காவி அடையாள அந்தஸ்துடன் பவனி வர ஆரம்பித்து விட்டார்கள்.
சமூக வலை தளம் என்ற பெயரால் கீழ்த்தரமான ஆபாசமான படங்களை உலாவ விடுகிறார்கள்.
சட்டமன்றம், நாடாளுமன்றம் நடக்கும் பொழுதே இத்தகைய ‘நீலப்’ படங்களில் மூழ்கிக்கிடந்த முடை நாற்ற செய்திகள் எல்லாம்கூட வெட்ட வெளிச்சத்துக்கு வரவில்லையா?
எண்ணூரில் நடைபெற்ற கொடூரம் நாட்டையே உலுக்கி எடுத்து விட்டது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதில் காலதாமதம் கூடவே கூடாது.
மிக விரைவாக வழக்கும் நடத்தப்பட்டு, மீண்டும் உயிரோடு உலவ முடியாத கடுந்தண்டனை கொடுப் பதன் மூலம், சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிட வேண்டும்.
கட்சிகளும்,தலைவர்களும்ஆற்றும்சொற் பொழிவுகளில் இந்தச் சமூக அவலங்களைத் தோலு ரித்துக் காட்டி, தார்மீக விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தவேண்டும் - செய்வார்களா? எங்கே பார்ப்போம்!
ஊன்றிப் படித்து உண்மையை உணர்க!
நிகழ்கால நடப்புகளும் - நமது நிலைப்பாடும்!

கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின் (5.12.2016) தமிழ் நாட்டின் அரசியல் அரங்கிலும், ஆட்சி மன்றத்திலும் பல்வேறு வகைகளிலும் வேக வேகமாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.
குறிப்பாக ஜெயலலிதா என்ற பார்ப்பன அம்மையார் மறைந்த நிலையில், மறுபடியும் முதலமைச்சர் என்ற ஆட்சி அதிகார பீடத்தில் அமர்வதற்கு இன் னொரு பார்ப்பனர் அமைய வாய்ப்பற்றுப் போன நிலையில், பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.க.வில் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டன. ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு விளம்பரத் தோள்களைக் கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்றன. பாரதீய ஜனதா என்ற பார்ப்பனக் கட்சியோ, திராவிட இயக்கங்களுக்குத் தாங்கள்தான் மாற்று என்று கரிசனம் காட்டத் தொடங்கிற்று. அ.இ.அ.தி.மு.க. - பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்று என்று மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு கசிந்துருகிக் கருத்தும் தெரிவித்தார்.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வாயிலாக (‘விடுதலை’, 8.12.2016) அ.இ.அ.தி.மு.க.வினருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுவித்தார்.
‘‘அ.தி.மு.க. சகோதரர்களே, எச்சரிக்கை! சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம் - அளவற்ற ஆதரவு தருவதுபோல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். அக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மற வாதீர்!’’ என்று திராவிடர் இயக்க உணர்வோடு எச்சரித்தார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்சி என்பது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இயக்கக் கட்சிகளிடம்தான் கடந்த 1967 முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் ஒன்றை பலகீனப்படுத்தி, அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பி.ஜே.பி. கருதித்தான் தன் சித்து வேலையையும் நடத்தியது. பி.ஜே.பி.க்கு அதற்கான சக்தி தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், அ.இ.அ.தி.மு.க.வுக்குள் ஒரு பிளவை ஏற் படுத்தி, ஒன்றைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு மறைமுக ஆட்சியை நடத்தலாம் என்பதுதான் பி.ஜே.பி.யின் திட்டம். இந்த நிலையை கழகத் தலைவர் வெளிப்படுத்தினார்.
அதன்பிறகு 27.12.2016 அன்று மற்றொரு அறிக்கையினையும் கழகத் தலைவர் வெளியிட்டார்.
‘‘தமிழ்நாட்டில் ஏதோ ‘சூன்யம்‘ ஏற்பட்டு விட்ட தாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும்; அதற் காகவே புது ‘அவதாரம்‘ எடுத்துள்ளவர்கள் போலும் நித்தம் நித்தம் சிலர் உளறுவதும், அதை ஏதோ பிர கடனம் போல ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழுவதுமாக உள்ளனர்’’ என்று கூறியதுடன்,
தந்தை பெரியார் சொல்லும் ஒரு கருத்தினையும் நினைவூட்டினார். ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. அரசியல் பெயரில், போர்வைக்குள் நடைபெற்றவை அத் தனையும் ஆரிய - திராவிட இனப்போராட்டமே!’’ என்று தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு பொருத்தமாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது அவ்வறிக்கையில்.
‘‘(அந்தக் கனவுகளை) அப்பட்டமாக ஆரிய ஏடுகளும், மக்கள் ஆதரவைப் பெற்று இந்தப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத நிலையில் குறுக்கு வழி அரசியலில், லாட்டரியில் பரிசு விழாதா என்று கனவு காணும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சிகளும் தலையிடுகின்றன - பிரச்சினையாக்க முயலுகின்றன’’ என்றும் இரண்டாவது அறிக்கையிலும் முக்கியமாக வலியுறுத்தியுள்ளார்.
தொடக்கம் முதல் இன்றுவரை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசுகளின் திரைமறைவு நடவடிக்கையை அடையாளப்படுத்தி, எச்சரிக்கை எச்சரிக்கை என்று வலியுறுத்தி வந்துள்ளார் ஆசிரியர்.
தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்த கருத்துகளை மேலோட்டமாகப் பார்த்தவர் கள்கூட, பிறகு அதனை வழிமொழிகிற வகையில் கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை. போகப் போகப் புரியும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கழகத் தலைவர். அதுதான் இப்பொழுது நடந்தும் வருகிறது!
இந்தப் பிரச்சினையில் தி.மு.க.மீது எந்தவித உரசலோ, விமர்சனமோ வைக்கவில்லை - திரா விடர் கழகத் தலைவர். இன்னும் சொல்லப்போனால், இந்தக் காலகட்டத்தில் தி.மு.க. நடந்துகொண்டுவரும் - மேற்கொள்ளும் அணுகுமுறையை மிகவும் உயர்வாகப் பாராட்டி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 27 ஆம் தேதி அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது.
‘‘தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல் கண்ணியத்துடன் அரசி யல் நடத்துவது - பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி என்ற முறையில் உரிய அளவு - தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்
வானகம் கையுறினும் வேண்டாம் விழுமியோர்
மானம் மழுங்கா வரின் (நாலடியார்)
என்ற பழைய பாட்டு நியதிப்படி -
இடப்பக்கம் வேட்டையில் வீழ்ந்தால் புலி அதனை உண்ணாதாம்; வலப்பக்கம் வீழ்ந்தால்தான் உண்ணும் என்பது எப்படியோ - வேட்டையில் கூட ஒரு நியதி உண்டு.
குறுக்கு வழியில் எந்த முயற்சியும் தேவை என்று எண்ணாத திண்மைதான் உண்மையான ஜனநாயகவாதிகள் என்பதை உலகுக்கு அவர் களை அடையாளம் காட்டும்.
ஆக்கபூர்வ எதிர்க்கட்சி பணியை அந்த இயக் கம் - தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது.’’ (‘விடுதலை’, 27.12.2016)
உண்மை நிலை இவ்வாறு இருக்க - தி.மு.க.வுக்கு இதில் என்ன பிரச்சினை? என்ன சங்கடம்?
பெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்பதில் தி.மு.க.வுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே!
இன்னும் சொல்லப்போனால் தி.மு.க.வே கூட இந்தக் கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தால், அதன் திராவிட இயக்க உணர்வுக்காக  பொதுத் தளத்தில் அது சிறப்பாகவே உயர்ந்திருக்கும்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு, ஆளுநர் எப்படியெல்லாம் நடந்து வருகின்றனர் - அதைப்பற்றிய கருத்துகளைக் கூற தி.மு.க. ஏன் தயங்கவேண்டும்?
அப்படியொரு கருத்தை முன்வைக்க முன்வரா விட்டாலும், தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் அந்தக் கருத்தை வலியுறுத்தியது கண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால், நடந்தது என்ன? திராவிடர் கழகத்தைச் சங்கடப்படுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கழகத்தால் விலக்கப்பட்ட சிலரை அழைத்துக் கூட்டம் நடத்தியதை நினைக்கும்பொழுது இப்பொழுதுகூட ‘‘சிரிப்புதான்’’ வருகிறது!
இது என்ன சிறு குழந்தை விளையாட்டு!
எவ்வளவோ நிலைக்கு உயர வேண்டியவர்கள் இப்படி ஒரு சிந்தனைக்கும், செயலுக்கும் ஆளாகி விட்டார்களே என்ற வருத்தம் - அவர்மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே திராவிடர் கழகத் தலைவருக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
கடந்த 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடை பெற்ற அமளி - துமளிகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் சட்டம் அறிந்தவர் என்ற முறையில் தம் கருத்தினைத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்குள் சபாநாயகரின் முடிவுதான் இறுதியானது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! எந்த முறையில் வாக்கெடுப்பு என்பது எல்லாம் அவரின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பது பலமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு, அமைச்சர்களாக இருந்தவர்களுக்குத் தெரியாததா?
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதில்லை - தேர்தல்மூலம்தான் அதனை ஈடேற்ற விருப்பம் என்பதில் தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கும்பொழுது தேவையில்லாமல் தி.முக.. இதில் அதீதமாக ஏன் நடந்துகொள்ளவேண்டும்? அதனால் தி.மு.க.வுக்கு என்ன லாபம்? லாபமில்லாததோடு மட்டுமல்லாமல், வீணான கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டது தானே மிச்சம்.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டல்லவா - சம்பந்தப் பட்டவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) இருந்தனர்!
பொதுவானவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அலட்சியப்படுத்திவிட முடியாதே! நாமாகத் தேடிக்கொண்ட வீண் பழி இது!
வடநாட்டு தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தி.மு.க.வைப்பற்றித் தூற்றித் தூற்றி செய்திகளையும், கருத்துகளையும் வெளியிடும் நிலைக்கு நாம் ஏன் ஆளாகவேண்டும்?
இதற்குமுன் சட்டமன்றத்தில் பலமுறை அமளிகள் நடந்ததுண்டு. குறிப்பாக 1988 இல் இந்த முறை அதற்கு நேர்மாறானது என்ற அடிப்படையில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டும் தலைமைப் பண்பைப்பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார் (‘விடுதலை’, 18.2.2017).
1988 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் பலப்பரீட்சை நடந்தபோது கலைஞர் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அந்தப் பொருளில்தான் திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் இப்பொழுது சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைவர் எப்படி அறிக்கை வெளியிட்டுள்ளாரோ - அதே முறையில்தான் அன்றைக்கும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். சபாநாயகருக்குரிய உரிமை குறித்தும் தெளிவுபடுத்தி இருந்தார் (‘விடுதலை’, 8.1.1988).
செய்தியாளர்கள் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பாராட்டத்தகுந்ததுதானா?
செய்தியாளர்: நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், திராவிட கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள தி.க.வின் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைவர் கலைஞர் வழி நடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று தெரிவித்து இருக்கிறாரே?
மு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல, தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுபற்றி நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை (‘முரசொலி’, 21.2.2017, பக்கம் 4).
திராவிடர் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டு சரியானதல்ல என்ற சொல்லி, அதற்கான காரணத்தையும் விளக்குவதுதான் சரியான விமர்சன முறை. அப்படி செய்திருந்தால், அதன்மூலம் திராவிடர் கழகத் தலைவரின் மதிப்பு எப்படி குறைந்து போகும்?
நாங்கள் மதிக்கும் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் -  நாங்கள் மதிக்கும் ஒரு மூத்த தலைவர் - நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை என்றால் என்ன பொருள்?
பதில் கருத்தைச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக திராவிடர் கழகத் தலைவரின் மதிப்புக் குறையப் போவதில்லை. மாறாக மதிப்புக் குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை கருத்துகளைக் கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்.
மாறுபட்ட கருத்தைச் சொன்னால், அதனை ஏற்கும் பக்குவம் உள்ளவர்தான் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோன்ற மூத்த தலைவர் அய்யா வீரமணி.
ஆனால், அவர் சொன்ன பதிலில்தான் சுற்றி வளைத்து, திராவிடர் கழகத் தலைவரை அவமதிக்கும் பொருள் பொதிந்திருக்கிறது என்பது வருத்தமான ஒன்றாகும்.
திராவிடர் கழகம் ஒரு சமுதாய புரட்சி இயக்கம் - தி.மு.க. தேர்தலில் போட்டியிடும் அரசியல் அமைப்பு. இந்த நிலையில், ஒரு சில நேரங்களில் கருத்து மாறுபாடு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததுதான்!
இதற்கு முன்பும் பல நேரங்களில் நிகழ்ந்ததுண்டு. விமர்சனங்கள் கடுமையாகக்கூட இருந்திருக்கின்றன. அதேநேரத்தில், மதிப்பைக் குறைக்கும் பேச்சுக்கே, வார்த்தைக்கே இடமில்லை.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட தொழிற்கல்லூரிகளுக்கு மனு போடும் தகுதி மார்க்கை 50 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக உயர்த்தியபோது, அதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் தலையங்கம் தீட்டினார் ஆசிரியர் கி.வீரமணி.
அதனை ஏற்றுக்கொண்டு, ஏற்கெனவே விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தும், அவற்றையெல்லாம் அழித்து விட்டு, புது விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன என்பது எதைக் காட்டுகிறது?
தவறு என்று சுட்டிக்காட்டுவது தாய்க்கழகத்தின் கடமையல்லவா! அண்ணாவை ஏற்போர் இதனையும் ஏற்க வேண்டாமா?
‘‘வீரமணி எங்கு இருந்தாலும் பெரியார் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார்.’’ (‘குமுதம்‘ இதழ் பேட்டி, 3.12.1998).
‘‘பா.ஜ.க.வை ஆதரித்தால்கூட வீரமணி எங்களை மன்னித்து விடுவார். ஏனெனில், ஏற்கெனவே அவர் அ.தி.மு.க.வை மன்னித்திருக்கிறார்.’’ (‘முரசொலி’, 14.4.1998, முதற்பக்கம்).
இப்படிப் பேட்டி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்தான்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்மீது பற்றும், அவர்தம் எதிர்காலத்தைப்பற்றிய நல் விருப்பமும் கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் என்பது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலினை நான் முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று, ‘‘கலைஞர் அறிவிப்பு - காலச் சிலாசாசனம்!’’ என்று அறிக்கை கொடுத்து உச்சி மோந்தவர் திராவிடர் கழகத் தலைவர் (‘விடுதலை’, 8.1.2013).
இப்படி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதற்காக - அவரின் சகோதரரால்  ‘‘அரசியல் விபச்சாரம் செய்கிறார் வீரமணி’’ என்ற அசிங்கமான கூடா விமர்சனத்துக்கு ஆளானவர்தான் அய்யா வீரமணி. அதற்கு எதிர்வினையாக எந்த ஒரு சொல்லையும் சொல்லவில்லை தமிழர் தலைவர் - அது அவருடைய பெருந்தன்மை.
அதெல்லாம் தெரிந்திருந்துமா ஆசிரியர் அவர்களின்மீது ஆத்திரமும், அவமதிக்கும் மறைமுக சொல்லாடல்களும்?
முகநூலிலும், வாட்ஸ் அப்-களிலும் அசிங்க அசிங்கமாக மலத்தைத் தோய்த்து பதிவு செய்பவர்கள் யார்? யார்? அவர்கள் ‘‘உறவு முறையில்’’  - யார் யாருக்குச் சொந்தம் - எத்தகையவர்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?
தி.மு.க. என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி, பகுத்தறிவுக் கொள்கைகளைப்பற்றி எல்லாம் நாராசமான நடையில் எழுதப்படுவதெல்லாம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாதா?
இழிவுகளையும், வசவுகளையும் சந்தித்து சந்தித்து, அவற்றை எருவாக்கி வளர்ந்ததுதான் திராவிடர் இயக்கம்!  தந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அவை எல்லாம் சந்தனமாலைகளே! தோழர்கள் கோபத்தோடு தலைவரிடம் இவற்றைக் கூறும்போதுகூட, ‘‘பந்தை அடியுங்கள் - காலை அடிக்கவேண்டாம்‘’ என்ற அறவுரை அறிவுரையைத்தான் கூறுகிறார் தமிழர் தலைவர்.
இப்பொழுதுகூட எங்கள் நிலை என்ன தெரியுமா? அ.தி.மு.க.வா - பி.ஜே.பி.யா? என்று கேட்டால், அ.தி.மு.க.தான்; தி.மு.க.வா - அ.தி.மு.க.வா? என்று கேட்டால், எங்கள் ஆதரவும், அரவணைப்பும் தி.மு.க.வுக்குத்தான்!  திராவிடர் கழகம் - கிளைக் கழகமல்ல: தாய்க்கழகம்!
தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வலிமை வாய்ந்த தி.மு.க. தவறான அணுகுமுறைத் தடத்தில் கால் வைத்து தேவையில்லாத கெட்ட பெயரை விலைக்கு வாங்குகிறதே - இதுவரை சம்பாதித்து வைத்துள்ள மக்களின் நல்லபிப்பிராயத்தை இழக்கிறதே என்ற வலியின் அடிப்படையில்தான் தாய்க்கழகம் ‘தவிப்பு’ உணர்வோடு ‘கடிந்து’ கொள்கிறது. இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டாமா?
இன்னொன்றும் முக்கியம் - திராவிர் கழகம் தனித்தன்மையான சமூகப் புரட்சி இயக்கம்! தனது கருத்தைத் தனித்தன்மையோடு கூறும் தகைமை கொண்டது.
‘குடிஅரசு’ முதல் இதழ் தலையங்கத்தில் (2.5.1925) தந்தை பெரியார் குறிப்பிட்டார்களே,
‘‘நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு’’ என்ற கருத்துதான் எங்களின் என்றென்றுமான நிலைப்பாடு! ஆறுவது சினம்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, February 15, 2017

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது மத்திய பி.ஜே.பி. அரசு


அமைச்சரவையை அமைக்க அழைப்பதில் கால தாமதம் ஏன்?

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது மத்திய பி.ஜே.பி. அரசு

தமிழ்நாட்டோரே எச்சரிக்கை! எச்சரிக்கை!


தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள
முக்கிய அறிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நிலையில் பெரும்பான்மை உள்ள அணியினரை அழைத்து அமைச்சரவை அமைக்கச் செய்வதில் காலந்தாழ்த்துவது சரியா?  கால தாமதத்தின் பின்னணி என்ன? ஆர்.எஸ்.எஸ். குரலுக்குச் செவி சாய்க்கும் அணியினரைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவதே இந்தத் தாமதத்துக்குக் காரணம் என்றும், இதில் தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின்மீது  போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுத் தீர்ப்பு நேற்று (14.2.2017) காலை வெளியாகி விட்டது.

முதல் குற்றவாளி ஜெயலலிதா, இரண்டு, மூன்று, நான்காவது குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனிக்கோர்ட் (கர்நாடகாவில்) நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பினை அப்படியே உறுதி செய்து உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பை வழங்கிவிட்டனர்!

ஜெயலலிதா ஏதோ குற்றமற்றவர்போல உலாவரும் செய்தியின் மாய்மாலம்!
இந்நிலையில், ஜெயலலிதா ஏதோ விடுதலை ஆகிவிட்டது போலவும், அல்லது மேல்முறையீட்டு வழக்கில் இல்லாததுபோலவும் செய்தியை (பார்ப்பன) ஊடகங்கள் பரப்பி வருகின்றன; குறிப்பாக மத்திய அரசின்கீழ் இயங்கும் டில்லி தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் உள்பட மற்றையோரின் தண்டனைகளை மட்டுமே கூறுவதும் எப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நரித்தந்திரம் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெளிவாகவே புரியும்.
பெரும்பான்மை ஆதரவாளரை அழைக்காதது ஏன்?
அதன்பிறகு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தலைவராக திரு.எடப்பாடி பழனிச்சாமியை (அமைச்சராக ஏற்கெனவே உள்ளவரை) ஒருமனதாகத் தேர்வு செய்கிறார்கள். அவரும் சென்று தமிழக ஆளுநரைச் சந்திக்கின்றார், ஆட்சி அமைக்க அழைப்பு விடவும் கோரியுள்ளார்!
அதன் பிறகு திரு.ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்திக்கின்றனர்.

அதன்பிறகு திடீரென்று இரவு 9 மணிக்குக் காபந்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்கிறார்.

அதே இடத்தில் திடீரென்று தீபா என்பவர் (ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே தகுதியினால்) சென்று சந்திக்கிறார். இவர் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதிதான் தனது திட்டத்தை அறிவிக்கப் போவதாகக் கூறியவர்.

ஏனோ திடீரென்று இப்படி ஒரு முடிவு - அய்க்கியம்? இது அவரின் முடிவு ; அதுகுறித்து ஏதும் சொல்ல வேண்டியதில்லை; அது ஒன்றும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் போவதில்லை; என்றாலும், எப்படியெல்லாம் டில்லியால் அரசியல் பொம்மலாட்டங்கள் ஆளுநர் மூலமாக நகர்த்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள சரியான பின்னணியும், சாட்சியுமாகும்.

திருமதி சசிகலாமீதான வழக்கில் தீர்ப்பு வந்து, மற்றொரு சட்டமன்ற தலைவரை, சட்டமன்ற உறுப்பினர்கள் 127 பேர் தேர்வு செய்த பிறகு, இன்னமும் அமைச்சரவை அமைக்க, பெரும்பான்மைப் பலம் உள்ளதாக கையொப்பங்களுடன் கடிதம் கொடுத்த தரப்பினரை அழைக்க ஏன் காலதாமதம்? எவ்வகையில் இது அரசியல் சட்டத்தின் கடமைகளை நிறைவேற்றுவதாகும்?

ஏற்கெனவே எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, ஜெகதாம்பிகைபால் வழக்கு ஆகிய வழக்குகளில் நடந்ததுபோன்று (Floor Test) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து - பெரும்பான்மையோரை அழைக்கவேண்டாமா?

அல்லது தற்போது தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் ஓ.பி.எஸ். அணியினரை அழைத்து, பலத்தை நிரூபிக்க ஆணை பிறப்பிப்பதுதானே அரசியல் கடமை!

இதில் ஒரே கட்சியில் இதுவரை மூன்று பேர் முதல்வர்கள் என்று மாறி மாறி கூறியுள்ளதால், அரசியல் சட்ட விதிப்படி (164) மாற்று எதிர்க்கட்சியை (தி.மு.க.வை) அழைப்பதுதான் சரியான வழி என்பதும் புறந்தள்ளப்பட முடியாத கருத்தாகும்!

தங்களின் அடிமைகளைத் தேடும்

மத்திய பி.ஜே.பி. அரசு

இப்படி காலதாமதம் செய்வதற்கு உள்ள காரணம்தான் என்ன? ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள டில்லி பா.ஜ.க. அரசு தனக்கு சலாம் போடும், தலையாட்டிகளைக் கொண்ட நல்ல அடிமைகளை இந்த இரு அணிகளில் யார் இருப்பார்கள் - யாருக்கு ஆர்.எஸ்.எஸ்.சுடன் நெருக்கம் - மறைமுக ஆதரவு தரும் மனப்போக்கு உள்ளதோ,
யார் தமிழ்நாட்டின் உரிமைகளை நிபந்தனையின்றி டில்லி துரைத்தனத்திற்கு அடகு வைப்பார்களோ,
யார் தமிழர் எனும் இன உணர்வு, மொழி உணர்வு இல்லாத வர்களோ, மாநிலத்தின் உரிமைகள் - இவைகளை முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா போன்று வற்புறுத்தாமல், டில்லியின் குரலுக்குச் செவி சாய்த்து ஒத்துழைக்க நாங்கள் தயார், தயார் என்கிறார்களோ, அவர்களை எடை போட்டு - அடையாளம் காண்பதில்தான் மத்திய பி.ஜே.பி. அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
விழித்துக் கொள்வீர் தமிழ்நாட்டோரே!
எதிர்க்கட்சியாகவோ, எதிர் அணியாகவோ நின்று உண்மையாக உரிமைக்குக் குரல் கொடுத்தால், அவர்களை ஆட்சிப் பொறுப்பேற்க அனுமதிக்கமாட்டோம்  என்று கூறாமல் கூறுவதுதானே - தாமதத்தின் பின்னணி? நிடுநிலையாளர்கள் - ‘வாட்ஸ் அப்’ வகையறாக்கள் எப்படிப்பட்ட  ‘ஆஷாடபூதி’த்தனத்திற்குரிய அரசியல் நிலை புதைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

‘‘எல்லாவற்றிற்கும் முழுக்காரணம், சொத்துக்குவிப்பு - ஊழல் வழக்கில் ஜெயலலிதா ஈட்டியது  211 சதவிகிதம் அதிகம் என்றும், அவர் தனக்குப் பாதுகாப்பாளராக சசிகலா, மற்றையோரையும் வீட்டில் ஒன்றாக வைத்து, ஒன்றாகவே கூட்டுச் சதியைச் செய்தார் என்றும் நேற்று வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறிவிட்டது!

இதன் பிறகு அம்மாவின் ஆன்மா எங்களை வழிநடத்தும் என்பது அத்தீர்ப்பினை வரவேற்று, பட்டாசு கொளுத்திக் கொண்டே கூறுவது எத்தகைய கேலிக்கூத்து!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு ஏற்கெனவே பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தபோது, ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தை யார் ஏற்படுத்திக் கொண்டாரோ அவரைத்தான் இறுதியில் ஆளுநர் அழைப்பார் என்னும் பேச்சுகள் அரசியல், ஊடக வட்டாரங்களில் அடிபடுகின்றன என்பதும் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே, டில்லியின் கண்ஜாடை எப்பக்கம் என்கிற அடி நீரோட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
355, 356 ஆயுதங்கள் கூர்தீட்டி தயார் நிலையில் வைக்கப்பட்ட தாக டில்லி வட்டாரத்தில் பேச்சுகளும் அடிபடுகின்றன - தமிழ்நாட்டோரே புரிந்துகொள்வீர்!


கி.வீரமணி  
தலைவர் , திராவிடர் கழகம்.


15.2.2017  
சென்னை

Monday, February 6, 2017

தமிழக முதல்வராக வி.கே.சசிகலா தேர்வு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
அ.இ.அ.தி.மு.கவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (5.2.2017) பிற்பகலில் கூடிய கூட்டத்தில், தற்போது முதல் அமைச்சராக உள்ள மாண்புமிகு திரு.ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதத்தை அ.தி.மு.க.வின் தலைமையான பொதுச்செயலாளரிடம் கொடுத்துள்ளார். அவரே கட்சியின் பொதுச்செயலாளரான திருமதி வி.கே.சசிகலா அவர்களே முதல்அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏக்களால் திருமதி சசிகலா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்க தனது இசைவினைத் தெரிவித்த நிலையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முந்தைய ஜெயலலிதா அரசின் கொள்கை நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்றும் தனது தலைமையிலான அரசு என்றும் தனது ஏற்புரையில் தெளிவாக்கியுள்ளார்.
ஒருமனதாக இத்தேர்வு அமைந்திருப்பதும், கட்சித் தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்று இரட்டை அதிகார நிலைப்பாட்டினால் பலவகையான அதிகார முரண்கள் ஏற்பட இனி இடமில்லை என்பதோடு, முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் ஒருவரே என்பதால், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியின் கட்டுக்கோப்பும், கட்டுப்பாடும் நிலைநிறுத்திக்காட்டப்பட்டுள்ளது.
பெரிதும் ஆணாதிக்கம் கோலோச்சும் உலகில் மீண்டும் ஒரு பெண், கட்சித்தலைமை, ஆட்சித்தலைமை இரண்டையும் பெற்று அரசியல் பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல திருப்பமே! - வரவேற்கப்படவேண்டியது
புதிய முதல் அமைச்சருக்கு நமது வாழ்த்துகள்!
- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

சென்னை,5-2-2017
www.viduthalai.in

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, February 4, 2017

பிரதமரும் - நாடாளுமன்றமும்! மோடிக்கு சில ஆலோசனைகள்!!

- ஷர்மிஷ்தா முகர்ஜி-
(நாடாளுமன்றக் கூட்டங்களில் அடிக் கடி கலந்து கெள்ளாமல் போவதும், திரும்பத் திரும்ப அவை உறுப்பினர்கள் கேட்கும்போதும் நாடாளுமன்றத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு அவர் மறுத்து வருவதும், ஆனால் அதே நேரத்தில் நாடா ளுமன்றத்திற்கு வெளியே அதைப் பற்றி அவர் பேசுவதும்,  நாடாளுமன்றத்தின் மீது பிரதமர் மோடி வைத்துள்ள மரியாதை இன்மையையே காட்டுவதாக இருக்கிறது.)
அதற்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே இல்லாமல் இருந்த ஒருவர் பிரதமர் வேட்பாளராக - இந்தியாவில்  முதன் முறையாக 2014 மே 20 ஆம் தேதி  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நரேந்திர மோடி சரித்திரம் படைத்துவிட்டார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முன்பு, நாடாளுமன்ற வாசற்படியின் மீது தனது தலை  பட  நாடாளுமன்றத்தைத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.  அதன் பின், மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவர் ஆற்றிய உரையில், நாடாளுமன்றத்தை ஜனநாய கத்தின் கோயில் என்று  வர்ணித்தார். இவ்வாறு செய்த ஒருவர் ஓர் இரண்டரை ஆண்டு காலத்திற்குப் பிறகு, இந்தக் கோயிலை என்னென்ன வழிகளில் இழிவு படுத்த  முடியுமோ அவ்வளவையும் செய்து, நாடாளுமன்றம் என்ற அமைப்பையே அதிகாரம் அற்றதாகச் செய்து விட்டார்.
ஒரு ஜனநாயக நாட்டு மக்களின் ஒன்றுபட்ட விருப்பம், உறுதி, பேரறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஓர் உயர்ந்த சட்ட மன்ற அமைப்புதான் நாடாளுமன்றம். மக்களவைக்கு நேரடியாகவும், மாநிலங்களவைக்கு மறைமுகமாகவும் தாங்கள் தேர்ந்தெடுக்கும்  பிரதிநிதி கள் மூலம்  நாட்டின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானித்து வடிவமைக்கின்றனர். ஒரு சட்ட மன்றத்தின் மிகமிக முக்கியமான பணிகளில் சட்டங்களை இயற்றுவதும், திருத்துவதும் ஒன்றாகும். நாடாளுமன்ற அவைகள் கூடி நடைபெறாமல் இருக்கும் காலங்களில், உடனடி யான தேவைகளுக்காக, குடியரசுத் தலைவர் அவசர சட்டங்களைப் பிரகடனப்படுத்த முடியும். ஒரு நெருக்க டியான சூழ்நிலையை சந்திப்பதற்காக மட்டுமே, நிர்வாகத் துறைக்கு  நெருக்கடி கால அதிகாரம் என்ற தன்மையில்,  சட்ட மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமே அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. எவ்வாறாயினும், தனது விருப்பத்தை அவசர சட்டங்களின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்வதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு இடைவிடாது, தொடர்ந்து அச்சுறுத்தலை மோடி அரசு விடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 23 முறை அவசர சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கையை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், பல அவசர சட்டங்களின் தன்மையைப் பற்றியதுதான்.
நிலம்கையகப்படுத்துதல்,புலம்பெயர்ந்தமக்களை மறுகுடியேற்றம் செய்வித்தல், வெளிப்படையான நட வடிக்கை மற்றும் நியாயமான இழப்பீடு அளிப்பதற்கான (திருத்த மசோதா), நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்று பொதுவாகக் கூறப்படும் சட்டமசோதவை இதற்கு சரியான எடுத்துக் காட்டாகக் கூறலாம். இந்த மசோதா மூன்று முறை அவசர சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
70 சதவிகித இந்தியக் குடிமக்களை பாதிக்கும் இந்த சட்டம், பா.ஜ.க. உள்ளிட்ட  அனைத்துக் கட்சிகளுடனும் அகண்ட கலந்தாலோசனைக்குப் பிறகு,  முதன் முதலில்  இரண்டாவது அய்க்கிய முன்னேற்றக் கூட்டணி அரசால் 2013 இல் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் 2014 ஆம் ஆண்டில் மோடி அரசு அதி காரத்துக்கு வந்த உடனே, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிரானது என்ற அளவில் இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது.
தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவி செய்யும் ஆர்வத்தில், மோடியும் அவரது அரசும் இந்த சட்டத்தின் உணர்வையே கொன்றுவிட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு முற்றிலுமாக மதிப்பு அளிக்காத முறையில், மக்களவையில் தங்களுக்கு உள்ள அறுதிப்பெரும்பான்மையைக் கொண்டு இந்த சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று தலை கீழாக நின்று பார்த்தனர். என்றாலும், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இருந்த காரணத்தால், இந்த திருத்த மசோதா கைவிடப்பட்டது.
இந்தியாவின் 125 கோடி மக்களும் பாதிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமைச்சரவைக் கூட் டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டு, முடிவெடுத்த இரண்டுமாதங்களுக்குப்பிறகுதான்அந்தமுடிவிற் கான அவசர சட்டம் ஒன்று பிரகடனம் செய்யப் பட்டது. இது போன்றதொரு பெரிய முக்கியமான முடிவை எடுக்கும் முன், மக்கள் பிரதிநிதிகள் ஏன்கலந்தாலோசிக்கப்படவில்லை?1978ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போதுமேற்கொள்ளப்பட்டபணமதிப்பிழப்புநடவடிக் கையும் கூட அவசர சட்டத்தின் மூலம்தான் நடை முறைப்படுத்தப்பட்டது என்று வாதாடலாம். ஆனால், அப்போது புழக்கத்தில் 2 சதவிகிதம் அளவில் மட்டுமே இருந்த 1000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள்தான் மதிப்பிழக்கச் செய்யப்பட்டன. ஆனால் இப்போது அதிர்ச்சி அளிக்கும் அளவில் புழக்கத்தில் உள்ள 86 சதவிகித ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப் பட்டுள்ளன.
2016 இல் பாமர மக்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்ததுபோல, 1978 இல் மக்களிடம் 1000 மற்றும் அதற்கு அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருக்கவில்லை. நாடாளுமன்றத்தைப் பற்றிய மோடியின் மரியாதை அற்ற தன்மையை, அடிக்கடி அவர் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பற்றி அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிக் கொண்டிருக்கையில், அதுபற்றி நாடாளுமன்றத்திற்குள் ஒரு வார்த்தையும்  பேசாமல் இருப்பதும் சுட்டிக்காட்டுகின்றன.  இவ்வாறு செய்வது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, நாடாளு மன்றத்திற்கு வெளியே முக்கிய பிரச்சினைகள் பற்றிய விமர்சனங்களை செய்து வருவதும், ஆனால் அது பற்றி நாடாளுமன்றத்தில் பேச அவர் மறுப்பதும் மிகப் பெரிய அவலமாகும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தடைபடுவது அனைத்து குடிமக்களுக்கும் கவலை அளிக்கும் ஒரு செய்தியாகவே ஆகிவிட்டது.  நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசுடையதாகும்.  கடந்த சில ஆண்டு காலமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடை செய்வது என்பது படிப்படியாக ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது; என்றாலும் இது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
ஆனால்,இந்தியஜனநாயகவரலாற்றில்முதன் முறையாகஆளுங்கட்சிஉறுப்பினர்களால்அவை நடவடிக்கைகள் தடைபட்டுப் போனது. அவைத்தலை வரிடம் முழக்கங்கள் எழுதிய அட்டைகளைக் காட்டுவதன் மூலமும், எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தைப் பேசவிடாமலும்,  மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் இடையூறு விளைவிக்கத் தொடங்கிவிட்டனர். பா.ஜ.க. மூத்த உறுப்பினரும், அமைச்சருமான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரை தேசத்துரோகி என்று முத்திரை குத்தியது  படுகேவலமான செயலாகும்.
தனது எதிரியாக மோடி பார்க்கும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவைப் பற்றிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி, நாடாளுமன்ற ஜனநாயகம்பற்றி நமது மூதாதையர்கள் என்ன நினைத்தார்கள், எவ் வாறு நடந்து கொண்டார்கள் என்பதை எடுத்துக் காட்டும்.ஜனசங்கக்கட்சியின்தோற்றுநரான சியாம் பிரசாத் முகர்ஜி 1952 மக்களவைத் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட பாரதிய ஜனசங் கட்சியின் மூன்று உறுப்பினர்களில் ஒருவராவார். ஒவ்வொரு கட்சியிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் பேசுவதற்கான நேரம் நாடாளுமன்ற விதிகளின்படி ஒதுக்கப்படும். ஜனசங்கம் கட்சிக்கு இவ்வாறு ஒதுக்கப்படும் நேரம் மிகமிகக் குறைவானதாக இருந்தது. என்றாலும் அனைத்து முக்கிய விவாதங்களிலும்  கலந்து கொண்ட முகர்ஜி பல நேரங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பேசியுள்ளார். ஒரு முறை அவர் இவ்வாறு பேசும்போது ஒரு காங்கிரஸ் உறுப்பினர் எழுந்து அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது அவையில் இருந்த நேரு, ‘‘நீங்கள் பேசும்போது அவையினர் மட்டுமே கவனிக் கின்றனர்; ஆனால், டாக்டர் முகர்ஜி பேசும்போது ஒட்டு மொத்த இந்தியாவே கவனிக்கிறது. எனவே  அவர் தொடர்ந்து பேசட்டும்’’ என்று கூறினார்.
அத்தகைய உணர்வுதான் அக்காலத்தில் நிலவியது. தலைவர்கள் ஒருவரிடம் ஒருவர் வைத்திருந்த மரியாதையை அது காட்டுகிறது. தனது அரசியல் முன்னோர்களிடமிருந்து மோடி இந்த உணர்வைக் கற்றுக் கொண்டு, அதனைத் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிக்க வேண்டும்.
‘‘ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்திற்கு அவரால் அளிக்கப்பட இயன்ற மாபெரும் மரியாதை அதுதான்.’’
நன்றி: ‘டெக்கான் கிரானிகிள்’,  17.01.2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...