Total Pageviews

Thursday, May 22, 2014

ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதா? - கி.வீரமணி கண்டன அறிக்கை

அய்.நா. முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள
ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதா?

புதிய அரசின்மீதான நம்பிக்கை நாசமாகி விடும்! 


புதிய ஆட்சி பதவியேற்கும் விழாவுக்கு - அய்.நா. முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு இருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைப்பது எந்த வகையிலும் சரியல்ல என்பதை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வருகின்ற 26ஆம் தேதி (26.5.2014) அன்று புதிய பிரதமராக, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திராமலேயே, தனித்த பெரும்பான்மைப் பலம் (மக்களவையில் 282 இடங்களை) பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் பா.ஜ.க.வின் நரேந்திரமோடி அவர்களுக்கு எதிராக,  வாக்களித்த நாட்டின் 69 சதவிகித மக்களில் ஒரு பகுதியாக உள்ளவர்களான நமது சார்பில்,  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நரேந்திரமோடி வாங்கிய வாக்கு 31  சதவிகிதம்).
 
மாற்றத்தை விரும்பிய மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் பல்துறையிலும் உள்ளன. ஆட்சி எத்திசையில் செல்லுகிறது என்பதைப்  பொறுத்தே, இந்த வெற்றி நிலைத்த வெற்றியா என்பதைத் தீர்மானிக்கும்.

ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றாலும், பிரதமர் - ஆட்சியாளர் - அனைவருக்கும் உரியவர்; அனைவரது எதிர்பார்ப்புகளையும் அலட்சியப்படுத்தாது அரவணைத்துச் செல்ல வேண்டிய அறநெறி அரசியலே - ஜனநாயகம் என்ற மக்களாட்சி ஆகும்.


இனப்படுகொலை நடத்தியவரை அழைப்பதா?

அவரது பதவியேற்பு விழாவுக்கு பல நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி, அவர்கள் வந்து வாழ்த்துவது நாட்டிற்கு, புதிய அரசுக்குப் பலம், பெருமை என்றாலும்கூட, மிகப் பெரிய இனப் படுகொலை நிகழ்த்தி, அய்.நா. மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் முன்னால் போர்க் குற்றவாளி என்று குற்றவாளிக் கூண்டில் பெரும்பாலான அதன் உறுப்பு நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக, நிறுத்தப்பட்டுள்ள இலங்கை அரசை - அதன் அதிபர் ராஜபக்சேவை அழைப்பது எவ்வகையிலும் சரியானதாக அமைய முடியாது.
  

முள்ளி வாய்க்கால் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் அங்கே நிலை என்ன?

அண்டை நாடு சார்க் (‘Saarc’) உறுப்பு நாடு என்று காரணம் கூறுவது - எவ்வகையிலும் சரியல்ல! தொப்புள் கொடி உறவுள்ள ஈழத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் வாழ்வுரிமையைப் பறித்ததோடு, 2009-இல்நிகழ்ந்த முள்ளி வாய்க்கால் படுகொலைக்குப்பின் 5 ஆண்டுகள் ஆகியும்கூட, அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ இயலாத நிலை! சிறையில் அல்லது காணாமல் போனதாக அறிவிப்பு, ஆள் தூக்கும் அவலம்; மறைந்தவர்களுக்காக, கொல்லப்பட்டவர்களுக்காக அழுது கண்ணீர் வடிக்கக்கூட உரிமையற்ற பரிதாபம்! ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் வந்த வடக்கு மாகாண தமிழர் ஆட்சிக்குக்கூட எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை; இன்னமும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதும், அதனால் உயிருக்குப் பயந்து ஈழத் தமிழர்கள் இரத்தக் கறையுடன் கண்ணீருடன் தப்பி வருவதும், புகலிடங்களைத் தேடுவதுமாக உள்ள நிலையில்,ராஜபக்சே இங்கே, புதிய மோடி அரசு பதவி ஏற்கையில் வந்து வாழ்த்துவதோ, பங்கேற்பதோ பல கோடி தமிழர்கள் நெஞ்சம் - ஏற்கெனவே அவர்கள் வெந்த புண்ணோடு உள்ள நிலையில் - இப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு நியாயமானதுதானா?

இதற்குமுன் இப்படி அழைக்கப்பட்டதுண்டா?
  
ராஜரீகம் என்ற சாக்கு - விளக்கம் ஏற்கப்படக் கூடியதல்ல.
இதற்கு முன் தேசிய ஜனநாயக முன்னணி (NDA) வாஜ்பேயி அவர்கள் பிரதமராக பதவியேற்றபோதோ, 2004, 2009இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) பிரதமர் மன்மோகன்சிங் பதவி ஏற்ற போதோ வெளி நாட்டவரை அழைக்கவே இல்லையே - இப்பொழுது மட்டும் என்ன அவசியம் வந்தது?

அய்.நா.வால் போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவர், இன்னமும் தமிழினப் படுகொலைகளை தயங்காது நடத்திடும் படலம் அங்கே தொடரும் நிலையில் இது தவிர்க்கப்பட வேண்டாமா?


உலக முழுவதும் உள்ள தமிழர்களின் வேண்டுகோள்!
இது தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேண்டுகோள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகும்!


மக்கள் உணர்வுகளைக் கருத்தில் கொள்க!
இல்லையென்றால், இலங்கையுடன் ஈழத் தமிழர் பிரச்சினைகளை புதிய அரசு வந்தால் பெரும் அளவுக்கு புதிய அணுகுமுறையோடு தீர்க்கும் என்று நம்பியவர்களின் நம்பிக்கை நாசமாகி, இவர்களும் உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கப்பன் என்பதாகவே கருதப்படும். துவக்கத்திலேயே இப்படி ஒரு நிலையா? இன்னும் இராணுவத்தின் அட்டகாசம் அங்குக் குறையவே இல்லை!

புதிய மத்திய அரசில் பொறுப்பேற்க இருப்பவர்கள் சிந்திக்கட்டும்; துணிந்து முடிவுகளை வழமையாக தவறான ஆலோசனைகளைத் தருவதையே வாடிக்கையாகக் கொண்ட அதிகாரிகளை மட்டுமே நம்பாமல், சுதந்திரமாக  மக்கள் உணர்வுகளைக் கருத்தில் எடுத்து முடிவு எடுப்பது அவசியம் அவசரம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
22.5.2014